என் மலர்
ஈரோடு
- பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
- ஆப்பக்கூடல் போலீசார் மாரிமுத்து மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆப்பக்கூடல்:
ஆப்பக்கூடல் அருகேயுள்ள ஆ.புதுப்பா ளையத்தை சேர்ந்த நவநீதன் (வயது 36). இவர் நேற்று மதியம் ஆப்பக்கூடல் அரசு மதுபானக கடையில் மது வாங்கிக்கொண்டு அருகே உள்ள காலி இடத்தில் உட்கார்ந்து மது குடித்துக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது, அங்கு வந்த கூத்தம்பூண்டி அண்ணாநகரை சேர்ந்த மாரிமுத்து (வயது 31) என்பவர் இவரின் காலை மிதித்து உள்ளார். இதனை தட்டி கேட்ட நவநீதனிடம் மாரிமுத்து தகராறில் ஈடுபட்டு, கீழே கிடந்த பீர் பாட்டிலால் நவநீதனை தாக்கியதோடு பீர் பாட்டிலால் குத்தி கொன்று விட்டுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதில் நவநீதனுக்கு நெற்றி மற்றும் வலது பக்க கன்னத்தில் காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் நவநீதனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் ஆப்பக்கூடல் போலீசார் மாரிமுத்து மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 6 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக 3-வது அலை ஏற்பட்டு தினசரி பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருந்தது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது.
கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பின் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்தது. இருப்பினும் அவ்வப்போது ஓரிருவருக்கு தொற்று ஏற்பட்டு குணமடைந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவரும் மே 4-ந் தேதி குணமடைந்தார்.
அதன்பின் தொற்று இல்லாத மாவட்டமானது ஈரோடு. இதன்பிறகு கடந்த 17-ந் தேதி முதல் அடுத்தடுத்த நாளில் தொற்று ஏற்பட்டு 5 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்கள் அடுத்தடுத்த நாட்களில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் இருந்த ஒருவரும் கடந்த மே மாதம் 30-ந் தேதியுடன் குணமடைந்து வீடு திரும்பினார்.
இதையடுத்து மீண்டும் ஈரோடு கொரோனா இல்லாத மாவட்டமாக இருந்து வந்தது. கிட்டத்தட்ட 6 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் தற்போது வரை கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 681 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 942 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் 5 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- சமையல் செய்வதற்காக ஸ்டவ்வை பற்ற வைத்தபோது எதிர்பாராத விதமாக மண்எண்ணை சுடிதாரில் பட்டு தீப்பிடித்தது.
- சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்தோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் வாய்க்கால் மேடு எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் சந்திரன் (52). தறிப்பட்டறை தொழிலாளி. இவரது மூத்த மகள் சரண்யா (32). கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சரண்யா, ரவி என்பவரை திருமணம் செய்து கொண்டு பெரியசேமூர் அடுத்த மாயாபுரம் ராஜீவ் நகரில் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று மாலை ரவி வீட்டில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். சரண்யா சமையல் செய்வதற்காக ஸ்டவ்வை பற்ற வைத்தபோது எதிர்பாராத விதமாக மண்எண்ணை அவரது சுடிதாரில் பட்டு தீப்பிடித்து கொண்டது. இதனால் வலி தாங்காமல் சரண்யா அலறினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு ரவி எழுந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார்.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தகவல் தெரிவித்து சரண்யாவை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி சரண்யா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மயங்கி விழுந்து பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த தொழிலாளியை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
- பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பெருந்துறை:
மேற்குவங்க மாநிலம் 24 பர்கானாஸ் சித்தா கிராமம் பகுதியை சேர்ந்தவர் காளிசரண்பஹார். இவர் பெருந்துறை, பணி–க்கும்பாளையம் பகுதியில் மனைவி, மகள் மற்றும் மகன்களுடன் வசித்து வருகிறார்.
கடந்த 3 மாதங்களாக மகன்கள் சேகர்பகர், சசாங்காபகர் ஆகியோருடன் பெருந்துறை பகுதியில் கட்டிட கூலி வேலை செய்து வந்தார்.
இதில் மகன் சேகர்பகர்க்கு அடிக்கடி நெஞ்சுவலி வந்து உள்ளது. அதற்காக அவர் சிகிச்சை பெற்று மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று வழக்கம்போல பெருந்துறை குன்னத்தூர் ரோடு பகுதியில் உள்ள ஒரு காம்ப்ளக்ஸில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென சேகர்பகர் மயங்கி விழுந்துள்ளார். பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த அவரை உடனடியாக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- பாலதண்டாயுதபாணி கோவிலில் திருமண தடை நீக்கும் சுயம்வரா பார்வதி யாகம் 9-ந் தேதி நடக்கிறது
- பித்ருகள் வழிபாடு, முன்னோர் சாபம் விலக குலதெய்வ வழிபாடு, தட்சிணா மூர்த்தி வழிபாடு, செல்வம், ஆயுள், ஞானம் நன்மக்கள் பேறு பெற பிரம்மா வழிபாடு, கல்வி, ஞானம் பெற சரஸ்வதி வழிபாடு, தொழில் விருத்தி, வறுமை நீங்கி கடன் தொல்லை தீர மகா விஷ்ணு வழிபாடு ஆகியவை நடக்கிறது.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்பநாயக்கன் பாளையம் டேம் ரோடு கொடுமடுவு பால தண்டாயு தபாணி கோவிலில் வரும் 9-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு திருமண தடை நீக்கும் சுயம்வரா பார்வதி யாகம் நடக்கிறது. இதில் திருமணமாகாதா ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதில் விநாயகர் வழிபாட்டுடன் பூஜை தொடங்கி சனி பகவான் தோஷம், நவகிரக தோஷம், மாங்கல்ய தோஷம் ராகு, கேது தோஷம், பிரம்ம ஹத்தி தோஷம், சிஹத்தி தோஷம், நாக தோஷம், ருது தோஷம், செவ்வாய் தோஷம் ஆகியவை விலக சிறப்பு பூஜைகள் மற்றும் விஷேச வழிபாடு நடக்கிறது.
இதைத் தொடர்ந்து பித்ருகள் வழிபாடு, முன்னோர் சாபம் விலக குலதெய்வ வழிபாடு, தட்சிணா மூர்த்தி வழிபாடு, செல்வம், ஆயுள், ஞானம் நன்மக்கள் பேறு பெற பிரம்மா வழிபாடு, கல்வி, ஞானம் பெற சரஸ்வதி வழிபாடு, தொழில் விருத்தி, வறுமை நீங்கி கடன் தொல்லை தீர மகா விஷ்ணு வழிபாடு ஆகியவை நடக்கிறது.
தொடர்ந்து பார்வதி- பரமேஸ்வரன் திருக்கல் யாணம் நடக்கிறது. இதில் கலந்து கொண்ட 80 சதவீதம் பேருக்கு திருமணம் நடந்துள்ளது. அவர்கள் இந்த ஆண்டு தம்பதிகளாக பூஜையில் கலந்து கொள்கிறார்கள்.
இந்த பூஜையில் கலந்து கொள்ள கட்டணம் கிடையாது. பூஜை பொருட்கள் மற்றும் ஜாதக ஜெராக்ஸ்சுடன் கலந்து கொள்ள வேண்டும். வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு கோவில் வளாகத்தில் பாதுகாப்பான இட வசதி, உணவு ஆகிய வசதிகள் செய்யபப்ட்டு உள்ளது. மேலும் கோபி செட்டிபாளையம், சத்திய மங்கலத்தில் இருந்து அரசு சிறப்பு பஸ் வசதி உள்ளது.
திருமண தடை நீக்கும் திருத்தலங்களான பவானி கூடுதுறை, திருமணஞ்சேரி, காளஹஸ்தி, திருப்பதி, திருநள்ளாறு, ராமேஸ்வரம், ஸ்ரீரங்கத்தில் செய்யப்படும் பூஜை, வழிபாடுகள், சாப விமோசனங்கள் விலக சிறப்பு யாக பூஜைகளும் இங்கு இலவசமாக செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- தாளவாடி அருகே பசு மாட்டை அடித்து கொன்றது
- 2 மாதமாக அட்டகாசம் செய்து வரும் புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான், செந்நாய் போன்ற வன விலங்குகள் வசித்து வரு கின்றன.
இதில் தாளவாடி வனப்பகுதியில் இருந்து வெளி யேறும் புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை அடித்து கொல்வது தொடர்கதை யாகி வருகிறது.
இந்த நிலையில் தாளவாடியை அடுத்த சேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகமணி (48) விவசாயி. இவர் 6 மாடுகள் வளர்த்து வருகிறார்.
இவர் மாடுகளை தன்னுடைய தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.
அதன்படி வழக்கம் போல் தனது தோட்டத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு சென்று விட்டார். மதியம் மாடுகள் திடீரென கத்தின. மாடுகளின் சத்தம் கேட்டு நாகமணி தோட்டத்துக்கு சென்றார்.
அப்போது அங்கு பசு மாடு ஒன்று கழுத்து, முதுகு போன்ற பகுதியில் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் மாட்டை புலி அடித்துக்கொன்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
இது குறித்து தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வன ச்சரகர் சதீஷ் மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த பசு மாட்டை பார்வையிட்டனர். பின்னர் அங்கு பதிவாகி இருந்த கால் தடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த கால் தடம் புலியின் கால் தடம் என்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். எனவே மாட்டை புலி அடித்து க்கொன்றது தெரிய வந்தது.
கடந்த 2 மாதத்தில் மட்டும் 3 நாய், 2 கன்றுக்குட்டி ஆகியவற்றை புலி அடித்துக்கொன்று அட்டகாசம் செய்து உள்ளது. மேலும் கடந்த வாரம் மாடு ஒன்றையும் புலி கொன்று உள்ளது.
இந்த நிலையில் மீண்டும் கிராமத்துக்குள் புலி புகுந்து மாட்டை அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும் போது, புலியின் நடமாட்டத்தை கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறிந்து, கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் புலி தாக்கி இறந்த மாட்டுக்கு உண்டான இழப்பீட்டு தொகையை விவசாயிக்கு வழங்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- அம்மாபேட்டையில் போலீஸ்காரரை தாக்கிய லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர்.
- நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகன் நாகராஜ் (35). லாரி டிரைவர்.
இவர் நேற்று மாலை அம்மாபேட்டை-மேட்டூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் இரு சக்கர வாகன ஷோரூமில் தனது மோட்டார் சைக்கிளுக்கு என்ஜின் ஆயில் இலவசமாக மாற்றி தர வேண்டும் என கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜான் பொன்னையன் மற்றும் போலீஸ் ஏட்டு முருகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசா ரணை நடத்தினர். இதையடுத்து போலீசார் நாக ராஜை எச்சரித்தனர்.
மேலும் நாகராஜ் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து நாகராஜ் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டார்.
தொடர்ந்து நாகராஜ் போலீஸ் ஏட்டுவின் சட்டையை பிடித்து தாக்கி பேனாவால் குத்தினார். மேலும் அவரின் கை விரலை கடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் போலீஸ் ஏட்டு முருகன் அக்கம் பக்கம் இருந்தவர்களின் உதவியுடன் நாகராஜை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தார்.
இது குறித்து போலீஸ் ஏட்டு அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சென்னிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 12-ந் தேதி நடக்கிறது.
- ஊஞ்சலூர் அருகே காவிரி ஆற்றில் இருந்து சென்னிமலைக்கு தீர்த்தம் எடுத்து வரப்படுகிறது
- மாலை சந்தன காப்பு அலங்கா ரத்தில் மகா தீபாராதனை, சுவாமி புறப்பாடு நடக்கிறது.
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவிலில் முருக பெருமானின் அவதார தினமான வைகாசி விசாகத்தை முன்னிட்டு 66-வது ஆண்டு வைகாசி விசாக பெருவிழா வருகிற 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி வரும் 11-ந் தேதி மாலை ஊஞ்சலூர் அருகே காவிரி ஆற்றில் இருந்து சென்னிமலைக்கு தீர்த்தம் எடுத்து வரப்படு கிறது. தொடர்ந்து 12-ந் தேதி காலை 7.30 மணிக்கு சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க காவிரி திருமஞ்சன தீர்த்தம் ஊர்வலமாக புறப்பட்டு மலை கோவிலை சென்று அடைகிறது.
இதை தொடர்ந்து முருகன் கோவிலில் அன்று காலை கணபதி ேஹாமத்து டன் தொடங்கி கலசஸ்தா பனம், 108 சங்குஸ்தாபனம், ஜெபம், ஓமம் நடக்கிறது. மதியம் முருகப்பெருமானுக்கு பஞ்சாமிர்தம், தேன், பழங்கள், பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொரு ட்களால் அபிேஷகம் செய்யப்படுகிறது. மாலை சந்தன காப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடக்கிறது. அதை தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடக்கிறது.
விழாவை யொட்டி வரும் 12-ந் தேதி காலை முதல் இரவு வரை மலை அடிவாரத்தில் உள்ள அருணகிரிநாதர் மடத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அருள்குமார் தலைமையில் அருணகிரிநாதர் மடம் மற்றும் கிருத்திகை விசாக குழுவினர் செய்து வருகின்றனர்.
- ஆசை வார்த்தை கூறி ரூ.50 லட்சம் பணம்-நகை பெற்று மோசடி செய்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
- மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க சிவகிரி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
- சிவகிரி போலீசார் மனு குறித்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
ஈரோடு:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாலன் நகர் பகுதியை சேர்ந்த ஆரோக்கியமேரி (வயது 60) என்பவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வந்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள வள்ளிபுரம் கருக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் எங்கள் உறவினர் மூலம் அறிமுகமாகி எங்களுக்கு கொரோனா காலத்தில் தற்காலிக கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அந்த வாலிபர் எனது மகளிடம் ஆசை வார்த்தைகள் கூறி பழகி வந்துள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு முதல் தற்போது வரை தனது தங்கைக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவசர தேவைக்கு பணம் தேவைப்படுவதாகவும் கூறி எனது மகளிடம் சிறிது சிறிதாக அந்த வாலிபர் ரூ.43 லட்சத்து 60 ஆயிரம் மற்றும் ரூ.6 லட்சம் மதிப்புள்ள 15 பவுன் தங்க நகைகள் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டு இன்று வரை தராமல் மோசடி செய்துள்ளார்.
இதற்கிடையில் பணம் எடுத்துக்கொண்டு வருகிறேன் எனக்கூறி எங்களது ரூ.10 லட்சம் மதிப்புள்ள காரை அந்த வாலிபர் எடுத்து சென்று விட்டு பெயர் மாற்றம் செய்து அதையும் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்து மோசடி செய்துள்ளார்.
பணம் கொடுத்தது தொடர்பாக நேரிலும், தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டும் கேட்டதற்கு தகாத வார்த்தைகளால் என்னைத் திட்டினார். மேலும் எனது மகளுக்கு தொலைபேசி மூலம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார்.
பணம் எதுவும் கேட்டால் உங்கள் மகளின் புகைப்படத்தை வெளியிடுவேன் என்றும், எனது சாவுக்கு நீங்கள் தான் காரணம் என்று எழுதி வைத்துவிட்டு நான் தற்கொலை செய்து கொள்வேன் எனக் கூறி மிரட்டுகிறார். ஆகையால் தாங்கள் எனது புகாரை ஏற்றுக்கொண்டு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து எனது பணம் மற்றும் நகையை மீட்டு தரவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.
மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க சிவகிரி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் சிவகிரி போலீசார் மனு குறித்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
- உழவர் உற்பத்தியாளர் நிறுவன விதைப்பண்ணை சாகுபடியாளர்களுக்கு தரமான சான்று விதை உற்பத்தி பயிற்சி வழங்கப்பட்டது.
- பயிற்சியின் போது சாகுபடியாளர்கள் தனது வயலில் கடைபிடிக்க வேண்டிய விதை நேர்த்தி முறைகள், கலவன் அகற்றும் முறைகள், நோய் மற்றும் பூச்சி தாக்குதல், ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சிவகிரி ஈரோடு துல்லிய பண்ணை விதை உற்பத்தியாளர் வளாகத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் அட்மா திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் நிறுவன விதைப்பண்ணை சாகு படியாளர்களுக்கு தரமான சான்று விதை உற்பத்தி பயிற்சி வழங்கப்பட்டது.
இப்பயிற்சியில் விதை ச்சான்று மற்றும் அங்க கச்சான்று உதவி இயக்குநர் மோகனசுந்தரம் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். இப்பயிற்சியின் போது சாகுபடியாளர்கள் தனது வயலில் கடைபிடிக்க வேண்டிய விதை நேர்த்தி முறைகள், கலவன் அகற்றும் முறைகள், நோய் மற்றும் பூச்சி தாக்குதல், ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள் குறித்து பயிற்சி அளித்தார்.
கொடுமுடி, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் யசோதா கலந்து கொண்டு வேளாண்துறை சார்ந்த திட்டங்கள் பற்றி விளக்கம் அளித்தார். மேலும், விதைச்சான்று அலுவலர் (தொழில்நுட்பம்) மா.கணேசமூர்த்தி விதை ப்பண்ணை பதிவு செய்தல், வயலாய்வு செய்தல், சுத்தி அறிக்கை பெறுதல் பற்றி பயிற்சி அளித்தார்.
ஈராடு, அங்ககச்சான்று ஆய்வாளர் சி.மகாதேவன், அங்ககச்சான்று பதிவு செய்தல் மற்றும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி பயிற்சி அளித்தார். கொடுமுடி, அட்மா திட்ட வட்டார மேலாளர் கிருத்திகா இப்பயிற்சிக்கான எற்பாடுகளை செய்தார்.
ஈரோடு துல்லிய பண்ணைய சுத்தி நிலைய பொறுப்பு அலுவலர் பாபு விதை சுத்தி நிலைய செயல்பாடுகள் பற்றி செயல் விளக்கம் அளித்தார்.
- தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டிய வரட்டுப்பள்ளம் அணை எட்டி உள்ளது.
- உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
அந்தியூர்:
அந்தியூர் அடுத்த வரட்டுப்பள்ளம் அணை பர்கூர் மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது. இந்த அணையின் முழு கொள்ளளவான 33.5 அடியாகும்.
கடந்த வாரம் பர்கூர் மலை மற்றும் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் வெளியேறி வந்தது.
இதையடுத்து அணை யின் நீர் பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லா ததால் முழு கொள்ளளவான 33.5 அடியாகவே இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த நேற்று மற்றும் நேற்று முன்தினம் என தொடர்ந்து 2 நாட்கள் அந்தியூர் மற்றும் பர்கூர் மலை சுற்றுப் பகுதி மற்றும் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் பரவலாக மழை பெய்தது.
இதனால் வரட்டுப்பள்ளம் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இதனால் அணையின் முழு கொள்ள ளவான 33.5 அடியை எட்டி கடல் போல் காட்சி அளித்து வருகிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 43 கன அடி உபரி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
இதனால் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இந்த மழைப் பொழிவால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- சிறுமி வாக்குமூலம் படி ஆந்திரா, கேரளா மாநிலங்களிலும் உள்ள தனியார் மருத்துவமனையில் விசாரணை மேற்கொள்ளப்படும்.
- கருமுட்டை விற்பனை தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை நிறைவடைந்தும் அதன் அறிக்கை அரசுக்கு தாக்கல் செய்யப்படும்.
ஈரோடு:
ஈரோட்டில் 16 வயது சிறுமியுடன் வசித்து வந்த பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
பின்னர் அந்த பெண்ணிற்கு பெயிண்டர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்தப் பெண் பெயிண்டரை 2-வதாக திருமணம் செய்து வசித்து வந்தார். இந்நிலையில் அந்தப் பெண் கருமுட்டை கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.
அப்போது அவருக்கு கருமுட்டையை கமிஷன் அடிப்படையில் கொடுக்கும் புரோக்கர் மாலதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது மாலதி உங்களது மகள் மூலமும் கருமுட்டையை கொடுத்து நிறைய சம்பாதிக்கலாம் என்று அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி உள்ளார்.
இதையடுத்து அந்த சிறுமியை அவரது வளர்ப்புத் தந்தையான பெயிண்டர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். கருமுட்டையை ஆஸ்பத்திரிகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்து உள்ளார். இதற்காக அந்த சிறுமியின் வயதை அதிகரித்து காட்டுவதற்காக போலி ஆதார் அட்டை தயாரித்து கருமுட்டையை அந்த சிறுமியிடம் இருந்து எடுத்துள்ளனர்.
போலி ஆவணத்தை ஈரோடு சூரம்பட்டி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த ஜான் (25) என்பவர் தயாரித்துக் கொடுத்துள்ளார். ஈரோடு, சேலம், ஓசூர் உள்பட பல்வேறு தனியார் ஆஸ்பத்திரிகளில் அந்த சிறுமியை அவரது தாய் மற்றும் வளர்ப்புத் தந்தை அழைத்துக் கொண்டு 8 முறை கருமுட்டை எடுத்துள்ளனர். ஒவ்வொரு முறை அந்த சிறுமி கருமுட்டை கொடுத்தவுடன் அந்த சிறுமியின் தாய்க்கு ரூ.20 ஆயிரமும், புரோக்கர் மாலதிக்கு ரூ. 5 ஆயிரம் கமிஷனாக ஆஸ்பத்திரி சார்பில் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த பணத்தை கொண்டு சிறுமியின் தாய், வளர்ப்புத் தந்தை உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். தொடர்ந்து கருமுட்டை கொடுத்ததால் சிறுமியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. மேலும் வளர்ப்புத் தந்தை தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததால் சிறுமி அவர்களிடமிருந்து தப்பித்து சேலத்தில் உள்ள உறவினர் வீட்டில் தஞ்சமடைந்தார்.
உறவினர்களிடம் நடந்த விஷயத்தை கூறி கதறி சிறுமி அழுது உள்ளார். இதையடுத்து அவரது உறவினர்கள் சிறுமியை அழைத்துக் கொண்டு ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதன் பிறகே இந்த விவகாரம் வெளியுலகத்துக்கு தெரிய வந்தது.
16 வயது சிறுமிக்கு சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அந்த சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர் மாலதி, அவர்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த ஜான் ஆகிய 4 பேர் ஏற்கனவே போக்சோ உள்பட 10 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
ஈரோடு ஏ.டி.எஸ்.பி கனகேஸ்வரி சிறுமிக்கு கருமுட்டை எடுத்த விவகாரத்தில் தொடர்புடைய 2 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சம்மன் அனுப்பி ஆஸ்பத்திரி நிர்வாகிகள், டாக்டர்கள், ஊழியர்களிடம் 5 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினார்.
இந்த சம்பவத்தில் உண்மை நிலையை கண்டறியும் வகையில் சென்னையில் உள்ள மருத்துவ பணிகள் இயக்குனரகத்தின் துணை இயக்குனர் குருநாதன், இணை இயக்குனர் (சட்டம்) விசுவநாதன், ஈரோடு மருத்துவ பணிகள் துணை இயக்குனர் கோமதி, மகப்பேறு டாக்டர்கள் மலர்விழி, கதிரவன் உள்பட 6 பேர் கொண்ட குழுவினர் ஈரோட்டுக்கு வந்தனர்.
மருத்துவ குழு ஆர்.என்.புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினார். சுமார் 3 மணி நேரம் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த மருத்துவக் குழுவிடம் கண்ணீர் மல்க கூறினார்.
முதலில் அந்த சிறுமி என்ன கூறினார் என்ற தகவல் வெளிவரவில்லை. தற்போது அந்த சிறுமி மருத்துவக் குழுவிடம் கூறிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் தனது தாய் உல்லாச வாழ்க்கை வாழ்வதற்காக தனது வளர்ப்புத் தந்தை உடன் சேர்ந்து தனக்கு பல வகையில் தொல்லை கொடுத்துள்ளார்.
குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளாக கருமுட்டை விற்பனைக்காக வளர்ப்பு தந்தை தனக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர், திருவனந்தபுரம், திருப்பதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் 8 முறை தன்னிடமிருந்து கருமுட்டை எடுக்கப்பட்டதாகவும், கருமுட்டை எந்தெந்த நாட்களில் எடுக்கப்பட்டது என்ற விவரத்தையும் அந்த சிறுமி கூறி அழுதுள்ளார்.
சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட மருத்துவக்குழு விசாரணையை தீவிரப்படுத்தியது.
பின்னர் மருத்துவ குழு ஈரோடு, பெருந்துறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று 9 மணி நேரம் விசாரணை நடத்தியது. மருத்துவ குழுவினர் ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர், ஆஸ்பத்திரி டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கருமுட்டை தானம் எடுக்கும் முன்பு அரசு குறிப்பிட்டுள்ள வழிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா? எந்த சான்றிதழ் அடிப்படையில் சிறுமியிடம் இருந்து கருமுட்டை எடுக்கப்பட்டது. அந்த சிறுமிக்கு திருமணம் ஆகி விட்டதை உறுதி செய்தீர்களா? உட்பட பல்வேறு கேள்விகளை சரமாரியாக கேட்டனர்.
மேலும் அந்த சிறுமி தொடர்பான ஆவணங்களையும் கைப்பற்றி எடுத்துச் சென்றனர். இந்நிலையில் நேற்று 2-வது நாளாக இணை இயக்குனர் விஸ்வநாதன் தலைமையில் மருத்துவ குழுவினர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து மருத்துவ குழுவினர் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி மற்றும் ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது 2018ஆம் ஆண்டு முதல் எத்தனை பேருக்கு செயற்கை கருவூட்டல் நடந்தது என்பதை கண்டறிய அதன் ஆவணங்களை ஆய்வு செய்தனர். சம்பந்தப்பட்ட மருத்துவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஆவணங்கள் அடிப்படையில் கருமுட்டை எடுக்கப்பட்டதாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இணை இயக்குனர் விஸ்வநாதன் கூறியதாவது:-
கருமுட்டை விற்பனை தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை நிறைவடைந்தும் அதன் அறிக்கை அரசுக்கு தாக்கல் செய்யப்படும். விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறுமி வாக்குமூலம் படி ஆந்திரா, கேரளா மாநிலங்களிலும் உள்ள தனியார் மருத்துவமனையில் விசாரணை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே 16 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி கருமுட்டை விற்க செய்த சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர் மாலதி, ஜான் ஆகியோர் 4 பேர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்வது குறித்து சட்ட வல்லுனர்களுடன் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இவர்களில் 4 பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் மருத்துவ குழுவின் முழு விசாரணை முடிந்த பிறகு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முழு உடல் மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.






