என் மலர்
நீங்கள் தேடியது "against the youth"
- ஆசை வார்த்தை கூறி ரூ.50 லட்சம் பணம்-நகை பெற்று மோசடி செய்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
- மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க சிவகிரி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
- சிவகிரி போலீசார் மனு குறித்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
ஈரோடு:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாலன் நகர் பகுதியை சேர்ந்த ஆரோக்கியமேரி (வயது 60) என்பவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வந்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள வள்ளிபுரம் கருக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் எங்கள் உறவினர் மூலம் அறிமுகமாகி எங்களுக்கு கொரோனா காலத்தில் தற்காலிக கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அந்த வாலிபர் எனது மகளிடம் ஆசை வார்த்தைகள் கூறி பழகி வந்துள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு முதல் தற்போது வரை தனது தங்கைக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவசர தேவைக்கு பணம் தேவைப்படுவதாகவும் கூறி எனது மகளிடம் சிறிது சிறிதாக அந்த வாலிபர் ரூ.43 லட்சத்து 60 ஆயிரம் மற்றும் ரூ.6 லட்சம் மதிப்புள்ள 15 பவுன் தங்க நகைகள் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டு இன்று வரை தராமல் மோசடி செய்துள்ளார்.
இதற்கிடையில் பணம் எடுத்துக்கொண்டு வருகிறேன் எனக்கூறி எங்களது ரூ.10 லட்சம் மதிப்புள்ள காரை அந்த வாலிபர் எடுத்து சென்று விட்டு பெயர் மாற்றம் செய்து அதையும் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்து மோசடி செய்துள்ளார்.
பணம் கொடுத்தது தொடர்பாக நேரிலும், தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டும் கேட்டதற்கு தகாத வார்த்தைகளால் என்னைத் திட்டினார். மேலும் எனது மகளுக்கு தொலைபேசி மூலம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார்.
பணம் எதுவும் கேட்டால் உங்கள் மகளின் புகைப்படத்தை வெளியிடுவேன் என்றும், எனது சாவுக்கு நீங்கள் தான் காரணம் என்று எழுதி வைத்துவிட்டு நான் தற்கொலை செய்து கொள்வேன் எனக் கூறி மிரட்டுகிறார். ஆகையால் தாங்கள் எனது புகாரை ஏற்றுக்கொண்டு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து எனது பணம் மற்றும் நகையை மீட்டு தரவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.
மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க சிவகிரி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் சிவகிரி போலீசார் மனு குறித்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.