என் மலர்
ஈரோடு
- பெருந்துறை அருகே வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
- பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பெருந்துறை:
ஈரோடு சென்னப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருண் சங்கர் (வயது 24). இவர் தனது தந்தை இறந்த பின்பு அவர் நடத்தி வந்த பேக்கரிக்கு தேவையான மொத்த பொருட்களை விற்பனை செய்யும் கடையை கடந்த 18 வருடங்களாக பெருந்துறை-காஞ்சிகோயில் ரோடு பகுதியில் நடத்தி வந்தார்.
இந்தநிலையில் வியாபாரத்தில் அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் தனது தாய் மற்றும் அண்ணனிடம் அடிக்கடி புலம்பி கொண்டிருந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு தனது தாய்க்கு போன் செய்து வீட்டுக்கு வருவதாக கூறி இருந்தார். மறுநாள் காலை வரை அருண்சங்கர் வீட்டிற்கு வராததால், அவரது தாய் அவருக்கு போன் செய்தபோது போன் எடுக்கவில்லை.
உடனடியாக குடும்பத்தினர் கடைக்கு வந்து பார்த்த போது கடை சட்டர் உள்புறமாக பூட்டி இருந்தது.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஷட்டரை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அருண் சங்கர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.
உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அருண்சங்கர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இது தொடர்பாக தகவலறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- மொடக்குறிச்சி அருகே வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- செல்போன், மளிகை கடையில் திருடிய ரூ.2500 ரொக்கம் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மொடக்குறிச்சி:
ஈரோடு அடுத்த சோலார் அருகே உள்ள நகராட்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (34). சிசிடிவி கேமரா பழுது நீக்கம் செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று சேலம் செல்வதற்காக தனது வீட்டில் இருந்து பஸ் நிறுத்தத்திற்கு செல்போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது இவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் சுரேஷின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசில் கொடுத்த புகாரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதேபோல் மொடக்குறிச்சி அடுத்த 46புதூர் சுப்பராயவலசு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (28). அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
பின்னர் மறுநாள் காலை கடையை திறந்த போது கல்லாவில் இருந்த ரூ.2500 பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின் மீது மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று லக்காபுரம் பரிசல்துறை சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் சோலார் அடுத்த வெண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் முத்துக்குமார் (19), அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் கோகுல் (20), இவர்கள் இருவரும் சுரேஷின் செல்போனை பறித்து சென்றதும், மளிகை கடையில் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதனையடுத்து 2 பேரையும் கைது செய்த மொடக்குறிச்சி போலீசார் இவர்களிடம் இருந்து செல்போன், மளிகை கடையில் திருடிய ரூ.2500 ரொக்கம் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- சென்னிமலையில் குட்டையில் மீன் பிடிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
- நண்பர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர் ஆனால், முடியவில்லை.
சென்னிமலை:
சென்னிமலை அடுத்துள்ள வாய்ப்பாடி அருகிலுள்ள கொளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி மல்லிகா. இவர்களது இளைய மகன் அஜய் (18). இவர் கொளத்துப்பாளையத்தில் உள்ள தனது சித்தப்பா வீட்டில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று அஜய் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து வாய்ப்பாடி அருகிலுள்ள குட்டையில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அஜய்க்கு நீச்சல் தெரியாது.
இவர்கள் குட்டையில் மீன் பிடித்துகொ ண்டிருந்தபோது அஜய் எதிர்பாராதவிதமாக திடீரென தண்ணீரில் மூழ்கி விட்டார்.
உடனே நண்பர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால், முடியவில்லை.
உடனே இதுகுறித்து சென்னிமலை போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து தேடியபோதும் காப்பாற்ற முடியாமல் அஜயை பிணமாக மாலையில் மீட்டனர். பின்னர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
- ஈரோட்டில் 4 நாட்களில் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
- பொதுமக்கள் பொது இடங்களுக்கு வரும்போது சமூக இடைவெளியை கடைபிடித்து முககவசம் அணிந்து வரவேண்டும் என சுகாதாரத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக 3-வது அலை ஏற்பட்டு தினசரி பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருந்தது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது.
கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பின் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்தது. இருப்பினும், அவ்வப்போது ஓரிருவருக்கு தொற்று ஏற்பட்டு, அவர்கள் குணமடைந்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவரும் மே மாதம் 4-ந் தேதி குணமடைந்தார். அதன்பின் தொற்று இல்லாத மாவட்ட மானது ஈரோடு.
பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ந் தேதி முதல் அடுத்தடுத்த நாளில் தொற்று ஏற்பட்டு 5 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்கள் அடுத்தடுத்த நாட்களில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் இருந்த ஒருவரும் 30-ந் தேதியுடன் குணமடைந்து வீடு திரும்பினார்.
இதையடுத்து மீண்டும் ஈரோடு கொரோனா இல்லாத மாவட்டமாக இருந்து வந்தது. கிட்டத்தட்ட 6 நாட்களுக்கு பிறகு கடந்த 5-ந் தேதி 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து 6-ந் தேதி மேலும் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. நேற்று சுகாதார துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது கடந்த 4 நாட்களில் மட்டும் 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 685 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 942 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் மீண்டும் மெல்ல மெல்ல கொரோனா வேகம் எடுக்க தொடங்கி உள்ளது.
இதனால் பொது மக்கள் மீண்டும் பொது இடங்களுக்கு வரும்போது சமூக இடைவெளியை கடைபிடித்து முககவசம் அணிந்து வரவேண்டும் என சுகாதாரத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
- ஈரோட்டில் உள்ள 2 தனியார் மருத்துவமனையின் பெண் மருத்துவர்களை நேரடியாக போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து இது சம்பந்தமாக விசாரணை நடத்தினார்கள்.
- நேற்றும் அவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.
ஈரோடு:
ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கருமுட்டை விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, இடைத்தரகர் மாலதி, சிறுமியின் பெயர், வயதை மாற்றி போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்த ஜான் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் 12 வயதில் இருந்து கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 8 முறை கருமுட்டையை விற்பனை செய்ததும், ஒவ்வொரு முறையும் விற்பனை செய்யும் போதும் ரூ.25 ஆயிரம் மருத்துவமனையிலிருந்து பெற்றோர் பணம் பெற்றதும் தெரியவந்தது.
ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர் உள்ளிட்ட மருத்துவமனைகள் மட்டுமல்லாது ஆந்திர மாநிலம் திருப்பதி, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் உள்ள கருவூட்டல் மையங்களில் சிகிச்சை பெற்று வந்த பெண்களுக்காக ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவ குழுவினர் ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர் மருத்துவமனைகளில் நேரடியாக சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
அடுத்ததாக திருப்பதி, திருவனந்தபுரம் மருத்துவமனைகளிலும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக திருப்பதி, திருவனந்தபுரம் மருத்துவமனைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் இந்த விவகாரத்தில் தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்பு, விதிமீறல் உள்ளிட்டவை குறித்து போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோட்டில் உள்ள 2 தனியார் மருத்துவமனையின் பெண் மருத்துவர்களை நேரடியாக போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து இது சம்பந்தமாக விசாரணை நடத்தினார்கள். நேற்றும் அவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
கரு முட்டை விற்பனை தொடர்பாக ஏற்கனவே மருத்துவமனை நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில சந்தேகங்கள் தொடர்பாக 2-வது கட்டமாக நேற்று முன்தினம் முதல் விசாரணை நடத்தி வருகிறோம்.
சிறுமி என்பது தெரிந்தே கருமுட்டை எடுக்கப்பட்டதா? அல்லது போலி ஆதார் அட்டையை நம்பி அதன் அடிப்படையில் கருமுட்டை எடுக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. சில ஆவணங்களை மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து கேட்டு பெற்று அதன்படி விசாரணை நடத்தப்பட்டது என்றனர்.
ஈரோடு:
திருப்பத்தூரை சேர்ந்தவர் அருண்பாண்டியன் (32). திருமணமான இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து ஈரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் வேலைபார்த்து வந்தார். அருண்பாண்டியனுக்கு குடிபழக்கம் இருந்து வந்தது. இவரது தம்பி அஜித்குமார். திருமணமான இவர் ஈரோடு பெரியண்ணன் வீதியில் குடும்பத்துடன் தங்கி லேப் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அருண்பாண்டியன் அவ்வப்போது குடிபோதையில் தனது தம்பி அஜித்குமாரின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து வந்தார். இதனால் கடந்த சில நாட்களாக அவர்களுக்கிடையே இடையே தகராறு இருந்து வந்துள்ளது. நேற்றும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் அருண்பாண்டியன் ஓட்டல் வேலைக்கு செல்வதற்காக ஈரோடு மொசவண்ணா வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது தம்பி அஜித்குமார் தனது அண்ணனை சமாதானப்படுத்த முயன்றார்.
அப்போது குடிபோதையில் இருந்த அருண்பாண்டியன் தம்பியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டார். இதனால் அவர்கள் இருவருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அஜித்குமார் கறி வெட்டும் கத்தியால் அண்ணனை வெட்ட முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அருண்பாண்டியன் தம்பியிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடினார். இருந்தாலும் ஆத்திரத்தில் இருந்த அஜித்குமார் பின் தொடர்ந்து அவரை ஓட ஓட விரட்டி வெட்டினார். இதில் நிலைகுலைந்து சரிந்து விழுந்த அருண்பாண்டியன் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் வந்தனர். மேலும் டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். அருண்பாண்டியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அஜீத்குமாரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளிலும் பதிவாகியுள்ளது. அதிகாலையில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஈரோடு கிழக்கு, மேற்கு, பெருந்துறை ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் தனியார் பள்ளி வாகனங்களின் ஆய்வு நடந்தது.
- வாகன சோதனையில் கிழக்கு பகுதியில் 355 வாகனங்களும், மேற்கு பகுதியில் 43 வாகனங்களும், பெருந்துறையில் 463 வாகனங்கள் என மொத்தம் 861 வாகனங்கள் வந்தன.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு, மேற்கு, பெருந்துறை ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் தனியார் பள்ளி வாகனங்களின் ஆய்வு இன்று ஈரோடு பெருந்துறை ரோடு, பவளத்தாம்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நடந்தது.
வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார் தலைமை தாங்கி வாகனங்களை ஆய்வு செய்தார். வாகனங்களில் அவசர வழி சரியாக செயல்படுகிறதா? பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக உள்ளதா? தீயணைப்பு கருவிகள் உள்ளதா? என பல்வேறு சோதனைகள் செய்தார்.
இந்த வாகன சோதனையில் கிழக்கு பகுதியில் 355 வாகனங்களும், மேற்கு பகுதியில் 43 வாகனங்களும், பெருந்துறையில் 463 வாகனங்கள் என மொத்தம் 861 வாகனங்கள் வந்தன.
மேலும் தீ விபத்து ஏற்பட்டால் அதனை எவ்வாறு அணைப்பது என்பது குறித்து டிரைவர்களுக்கு செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் வட்டார போக்கு வரத்து அலுவலர்கள் வெங்கட்ரமணி, பதுவை நாதன், சக்திவேல், வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் பாஸ்கர், எம்.சிவகுமார், கதிர்வேல், கே.சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- டி.என்.பாளையம் அருகே கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
- ரேசன் அரிசி மூட்டைகளுடன் வேனை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் சரணை கைது செய்து ஈரோடு மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அருகே உள்ள பங்களாப்புதூர் நால்ரோடு பகுதியில் இருந்து பவானிக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து பங்களாப்புதூர் போலீசார் சத்தி-கோபி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது சத்தி சாலையில் இருந்து பவானி நோக்கி சென்ற சரக்கு வேன் ஒன்றை பங்களாப்புதூர் 3 ரோடு சந்திப்பில் நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் வேனில் சுமார் 2 டன் எடையுள்ள ரேசன் அரிசி 50 மூட்டைகளில் இருப்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து ரேசன் அரிசியுடன் வேனை பறிமுதல் செய்த போலீசார் போலீஸ் நிலையம் சென்று வேன் டிரைவர் திருப்பூர் மாவட்டம் ரங்கநாதபுரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த சரண் என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகள் டி.என்.பாளையம் அருகே உள்ள நால்ரோடு பகுதியில் இருந்து வாங்கிக்கொண்டு பவானிக்கு கொண்டு செல்வது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து ரேசன் அரிசி மூட்டைகளுடன் வேனை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் சரணை கைது செய்து ஈரோடு மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஈரோடு:
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஆறுமுகம் என்பவர் வந்து மனு கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
பவானி தாலுகா கவுந்தபாடி, சிங்கநல்லூர் கிராமம், மாணிக்க வலசு பகுதியிலும், குறிஞ்சி கல்பாவி கிராமம், எட்டிகுட்டை, குறிச்சி கரடு போன்ற பகுதிகளிலும் கிராவல் மணல் சட்டவிரோதமாக திருடப்பட்டு வருகிறது. புதுக்கோட்டையை சேர்ந்த 2 பேர் ஒரு யூனிட் ரூ.400 வீதம் 4 யூனிட்டுக்கு ரூ.1600-யை கொடுத்து தான் கிராவல் மண் ராயல்டி என்று நூதன முறையில் பணம் வசூல் செய்கிறார்கள்.
அவர்கள் அதிகாரிகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லி சென்னிமலையில் உள்ள கல்குவாரி அனுமதி சீட்டு (ரப்கல், கிராவல்) சீட்டு தருகிறார்கள். நீங்கள் எங்களுக்கு ராயல்டி கொடுத்துவிட்டு கிராவல் மண் எடுத்து செல்லுங்கள் என்று சொல்கிறார்கள்.
மேலும் குறிச்சி, கல்பாவி கிராமம், எட்டு குட்டை, குறிச்சிகரடு பொதிகளில் நெடுஞ்சாலைத்துறைக்கு கிராவல் மண் எடுப்பதாக அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டு தனியாருக்கு வணிக நோக்கத்திற்கு விற்பனை செய்கிறார்கள். எனவே அரசு அனுமதி இல்லாமல் கிராவல் மண் எடுப்பதற்கு தடை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.
- நிலுவையில் உள்ள சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்க அரசு முதன்மை செயலாளர் உஷா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
- பயிற்சியில் பங்கு பெற்றுள்ள ஆசிரியர்கள் அதனை ஆர்வத்துடன் கற்று மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும் என தெரி வித்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில், ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசு முதன்மைச் செயலாளருமான பள்ளிக்கல்வித்துறை காகர்லா உஷா வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், இணைய வழியில் வழங்கப்படும் சான்றிதழ்கள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் இது குறித்து பள்ளி கல்வி துறை அரசு முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குடிநீர் இணைப்பு, கட்டட அனுமதிகள், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், சொத்துவரி பெயர் மாற்றம் போன்ற பொதுமக்களுக்கான சேவைகளை தாமதமின்றி விரைந்து முடித்திட அலு வலர்களுக்கு உத்தர விட்டதோடு, குடிநீர் இணைப்பு பணிகள் மேற்கொள்ளும் போது தோண்டப்படும் சாலைகளை மீண்டும் பழைய நிலையிலேயே இருக்கும்படி உடனடியாக சீர்செய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றார்.
இந்த ஆய்வின்போது காகர்லா உஷா பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில் இணைய வழியில் வழங்கப்படும் சான்றிதழ்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, ஈரோடு மற்றும் கோபி செட்டிபாளையம் ஆகிய இரண்டு கோட்டங்களிலும் வழங்கப்படும் சான்றிதழ்களை எவ்வித நிலுவையுமின்றி வழங்கவும், மேலும், நிலுவையில் உள்ள சான்றிதழ்களை உடனடியாக வழங்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் நிலுவையில் உள்ள சான்றிதழ்கள் மற்றும் பட்டாமாறுதல் விண்ணப்பங்களின் விபரங்கள் குறித்து அனைத்து வட்டாட்சியர்களிடமும் கேட்ட றிந்தார். நிலுவை க்கான காரணங்களை உடனடியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்து இணைக்கப்பட வேண்டிய ஆவணங்களை பெற்று, சான்றிதழ்கள் மற்றும் பட்டாக்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளு மாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில் செயல்படும் இ-சேவை மையத்தில் ஆய்வு மேற்கொண்டு, மின்னணு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமான வரி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ் கோரி பதிவு செய்யவும், ஏற்கனவே பதிவு செய்து சான்றிதழ் பெறவும் வந்திருந்த பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் வட்டார அளவிலான பயிற்சி நடைபெறுகிறது. இதை யொட்டி பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இப்பயிற்சி மாணவர்க ளின் கற்றலை மேம்படுத்துவதாக அமைய வேண்டும் என்றும் பயிற்சியில் பங்கு பெற்றுள்ள ஆசிரியர்கள் அதனை ஆர்வத்துடன் கற்று மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, கோட்டாட்சியர்கள் சதீஷ்குமார் (ஈரோடு), திவ்ய பிரியதர்ஷினி (கோபி), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி, முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், பெருந்துறை தாசில்தார் குமரேசன் உள்பட பலர் உடனிருந்தனர்.
- குண்டேரிபள்ளம் அணையில் சுற்றுலா பயணிகளுக்கு ஓய்வு அறை, குடிநீர், வாகனம் நிறுத்தும் இடம் அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்
- அமைச்சர் முத்துசாமி சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்துள்ள கொங்கர்பாளையம் ஊராட்சியில் உள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் ஓய்வறை, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, பாதுகாப்பு கம்பி வேலி அமைத்தல் மற்றும் அணுகு சாலை அமைத்தல் ஆகிய சுற்றுலா மேம்பாட்டு பணிகள் ரூ.1 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் நடந்து முடிவடைந்த நிலையில் அமைச்சர் சு.முத்துசாமி சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அப்போது வினோபா நகரை சேர்ந்த விவசாயிகள் விவசாய கிணறுகளுக்கு மின் இணைப்பு, பூமிதான இடத்திற்கு பட்டா உட்பட பல்வேறு அரசு சார்ந்த நலத்திட்ட உதவிகள் தங்களுக்கும் கிடைக்க வேண்டி மனுக்களை அமைச்சர் முத்துசாமியிடம் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், அந்தியூர் எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம், டி.என்.பாளையம் ஒன்றிய பொறுப்பாளர் எம்.சிவபாலன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டி.கே.சுப்பிரமணியம், கந்தசாமி, கோபி ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி, தாசில்தார் ஆசியா, சிட்கோ வாரிய முன்னாள் தலைவரும் ஐகோர்ட்டு வக்கீலுமான சிந்து ரவிச்சந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சதிஷ்குமார், உதவி பொறியாளர் கல்பனா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
- ஈரோட்டில் 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது.
- அதிகபட்சமாக நம்பியூரில் 61 மி.மீ பதிவானது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் அக்னி நட்சத்திர வெயில் முடிந்த பிறகும் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வந்தது. குறிப்பாக பகல் நேரங்களில் அனல் காற்றுடன் வெயில் கொளுத்தியது. வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் இடியுடன் கனமழை பெய்தது.
ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று இரவு முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்தது. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் மழைநீரால் நிரம்பியது.
மேலும் பல்வேறு இடங்கள் குண்டும், குழியுமாக காட்சி அளித்தது. ஈரோடு வ.உ.சி. காய்கறிகள் மார்க்கெட்டில் வழக்கம்போல் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளித்தது. இதன் காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர்.
இதேப்போல் மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக நம்பியூர் பகுதியில் 61 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
இதேபோல் பெருந்துறை, சென்னிமலை, வரட்டுப்பள்ளம், கொடுமுடி, கொடிவேரி போன்ற பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மழையால் வெப்பமான சூழ்நிலை மாறி குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:-
நம்பியூர்-61, பெருந்துறை-37, சென்னிமலை-35, சத்தியமங்கலம்-16, மொடக்குறிச்சி-11, கொடுமுடி-8.2, கொடிவேரி-8, கோபி-7.6, குண்டேரிபள்ளம்-6.4, கவுந்தப்பாடி-6.4, ஈரோடு-5, அம்மாபேட்டை-1.2.






