என் மலர்tooltip icon

    ஈரோடு

    • 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.49 அடியாக உள்ளது.
    • நாளைக்குள் பவானிசாகர் அணை 100 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது.

    கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.49 அடியாக உள்ளது. நாளைக்குள் பவானிசாகர் அணை 100 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 800 கன அடியும், பவானி ஆற்றுக்கு 100 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 905 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்த மாதம் அணையில் அதிகபட்சமாக 100அடிக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்கக் கூடாது என்பது பொதுப்பணித்துறையின் விதி ஆகும். இன்னும் ஒரு நாளில் 100 அடியை பவானிசாகர் அணை எட்டி விடும் என்பதால் அதன் பிறகு பவானிசாகருக்கு வரும் நீர் முழுவதும் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்படும்.

    இதனால் பவானி ஆற்றங்கரை பகுதி மக்களுக்கு ஏற்கனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை உள்ள பவானி ஆற்றின் கரையில் வசிக்கும் மக்களுக்கு ஏற்கனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அன்னை வரலாற்றில் 67 ஆண்டுகளில் இதுவரை 27 முறை 100 அடியை எட்டி உள்ளது. தற்போது 28-வது முறையாக அணை 100 அடியை எட்ட உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதால் பவானிசாகர் அணையின் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாலாஜி தலைமையில் பொதுப்பணித்துறையினர் அணையின் மேல் பகுதியில் முகாமிட்டு நீர்வரத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    • யானையின் தந்தத்தை வெட்டி கடத்தியதாக 17 வயது சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்து அவர்களை ரகசிய இடத்தில் வைத்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
    • அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். செங்கோட்டையன், சடையப்பன் ஆகியோர் கோபி மாவட்ட சிறையிலும், 17 வயது சிறுவன் பொள்ளாச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த கடம்பூர் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதியில் உள்ள அத்தியூர் என்ற பகுதியில் அழுகிய நிலையில் ஒரு யானை பிணமாக கிடந்தது.

    இதை ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் பார்த்து கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து வனச்சரகர் இந்துமதி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது இறந்து கிடந்தது ஆண் யானை என்று தெரிய வந்தது.

    மேலும் அந்த யானையின் 2 தந்தங்களும் வெட்டி எடுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கால்நடை டாக்டர்கள் மூலம் யானை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

    இந்நிலையில் இறந்த யானையின் தந்தத்தை வெட்டி கடத்தியது குறித்து வனத்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அவர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் அத்தியூர் புதூரை சேர்ந்த செங்கோட்டையன் (40), சடையப்பன் (45) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் இறந்த யானையின் தந்தத்தை வெட்டி எடுத்ததாக ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. ஆனாலும் வெட்டி எடுக்கப்பட்ட தந்தம் குறித்து எந்த தகவலும் இதுவரை தெரியவில்லை. இதனால் தந்தத்தை கைப்பற்ற முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.

    இதற்கிடையே யானையின் தந்தத்தை வெட்டி கடத்தியதாக 17 வயது சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்து அவர்களை ரகசிய இடத்தில் வைத்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். செங்கோட்டையன், சடையப்பன் ஆகியோர் கோபி மாவட்ட சிறையிலும், 17 வயது சிறுவன் பொள்ளாச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே 17 வயது சிறுவனை அழைத்து வந்ததால் அவர் என்ன ஆனார் என்று தெரியாமல் அவரது குடும்பத்தினர் மற்றும் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கடம்பூர் வனச்சரகர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

    அவர்கள் வனத்துறையினரிடம் சிறுவன் எங்கே என்று கேட்டு வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அவர்கள் கூறும்போது,

    வனப்பகுயில் யானை இறந்து ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிறது. வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தால் யானை இறந்ததும் தெரிந்திருக்கும். தந்தங்களையும் கைப்பற்றி இருக்கலாம். ஆனால் வனத்துறையினர் ரோந்து பணியில் அலட்சியமாக ஈடுபட்டதால் யானை இறந்தது தாமதமாகத்தான் தெரிய வந்தது என்றனர்.

    • கொரோனோ பரவல் காரணமாக தொடர்ந்து 3-வது ஆண்டாக குருநாதசாமி கோவில் பண்டிகை ரத்து செய்யப்பட்டதால், பக்தர்களும், பொது மக்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
    • திருவிழா ரத்து செய்யப்பட்டதன் காரணமாக தென்னிந்தியாவின் புகழ்பெற்ற குதிரை சந்தையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் புகழ்பெற்ற குருநாதசாமி கோவில் அமைந்துள்ளது.இ க்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் தேர் திருவிழா மற்றும் அதையொட்டி நடைபெறுகின்ற குதிரை சந்தை, பாரம்பரிய கால்நடை சந்தை தென்னிந்திய அளவில் பிரபலமானது.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோவில் பண்டிகை ரத்து செய்யப்பட்டது.த ற்போது கொரோனா பரவல் தமிழகத்தில் சற்று அதி கரித்து வரும் நிலையில், திருவிழாவின் போது தமி ழகம் மட்டும் இன்றி அண்டை மாநி லங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால் இந்த ஆண்டு திருவிழா நடைபெறுமா என்று பொதுமக்கள் எதி ர்பார்த்து காத்திருந்தனர்.

    இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த ஆண்டும் திருவிழாவை ரத்து செய்வது என முடிவு செய்யப்பட்டது.மேலும் சிறப்பு பூஜைகள் மட்டும் மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    திருவிழா ரத்து செய்யப்பட்டதன் காரணமாக தென்னிந்தியாவின் புகழ்பெற்ற குதிரை சந்தையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.கொரோனோ பரவல் காரணமாக தொடர்ந்து 3-வது ஆண்டாக குருநாதசாமி கோவில் பண்டிகை ரத்து செய்யப்பட்டதால், பக்தர்களும், பொது மக்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    • அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு 293 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
    • தேங்காய்பருப்பு 11 லட்சத்து 37 ஆயிரத்து 957-க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

    மொடக்குறிச்சி:

    அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு 293 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 82 ரூபாய் 77 காசுக்கும், அதிகபட்ச விலையாக 84 ரூபாய் 67 காசுக்கும், சராசரி விலையாக 84 ரூபாய் 55 காசுக்கும், ஏலம் போனது.

    இதேபோல் 2-ம் தரம் குறைந்தபட்ச விலையாக 65 ரூபாய் 92 காசுக்கும், அதிகபட்ச விலையாக 78 ரூபாய் 69 காசுக்கும், சராசரி விலையாக 76 ரூபாய் 65 காசுக்கு ஏலம் போனது.

    மொத்தமாக 14,278 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு 11 லட்சத்து 37 ஆயிரத்து 957-க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

    • ஈரோடு மாவட்டத்தில் நாளை நடைபெறும் குரூப்-4 தேர்வுக்காக மாவட்டம் முழுவதும் 201 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • தேர்வர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

    ஈரோடு:

    தமிழக தேர்வாணையம் மூலம் அரசு பதவிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (24-ந்தேதி)தமிழகம் முழுவதும் குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ஈரோடு மாவட்டத்தில் நாளை நடைபெறும் குரூப்-4 தேர்வுக்காக மாவட்டம் முழுவதும் 201 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் குரூப் 4 தேர்வை 63 ஆயிரத்து 16 தேர்வர்கள் எழுத உள்ளனர்.

    தேர்வில் முறைகேடு நடப்பதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு அலுவலர்கள் 201 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    மேலும் 43 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் 16 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வை வீடியோவாக படம் பிடிக்க 208 ஒளிப்பதிவாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்வு பாதுகாப்பு பணியில் 260 போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    ஒவ்வொரு தேர்வர்களும் நாளை காலை சரியாக 8.30 மணிக்குள் அந்தந்த தேர்வு மையத்திற்கு சென்று விட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 9 மணிக்கு பிறகு வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தேர்வு சரியாக காலை 9.30 மணிக்கு தொடங்கி 12.30 மணிக்கு நிறைவடையும். அதன்பின் 12.30 மணி முதல் 12.45 மணி வரை தேர்வர்கள் தங்களது ஓஎம்ஆர் சீட்டை சரியாக பூர்த்தி செய்து உள்ளார்களா என்று பார்க்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 12.45 மணிக்கு பிறகு தேர்வர்கள் அறைய விட்டு வெளியே செல்ல வேண்டும்.

    தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறது.அதன்படி தேர்வர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

    முக கவசம் அணியாமல் வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வில் கருப்பு நிற பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    தேர்வர்கள் ஹால் டிக்கெட் உடன் ஆதார், டிரைவிங் லைசென்ஸ் பாஸ்போர்ட் போன்ற ஏதாவது ஒரு அடையாள அட்டையை கண்டிப்பாக எடுத்து கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    தேர்வு மையங்களில் நுழைவாயிலில் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில் காய்ச்சல் அறிகுறி இருப்பவர்கள் தனி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு தேர்வு நடைபெறும்.

    செல்போன், டிஜிட்டல் வாட்ச் கொண்டு வர அனுமதி இல்லை. இவ்வாறாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்வு மையங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.

    தேர்வுக்குறிய வினாத்தாள்கள் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன. அதற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் கடந்த 3 மாதமாக இல்லாத அளவாக ஒரே நாளில் 60 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 330 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களாக தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. பிற மாவட்டங்களில் தினசரி பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஈரோட்டில் கடந்த 3 நாட்களாக தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் கடந்த 3 மாதமாக இல்லாத அளவாக ஒரே நாளில் 60 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 657 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சையில் இருந்த 41 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 593 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 330 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மாவட்டத்தில் மெல்ல மெல்ல கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என சுகாதாரத் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • சென்னிமலை முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி இன்று அதிகாலை முருக பெருமானுக்கு பால், தயிர், இளநீர் உள்பட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேம் செய்யப்பட்டது.
    • திண்டல் மலை வேலாயுதசாமி கோவிலில் இன்று காலை முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஆடி கிருத்திகை முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்க ளில் இன்று ஏராளமான பக்த ர்கள் சாமி தரிசனம் செய்த னர்.

    சென்னிமலை முருகன் கோவிலில் ஆடி கிருத்தி கையை யொட்டி இன்று அதிகாலை முருக பெரு மானுக்கு பால், தயிர், இளநீர் உள்பட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதையொட்டி கோபி செட்டிபாளையம் அருகே உள்ள பச்சமலை சுப்பி ரமணியசாமி கோவிலில் இன்று அதிகாலை சுப்பிர மணியசாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து இன்று காலை பெண்கள், ஆண்கள் என ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு பால் குடம் எடுத்து வந்தனர்.

    இதை தொடர்ந்து முருகனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 108 சங்காபிஷேகம் நடந்தது. இதையொட்டி சுப்பிரமணிசாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்ய ப்பட்டது.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து இன்று மாலை தங்க மயில் வாகனத்தில் தங்கரத புறப்பாடு நடக்கிறது.

    ஈரோடு அடுத்த திண்டல் மலை வேலாயுதசாமி கோவிலில் இன்று காலை முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஈரோடு, திண்டல், பெருந்துறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் ஈரோடு பார்க் ரோடு முருகன், காசிபாளையம் மலை மலேசியா பாலமுருகன், கருங்கல்பாளையம் சுப்பிர மணியசாமி, பவானி பழனி ஆண்டவர், கோபி செட்டிபாளையம் பவள மலை முருகன் கோவில் மற்றும் பெருந்துறை, அந்தியூர், சத்தியமங்கலம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • ஈரோட்டில் அனுமதியின்றி மது விற்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மேலும் அவர்களிடம் இருந்து 49 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் செங்குட்டுவன் வீதியில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே மது விற்பனை நடைபெறுவதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அப்பகுதியில் சோதனை நடத்தியதில் மதுவிற்பனையில் ஈடுபட்டிருந்த குயிலான்தோப்பு பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் (62), செங்குட்டுவன் வீதியை சேர்ந்த அன்பழகன் (30) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    இவர்களிடமிருந்து 25 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல குயிலான்தோப்பு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் கருங்கல்பாளையம் செங்குட்டுவன் வீதியை சேர்ந்த சக்திவேல்(47), ரமேஷ்(41) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 23 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • சென்னிமலையில் மண்டல துணை தாசில்தாரின் கையெழுத்து போட்டு போலி பட்டா வழங்கிய கிராம நிர்வாக அலுவலர்.
    • இதையடுத்து வி.ஏ.ஓ., சிவக்குமாரை ஆர்.டி.ஓ. நேற்று சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார்.

    சென்னிமலை:

    சென்னிமலையில் மண்டல துணை தாசில்தாரின் கையெழுத்து போட்டு போலி பட்டா வழங்கிய சென்னிமலை டவுன் கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    பெருந்துறை தாலுகா சென்னிமலை உள் வட்டம் எக்கட்டாம் பாளையம் பி கிராமம், மற்றும் சென்னிமலை டவுன் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருபவர் சிவகுமார்.

    இவர் நத்தம் பட்டா வழங்குவதற்காக 3 பேருக்கு மண்டல துணை தாசில்தார் கையெழுத்தை இவரே போலியாக தயாரித்து தாசில்தார் சீல் போன்றவற்றை வைத்து வழங்கியது விசாரணையில் தெரிய வந்தது.

    இந்த புகாரின்படி ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் விசாரித்தார். சிவகுமார் போலி பட்டா வழங்கியது உறுதியானது. சில கையெழுத்துக்கள் போலி என்பதை உறுதி செய்தார்.

    இதையடுத்து வி.ஏ.ஓ., சிவக்குமாரை ஆர்.டி.ஓ. நேற்று சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார்.

    • வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வணிகரீதியான நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
    • கோழிகளுக்கு தேவையான தீவனங்கள் தயாரித்தல் குறித்தும் தொடர்பு இடங்களை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

    மொடக்குறிச்சி:

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மொடக்குறிச்சி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள முகாசி அனுமன் பள்ளி கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வணிகரீதியான நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதில் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானி கிருபாகரன் நாட்டுக்கோழி வளர்ப்பில் கோழிகளுக்கு ஏற்படும் நோய்கள் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் தடுப்பூசிகள் போடுவதன் அவசியம் மற்றும்

    தடுப்பூசியின் மூலம் கட்டுப்படுத்தும் நோய்கள் குறித்தும் கோழிகளுக்கு தேவையான தீவனங்கள் தயாரித்தல் குறித்தும் தொடர்பு இடங்களை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்தும் பயிற்சி அளித்தார்.

    நிகழ்ச்சியில் துணை வேளாண்மை அலுவலர் செல்வராஜ், உதவி வேளாண்மை அலுவலர் பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டு துறையின் திட்டங்களை பற்றி விளக்கினார்கள்.

    தொழில்நுட்ப மேலாளர்கள் விஜயகுமார், மஞ்சுரேகா, நவீன பாரதி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சிக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தனர்.

    • கடன் பிரச்சனையால் மன வருத்தத்தில் இருந்த விசைத்தறி உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள சேமலை பாளை யத்தை சேர்ந்தவர் கதிரே சன் (37). இவர் அரச்சலூர் அருகே உள்ள மீனாட்சி வலசு பகுதியில் தறிப்பட்டறை ஒன்றை லீசுக்கு எடுத்து கடந்த 9 ஆண்டுகளாக நடத்தி வந்தார்.

    இவர் வங்கி மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்களிடம் கடன் பெற்று தொழில் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா காலத்தில் சரியான வருமானம் இல்லாததால் இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாதவும் கூறப்படுகிறது.

    இதனால் அவரால் கடன் கட்ட முடியவில்லை. தொடர்ந்து கடன் பிரச்சனை இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் மன வருத்தத்தில் கதிரேசன் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கதிரேசன் வாந்தி எடுத்து கொண்டு இருந்தார். இதை கண்டு அவரது மனைவி கவிதா அவரிடம் விசாரித்தார். அப்போது கதிரேசன் எலி மருந்தை (விஷம்) தின்றது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் உதவி யுடன் மீட்டு பெரு ந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கதிரேசன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் மாவட்டம் மேட்டூர் அணை தூக்கணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மெல்வின் ஜாசன்.
    • மோட்டார் சைக்கிளை பரத் பிரியன் ஓட்ட பின்னால் மெல்வின் ஜாசன் அமர்ந்திருந்தார்.

    சித்தோடு:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அணை தூக்கணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மெல்வின் ஜாசன் (21). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார்.

    நேற்று மாலை இவர் தனது நண்பரான மேட்டூர் கொளத்தூர் பாப்பாத்தி அம்மாள் நகர் பகுதியை சேர்ந்த பரத் பிரியன் (21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கல்லூரியில் இருந்து ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

    மோட்டார் சைக்கிளை பரத் பிரியன் ஓட்ட பின்னால் மெல்வின் ஜாசன் அமர்ந்திருந்தார். சேலம்-கோவை பைபாஸ் ரோடு பவானி லட்சுமி நகர் அருகே உள்ள சமத்துவபுரம் மேடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரியை முந்த முயற்சி செய்து உள்ளனர்.

    அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்தவர் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை வலது பக்கம் திரும்பினர். இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி மாணவர் மெல்வின் ஜாசன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே பலியானார். இடது பக்கம் விழுந்த பரத் பிரியனுக்கு காயம் ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த சித்தோடு போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று இறந்த மெல்வின் ஜாசன் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காயம் ஏற்பட்ட பரத் பிரியன் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (43) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×