என் மலர்
உள்ளூர் செய்திகள்

பவானி அருகே கல்லூரி மாணவர் விபத்தில் பலி
- சேலம் மாவட்டம் மேட்டூர் அணை தூக்கணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மெல்வின் ஜாசன்.
- மோட்டார் சைக்கிளை பரத் பிரியன் ஓட்ட பின்னால் மெல்வின் ஜாசன் அமர்ந்திருந்தார்.
சித்தோடு:
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை தூக்கணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மெல்வின் ஜாசன் (21). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார்.
நேற்று மாலை இவர் தனது நண்பரான மேட்டூர் கொளத்தூர் பாப்பாத்தி அம்மாள் நகர் பகுதியை சேர்ந்த பரத் பிரியன் (21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கல்லூரியில் இருந்து ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
மோட்டார் சைக்கிளை பரத் பிரியன் ஓட்ட பின்னால் மெல்வின் ஜாசன் அமர்ந்திருந்தார். சேலம்-கோவை பைபாஸ் ரோடு பவானி லட்சுமி நகர் அருகே உள்ள சமத்துவபுரம் மேடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரியை முந்த முயற்சி செய்து உள்ளனர்.
அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்தவர் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை வலது பக்கம் திரும்பினர். இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி மாணவர் மெல்வின் ஜாசன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே பலியானார். இடது பக்கம் விழுந்த பரத் பிரியனுக்கு காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த சித்தோடு போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று இறந்த மெல்வின் ஜாசன் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காயம் ஏற்பட்ட பரத் பிரியன் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (43) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






