என் மலர்tooltip icon

    ஈரோடு

    • கடந்த சில மாதங்களாக பவித்ராவுக்கு அடிக்கடி வலிப்பு நோய் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதற்காக சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை.
    • இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    கவுந்தப்பாடி சலங்கபாளையம், மகாலட்சுமிநகரை சேர்ந்தவர் கலையரசன். இவரது மனைவி பவித்ரா(22). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இவர்களுக்கு 2½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களாக பவித்ராவுக்கு அடிக்கடி வலிப்பு நோய் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதற்காக சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை.

    இந்நிலையில் சம்பவத்தன்று கணவர் கலையரசன் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த பவித்ரா விஷம் குடித்து மயங்கி விழுந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பவித்ரா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    • வழக்கமாக கேரளாவில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஒரு டன் முலாம்பழத்தை 14 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை கொள்முதல் செய்து கொள்வர்.
    • தற்போது கேரளாவில் மழை பெய்து வருவதால் வியாபாரிகள் வாங்கிச் செல்ல வரு வதில்லை.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே குறிச்சி, கருங்கரடு, சென்னம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் முலாம்பழம் பயிரிட்டுள்ளனர்.

    குருவரெட்டியூர் அடுத்து ள்ள தண்ணீர்பந்தல்பாளையத்தில் முலாம்பழம் விலை வீழ்ச்சியால் வயலில் அழுகும் நிலையில் பொதுமக்கள் பறித்து சென்றனர்.

    தண்ணீர் பந்தல்பாளையத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவர் தனது வயலில் 1½ ஏக்கர் முலாம்பழம் பயிரிட்டுள்ளார். 50 நாட்களுக்குள் அறுவடைக்கு வரும் முலாம்பழம் கடந்த ஒரு வாரமாக விலை கேட்க ஆள் இல்லாததால் வயலில் அழுகி வருகிறது.

    இது குறித்து விவசாயி சுதாகர் கூறியதாவது:-

    கடந்த ஜூன் மாதம் எனது வயலில் முலாம்பழம் பயிரிடத் தொடங்கினேன். 50 நாட்களுக்கு பிறகு தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் வியாபாரிகள் யாரும் விலை கேட்க வரவில்லை. வழக்கமாக கேரளாவில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஒரு டன் முலாம்பழத்தை 14 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை கொள்முதல் செய்து கொள்வர்.

    ஆனால் தற்போது கேரளாவில் மழை பெய்து வருவதால் வியாபாரிகள் வாங்கிச் செல்ல வரு வதில்லை. இப்பகுதியிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் உள்ளூர் வியாபாரிகளும் விலை கேட்க முன்வருவதில்லை.

    ஈரோடு மார்க்கெட்டுக்கு எடுத்துச் சென்றால் முலாம்பழம் விலை வீழ்ச்சியால் ஒரு டன் 4 ஆயிரம் வரை விலை போகிறது. இது போக்குவரத்து செலவுக்கு மட்டுமே சரி ஆகி விடுகிறது.

    இதனால் ஒரு வாரமாக அறுவடை செய்யாமல் செடியிலேயே முலாம்பழம் அழுகி வருகிறது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் முலாம்பழத்தை இலவசமாகவே பறித்துச் செல்ல விட்டுவிட்டேன்.

    இதற்காக ரூ80 ஆயிரம் வரை உரம், ஆள் கூலி என முதலீடு செய்துள்ளேன். ஏக்கருக்கு 12 டன் வரை முலாம்பழத்தை அறுவடை செய்யலாம். முறையாக விற்பனை ஆகி இருந்தால் 50 நாளில் கூடுதலாக 70 ஆயிரம் வரை கிடைத்திருக்கும். விலை வீழ்ச்சியின் காரணமாக வியாபாரிகள் வராததால் எனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு மாநகராட்சியில் காலை சிற்றுண்டி திட்டத்திற்காக உணவு சமைப்பதற்காக ஒருங்கிணைந்த சமையற் கூடம் கட்டுமான பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • காலை உணவு வழங்குவதற்கு முன் அதனை பள்ளி மேலாண்மை குழு தரத்தினை உறுதி செய்த பிறகே மாணவ-மாணவி களுக்கு அறிவுறுத்தப்ப ட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவ-மாணவிகளின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கவும், காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    இதன்படி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊரகம் மற்றும் மலைப்பகு திகளில் 1,545 அரசு தொடக்கப்ப ள்ளிகளில்(1-5ம் வகுப்பு) படிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்திற்காக தமிழக அரசு முதற்கட்டமாக ரூ. 33 கோடியே 56 லட்சம் நிதியை ஒதுக்கியது.

    இதனை கண்காணிக்க சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை, ஊரக வளர்ச்சி, நகர்ப்புற நிர்வாகம், மகளிர் மேம்பாட்டு ஆணையம், பள்ளிக்கல்வி, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி பணிகள், உணவு பாதுகாப்பு போன்ற மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில் முதற்கட்டமாக 26 பள்ளிகளும், மலைப்பகுதி யான தாளவாடி தாலுகாவில் 38 பள்ளிகள் என மாவட்டத்தில் மொத்தம் 68 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 3,455 மாணவ-மாணவிகள் பயன்பெற உள்ளனர்.

    இதில் ஈரோடு மாநகராட்சியில் காலை சிற்றுண்டி திட்டத்திற்காக கருங்கல்பாளையம் காமராஜர் மேல்நிலை ப்பள்ளியில் 1,000 குழந்தைக ளுக்கு உணவு சமைப்பதற்காக ஒருங்கிணைந்த சமையற் கூடம் கட்டுமான பணி தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு சமைக்கப்படும் சிற்றுண்டி, அருகிலுள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு மாணவ,மாணவிகளுக்கு விநியோகிக்கபட உள்ளது.

    இதற்காக முதற்கட்டமாக மாநகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.15 லட்சம் பெறப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதுகுறித்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழக அரசு சார்பில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தில் மாணவ-மாணவிகளுக்கு திங்கள் கிழமை உப்புமா வகை, செவ்வாய்-கிச்சடி வகை, புதன்-பொங்கல், வியாழன்-உப்புமா வகை, வெள்ளி-கிச்சடியுடன் இனிப்பு சூடாக காலை வழங்கப்படும். இதற்காக அரசு வழிகாட்டு நெறிமுறைகளையும் வகுத்துள்ளது.

    அதன்படி, காலை உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், கலப்படம் இல்லாமல் இயல்பான மணம், நிறம் உடைய மற்றும் உணவு பாதுகாப்பு சான்றிதழ் பெற்றுள்ளவற்றை மட்டும் பயன்படுத்த அறிவுறுத்தி யுள்ளோம். காலை உணவு வழங்குவதற்கு முன் அதனை பள்ளி மேலாண்மை குழு தரத்தினை உறுதி செய்த பிறகே மாணவ-மாணவி களுக்கு அறிவுறுத்தப்ப ட்டுள்ளது.

    இதற்காக சமையற்கூ டங்கள், ஒருங்கிணைந்த சமையற்கூடங்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகள் நிறை வடைந்ததும், அரசு அறி விக்கும் நாளில் இருந்து காலை சிற்றுண்டி மாணவ-மாணவி களுக்கு வழங்கப்ப டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பவானிசாகர் அணையில் இருந்து இன்று காலை நன்செய் முதல் போக பாசனத்திற்கு அமைச்சர் முத்துசாமி தண்ணீர் திறந்து வைத்தார்.
    • வீட்டு வசதி வாரியத்தில் உள்ள காலி பணியிடங்கள் அரசு தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும்.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையில் இருந்து இன்று காலை நன்செய் முதல் போக பாசனத்திற்கு அமைச்சர் முத்துசாமி தண்ணீர் திறந்து வைத்தார்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பவானிசாகர் அணையில் போதுமான அளவிற்கு நீர் இருக்கிறது. எனவே நடப்பாண்டு தண்ணீர் வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை. ஏற்கனவே பவானிசாகர் அணை நிரம்பி வழிவதால் கால்வாயில் இரு தினங்களுக்கு முன்பு தண்ணீர் திறக்கப்பட்டது.

    எனினும் அதிகாரப் பூர்வமாக இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முதலில் 500 கனஅடி தண்ணீர் விடப்படும். பிறகு அது படிப்படியாக 2300 கன அடி வரை உயரும். கடந்தாண்டு பிரதான கால்வாயில் சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டது.

    தற்பொழுது முன்னேற்பாடு எடுக்கப்பட்டுள்ளது. எனவே உடைப்பு ஏற்பட வாய்ப்பில்லை. விவசாயி களுக்கு தேவையான இடுபொருட்கள் கையிருப்பில் உள்ளன .

    புதிதாக பாரம்பரிய ரகமான தூயமல்லி என்ற நெல் விதையை மூன்று டன் விவசாயிகளுக்கு வழங்க உள்ளோம். பாசன கால்வாய்கள் தேர்தல் துவக்கப்பட்டது. படிப்படியாக அனைத்து அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தப்படும்.

    அத்திக்கடவு அவினாசி திட்டம் காலதாமதமாக அரசுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. தண்ணீர் கொண்டு செல்லும் பைப்புகள் போடப்படுவது உள்ள சிக்கல்கள் காரணமாக தாமதம் ஏற்படுகிறது.

    தாளவாடி மலைப்பகுதியில் பெய்யும் மழை நீர் கர்நாடக மாநிலத்துக்கு செல்கிறது. இதை தாளவாடி பகுதியில் பயன்படுத்த ஆய்வு நடத்த ப்படும்.

    தெங்குமரஹடா பகுதியில் உள்ள குடும்பங்களை வேறு இடத்திற்கு மாற்ற ஈரோடு, கோவை, நீலகிரி கலெக்டர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வும் பரிசீலனையில் உள்ளது.

    கேரள மாநிலம் பாண்டியாறு, புன்னம்புழா நதி நீரை மாயாற்றில் சேர்ப்பது குறித்த ஆய்வும் நடைபெற்று வருகிறது. கீழ்பவானி பாசன கால்வாயை நவீனப்ப டுத்த அரசு திட்டமிட்டது .

    விவசாயிகள் இரு பிரிவாகப் பிரிந்து இத்திட்ட த்திற்கு எதிர்ப்பும் ஆதரவும் தெரிவிக்கின்றனர். இது சம்பந்தமாக நீதிமன்றங்களை அணுகி உள்ளனர்.

    அரசைப் பொறுத்தவரை இரு பிரிவினரும் அமர்ந்து பேசி இப்பிரச்சினையில் ஒரு சுமுகமான தீர்வு காண முயற்சி செய்து வருகிறது. பவானிசாகர் அணை உபரி நீரை அருகில் உள்ள குளம் குட்டைகளில் நிரப்ப ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைதரம் உயர்த்தப்பட்டு அனைத்து வசதிகளும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டு வசதி வாரியத்தில் உள்ள காலி பணியிடங்கள் அரசு தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும். தற்காலிக ஊழியர்கள் சம்பந்தமாக சி.எம்.டி.ஏ. நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்

    • புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து உமா சங்கரை கைது செய்தனர்.
    • அவரிடமிருந்து பேட்டரி பறிமுதல் செய்யப்பட்டது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அடுத்த சுல்தான் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (34). அரிசி மண்டி உரிமையாளர். இவர் சம்பவத்தன்று தனது கடையின் முன்பு தனக்கு சொந்தமான சரக்கு வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார்.

    பின்னர் வாகனத்தை வந்து பார்த்தபோது அதில் பேட்டரியை மர்ம நபர் யாரோ திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து பிரபு புளியம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    இதேப்போல் அதே பகுதியைச் சேர்ந்தவர் காந்தி (50).டெம்போவை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். சம்பத் தன்று இவரது டெம்போவில் மர்ம நபர் யாரோ பேட்டரியை திருடி விட்டார்.

    இது குறித்தி காந்தி புளியம்பட்டி போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடி வந்தனர்.

    இந்நிலையில் புளியம்பட்டி சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் புளியம்பட்டி டானாபுதூர் நால் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரணை நடத்தினர்.

    விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சங்கர் என்கிற உமா சங்கர் (47) என தெரிய வந்தது. இவர் தற்போது சத்தியமங்கலம் அடுத்த மலையடி புதூர், எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசித்து வருவதும் இரண்டு வாகனங்களின் பேட்டரியை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து உமா சங்கரை கைது செய்தனர். அவரிடமிருந்து பேட்டரி பறிமுதல் செய்யப்பட்டது.

    • 3 வார்டுகளிலும் அடிப்படை தேவைகளை செய்து கொடுக்க பேரூராட்சி நிர்வாகம் மறுப்பதாக கூறப்படுகிறது
    • அ.தி.மு.க. கவுன்சிலர்களான 3 பேரும் பேரூராட்சி அலுவலகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் செய்தனர். இதனால் பரபரப்பு நிலவியது.

     அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அத்தாணி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் 11 வார்டுகளில் தி.மு.க.வும் ஒரு வார்டில் சுயேச்சையும், 3 வார்டுகளில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றது. இதில் 10-வது வார்டில் தேன்மொழி, 14-வது வார்டில் அறிவழகன் 15-வது வார்டில் மருதமுத்து ஆகிய 3 பேரும் அ.தி.மு.க. கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார்கள்.

    இந்த 3 வார்டுகளிலும் அடிப்படை தேவைகளை செய்து கொடுக்க பேரூராட்சி நிர்வாகம் மறுப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இன்று காலை பேரூராட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்களான 3 பேரும் பேரூராட்சி அலுவலகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் செய்தனர். இதனால் பரபரப்பு நிலவியது.

    • கர்நாடகாவில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
    • காவிரி ஆற்று தண்ணீர் மணல் மூட்டைகளை உடைத்துக் கொண்டு வெளியேறி கொண்டு இருக்கிறது.

    கொடுமுடி:

    கர்நாடகாவில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரிநீராக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த 3-ந் தேதி முதல் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே ஈரோடு-கரூர் மெயின் ரோட்டில் காவிரி ஆற்றில் காரணாம்பாளையம் என்ற இடத்தில் தடுப்பணை உள்ளது.

    இந்த இடத்தில் இருந்து புகளூரான் வாய்க்கால் பிரிந்து செல்கின்றது. தடுப்பணையில் இருந்து புகளூரான் வாய்க்கால் பிரியும் இடத்தில் 400 மீட்டர் தொலைவில் 20 மீட்டர் இடைவெளியில் அடுத்தடுத்து 3 இடங்களில் காவிரி ஆற்றின் கரை உடைந்து ஆற்று தண்ணீரானது புகளூரான் வாய்க்காலில் கலந்தது.

    இதுபற்றி தெரிய வந்ததும் உடனடியாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து இரவு, பகலாக மணல் மூட்டைகளை கொண்டு கரையை அடைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதுவரை 25 லாரிகளில் சுமார் 100 யூனிட் மணல் கொண்டு வந்து மூட்டைகளாக கட்டி கரையை அடைத்து பலப்படுத்தும் பணியினை செய்து வருகிறார்கள். இப்பணி 70-க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு போர்க்கால அடிப்படையில் விரைந்து நடைபெற்று வருகிறது.

    முதலாவதாக 20 அடி தூரத்திற்கும், அடுத்ததாக 25 அடி தூரத்துக்கும் உடைபட்ட கரையை முழுவதுமாக மணல் மூட்டையை கொண்டு அடைத்து சரி செய்து விட்டார்கள். அதற்கு அருகில் 35 அடி தூரத்துக்கு உடைப்பு ஏற்பட்ட இடத்தில் மணல் மூட்டைகள் கொண்டு கரை உடைப்பினை அடைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இருப்பினும் காவிரி ஆற்று தண்ணீர் மணல் மூட்டைகளை உடைத்துக் கொண்டு வெளியேறி கொண்டு இருக்கிறது.

    பணியாளர்களும் கரை உடைப்பினை சரி செய்திட பரிசல் மூலம் மணல் மூட்டைகளை கொண்டு சென்று அடைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார்கள்.

    • ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்கி வருகிறது.
    • தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்கி வருகிறது. அணையின் நீர்மட்டம் 105 அடி உயரம் ஆகும். அணையில் 32.8 டி.எம்.சி. தண்ணீர் தேக்கி வைக்க முடியும்.

    இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சுமார் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இது தவிர பல்வேறு குடிநீர் திட்ட பணிகளும் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கடந்த 5-ந் தேதி அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது. இதன் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்தது.

    ஆற்றில் அதிகபட்சமாக 25 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்ததால் கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

    இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி திட்ட கால்வாய் மூலம் இரட்டை படை மதகுகள், ஒற்றை படை மதகுகள், சென்னசமுத்திரம் கால்வாய் மதகுகளில் நன்செய் முதல் போக பாசனத்துக்காக அமைச்சர் முத்துசாமி இன்று காலை தண்ணீர் திறந்து வைத்தார்.

    இதன் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். தற்போது முதல் கட்டமாக கீழ்பவானி அணையில் இருந்து 500 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளதாகவும், படிப்படியாக அதிகரிக்கப்பட்டு இன்று மாலை 2 ஆயிரத்து 300 கன அடி திறக்கப்படும் என்றும், இன்று முதல் 120 நாட்களுக்கு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் கடந்த ஆண்டு கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்ட போது வாய்க்காலில் ஏற்பட்ட கரை உடைப்பின் காரணமாக தண்ணீர் முழுவதுமாக வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது குறைந்த அளவே அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும், கீழ்பவானி வாய்க்காலில் வெளியேற்றப்படும் நீரினால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றால் தொடர்ந்து அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 102 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, கணேசமூர்த்தி எம்.பி., முன்னாள் சிட்கோ வாரிய தலைவர் சிந்து ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • குத்தியாலத்தூர் கிராமம் பெரிய குன்றி வனப்பகுதியில் கடம்பூர் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • அடர்ந்த வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட குத்தியாலத்தூர் கிராமம் பெரிய குன்றி வனப்பகுதியில் கடம்பூர் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அடர்ந்த வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது.

    இது குறித்து மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கடம்பூர் வனச்சரக அலுவலர் இந்துமதி, வன கால்நடை உதவி மருத்துவர் மற்றும் வனத்துறையினர் வந்தனர். பின்னர் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இதில் வயது முதிர்வு காரணமாக யானை இறந்தது தெரிய வந்தது.

    • கந்தசாமி பட்டிக்கு வந்த போது 8 ஆடுகள், 3 கோழிகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • பட்டியில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் கால்நடைகள் வேட்டையாடப்பட்டு வருவதால் இப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கல்வெட்டுபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி (56). விவசாயி.

    இவர் தனது தோட்டத்தில் ஆட்டுப்பட்டி அமைத்து 11 ஆடுகள், கோழிகள், கறவை மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் கந்தசாமி ஆடுகள், மாடுகள், கோழிகளுக்கு தீவனம் வைத்துவிட்டு பட்டியை பூட்டி விட்டு சென்று விட்டார்.

    பின்னர் இன்று காலை கந்தசாமி பட்டிக்கு வந்த போது 8 ஆடுகள், 3 கோழிகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இறந்து கிடந்த ஆடுகள், கோழிகள் கழுத்தில் மர்ம விலங்கு கடித்த தடயம் இருந்தது.

    இதுகுறித்து கந்தசாமி கிராம நிர்வாக அலுவலர், கால்நடை துறை, போலீசாருக்கு தகவல் கொடுத்தார். ஆடுகள் மற்றும் கோழிகளை கடித்து கொன்றது செந்நாய் கூட்டமா அல்லது வேறு எந்த விலங்கு என தெரியவில்லை.

    இதனால் அந்த பகுதியை சேர்ந்த கால்நடை வளப்போர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து இந்தப் பகுதிகளில் பட்டியில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் கால்நடைகள் வேட்டையாடப்பட்டு வருவதால் இப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    • கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 780 ஆக உயர்ந்துள்ளது.
    • கொரோனா பாதிப்புடன் 363 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். கடந்த சில நாட்களாக பாதிப்பை விட குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று மாவட்டத்தில் தினசரி பாதிப்பு திடீரென சற்று அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 46 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் நேற்று 56 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 780 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 64 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 33 ஆயிரத்து 683 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 363 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகள் இல்லாமல் தண்ணீர் செல்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • திருப்பூர் பகுதி சாய தொழிற்சாலை கழிவு நீர் கலக்காமல் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றில் குறுக்கே உள்ளது ஒரத்துப்பாளையம் அணை. இந்த அணைக்கு வரும் தண்ணீரில் திருப்பூர் பகுதியில் செயல்படும் சாயத் தொழிற்சாலைகளில் இருந்து சாயக்கழிவுகள் அதிக அளவில் கலந்து வந்ததால் ஒரத்துப்பாளையம் அணை முற்றிலும் மாசுபட்டது.

    இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதன் பேரில், அணைக்கு வரும் தண்ணீரில் சாயக்கழிவின் அளவு ஜீரோ டிஸ்சார்ஜாக இருக்கும் வரை அணையில் தண்ணீரை தேக்கி வைக்காமல் முழுமையாக வெளியேற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    அதன்படி பல வருடங்களாக ஒரத்து ப்பாளையம் அணையில் தண்ணீரை தேக்கி வை க்காமல் அப்ப டியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஆனால், மழைக் காலங்களில் திருப்பூர் பகுதியில் இருந்து மழை நீரோடு சாக்கடை கழிவுகள் கலந்து வந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    ஆனால், கடந்த 8-ந் தேதி வெள்ள நீர் வர தொடங்கி அதிகரித்து வந்ததால் சாயக்கழிவுகள் கலந்த தண்ணீராக நொய்யல் ஆற்றில் ஓடியது. அப்போது உப்பு தன்மை 1,900 டி.டி.எஸ். என்ற அளவில் இருந்தது இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஆனால், தொடர்ந்து அதிக படியான வெள்ள பெருக்கு அதிகரித்து தற்போது ஒரத்துப்பாளையம் அணையில் 20 அடி தண்ணீர் தேங்கியது. அணையில் இருந்து 1,505 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    தற்போது அணையில் இருந்து வெளியேறும் நீரில் கருமை நிறம் இல்லாமல் நல்ல தண்ணீராக ஓடுகிறது. நேற்று மாலை நொய்யல் ஆற்று தண்ணீரில் உப்பு தன்மை 250 டி.டி.எஸ்., சாக குறைந்துள்ளது.

    தற்போது நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகள் இல்லாமல் தண்ணீர் செல்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இது குறித்து ஆற்றங்கரையோர விவசாயிகள் கூறுகையில், நல்ல தண்ணீராக நொய்யல் ஆற்றில் செல்கிறது. இதனால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம்.

    இதேபோல் திருப்பூர் பகுதி சாய தொழிற்சாலை கழிவு நீர் கலக்காமல் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். ஆற்றில் கருப்பு நிறம் நீங்கி தண்ணீர் செல்கிறது.

    உப்பு தன்மையும் குறைந்து விட்டது இனி இந்த தண்ணீர் கால்நடைகளுக்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தாலம் என்றனர்.

    ×