என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காவிரி ஆற்றில் 3 இடங்களில் கரை உடைந்தது- மணல் மூட்டைகள் வைத்து சரிசெய்யும் பணி தீவிரம்
    X
    காவிரி ஆற்றில் ஏற்பட்ட உடைப்பை மணல் மூட்டைகளை கொண்டு சரிசெய்யும் பணி நடந்து வரும் காட்சி

    காவிரி ஆற்றில் 3 இடங்களில் கரை உடைந்தது- மணல் மூட்டைகள் வைத்து சரிசெய்யும் பணி தீவிரம்

    • கர்நாடகாவில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
    • காவிரி ஆற்று தண்ணீர் மணல் மூட்டைகளை உடைத்துக் கொண்டு வெளியேறி கொண்டு இருக்கிறது.

    கொடுமுடி:

    கர்நாடகாவில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரிநீராக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த 3-ந் தேதி முதல் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே ஈரோடு-கரூர் மெயின் ரோட்டில் காவிரி ஆற்றில் காரணாம்பாளையம் என்ற இடத்தில் தடுப்பணை உள்ளது.

    இந்த இடத்தில் இருந்து புகளூரான் வாய்க்கால் பிரிந்து செல்கின்றது. தடுப்பணையில் இருந்து புகளூரான் வாய்க்கால் பிரியும் இடத்தில் 400 மீட்டர் தொலைவில் 20 மீட்டர் இடைவெளியில் அடுத்தடுத்து 3 இடங்களில் காவிரி ஆற்றின் கரை உடைந்து ஆற்று தண்ணீரானது புகளூரான் வாய்க்காலில் கலந்தது.

    இதுபற்றி தெரிய வந்ததும் உடனடியாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து இரவு, பகலாக மணல் மூட்டைகளை கொண்டு கரையை அடைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதுவரை 25 லாரிகளில் சுமார் 100 யூனிட் மணல் கொண்டு வந்து மூட்டைகளாக கட்டி கரையை அடைத்து பலப்படுத்தும் பணியினை செய்து வருகிறார்கள். இப்பணி 70-க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு போர்க்கால அடிப்படையில் விரைந்து நடைபெற்று வருகிறது.

    முதலாவதாக 20 அடி தூரத்திற்கும், அடுத்ததாக 25 அடி தூரத்துக்கும் உடைபட்ட கரையை முழுவதுமாக மணல் மூட்டையை கொண்டு அடைத்து சரி செய்து விட்டார்கள். அதற்கு அருகில் 35 அடி தூரத்துக்கு உடைப்பு ஏற்பட்ட இடத்தில் மணல் மூட்டைகள் கொண்டு கரை உடைப்பினை அடைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இருப்பினும் காவிரி ஆற்று தண்ணீர் மணல் மூட்டைகளை உடைத்துக் கொண்டு வெளியேறி கொண்டு இருக்கிறது.

    பணியாளர்களும் கரை உடைப்பினை சரி செய்திட பரிசல் மூலம் மணல் மூட்டைகளை கொண்டு சென்று அடைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார்கள்.

    Next Story
    ×