என் மலர்
ஈரோடு
- சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
- மேலும், அவரிடம் இருந்து 16 மதுபாட்டில்கள், மது விற்பனை செய்யப்பட்ட பணம் ரூ.1,900 பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு:
கருங்கல்பாளையம் போலீசார் கிருஷ்ணம்பாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர் கருங்கல்பாளையம் கமலாநகரை சேர்ந்த சக்திவேல் (36) என்பதும், அவர் மது விற்பனை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சக்திவேலை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 23 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் ஈரோடு பவானிரோட்டில் மது விற்பனை செய்ததாக ராமநாதபுரம் மாவட்டம் ஓரியூர் புதுவயல் பகுதியை சேர்ந்த சாமிதுரையின் மகன் அரவிந்த் (23) என்பவரை கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவரிடம் இருந்து 16 மதுபாட்டில்கள், மது விற்பனை செய்யப்பட்ட பணம் ரூ.1,900 பறிமுதல் செய்யப்பட்டது.
- ரெயில் நிலையம் அருகில் காரை நிறுத்தி காத்திருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
- இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
சத்தியமங்கலம் பழைய தபால் அலுவலக தெருவை சேர்ந்தவர் வடிவேல் (வயது 41). வாடகை கார் டிரைவர். இவருக்கு ஏற்கனவே 2 முறை மாரடைப்பு ஏற்பட்டதால் கோவை அரசு ஆஸ்பத்திரியிலும், பெங்களூருவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
மேலும் இதற்கான மாத்திரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தார். இந்தநிலையில் ஈரோடு ரெயில் நிலையத்தில் வாடிக்கையாளர்களை அழைத்து செல்வதற்காக சத்தியமங்கலத்தில் இருந்து காரில் புறப்பட்டு ஈரோட்டுக்கு வடிவேல் வந்தார்.
அவர் ரெயில் நிலையம் அருகில் காரை நிறுத்தி காத்திருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சூரம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று வடிவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கோபி, நம்பியூர், கவுந்தப்பாடி, பெருந்துறை, குண்டேரிபள்ளம், பவானிசாகர் போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
- குறிப்பாக கோபிசெட்டிபாளையம் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தியது. அனல் காற்றுடன் வெயில் கொளுத்தியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், பெரியவர்கள், குழந்தைகள் கடும் அவதி அடைந்தனர்.
இந்நிலையில் ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று வழக்கம்போல் காலை முதல் மாலை வரை வெயில் கொளுத்தியது. அனல் காற்று அதிக அளவில் இருந்ததால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தனர்.
இந்நிலையில் மாலை 5:45 மணி அளவில் கருமேகங்கள் சூழ்ந்து இருந்தன. இதைத்தொடர்ந்து மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து 20 நிமிடம் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி நின்றது.
இதேபோல் கோபி, நம்பியூர், கவுந்தப்பாடி, பெருந்துறை, குண்டேரிபள்ளம், பவானிசாகர் போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கோபிசெட்டிபாளையம் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இங்கு மாவட்டத்தில் அதிகபட்சமாக 24 மில்லி மீட்டர் மழை பதிவானது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கோபி -24, ஈரோடு -19, நம்பியூர் -14, கவுந்தப்பாடி -10.20, பெருந்துறை -8, குண்டேரிபள்ளம் -6, பவானிசாகர் -2.
- தமிழ்நாடு அரசால் ‘நம்ம ஊரு சூப்பரு” என்ற முனைப்பு இயக்கமானது இன்று செயல்படுத்தப்படவுள்ளது.
- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நம்ம ஊரு சூப்பரு தூய்மை மற்றும் சுகாதார சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஊராட்சி ஒன்றியம் துடுப்பதி ஊராட்சியில் கிருஷ்ணனுண்ணி நம்ம ஊரு சூப்பரு தூய்மை மற்றும் சுகாதார சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-
நம்ம ஊரு சூப்பர்
தமிழ்நாடு அரசால் 'நம்ம ஊரு சூப்பரு" என்ற முனைப்பு இயக்கமானது இன்று செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்பது, கிராம சமுதாயத்தில் பாதுகாப்பான சுகாதாரம் முறைகள் கடைபிடித்தல், குப்பை தரம் பிரித்தல், கழிவுகளை குறைத்தல், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
பாதுகாப்பான குடிநீர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், திரவ கழிவு மேலாண்மை செயல்பாடு, பொது வெளியில் குப்பை–கள் போடுவதை தடுத்தல், நீர்நிலை பாதுகாத்தல் மற்றும் சுற்றுப்புறம் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகும்.
அதன்படி வருகின்ற 2-ந் தேதி வரை பொது இடங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் சுத்தம் செய்தல், கல்லூரி மற்றும் பள்ளிகளில் சுகாதாரம், குடிநீர், கழிவு மேலாண்மை மற்றும் தன்சுத்தம் குறித்து விழிப்பு–ணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மேலும் 3-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், சுய உதவி குழு உறுப்பி–னர்கள், சமூக நலத்துறை மற்றும் சுகாதாரத்துறை மூலம் குப்பை தரம் பிரித்தல் குறித்து வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியும், 17-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள் தவிர்த்தல் குறித்து சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும் அடுத்த மாதம் 24-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை சுத்தம் மற்றும் பசுமையான கிராமம் குறித்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இறுதியாக கிராம சபாவில் தீர்மானம் இயற்றுதல் போன்ற நடவடி–க்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
அந்த வகையில், இன்று சிறப்பு முகாமின் முதற்கட்ட–மாக பெருந்துறை ஊராட்சி ஒன்றியம் துடுப்பதி ஊராட்சி துடுப்பதி குக்கி–ராமத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மைக்காவலர்களை கொண்டு சுத்தம் செய்யும் பணி தொடங்கி வைக்கப்ப–ட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நம்ம ஊரு சூப்பரு தூய்மை மற்றும் சுகாதார சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கினார்.
தொடர்ந்து, துடுப்பதி ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் ரூ.22.40 லட்சம் மதிப்பீட்டில் அமைந்துள்ள சிறிய அளவிலான உரம் தயாரிக்கும் மையத்தினையும் மற்றும் அதே இடத்தில் அமைந்துள்ள நர்சரியினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- போலீசார் காளிங்கராயன்பாளையம் பகுதிக்கு சென்று அங்கு நின்று கொண்டு இருந்த ராஜாவை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
- அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டி பாளையம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.
சித்தோடு:
அந்தியூர் பகுதியை சேர்ந்த 13 வயதுடைய ஒரு சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அந்த சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது தாய் அந்த சிறுமியிடம் விசாரி த்தார். அப்போது அந்த சிறுமி அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழி லாளியான ராஜா (36). என்பவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறினார்.
இது குறித்து பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ன ம்மாள் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார். மேலும் அந்த வாலிபரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் கட்டிட கூலி தொழிலாளி ராஜா பவானி அருகே உள்ள காளிங்கராயன்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீ சார் காளிங்க ராயன்பாளையம் பகுதிக்கு சென்று அங்கு நின்று கொண்டு இருந்த ராஜாவை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
போலீஸ் நிலையத்தில் அவரிடம் நடத்திய விசார ணையில் அவர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை ஒப்பு கொண்டார். மேலும் அவருக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் ராஜாவை பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறை யில் அடைத்தனர்.
- ஆட்கள் நடமாட்டம் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த 5 பேரும் பிரகாசை தாக்கி உள்ளனர். பின்னர் அவரிடம் இருந்து ஒரு பையை வழிப்பறி செய்துவிட்டு 5 பேரும் தப்பி சென்றார்கள்.
- இந்த கும்பல் இதே போன்று வேறு யாரிடமும் கைவரிசை காட்டியுள்ளதா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
ஈரோடு, ஆக. 21-
ஈரோடு பெரியார்நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 42). இவர் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் விடுமுறையின்போது ஈரோட்டுக்கு வந்து செல்வது வழக்கம். சுதந்திர தினத்தையொட்டி விடுமுறை விடப்பட்டதால் கடந்த 12-ந் தேதி இரவு பிரகாஷ் சென்னை-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி ஈரோட்டுக்கு வந்தார்.
அவர் நள்ளிரவில் ஈரோட்டுக்கு வந்ததால், அங்கிருந்து தனது வீட்டுக்கு நடந்து சென்றார். அவர் பெரியார்நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் 5 பேர் நின்றிருந்தனர்.
ஆட்கள் நடமாட்டம் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த 5 பேரும் பிரகாசை தாக்கி உள்ளனர். பின்னர் அவரிடம் இருந்து ஒரு பையை வழிப்பறி செய்துவிட்டு 5 பேரும் தப்பி சென்றார்கள்.
அந்த பையில் லேப்டாப், செல்போன், ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை பிரகாஷ் வைத்து இருந்தார்.
இதுகுறித்து பிரகாஷ் அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தெய்வராணி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார், ஏட்டுகள் தனசேகர், கோபி, போலீஸ்காரர்கள் அருண்குமார், வேலுமணி, திருமூர்த்தி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டன.அவர்கள் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணையை தீவிர படுத்தினார்.
போலீசார் விசாரணையில், பிரகாஷிடம் இருந்து பையை திருடி சென்றது ஈரோடு நேதாஜிரோடு ஆலமரத்து தெருவை சேர்ந்த வடிவேல் என்பவரது மகன் மனோ (வயது 21), ஈரோடு மூலப்பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் ஆகாஸ் (20), ஈரோடு தீரன்சின்னமலை வீதியை சேர்ந்த பழனிசாமியின் மகன் பிரகாஷ் (19) மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டன. இந்த கும்பல் இதே போன்று வேறு யாரிடமும் கைவரிசை காட்டியுள்ளதா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். 2 சிறுவர்கள் கோவையில் உள்ள சீர்த்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- பிரமதேசம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வடிகாலை அமைத்து கொடுத்தால் மட்டுமே இந்த கழிவுநீர் தடையின்றி செல்லும் சூழ்நிலை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
- உடனடி தீர்வு செய்து தர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்தியூர், ஆக.21-
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த செம்பளிச்சாம் பாளையம் காலனி பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
ஒட்ட பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட இப்பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதியதாக கழிவு நீர் வடிகால் அமைக்கப்பட்டது. கழிவுநீர் வடிகால் ஊரின் எல்லை பகுதிவரை மட்டும் கட்டி நிறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் பிரமதேசம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வடிகாலை அமைத்து கொடுத்தால் மட்டுமே இந்த கழிவுநீர் தடையின்றி செல்லும் சூழ்நிலை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்தப் பகுதியில் குடியிருக்கும் குடும்பத்தினர் துர்நாற்றத்தினாலும், கழிவுநீர் தேங்குவதால் கொசு மற்றும் குடிநீர் குழாயில் இந்த கழிவு நீர் கலந்து வருவதால் அந்த நீரை பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டு வருவதாகவும் இதனால் காய்ச்சல் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் அந்த சாலையின் வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் இந்த துர்நாற்றத்தை தாங்க முடியாமல் முகம் சுழித்து செல்லும் நிகழ்வும் தினமும்அரங்கேரி வருகின்றது.
மேலும் காலனியில் உள்பகுதியில் உள்ள 160 குடும்பங்களுக்கு கடந்த 4 மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் அங்கிருந்து அம்மனம் பாளையம் என்ற பகுதிக்கு 2 கிலோமீட்டர் தூரம் சென்று தான் குடிநீர் எடுத்து வருவதாகவும் இதற்கு உடனடி தீர்வு செய்து தர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சென்னி–மலையில் உள்ள காங்கேயம் ரோட்டில் மலை கணுவாய் பகுதியில் இவர் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த ஆட்டோ ஒன்று இவர் மீது திடீரென மோதியது.
- இதில் பலத்த காயமடைந்த அவரை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
சென்னிமலை:
சென்னிமலை அரச்சலூர் ரோட்டில் அம்மாபாளையம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (58). நெசவுத் தொழிலாளி. இவர் காங்கேயம் அருகில் உள்ள பாப்பினியில் பொங்கல் விழாவிற்கு சென்று விட்டு சென்னிமலைக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது சென்னி–மலையில் உள்ள காங்கேயம் ரோட்டில் மலை கணுவாய் பகுதியில் இவர் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த ஆட்டோ ஒன்று இவர் மீது திடீரென மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த மூர்த்திக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகளுக்கு திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது.
- இன்று பூஸ்டர் தடுப்பூசியை ஏராளமானோர் ஆர்வத்துடன் போட்டுக் கொண்டனர்.
ஈரோடு:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் ஆலையை தடுக்கும் வகையில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் , அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு தடுப்பூசி முகாம் தொடங்கியது.
12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
இதே போல் 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது. இன்று மட்டும் மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் சிரமம் இன்றி தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டிருந்தன.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செய்து கொண்டனர்.
குறிப்பாக தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. இதனால் இன்று பூஸ்டர் தடுப்பூசியை ஏராளமானோர் ஆர்வத்துடன் போட்டுக் கொண்டனர்.
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் குடும்பதகராறு காரணமாக நல்லூர் என்ற பகுதியைச் சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் தனது 2 மகன்களை வாய்க்காலில் தள்ளி கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
- மீண்டும் அதே போல் குடும்ப தகராறு காரணமாக குழந்தைகளுடன் வாய்க்காலில் குதித்து இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் தீபக். இவர் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக இவர் வீட்டில் இருந்து கொண்டே வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (37). இவர்களுக்கு மதுநிஷா (12), தருணிகா(6) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவும் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் விஜயலட்சுமி அவரது அண்ணன் ராமசாமிக்கு வாட்ஸ் அப்பில் ஒரு ஆடியோ அனுப்பினார். அதில் எனக்கு வாழ பிடிக்கவில்லை. மகள்களை விட்டு செல்ல விருப்பமில்லை. மன்னிச்சிடுங்க என்று தெரிவித்து இருந்தார். இதை அடுத்து விஜயலட்சுமி தனது 2 மகள்களையும் மொபட்டில் அழைத்துக் கொண்டு சென்றார். பின்னர் குருமந்தூர் அருகே உள்ள சுட்டிக்கல் என்ற பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் கரையோரத்தில் மொபட்டை நிறுத்திவிட்டு தனது 2 குழந்தைகளை கீழ்பவானி வாய்க்காலில் வீசிவிட்டு அவரும் தற்கொலைக்கு முயன்றார்.
விஜயலட்சுமி மற்றும் 2 குழந்தைகள் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவர்களை தேடினர். அப்போது கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் மொபட் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து உறவினர்கள் வாய்க்காலில் அவர்களை தேடினர். அப்போது அவர்கள் குதித்த இடத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆயிபாளையம் என்ற பகுதியில் விஜயலட்சுமியின் மூத்த மகள் மதுநிஷா கரையோரம் உள்ள மரத்தை பிடித்துக் கொண்டு அழுது கொண்டு இருந்தார். அவரை உறவினர்கள் பத்திரமாக மீட்டனர்.
தொடர்ந்து நம்பியூர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கீழ்பவானி வாய்க்காலில் தாய் மற்றும் மற்றொரு மகளை தேடினர்.
அப்போது அவர்கள் குதித்த இடத்தில் இருந்து சுமார் 20 கி.மீட்டர் தொலைவில் உள்ள கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேட்டைக்காரன்கோவில் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் விஜயலட்சுமி பிணமாக மீட்கப்பட்டார்.
தொடர்ந்து அவரது 2-வது மகள் தருணிகாவை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் குடும்பதகராறு காரணமாக நல்லூர் என்ற பகுதியைச் சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் தனது 2 மகன்களை வாய்க்காலில் தள்ளி கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் மீண்டும் அதே போல் குடும்ப தகராறு காரணமாக குழந்தைகளுடன் வாய்க்காலில் குதித்து இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஈரோடு காளைமாடு சிலை அருகே இன்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.
- தமிழ்நாடு அரசு வழங்கும் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமே நிறைவேற்ற வேண்டும்.
ஈரோடு:
ஈரோடு காளைமாடு சிலை அருகே இன்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் சுப்புலட்சுமி, செல்வி, மஞ்சுளா , சபானா, ஆஸ்மி, மணிமேகலை, சாந்தி, கவுரி, கொடிமலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில செயற்குழு உறுப்பினர் சசிகலா வரவேற்றார். பாஸ்கர் பாபு தொடக்க உரையாற்றினார்.
தமிழ்நாடு அரசு வழங்கும் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமே நிறைவேற்ற வேண்டும். ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்த வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
பணிக்கொடை அமைப்பாளருக்கு ரூ.5 லட்சமும், சமையல் உதவியாளருக்கு ரூ.3 லட்சமும் உயர்த்தி வழங்க வேண்டும். காலி பணி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இதில் 100-க்கும் மேற்பட்ட சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
கவுந்தப்பாடி:
கவுந்தப்பாடி விஷ்வ இந்து பரிஷத் சார்பில் 3-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
கவுந்தப்பாடி ராஜராஜேஸ்வரி புது மாரியம்மன் கோவில் வளாகத்தில் கிருஷ்ணர் சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டு சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பின்னர் மாலை ஆஸ்பத்திரி ரோட்டில் உள்ள மாதேஸ்வரன் கோவிலில் இருந்து கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்த குழந்தைகள் கிருஷ்ணர் பக்தி பாடல் பாடிக்கொண்டு மேளதாள வாத்தியங்களுடன் ஊர்வலமாக அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 3 ரோடு, கடைவீதி, நால்ரோடு, சத்தி ரோடு வழியாக ராஜராஜேஸ்வரி புது மாரியம்மன் கோவிலை அடைந்தனர்.
இதனையடுத்து கிருஷ்ணருக்கு மகா மங்கள ஆரத்தி எடுக்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட வேடம் அணிந்து வந்திருந்த குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் சிவசக்தி தலைமையில், மாநில கோரக்க்ஷா இணை அமைப்பாளர் ரகுபதி முன்னிலையில் நடந்தது. விழாவில் வக்கீல் ராஜா தியானேஸ்வரன் வரவேற்றார்.
கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பாவா தங்கமணி, பா.ஜனதா கட்சியின் மாநில மகளிர் அணி துணை தலைவி வித்யா ரமேஷ், பா.ஜனதா கட்சி ஓ.பி.சி அணியின் மாவட்ட தலைவர் சிவசக்திவேல், வக்கீல் பிரிவு மாவட்ட அமைப்பாளர் கோபி தர்மராஜ், 10-வது வார்டு கவுன்சிலர் பரமசிவம், பா.ம.க. ஈரோடு வடக்கு மாவட்ட இணை செயலாளர் ஆண்டவர், ஈரோடு மேற்கு மாவட்ட பஜ்ரங்தள் பொறுப்பாளர் ஜிம் முருகேஷ், தர்மபிரசாத், பஜ்ரங்தள் பவானி ஒன்றிய பொறுப்பாளர் க.முத்து, ஒன்றிய, செயலாளர் குமரவடிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் துறவியர் ஆலய பாதுகாப்பு அமைப்பாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.






