என் மலர்tooltip icon

    ஈரோடு

    • வங்கி கணக்கை முடக்கி பணத்தை மீட்டு சதீஷிடம் ரூ.1 லட்சத்தை சைபர் கிரைம் போலீசார் ஒப்படைத்தனர்.
    • ஆன்லைனில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரம், குறுந்தகவல் இவற்றை நம்பி ஏமாற வேண்டாம் சைபர் கிரைம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (50). சொந்தமாக தொழில் செய்வதற்காக முயற்சி செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது அவரது செல்போனில் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் உங்களுக்கு கடன் வேண்டுமா? ரூ.10 லட்சம் வரை கடன் பெற்று தருகிறோம் என்று இருந்தது. இதை உண்மை என்று நம்பிய சதீஷ் அவர்கள் கூறிய செல்போனிற்கு தொடர்பு கொண்டு பேசினார்.

    அப்போது அவர்கள் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுகிறோம் என்று கூறி கடன் பெறுவதற்கான விண்ணப்பத்தை சதீசுக்கு அனுப்பி வைத்தனர். அதனை பூர்த்தி செய்து கொடுக்குமாறும் கூறியுள்ளனர். சதீஷும் அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தார்.

    விண்ணப்ப கட்டணம் ரூ. 5 ஆயிரம் தரவேண்டும் என்று கூறினர். பின்னர் ஜி.எஸ்.டி.க்கு பணம் வேண்டும் என்று கூறி 20 ஆயிரம், 50 ஆயிரம் என கொஞ்சம் கொஞ்சமாக சதீஷிடம் இருந்து ரூ.1 லட்சம் பெற்றுக் கொண்டனர். சதீஷும் அவர்கள் கூறிய வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தினார்.

    பின்னர் மீண்டும் அந்த நிறுவனத்தினர் சதீஷிடம் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு சதீஷ் ஏன் அடிக்கடி பணம் கேட்கிறீர்கள் என்று கேட்டு உள்ளார்.

    அதன் பின்னர் அந்த நிறுவனத்தினர் போன் செய்வதை நிறுத்தி விட்டனர். பின்னர் அவர்கள் கூறியது போன்று சதீசுக்கு கடன் கொடுக்காமல் இழுத்து அடித்தனர்.

    இதனால் தான் ஏமாற்றப் பட்டதை உணர்ந்த சதீஷ் இது குறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொலைபேசி எண்ணை வைத்து அவர்களின் வங்கி கணக்கை முடக்கினர்.

    விசாரணையில் போலியான ஒரு நிறுவனத்தை தொடங்கி அவர்கள் சதீஷிடம் மோசடியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களது வங்கி கணக்கை முடக்கி பணத்தை அதிலிருந்து மீட்டு சதீஷிடம் ரூ.1 லட்சம் பணத்தை சைபர் கிரைம் போலீசார் ஒப்படைத்தனர்.

    இதேபோல் கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணின் செல்போனிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அந்தக் குறுந்தகவலை திறந்து அதில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை திறந்து உள்ளே சென்றுள்ளார்.

    அதில் வங்கி முகவரி குறித்த தகவலை அந்த பெண் பரிமாறி உள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அந்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 77 ஆயிரத்து 950 எடுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து ஈரோடு சைபர் கிரைம் போலீசில் அந்தப் பெண் புகார் அளித்தார். அதன் பிறகு சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மேற்கு வங்கத்தில் இருந்து அந்த பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்திருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அதிரடியாக விசாரணை மேற்கொண்டு அந்த வங்கி கணக்கை முடக்கினர். பின்னர் அந்த பெண்ணின் பணம் ரூ.77,950 மீட்டு அந்த பெண்ணிடம் மீண்டும் ஒப்படைத்தனர்.

    ஆன்லைனில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரம், குறுந்தகவல் இவற்றை நம்பி ஏமாற வேண்டாம் சைபர் கிரைம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

    • போலீசார் திண்டல் அடுத்த அம்மன் கார்டன் பகுதியில் ஒரு வீட்டில் சோதனை செய்த போது அங்கு 2 நைஜீரியா வாலிபர்கள் தங்கி இருந்தது தெரிய வந்தது.
    • திருப்பூரில் பனியன்-துணிகள் வியாபாரம் செய்து வந்ததாகவும் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு திண்டல் பகுதியில் பாஸ்போர்ட்-விசா போன்ற முறையான ஆவணங்கள் இன்றி 2 நைஜீரியா வாலிபர்கள் தங்கி இருப்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் திண்டல் அடுத்த அம்மன் கார்டன் பகுதியில் ஒரு வீட்டில் சோதனை செய்த போது அங்கு 2 நைஜீரியா வாலிபர்கள் தங்கி இருந்தது தெரிய வந்தது. போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் மைக்கேல் (39), டேஸ்மாண்ட் (36) என்பதும் பாஸ்போர்ட், விசா இன்றி கடந்த 6 வருடமாக தங்கி இருந்ததும் தெரிய வந்தது.

    மேலும் அவர்கள் திருப்பூரில் பனியன்-துணிகள் வியாபாரம் செய்து வந்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

    • அரச்சலூர் அடுத்த மீனாட்சிபுரம் பகுதியில் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் குடிமை பொருள் குற்றப்புலனாய்வு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • மாருதி அந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில் 800 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் தலைமையில் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை அரச்சலூர் அடுத்த மீனாட்சிபுரம் பகுதியில் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் குடிமை பொருள் குற்றப்புலனாய்வு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மாருதி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில் 800 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது.

    இது தொடர்பாக காரில் வந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் பெருந்துறையை சேர்ந்த கார்த்திகேயன் (42) தொழிலாளி என்றும், பெருந்துறையில் உள்ள வடமாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பதற்காக ரேசன் அரிசியை காரில் கடத்தி சென்றதையும் ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து கார்த்திகேயன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் 800 கிலோ ரேஷன் அரிசியையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • தரைப்பாலத்தின் நடுப்பகுதியில் பஸ் சென்றபோது திடீரென காட்டாற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • தரைப்பாலத்தின் நடுப்பகுதியில் பஸ் சென்றபோது திடீரென காட்டாற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாளவாடியில் இருந்து தலமலை வழியாக சத்தியமங்கலத்துக்கு அரசு பஸ் ஒன்று சென்றுகொண்டு இருந்தது. இந்த பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தார்கள். நெய்தாளபுரம் வனச்சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தபோது, வனப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் அங்கிருந்த தரைப்பாலத்தில் காட்டாற்று வெள்ளம் ஓடியது.

    பஸ் கடந்து செல்லும் அளவுக்கு தண்ணீர் சென்றதால் டிரைவர் காட்டாற்றை கடக்க முயன்றார்.

    தரைப்பாலத்தின் நடுப்பகுதியில் பஸ் சென்றபோது திடீரென காட்டாற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. உடனே டிரைவர் பஸ்சை வேகமாக கடந்து செல்ல முயற்சி செய்தார். ஆனால் அதற்குள் பஸ்சின் என்ஜினுக்குள் தண்ணீர் புகுந்ததால் நின்றுவிட்டது. மேலும் டயர்கள் முழுவதும் மூழ்கி அதிக வேகத்தில் காட்டாற்று வெள்ளம் சென்றதால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் பயத்தில் அலறினார்கள்.

    டிரைவர் எவ்வளவு போராடியும் பஸ்சை இயக்க முடியவில்லை.

    இதற்கிடையே பஸ்சுக்குள் இருந்து பயணிகள் கீழே இறங்கினால் தண்ணீர் இழுத்து சென்றுவிடும் என்று யாரும் கீழே இறங்கவில்லை.

    சுமார் ஒரு மணி நேரம் இதே நிலை நீடித்தது. பயணிகள் பரிதவிப்புக்கு ஆளானார்கள். அதன்பின்னர் வெள்ளம் ஓரளவு குறைந்தது. டயர்கள் வெளியே தெரிந்தன.

    இதனால் டிரைவர் பஸ்சை இயக்கி மெல்ல மெல்ல காட்டாற்றை கடந்தார். அதன்பின்னரே பயணிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

    • இன்று கூடிய ஜவுளி சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
    • கடந்த வாரம் 40 சதவீதத்திற்கு நடந்த மொத்த வியாபாரம் இந்த வாரம் 10 சதவீதம் கூட நடைபெறவில்லை என வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ஜவுளி சந்தை யானது கனி மார்கெட், பன்னீர்செல்வம் பார்க், திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஜவுளி சந்தை நடைபெற்று வருகிறது.

    வாரந்தோறும் நடைபெறும் இந்த ஜவுளி சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் நேரடியாக வந்து ஜவுளிகளை மொத்த விலையில் வாங்கி செல்வார்கள்.

    இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த வாரம் ஜவுளி சந்தையில் வியாபாரம் சுமாராக நடந்தது. இந்நிலையில் இன்று கூடிய ஜவுளி சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

    நாளை மறுநாள் ஓணம் பண்டிகை என்பதால் இன்று கூடிய ஜவுளி சந்தையில் கேரளா வியாபாரிகள் வரவில்லை. இதேபோல் கர்நாடகா, ஆந்திராவில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் அங்கிருந்தும் வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை.

    கடந்த வாரம் 40 சதவீதத்திற்கு நடந்த மொத்த வியாபாரம் இந்த வாரம் 10 சதவீதம் கூட நடைபெறவில்லை என வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.

    இதேப்போல் உள்ளூர் வியாபாரிகளும் அதிக அளவில் வராததால் ஜவுளி சந்தை வெறிச்சோடியது. இன்று நடந்த ஜவுளி சந்தையில் சில்லரை விற்பனை 30 சதவீதம் நடைபெற்றதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

    • வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
    • ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனையானது.

    ஈரோடு:

    ஈரோடு வ. உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு தாளவாடி, ஒட்டன்சத்திரம், பழனி, ஆந்திரா கர்நாடகா போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.

    இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்ததால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி தொடர்ந்து முகூர்த்த நாட்கள், கோவில் விசேஷங்கள் வருவதால் காய்கறிகளின் தேவைகள் மேலும் அதிகரித்தது.

    இந்நிலையில் இன்று வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    நாளை மறுநாள் ஓணம் பண்டிகை கொண்டா டப்பட உள்ளதால் காய்கறிகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படு வதால் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக ரூ.10 முதல் ரூ.40 வரை காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.

    குறிப்பாக கடந்த வாரம் ஒரு ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.60-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ ரூ.80-க்கு விற்கப்படுகிறது. வெண்டைக்காயும் கிலோ ரூ. 20 உயர்ந்து ஒரு கிலோ ரூ.80-க்கு விற்கப்படுகிறது.

    மற்ற காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:

    புடலங்காய்-40-50, பீர்க்கங்காய்-60, பாவை காய்-50, முள்ளங்கி-50, இஞ்சி- 90, பீட்ரூட்-60, பீன்ஸ்-80, கேரட்-100-110, மிளகா-50, முட்டை க்கோஸ்-25, காலிப்ளவர்-40-60, உருளைக்கிழங்கு-50, கருப்பு அவரை, பட்டை அவரை-60, சின்ன வெங்காயம்-40, பெரிய வெங்காயம்-30.

    முருங்கைக்காய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.40 விற்ற நிலையில் இன்று ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.150-க்கு விற்பனையானது. இதைபோல் தக்காளி விலையும் கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது.

    தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து அடியோடு சரிந்து உள்ளது. பொதுவாக வ.உ.சி. காய்கறி மார்க்கெட் 5000 முதல் 7000 பெட்டிகள் வரை தக்காளி வரத்தாகி வந்தது. இன்று வெறும் ஆயிரம் பெட்டிகள் மட்டுமே தக்காளிகள் வரத்தாகின.

    இதன் எதிரொலியாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து விட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.15-க்கு விற்பனையானது. அதன் பிறகு ஒரு கிலோ ரூ.30-45 வரை விற்பனையானது. இன்று மேலும் அதிகரித்து ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனையானது.

    இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து ள்ளனர். எனினும் இந்த விலை உயர்வு இன்னும் சில நாட்களுக்குள் சரியாகி விடும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஈரோடு பஸ் நிலையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ஏர்ஹாரன் பயன்படுத்திய 20 பஸ்களில் ஏர்ஹாரன்கள் அகற்றப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு சரக போக்குவரத்து துணை ஆணையர் சுரேஷ் உத்தரவுப்படி, ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி பதுவைநாதன் தலைமையில் ஆய்வாளர்கள் சுரேந்திரகுமார், சிவகுமார், மாசுகட்டுப்பாட்டு வாரிய விஞ்ஞான அதிகாரி தேவராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் ஈரோடு பஸ் நிலையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அதிக ஒலி எழுப்பி, பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் ஏர்ஹாரன் பயன்படுத்திய 20 பஸ்களில் ஏர்ஹாரன்கள் அகற்றப்பட்டன.

    பிற குறைபாடுகள் கண்டறியப்பட்ட பஸ்களுக்கு, தணிக்கை அறிக்கை வழங்கி, அபராதம் விதிக்க கலெக்டருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

    • நீலகிரி மலை பகுதியில் நேற்று இரவு பரவலாக மழை பெய்ததன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.
    • அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 6,200 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.

    இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கடந்த மாதம் 5-ந் தேதி 102 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த நீர் அப்படியே உபரிநீராக பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பி டிப்பு பகுதியில் மழை ப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. எனினும் பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியிலேயே நீடித்து வருகிறது.

    நேற்று 2 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலை பகுதியில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.

    இன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணை 102 அடியில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6,200 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 6,200 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. 

    • கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு தாமரைசெல்வி அவரது அம்மா வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்று விட்டார்.
    • இதனால் மனவேதனை அடைந்த நவீன்குமார் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் கணபதி நகரை சேர்ந்தவர் நவீன் என்ற நவீன்குமார்(30). கூலி தொழிலாளி. இவருக்கு தாமரைசெல்வி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனா்.

    நவீன்குமாருக்கு மதுப்பழக்கம் இருப்பதால் கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு தாமரைசெல்வி அவரது அம்மா வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்று விட்டார். இந்நிலையில் நவீன்குமார் தாமரை செல்வியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார்.

    அதற்கு அவர் எப்போது குடிப்பழக்கத்தை கைவிடு வீர்களோ அப்போதுதான் வருவேன் என்று கூறினார். இதனால் மனவேதனை அடைந்த நவீன்குமார் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • பணம் கேட்டு கடத்தியதாகவும், ரூ.1.50 கோடி பறித்து கொண்ட தாகவும் புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஈஸ்வரன் புகார் அளித்தார்.
    • கைது செய்யப்பட்ட தர்மலிங்கமும், கர்ணனும் அண்ணன் தம்பிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. ஈஸ்வரன்(46). புஞ்சைபுளியம்பட்டி அருகே புஜங்கனூரியில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

    கடந்த மாதம் 24-ந் தேதி 6 பேர் கொண்ட கும்பல் தன்னை பணம் கேட்டு கடத்தியதாகவும், ரூ.1.50 கோடி பறித்து கொண்ட தாகவும் புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஈஸ்வரன் புகார் அளித்தார்.

    இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசார ணையில் சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம் பாளையம் பகுதியை சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. நிர்வாகி மிலிட்டரி சரவணன் இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.

    ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வாக இருந்த போது அவருக்கு உதவியாளராக சரவணன் இருந்துள்ளார். அவர் தூண்டுதல் பெயரில் மோகன் உள்பட 6 பேர் ஈஸ்வரனை கடத்தி அடித்து உதைத்து பணம் பறித்துள்ளனர். அவர்கள் அனை வரும் தலை மறைவாகி விட்டனர். கடத்தல் கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    இதற்கிடையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை சேர்ந்த பிரைட் பாலு (45), சத்தியமங்கலம் செண்பகப் புதுரை சேர்ந்த சீனிவாசன் (45) ஆகிய 2 பேரையும் கோவை கலெக்டர் அலுவலகம் அருகே போலீசார் கைது செய்தார்கள். அவர்களிடமிருந்து ரூ.4 லட்சம் மீட்கப்பட்டது.

    இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கோவை தொண்டா முத்தூரை சேர்ந்த தர்மலிங்கம் (47), சத்திய மங்கலம் அருகே உள்ள உக்கிரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த கர்ணன் (42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.4.50 லட்சம் மீட்கப்பட்டது.

    கைது செய்யப்பட்ட தர்மலிங்கமும், கர்ணனும் அண்ணன் தம்பிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட சரவணன் மற்றும் மோகன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர்.

    இவர்களை பிடிக்க போலீசார் தீரும் காட்டி வருகின்றனர். சரவணன் பிடிபட்டால் தான் எதற்காக கடத்தல் சம்பவம் நடைபெற்றது என உண்மையான நிலவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • சென்னிமலை மலை கோவிலுக்கு செல்லும் பார்க் ரோட்டில் வைகை கரை அமைக்கப்பட்டிருந்தது.
    • கைலாசநாதர், சிவகாசி அம்மாள் மற்றும் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி சகடை தேரில் எழுந்தருளி வைகை கரைக்கு வந்தனர்.

    சென்னிமலை:

    மதுரை மாநகரில் முன்பு ஒரு காலத்தில் வந்தி அம்மையார் என்ற மூதாட்டி, பிட்டு அமுது சமைத்து அதை விற்று பிழைத்து வந்தார்.

    வைகை நதியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் துன்பம் அடைந்து பாண்டிய அரசனிடம் முறையிட்டனர். அப்போது அரசன் உடனடி–யாக மந்திரியை அழைத்து வீட்டுக்கு ஒருவர் வைகை கரைக்கு சென்று கரையை அடைக்க வேண்டும் என உத்தரவிட்டான்.

    வந்தி மூதாட்டி தன்னுடைய முதுமை காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் கூலிக்கு ஆள் தேடியும் கிடைக்க வில்லை. பிறகு தான் எந்நேரமும் போற்றும் சிவபெருமானை வணங்கி கொண்டிருந்தார்.

    அப்போது சுந்தரேச பெருமான் கூலி ஆளாக வந்தி மூதாட்டி முன்பு நின்று, தான் பிட்டு உணவையே கூலியாக பெற்று கொள்வதாக கூறி வேலைக்கு சென்று வைகை கரையை அடைத்தார். இறுதியில் வந்தி மூதாட்டி க்கும் பாண்டிய மன்னனுக்கும் சிவபெருமான் தரினசமாக காட்சியளித்தார்.

    அந்த நாளே ஆவணி மாத மூல நட்சத்திர நாளாக கருதப்படுவது உண்டு. சென்னிமலையில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இவ்விழா கடந்த 42 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்த வருட விழா நேற்று காலை 10 மணிக்கு கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    சென்னிமலை மலை கோவிலுக்கு செல்லும் பார்க் ரோட்டில் வைகை கரை அமைக்கப்பட்டிருந்தது. மாலை 4.20 மணிக்கு வைகை கரைக்கு கைலாசநாதர், சிவகாசி அம்மாள் மற்றும் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி சகடை தேரில் எழுந்தருளி வைகை கரைக்கு வந்தனர்.

    சென்னிமலை முருகன் கோவில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவாச்சாரியார் மற்றும் மதி சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    ஓதுவார் மூர்த்தி ஆனந்த் சிவபெருமானின் பிட்டுத் திருவிளையாடல் குறித்து பாடல்களை பாடினார். இதில் ஏராளமாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    • வாழ்வதை விட செத்து விடலாம் என புலம்பி கொண்டு இருந்த பழனிசாமி கேபிள் வயரால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் சீதாலட்சுமி புரத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 78). இவர் கடந்த 40 ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் நோய் பாதிப்பால் அவரது கால் விரல்களும் எடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அவதி பட்டு வந்தார். இதனால் வாழ்வதை விட செத்து விடலாம் என புலம்பி கொண்டு இருந்தார். அவருக்கு அவரது உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது பழனிசாமி கேபிள் வயரால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் கோபி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பழனிசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோபி செட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×