என் மலர்
ஈரோடு
- விடைத்தாள் திருத்தும் பணி 24-ந் தொடங்கி 28-ந் தேதி நிறைவு பெறும்.
- 1,950 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவார்கள்.
ஈரோடு:
தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 6-ந் தேதி தொடங்கி வரும் 20-ந் தேதி நிறைவு பெறுகிறது. விடைத்தாள்கள் 4 மையங்களில் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
விடைத்தாள் திருத்தும் பணி வரும் 24-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை திருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது.
விடைத்தாளில் உள்ள மதிப்பெண் உடனுக்குடன் கணினி மூலமாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
பிளஸ்-2 விடைத்தாள் திருத்தம் செய்து முடிக்கப்பட்ட உடன் பிளஸ்-1 விடைத்தாள் திருத்தம் செய்யப்பட உள்ளது.
இதேப்போல் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த ஈரோடு செங்கோடம்பாளையம் யு.ஆர்.சி பள்ளி, கோபி குருகுலம் பள்ளி, சக்தி ராகவேந்திரா பள்ளி, அந்தியூர் விஸ்வேஸ்வரய்யா பள்ளியில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
1,950 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவார்கள். விடைத்தாள் திருத்தும் பணி 24-ந் தொடங்கி 28-ந் தேதி நிறைவு பெறும்.
விடைத்தாள்கள் பாட வாரியாக பிரிக்கப்பட்டு ஒன்றோடு ஒன்றோடு கலந்து வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படும்.
பின்னர் பிற மாவட்ட விடைத்தாள்கள் ஈரோட்டில் அமைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு கொண்டுவரப்பட்டு பாட வாரியாக பிரித்து திருத்தம் செய்து அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- வறண்டு கிடந்த புற்களில் திடீரென தீ பிடித்தது.
- சென்னிமலை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அடைத்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே உலகபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள வறண்டு கிடந்த புற்களில் திடீரென தீ பிடித்தது.
இது குறித்து அந்த பகுதியில் இருந்தவர்கள் சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இதேபோல் சென்னிமலை அருகே பழைய பாளையம் பகுதியில் வறண்டு கிடந்த செடி, கொடிகளில் தீ பிடித்தது. இது பற்றி தகவல் கிடைத்ததும் சென்னிமலை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அடைத்தனர்.
பீடி, சிகரெட் பற்ற வைத்தவர்கள் தீயை அணைக்காமல் போட்டதால் தீ விபத்துக்கள் ஏற்பட்டு இருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
- 108 ஆம்புலன்ஸ் மருத்துவ நுட்புநர்கள் பெண்ணுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்தனர்.
- அப்போது அழகான பெண் குழந்தை பிறந்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தாலுகா, யூனிட் நகர் பகுதியை சேர்ந்தவர் குணா. இவரது மனைவி புவனேஸ்வரி (20). 8 மாத கர்ப்பிணியான அவருக்கு காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
அதை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனே கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது.
ஆனால் புவனேஸ்வரிக்கு பிரசவ வலி அதிகரிக்கவே நிலைமையை புரிந்துகொண்ட 108 ஆம்புலன்ஸ் மருத்துவ நுட்புநர் ரமேஷ் மற்றும் கிராம சுகாதார செவிலியர் பிரியபாரதி பெண்ணுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்தனர்.
அப்போது புவனேஸ்வரிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
பின்னர் தாயும்-சேயும் பச்சிளங்குழந்தைகளுக்கான பிரத்யோக ஆம்புலன்ஸ் மூலம் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ நுட்புநர் ரமேஷ் மற்றும் வாகன ஓட்டுனர் யுவராஜ் ஆகியோரின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
- பக்தர்கள் தீச்சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- இதையடுத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் சருகு மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 6-ந் தேதி பூச்சாட்டு விழா தொடங்கியது. 11-ந் தேதி இரவு அம்மனை அழைத்து தீர்த்த குடம் எடுத்து வந்தனர்.
பின்னர் நேற்று காலை திருவிழாவானது தொடங்கியது. இதில் பக்தர்கள் தீச்சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்பு பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் வந்தனர்.
தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும், வரும் 19-ந் தேதி மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.
விழா ஏற்பாடுகளை ந.சுப்பையன் திருப்பணி விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- டிரான்ஸ்பார்மரின் மின் கம்பிகளில் திடீரென தீப்பற்றியது.
- அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தார்கள்.
ஈரோடு:
ஈரோடு நசியனூர் ரோடு நாராயணவலசு பகுதியில் நேற்று இரவு மின்சார வினியோகம் தடைபட்டு இருந்தது. இரவு 9 மணிஅளவில் அந்த பகுதியில் மின்சார வினியோகம் செய்யப்பட்டது.
அப்போது சம்பத் நகரில் இருந்து நாராயணவலசுக்கு செல்லும் வழியில் சாலையோரமாக உள்ள டிரான்ஸ்பார்மரின் உச்சியில் இணைப்பு கொடுக்கப்பட்ட மின் கம்பிகளில் திடீரென தீப்பற்றியது.
இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தார்கள். அவர்கள் டிரான்ஸ்பார்மருக்கு சிறிது தூரத்துக்கு முன்பே தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டனர்.
மேலும் டிரான்ஸ்பார்மரில் இருந்து தீப்பொறி கீழே விழுந்ததால் அதன் அருகில் யாரும் செல்லவில்லை. சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு மின் இணைப்பு தடைபட்டதால் தீ தானாகவே அணைந்தது. இதனால் பெரும் அசம்பா–விதம் தவிர்க்கப்பட்டது.
அதன்பிறகு வாகன ஓட்டிகள் நிம்மதியுடன் அங்கிருந்து கடந்து சென்றார்கள். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மின்சார வாரிய ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை சரி செய்தனர்.
இதையடுத்து அந்த பகுதியில் மீண்டும் மின் வினியோகம் செய்யப்பட்டது. டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- பிக்கப் வேன் மோட்டார் சைக்கிளில் வந்த சஞ்சீவி மீது மோதியது.
- இதில் தலை மற்றும் காலில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள பெருமுகை ஊராட்சி வரப்பள்ளம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவி (40). கூலி தொழிலாளி.
இந்நிலையில் சஞ்சீவி தனது சொந்த வேலை காரணமாக வெளியே சென்று விட்டு மீண்டும் அத்தாணியில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிரே சத்தியமங்கலம் சாலையில் இருந்து அத்தாணி சாலை நோக்கி மேட்டுப்பாளையம் காட்டூரை சேர்ந்த சதாம் உசேன் என்பவர் பிக்கப் வேனை ஓட்டி வந்தார்.
வரப்பள்ளம் சிதம்பரம் தோட்டம் அருகே முன்னே சென்ற வாகன ஓட்டி ஒருவரை பிக்கப் வேனை ஓட்டி வந்த சதாம் உசேன் வேகமாக முந்தி செல்ல முயன்ற போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த சஞ்சீவி மீது மோதியது.
இதில் தலை மற்றும் காலில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சஞ்சீவி மனைவி சாந்தா ரத்த காயங்களுடன் கீழே கிடந்த சஞ்சீவியை அருகில் இருந்தோர் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சஞ்சீவி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வேனை ஓட்டி வந்த சதாம் உசேன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதிகாலை என்பதால் பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர்.
- விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஈரோடு:
சென்னையில் இருந்து நேற்று இரவு கோவை மாவட்டம் பொள்ளாச்சி நோக்கி தனியார் ஆம்னி பஸ் ஒன்று கிளம்பியது. காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் (55) என்பவர் பஸ் டிரைவராக இருந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜோஸ்வா (21) என்பவர் பஸ் கண்டக்டராக இருந்தார். இந்த பஸ்சில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.
ஆம்னி பஸ் இன்று காலை 5.45 மணி அளவில சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் பெருந்துறை ஸ்ரீ பிளஸ் மஹால் எதிரில் உள்ள மேம்பாலம் முன்பு சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் ஆம்னி பஸ் மோதியது. இந்த கோர விபத்தில் பஸ்சில் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
அதிகாலை என்பதால் பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். இந்த விபத்தால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் விபத்தில் சிக்கி மரண ஓலம் எழுப்பினர். இந்த விபத்தில் ஆம்னி பஸ் டிரைவர் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மேலும் பஸ்சில் பயணம் செய்த கண்டக்டர் ஜோஸ்வா (21), திருப்பூர் மாவட்டம் பல்லடம் லட்சுமி நகரை சேர்ந்த ஜான்நேசன் (28), அவரது மனைவி ஜெனி (26), உடுமலையை சேர்ந்த ஸ்ரீவித்யா (23), ஊட்டி கூடலூரை சேர்ந்த டேவிட் ராஜ் (50), ஜான்சிமேரி (30), குருசம்மா (46), உமேஷ் (12), சென்னை சோலையூரை சேர்ந்த பூங்கொடி (45), திருப்பூரை சேர்ந்த ஆதர்ஷ் (26), ராமாயி (65), மனோஜ் (27) உள்பட 11 பயணிகளும் படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் விபத்து குறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து பெருந்துறை போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பாலமுருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மிகவும் கவலைக்கிடமாக இருந்த திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த ஜான் நேசன் (28) என்பவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.
இதனால் இந்த விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. இந்த விபத்தில் ஜான் நேசன் மனைவி லேசான காயத்துடன் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஊர் பொதுமக்களுக்கு அரசு பள்ளியிலும் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.
- கார் உள்ளிட்ட வாகனங்களிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
சிவகிரி:
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ளது மாரப்பம்பாளையம். இந்த ஊரில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருந்தது. இந்த நிலையில் பெரும்பாலான கிராமங்களுக்கு தனியார் பள்ளி வாகனங்கள் அதிக அளவில் வருவதை பார்த்த ஊர் பொதுமக்களுக்கு அரசு பள்ளியிலும் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.
இதையடுத்து மாரப்பம்பாளையம் அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 2023-24-ம் கல்வி ஆண்டில் சேருகிற மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் மற்றும் இலவச வாகன வசதி செய்யப்படும் என்று அப்பகுதி ஊர் பொதுமக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்த அறிவிப்புகள் பல்வேறு இடங்களில் ஒட்டியுள்ளனர். மேலும் கார் உள்ளிட்ட வாகனங்களிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. தனியார் பள்ளிக்கு இணையாக இந்த கல்வி ஆண்டில் அதிக மாணவர்களை சேர்க்க வேண்டும் என்ற முனைப்போடு ஊர்பொதுமக்கள் அறிவித்துள்ள இலவச சைக்கிள், இலவச வாகன வசதி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
- சாலையில் திடீரென சாலைமறியல் போராட்டம் செய்தனர்.
- இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வெள்ளி–திருப்பூர் மரப்பாளையம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதிக்கு கடந்த 15 நாட்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் புகார் செய்தனர். ஆனாலும் இதுவரை குடிநீர் வரவில்லை.
இதையடுத்து இன்று காலை இந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் காலிகுடங்களுடன் ஒன்று திரண்டு வெள்ளிதிருப்பூர்-அந்தியூர் செல்லும் பிரதான சாலையில் திடீரென சாலைமறியல் போராட்டம் செய்தனர்.
இதன் காரணமாக ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.
இதுப்பற்றி தெரிய வந்ததும் வெள்ளி திருப்பூர் போலீசார்சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் செய்த பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் வரவேண்டும். எங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதையடுத்து போலீசார் போராட்டத்தை கைவிடுங்கள். குடிநீர் விநியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறினர்.
இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் சுமார் 1 மணி நேரத்துக்கு பின்னர் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.
- கட்டுமான பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்து விட்டது.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. இதில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
மக்களுக்கு மருத்துவ சேவை அளிக்க மாநகராட்சியில் ஈரோடு காந்திஜி சாலை, பி.பெ.அக்ரஹாரம், நேதாஜி சாலை, கருங்கல்பாளையம்,
சூரம்பட்டி, அகத்தியர் வீதி, வீரப்பன்சத்திரம் (சாணார்பாளையம்), பெரியசேமூர், சூரியம்பாளையம், ராஜாஜிபுரம் ஆகிய 10 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஈரோடு மாநகராட்சி மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவைகளை வழங்க ஏற்கனவே உள்ள 10 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கூடுதலாக 2 சுகாதார நலவாழ்வு மையங்களை அமைத்திட அரசு உத்தரவிட்டது.
இதற்கு தமிழக அரசு ஒவ்வொரு சுகாதார நல வாழ்வு மையத்திற்கும் தலா ரூ.25 லட்சம் என மொத்தம் ரூ.5 கோடி நிதி ஒதுக்கியது.
இதன்பேரில் 36-வது வார்டுக்கு உட்பட்ட காவேரி சாலையிலும், 42-வது வார்டுக்கு உட்பட்ட மரப்பாலம், 14-வது வார்டில் வைராபாளையம்,
15-வது வார்டில் அன்னை சத்யா நகர், 55-வது வார்டில் தணிகை நகர், 51-வது வார்டில் அண்ணா நகர், 40-வது வார்டில் காவேரி சாலை, 39-வது வார்டில் பெரிய மாரியம்மன் கோவில் வீதி,
15-வது வார்டில் விஜிபி நகர், 59-வது வார்டில் கொல்லம்பாளையம் வ.உ.சி. வீதி, 57-வது வார்டில் பாரதி நகர், 9-வது வார்டில் குறிஞ்சி நகர், 11-வது வார்டில் மாணிக்கம்பாளையம்,
23-வது வார்டில் சத்யா நகர், 47-வது வார்டில் திரு.வி.க.வீதி, 50-வது வார்டில் முத்தம்பாளையம் பேஸ் 2, 6-வது வார்டில் ஞானபுரம், 3-வது வார்டில் இந்திராபுரம்,
5-வது வார்டில் எல்லப்பாளையம், 28-வது வார்டில் முனிசிபல் காலனி ஆகிய 20 இடங்களில் சுகாதார நல வாழ்வு மையங்கள் அமைக்கும் பணி கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது.
தற்போது சுகாதார நல வாழ்வு மையங்கள் கட்டுமான பணி நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது.
இந்த சுகாதார நல வாழ்வு மையங்களில் ஒரு மருத்துவர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மாவட்ட சுகாதாரத்துறை மூலம் நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்கு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
ஈரோடு மாநகராட்சியில் 10 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கூடுதலாக இரண்டு சுகாதார நல வாழ்வு மையங்கள் அரசு உத்தரவின்பேரில் அமைக்கப்பட்டுள்ளது
பணி நடந்து வருகிறது. 20 சுகாதார நல வாழ்வு மையங்கள் கட்டுமான பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்து விட்டது. உள் கட்டமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.
மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், தளவாட பொருட்கள் திறப்பு விழாவுக்கு முன்னதாக மருத்துவமனையில் வைக்கப்படும்.
இந்த சுகாதார நல வாழ்வு மையங்களை விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். ஈரோடு மாநகராட்சியுடன் சேர்ந்து மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 450 சுகாதார நலவாழ்வு மையங்களும் ஒரே நாளில் திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு விட அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
- மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
- முககவசம் அணிந்து செல்வது அவசியம் என சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது.
கடந்த சில மாதங்களாகவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த இரு வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.
இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இது கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவு பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 729 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த ஒருவர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 975 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 20 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருவதால் கொரோனா தினசரி பரிசோதனையை அதிகரிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தற்போது நாளொன்றுக்கு 60 முதல் 70 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
இதேப்போல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முககவசம் அணிந்து செல்வது அவசியம் என சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.
- மாணவர்கள் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.
- பாஸ்போர்ட்டை பள்ளி கல்வித்துறையில் ஒப்படைக்க வேண்டும்.
ஈரோடு, ஏப். 12-
ஈரோடு மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் நடந்த கலைத்திருவிழா, விளையாட்டு போட்டி, மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற 6 மாணவ-மாணவிகள் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.
இதன்படி ஈரோடு மேலப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவன் நகுல், அ.பள்ளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி 7-ம் வகுப்பு மாணவி தனுஜா ஆகியோர் இலக்கிய மன்றம் சார்பில் தேர்வாகி உள்ளனர்.
காசிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவர் ஸ்ரீசாந்த் விளையாட்டு பிரிவு சார்பிலும், பொன்னாத்தா வலசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவி சிந்துஜா, ஊசிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவன் அய்யப்பன் ஆகியோர் கலை மற்றும் கலாச்சார பிரிவு சார்பிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பி.பி.அக்ரஹாரம் அரசு மேல்நிலை பள்ளி மாணவன் சையது இப்ராஹிம் வானவில் மன்றம் சார்பில் தேர்வாகியுள்ளார்.
இவர்கள் அனைவரும் தமிழக அரசு சார்பில் வெளிநாடு செல்ல உள்ளனர்.
இதற்கான பணிகளை அரசு துரிதப்படுத்தி உள்ளது. இவர்களின் பெற்றோர்களுக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்து விபரம், பாஸ்போர்ட் எடுக்க வேண்டியது அவசியம் குறித்து ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எந்த நாட்டுக்கு எத்தனை நாட்கள் செல்ல உள்ளனர் போன்ற விவரம் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
அதே சமயம் சுற்றுலாவுக்கு தேர்வான 6 பேரும் நாளைக்குள் தங்களது பாஸ்போர்ட்டை பள்ளி கல்வித்துறையில் ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






