என் மலர்tooltip icon

    கடலூர்

    நெய்வேலி அருகே தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் காப்பர் கம்பி திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த கொல்லியிருப்பு பகுதியில் தனியாருக்கு சொந்தமான மின்உற்பத்தி நிலையம் உள்ளது.

    இங்கு நேற்று மாலை செயற்பொறியாளர் சிலம்பரசன் ரோந்து சென்றார். அப்போது வாலிபர் ஒருவர் அங்கு 300 மீட்டர் காப்பர் கம்பிகளை திருடி ஒரு பையில் வைத்துக் கொண்டு வெளியே ஓடிவந்தார். அவரை செயற்பொறியாளர் மடக்கி பிடித்து தெர்மல் போலீசில் ஒப்படைத்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் விசாரணை நடத்தினார். விசாரணையில் காப்பர் கம்பியை திருடியவர் நயினார் குப்பத்தை சேர்ந்த சண்முகம் (வயது30) என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீமுஷ்ணம் அருகே அரசு பஸ் மோதி லாரி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள அகரசோழதரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா(வயது 42). லாரிடிரைவர். இவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் சோழதரம் சென்று பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த அரசு பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராஜா தூக்கிவீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சோழதரம் போலீசார் விரைந்து  சென்று விபத்தில் இறந்த ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த ராஜாவுக்கு அம்சவேணி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். #tamilnews

    நெல்லிக்குப்பம் அருகே மணல் கடத்திய 4 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லிக்குப்பம்:

    நெல்லிக்குப்பம் அடுத்த கீழ் அருங்குணம் பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது 4 மாட்டு வண்டிகள் வந்து கொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கெடிலம் ஆற்றிலிருந்து மணல் கடத்தப்பட்டது தெரிய வந்தது. இதையொட்டி நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

    நெல்லிக்குப்பம் அருகே குடிபோதையில் ரகளை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லிக்குப்பம்:

    நெல்லிக்குப்பம் அடுத்த பாலூர் கடைவீதி பகுதியில் 3 பேர் குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறாக ரகளை செய்தனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் பி.என். பாளையத்தை சேர்ந்த அன்பு (வயது 32), தினேஷ் (வயது 26), சத்தியராஜ் (வயது 22) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    கடலூரில் ஓட்டல் அதிபர் வீட்டின் கதவை உடைத்து ரூ.4 லட்சம் மதிப்பிலான நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    கடலூர்:

    கடலூர் கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வ குமார் (வயது 42). இவரது மனைவி பவானி (37). இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.

    செல்வகுமார் கூத்தப்பாக்கத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். அவரது மனைவி தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

    நேற்று செல்வகுமார் ஓட்டலுக்கு சென்று விட்டார். குழந்தைகள் பள்ளிக்கு சென்று விட்டனர். பின்னர் பவானி வீட்டை பூட்டி விட்டு ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்று விட்டார். இதைநோட்டமிட்ட மர்ம வாலிபர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றார்.

    அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 20 பவுன் நகையை கொள்ளையடித்தார்.

    மாலையில் செல்வகுமாரின் ஓட்டலில் வேலை பார்க்கும் அஞ்சாலட்சி என்பவர் செல்வகுமாரின் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டுக்குள் இருந்து அந்த வாலிபர் வெளியே ஓடினார்.

    இதைப்பார்த்த அஞ்சாலட்சி திடுக்கிட்டார். ஓட்டல் அதிபர் செல்வகுமாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர் வீட்டுக்கு வந்து பார்த்த போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.

    இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசில் செல்வகுமார் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர்.

    மேலும் இந்த கொள்ளையில் துப்பு துலக்க கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கைரேகைகளை பதிவு செய்தனர். வீடு புகுந்து நகை கொள்ளையடித்து சென்ற மர்ம வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
    நெய்வேலியில் ஓய்வு பெற்ற என்.எல்.சி. தொழிலாளி வீட்டில் ரூ.4 லட்சம் நகையை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
    நெய்வேலி:

    நெய்வேலி அருகே உள்ள தில்லை நகர் அண்ணாசாலை பகுதியில் குடியிருப்பவர் முருகேசன்(வயது 62). ஓய்வு பெற்ற என்.எல்.சி. தொழிலாளி. இவருடைய மகன் சென்னையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி தனது மகன் வீட்டுக்கு முருகேசன் தனது மனைவியுடன் சென்னைக்கு சென்றார். அதே பகுதியை சேர்ந்த இவருடைய உறவினர் ரங்கநாதன் என்பவர், தினசரி மாலை நேரத்தில் முருகேசனின் வீட்டுக்கு வந்து மின்விளக்கு போட்டு செல்வார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று முருகேசனின் வீட்டில் மின்விளக்கை போடுவதற்கு ரங்கநாதன் வரவில்லை. இதை தொடர்ந்து மறுநாள், ரங்கநாதன் வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக செல்போன் மூலம் முருகேசனுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து சென்னையில் இருந்து முருகேசன் வீடு திரும்பினார். தொடர்ந்து அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 18 பவுன் நகை, ½ கிலோ வெள்ளி பொருட்கள், வங்கி ஏ.டி.எம். கார்டுகள் ஆகியவற்றை காணவில்லை. இதன் மூலம் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள், கதவு பூட்டை உடைத்து நகையை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

    இதுபற்றி தகவல் அறிந்த டவுன்ஷிப் போலீசார் நேரில் வந்து விசாரித்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் நேரில் வந்து, கொள்ளை நடந்த வீட்டில் இருந்த கைரேகையை பதிவு செய்து சென்றனர்.

    கொள்ளைபோன பொருட் களின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 
    சிதம்பரத்தில் 3-வது நாளாக கோவிந்தசாமி நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் மழைக் காலங்களில் குடியிருப்புகளை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்காதபடி அந்த தண்ணீர் வடிந்து செல்லும் வகையில் தில்லை காளியம்மன் ஓடை அமைக்கப்பட்டது. காலங்கள் செல்ல , செல்ல ஆக்கிரமிப்பாளர்களின் ஆதிக்கம் அதிகரித்து தில்லை காளியம்மன் ஓடையின் இருபுறமும் உள்ள கரையை ஆக்கிரமித்து குடிசைகள் , அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டபட்டுள்ளன.

    இதனால் தில்லை காளியம்மன் ஓடை சுருங்கி மழை நீர் வடிந்து செல்வதில்லை. இதனால் மழை காலங்களில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து நின்றன. எனவே தில்லை காளியம்மன் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் வழிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தில்லை காளியம்மன் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 369 கட்டிடங்களை கணக்கெடுத்து இடிக்க பொதுப்பணி துறையினர் மூலம் நோட்டீசு வழங்கப்பட்டது.

    மாவட்ட கலெக்டர் தண்டபாணி உத்தரவின் பேரில் சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமையில் அதிகாரிகள் தில்லை காளியம்மன் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட் டிருந்த வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். இது வரை 3 கோவில்கள் உள்பட 177 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன.

    இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று 3-வது நாளாக கோவிந்தசாமி நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஜவஹர் தலைமையிலான 200-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    சிதம்பரம் நகராட்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே பாதாள சாக்கடை திட்டம் என்ற பெயரில் சிதம்பரம் நகரத்தையே புரட்டிப்போட்டு பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் பணிகள் நடந்து வருகிறது.

    மேலும் சீரான குடிநீர் விநியோகம் உள்பட எந்தவிதமான அத்தியாவசிய தேவைகளும் நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறு பல பிரச்சினைகள் இருந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக தில்லை காளியம்மன் ஓடையின் கரையில் கட்டப்பட்டு இருந்த வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன.

    கடந்த 80 ஆண்டுகளாக குடியிருந்து வரும் பொதுமக்களின் வீடுகளை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் நகர செயலாளர் ராமச்சந்திரன், கூறியதாவது:-

    தில்லை காளியம்மன் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் தற்போது இடித்து அகற்றப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் குறைந்த அளவே ஆழப்படுத்தப்படும். இந்த நிலையில் தில்லை காளிம்மன் ஓடை அருகே உள்ள வீடுகள் இடித்து அகற்றப்பட்டு வருகின்றன.

    எந்தவித மாற்று ஏற்பாடுகளும் செய்யாமல் பொதுமக்கள் கட்டியிருந்த வீடுகளை இடித்து அகற்றி, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் செயல்பட்டு வருகிறது.

    மேலும் இடித்து அகற்றப்படும் வீடுகளின் உரிமையாளர்களுக்கு நஷ்டஈடும், மாற்று இடமும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் முடிவண்ணன் கூறியதாவது:-

    தில்லைக்காளியம்மன் ஓடையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகளை ஐகோர்ட்டின் உத்தரவின் பேரில் அரசு அதிகாரிகள் இடித்து அகற்றி வருகின்றனர். இதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணை இல்லை. அதே ஐகோர்ட்டு உத்தரவில்தான், ஆக்கிரமிப் பாளர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால், அதை பொருட்படுத்தாமல் அரசு அதிகாரிகள் எந்தவித மாற்று ஏற்பாடும் செய்யாமல் வீடுகளை இடித்து அகற்றி வருகின்றனர். இதனால் அவர்களின் உடமைகள் அனைத்தும் ரோட்டில் வீசி எறியப்படுகின்றன.

    இதனால் பொதுமக்கள் தங்களது உடமைகளை இழந்து நடுரோட்டில் தவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரதமர் மோடி அரசு காங்கிரஸ் கட்சி குரலையும், என் குரலையும் ஒடுக்க நினைத்தால் அது நடக்காது என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பண்ருட்டி பஸ் நிலையம் பின்புறம் இந்திரா காந்தி சாலையில் நேற்று இரவு நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கடலூர் வடக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வல்லம்ராஜன் முன்னிலை வகித்தார். தெற்கு மாவட்ட தலைவர் நகர் பெரியசாமி வரவேற்று பேசினார். கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    காமராஜர் மறைந்து 42 ஆண்டுகளாகிறது காமராஜர் பெயரை சொன்னால் ஒரு ஈர்ப்பு சக்தி உள்ளது. காமராஜர் எளிய குடும்பத்தில் பிறந்த படிக்காத மேதை. வாழும் தெய்வம், அவர் வாழ்க்கை எல்லோருக்கும் ஒருபாடம் அவர் பெயரில் நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். தற்போது மத்தியில் 31 சதவீதம் வாக்குகள் மட்டுமே பெற்ற பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெறுகிறது. 69 சதவீத வாக்குகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

    இதற்கு முன்பு வாஜ்பாய் தலைமையில் பா.ஜனதா 6 ஆண்டுகள் ஆட்சி செய்தது. ஆனால் இங்கு தற்போது நடக்கிற நிகழ்வுகள் கொடுமைகளை பார்க்கும்போது வாஜ்பாய் ஆட்சி நடக்கவில்லை. முஸ்லிம்கள், தலித்துகள், பெண்கள், சிறுவர்கள் மீதான வன்கொடுமைகள் பாரதிய ஜனதா ஆட்சியில் நடைபெற்று வருகிறது.

    மோடி ஆட்சியில் இந்தியா விபரீதமான திசையில் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி பேசி போராடி வருகிறது. காங்கிரஸ் கட்சி குரலையும், என் குரலையும் ஒடுக்க நினைத்தால் அது நடக்காது.

    என்னை 4 பேர் படுக்கையில் தூக்கி செல்லும் போது தான் என் குரல் நிற்கும். என் பேனா எழுதுவது நிற்கும். அனைத்து சமுதாயத்தினரும் அச்சத்தில் வருகின்றனர். கச்சா எண்ணெய் விலை குறைகிறது. ஆனால் பெட்ரோல் டீசல் விலை உயர்கிறது. இதன் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் கூடுதல் வரி பிடித்தம் செய்ததன் மூலம் ரூபாய் 10 லட்சம் கோடி கிடைத்துள்ளது. அந்தப் பணம் எங்கே போனது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் போடுவேன் என்று மோடி கூறினார். 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றார் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும் என்றார் இதையெல்லாம் அவர் செய்திருக்கிறாரா? இதுவரை எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை.

    பயிர் காப்பீடு திட்டத்தைப் பொறுத்தவரை எவ்வளவு பிரீமியம் தொகை வசூலிக்கிறார்களோ அந்த அளவு இழப்பீடு தர வேண்டும். 2016-17 ஆண்டில் பயிர் காப்பீடு திட்டத்தில் ரூ.12 ஆயிரம் கோடி பிரீமியம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே ஆண்டு விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை ரூ.5ஆயிரம் கோடி தான் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 ஆயிரம் கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

    மோடி அரசின் இதுபோன்ற திட்டங்களால் இந்திய பொருளாதாரம் வலுவிழந்து உள்ளது. பண மதிப்பு நடவடிக்கையால் மக்கள் நிம்மதி கெட்டுள்ளது. தமிழக அமைச்சர் எம்.சி. சம்பத் சட்டசபையில் பேசும்போது பண மதிப்பு நடவடிக்கையால் 50 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். 13 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார். இது இந்தியாவிலுள்ள ஒரு மாநிலத்தில் ஏற்பட்டுள்ள புள்ளிவிவரம். இந்தியா முழுவதும் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் வியாபாரிகள் நிம்மதியின்றி உள்ளனர். பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் என்ன நன்மை கிடைத்துள்ளது என்று யோசித்து பார்க்க வேண்டும் தமிழகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் என இரண்டு பேர் உள்ளனர் இவர்களிடம் கணக்கு கேட்க ஆள் இல்லாததால் மகிழ்ச்சியுடன் உள்ளனர். சத்துணவு முட்டை வழங்கும் திட்டத்தில் ரூபாய் 5 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது என்று மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். ஊழல்வாதிகளை கைது செய்ய வேண்டும்.

    பிரதமர் மோடி நேரு குடும்பம் பதவிக்காக அலைகிறது என்று கூறி வருகிறார். ஆனால் 1989-ம் ஆண்டிற்கு பிறகு சுமார் 29 ஆண்டுகளாக இந்த நேரு குடும்பத்தில் யாரும் அரசு பொறுப்புக்கு வரவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் உலக நாடுகளில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து இருந்தது. அண்டை நாடுகளுடன் நல்லுறவு இருந்தது வல்லரசு நாடுகள் உதவியாக இருந்தன. ஆனால் இன்று அந்த நிலை இல்லை என்னைப் பொறுத்தவரை சுதந்திர இந்தியாவில் எல்லோரும் சுதந்திரமாக இருக்க வேண்டும் அச்சமில்லாத வாழ்க்கை தான் சுதந்திரம் இன்னும் 10 மாதங்களில் தேர்தல் வர உள்ளது. பாரதிய ஜனதா கட்சி அல்லாத ஆட்சி அமையும் பட்சத்தில் அந்த நிலை ஏற்படுத்தித் தருவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    திட்டக்குடி அருகே முன்விரோத தகராறில் விவசாயியை தாக்கிய பெண் கைது செய்யப்பட்டார்.
    திட்டக்குடி:

    திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி காலனியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 40), விவசாயி. இவருக்கும் இவரது தம்பி பாலுவுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாலு தனது மனைவி வாசுகியுடன் சேர்ந்து கொண்டு ராஜ்குமாரை தாக்கினார். 

    இதில் பலத்த காயமடைந்த ராஜ்குமார், திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து வாசுகியை கைது செய்தனர். பாலுவை தேடி வருகின்றனர்.
    ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சி, பள்ளிபடை, சி.கொத்தங்குடி கிராம ஊராட்சி ஆகிய எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் தில்லையம்மன் ஓடை செல்கிறது.

    இந்த வழித்தடங்களில் ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் கடைகள் கட்டப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் கடைகளை காலிசெய்யுமாறு பொதுமக்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த 1 மாதத்துக்கு முன்பு நோட்டீஸ் வழங்கியதாக கூறப்படுகிறது.

    ஆக்கிரமிப்பு வீடுகளை காலிசெய்யவில்லை என்றால் அவைகள் இடித்து அகற்றப்படும் என ஒலி பெருக்கி மூலம், எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் இதுவரை ஆக்கிரமிப்பு வீடுகளை பொதுமக்கள் காலிசெய்யவில்லை. இந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்துடன் சிதம்பரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிக்கு இன்று வந்தனர்.

    இதையொட்டி அங்கு போலீஸ் சூப்பிரண்டு விஜயக்குமார் உத்தரவின் படி 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்க இருந்தனர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து. அந்த பகுதி பொது மக்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    நாங்கள் எம்.எல்.ஏ.வை சந்தித்து பேசப் போகிறோம் என்று கூறி பொதுமக்கள் சிதம்பரம் எம்.எல்.ஏ. அலுவலகத்தை நோக்கி சென்றனர். அங்கிருந்த பாண்டியன் எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவரிடம் நாங்கள் வீடுகளை காலி செய்யமாட்டோம், எங்கள் வீடுகளை இடிக்கக்கூடாது என வலியுறுத்தினர்.

    இதையடுத்து பொது மக்களிடம் பாண்டியன் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த சம்பவத்தால் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.
    விருத்தாசலம் அருகே குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த கூனங்குறிச்சியைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன்(38). இவரது மனைவி ரேக்கா(30). இவர்களுக்கு திருமணம் ஆகி 2 மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில் சவுந்தரராஜனுக்கும் ரேக்காவிற்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 11.6.2012 அன்று ரேக்கா தன் கணவரிடம் கோபித்துக்கொண்டு விருத்தாசலம் சித்தலூரில் உள்ள தன் பாட்டி வீட்டிற்கு சென்று தங்கியிருந்தார். அங்கு சென்ற சவுந்தரராஜன் கத்தியால் ரேக்காவின் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த ரேக்கா விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப்பெற்றார்.

    இந்த வழக்கு விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு விருத்தாசலம் 1-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று விசாரணைக்கு வந்த வழக்கினை மாஜிஸ்திரேட் கோபிநாத் விசாரித்தார். விசாரணையின் முடிவில் கோபிநாத்திற்கு 3 வருட சிறைத்தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
    காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் மின்சார வாரிய அலுவலகத்தில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் மின்சார வாரிய அலுவலகம் உள்ளது.

    இந்த அலுவலகத்தில் வீராணம் ஏரிக்கரை கிராமத்தை சேர்ந்த இளஞ்செழியன் என்பவர் தனது பெட்டி கடைக்கு மின் இணைப்பு கேட்டு கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மனு கொடுத்திருந்தார். ஆனால் மின் இணைப்பு வழங்கவில்லை.

    அவர் கொடுத்த மனுவின் மீது தற்போதைய நிலை என்ன? என்று விசாரிப்பதற்காக இளஞ்செழியன் மின்சார வாரிய அலுவலகத்துக்கு சென்றார்.

    அப்போது அலுவலகத்தில் இருந்த வணிக உதவியாளரான தமிழினியன் (வயது 45) என்பவர், கடைக்கு மின் இணைப்பு வழங்க வேண்டுமென்றால் ரூ.5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளஞ்செழியன், பணம் தருவதாக கூறிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    லஞ்சம் கொடுக்க விரும்பாத இளஞ்செழியன், இது குறித்து கடலூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து ரசாயன பொடி தடவிய ரூ.5 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் இளஞ்செழியனிடம் கொடுத்து, அதனை தமிழினியனிடம் கொடுப்பது குறித்து ஆலோசனை கூறினர்.

    அதன்படி லால்பேட்டை மின்சார வாரிய அலுவலகத்துக்கு சென்ற இளஞ்செழியன், அங்கிருந்த வணிக உதவியாளர் தமிழினியனிடம் ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு வாடிக்கையாளர் போல் வந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மெர்லின்ராஜாசிங் மற்றும் போலீசார் கையும், களவுமாக தமிழினியனை பிடித்து கைது செய்தனர்.
    ×