என் மலர்tooltip icon

    கடலூர்

    பண்ரூட்டி அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி லாரி மீது மோதிய விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் வடலூரை அடுத்துள்ள சேலையூர், சேப்ளாநத்தம், விணங்கேணி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அங்கிருந்து விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றனர்.

    பின்னர் அங்கிருந்து தங்களது ஊருக்கு அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தனர். அந்த பஸ்சை புவனகிரியை சேர்ந்த அசோகன் (வயது 54) என்பவர் ஓட்டினார்.

    அந்த பஸ் இன்று அதிகாலை கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த கொஞ்சிக்குப்பம் பகுதியில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி அந்த வழியாக நெல் அறுவடை எந்திரத்தை ஏற்றிக் கொண்டு வந்த ஒரு லாரி மீது நேருக்கு நேர் மோதியது.

    இதில் அரசு பஸ்சின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் நொறுங்கியது. இந்த விபத்தில் பஸ் டிரைவர் அசோகன் மற்றும் பஸ்சில் பயணம் செய்த பக்தர்கள் சேலையூரை சேர்ந்த அகிலன் (39), சேப்ளாநத்தத்தை சேர்ந்த மங்களலட்சுமி (47), விணங்கேணியை சேர்ந்த கஸ்தூரி (37), லாரி டிரைவர் விழுப்புரம் மாவட்டம் தொட்டியூரை சேர்ந்த ராஜு (56), லாரி கிளீனர் செஞ்சியை சேர்ந்த திருஞானம் (32) ஆகியோர் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காடாம் புலியூர் இன்ஸ்பெக்டர் மலர்விழி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த விபத்தினால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். #tamilnews
    கடலூர் அருகே பெண் வார்டன் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான காதலனை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது மகள் செந்தமிழ்ச்செல்வி (வயது 24). இவர் திருச்சி மத்திய பெண்கள் சிறையில் சிறை வார்டனாக பணியாற்றி வந்தார். திருச்சி கே.கே.நகர் காவலர் குடியிருப்பில் தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் செந்தமிழ்ச்செல்வி, தான் தங்கியிருந்த வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செந்தமிழ்ச்செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    செந்தமிழ்ச்செல்வி இறந்தது பற்றிய தகவல் பெரியகாட்டுப்பாளையத்தில் உள்ள அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் உள்ளே சென்ற அவர்கள் அங்கிருந்த போலீசாரிடம், செந்தமிழ்ச்செல்வி சாவுக்கு அவரது காதலனே காரணம்.

    செந்தமிழ்ச்செல்வியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி விட்டு தற்போது மறுத்துள்ளார். இதனால் அவளின் காதலன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றனர்.

    அதற்கு அங்கிருந்த போலீசார், சம்பவம் நடந்த ஊரில் உள்ள போலீசில்தான் நீங்கள் புகார் செய்ய வேண்டும். அவர்கள்தான் நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.

    இதனை ஏற்றுக்கொண்ட செந்தமிழ்ச்செல்வியின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியேறினர்.

    பின்னர் அவர்கள் இது தொடர்பாக திருச்சி கே.கே.நகர் போலீசில் புகார் அளிக்க சென்றனர். அங்கு இவர்கள் கொடுத்த புகாரை போலீசார் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து இன்று காலை பெரியகாட்டுப்பாளையம் பகுதியில் உள்ள கடலூர்- புதுவை சாலையில் செந்தமிழ்ச்செல்வியின் உறவினர்கள் திடீரென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது பற்றிய தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது, போராட்டக்காரர்கள் செந்தமிழ்ச்செல்வியின் சாவுக்கு காரணமான அவரது காதலனை கைது செய்யும்வரை எங்களது போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறி போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு அதிவிரைவு படை போலீசார் வரவழைக்கப்பட்டு குவிக்கப்பட்டனர். அந்த பகுதியில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் அவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

    போராட்டக்காரர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். உங்களது கோரிக்கையை ஒரு மனுவாக எழுதி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுங்கள். அதன் பின்னர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது இந்த போராட்டத்தை கைவிட்டு இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்று கூறினர்.


    இதனை ஏற்றுக் கொண்ட செந்தமிழ்ச்சசெல்வியின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு சாலையோரம் திரண்டு நிற்கின்றனர். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திமுகவுடன் ஒன்று சேர்ந்து 40 தொகுதிகளிலும் வெல்வோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியுள்ளார். #Congress #KSAlagiri #DMK

    பண்ருட்டி:

    தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசர் மாற்றப்பட்டார். புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார்.

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த கீரப்பாளையத்தில் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    எனது 50 ஆண்டுகால அரசியல் வாழ்வில் காங்கிரஸ் கட்சியின் எளிய தொண்டனாக வாழ்ந்து வருகிறேன். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என்னை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமித்து கவுரவித்துள்ளார். அதற்காக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    என்னை அடையாளம் கண்டு பெருந்தலைவர் காமராஜர் அமர்ந்த இடத்தில் என்னை அமர வைத்து இருக்கிறார்கள். அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அகில இந்திய பொதுச் செயலாளர் முகுல்வாஸ்னிக் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றி.

    காங்கிரஸ் கட்சியின் உயர்ந்த கொள்கைகளை தூக்கி பிடித்து நிறுத்த வேண்டும் என்பதே எனது கொள்கை. மதசார்பற்ற கொள்கை, ஜனநாயக சோசலிசத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தது, எளியவர்களுக்கும் அதிகாரத்தை வழங்கியது காங்கிரஸ் கட்சி.

     


    மதங்களுக்கும், சாதிகளுக்கும் அப்பாற்பட்டது காங்கிரஸ். இந்தியாவின் எல்லா பகுதிகளும் நன்றாக இருக்க வேண்டும். அந்த நோக்கம் நிறைவேற நான் பாடுபடுவேன்.

    எனது உடனடி கடமை என்பது தமிழகம், புதுவையில் 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற வேண்டும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி பிரதமராக வரவேண்டும் என முன்னிறுத்தினார். அவருக்கு நன்றிக்கடன் செலுத்த கடமைபட்டுள்ளோம். தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற முன்னாள் தலைவர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டும். சிறந்த வளர்ந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும். ஏழை-எளியோரின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்பது எனது விருப்பமாகும்.

    தமிழ்நாட்டில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி என்பது இயற்கையான கூட்டணியாகும். எனவே நாங்கள் தி.மு.க.வுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம். தி.மு.க.வுடன் ஒன்று சேர்ந்து தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியிடமும், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியிடமும் மிகுந்த மதிப்பும், மரியாதையும், கருத்தொற்றுமையும் கொண்டிருந்தார். இதனால் தேர்தல்களில் அவர் காங்கிரசுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். அதே பாணியில் இப்போது மு.க.ஸ்டாலினும் செயல்பட்டு வருகிறார்.

    பிரதமர் வேட்பாளராக ராகுலை, அவர் முன் மொழிந்தது நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்களிடம் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே தி.மு.க.வுடன் இணைந்து நாங்கள் செயல்படுவோம்.

    இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார். #Congress #KSAlagiri #DMK

    மனவளர்ச்சி குன்றிய இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த என்ஜினீயருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
    கடலூர்:

    மனவளர்ச்சி குன்றிய இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த என்ஜினீயருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு பற்றிய விவரம் வருமாறு:-

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ரெட்டியூரை சேர்ந்தவர் சித்திரைவேல் மகன் தினேஷ்பாபு (வயது 23), என்ஜினீயர். கடந்த 20-10-2016 அன்று அப்பகுதியில் உள்ள வாய்க்காலுக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்ற மனவளர்ச்சி குன்றிய 25 வயதுடைய இளம்பெண்ணை, தினேஷ்பாபு பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் அந்த இளம்பெண்ணுக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டது. இதுபற்றி அப்பெண்ணின் தாய் விசாரித்த போது, தினேஷ்பாபு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சைகை மூலம் தெரிவித்தார்.

    இது பற்றி இளம்பெண்ணின் தாய் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தினேஷ் பாபுவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    தற்போது இவ்வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி லிங்கேஸ்வரன், குற்றவாளி தினேஷ்பாபுவுக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

    அவர் தனது தீர்ப்பில், கிராமப்புறங்களில் படித்தவர்களுக்கு மரியாதை உள்ளது, இதுபோன்ற குற்ற சம்பவங்கள் அதற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது. மனவளர்ச்சி குன்றியவர்களை பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமையாகும். ஆனால் படித்த ஒருவர் மனவளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது மிகப்பெரிய பாவச்செயலாகும். எனவே இதற்கு அதிகபட்ச தண்டனையாக வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டு உள்ளார்.

    இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு இழப்பீடு வழங்கவும் இலவச சட்ட உதவி மையத்துக்கு நீதிபதி லிங்கேஸ்வரன் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் க.செல்வ ப்ரியா ஆஜராகி வாதாடினார்.
    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே முன்விரோத தகராறு காரணமாக வாலிபர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லிக்குப்பம்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள நடுவீரப்பட்டு அடுத்த சிலம்பிநாதன்பேட்டையைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி காந்திமதி. இவர்களது மகன் கிருஷ்ணகுமார் (வயது 23).

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த லட்சியபாரதி, அருள்மணிமுத்து ஆகியவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று கிருஷ்ணகுமார், லட்சியபாரதி, அருள்மணிமுத்து ஆகியோர் புத்திரன்குப்பத்தில் உள்ள செம்மண்குவாரியில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் திடீரென்று மோதல் ஏற்பட்டது. இதில் கிருஷ்ணகுமார் செம்மண்குவாரியில் விழுந்து பலத்த காயமடைந்தார்.

    அவர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு கிருஷ்ணகுமார் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கிருஷ்ணகுமாரின் தாயார் காந்திமதி நடுவீரப்பட்டு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் லட்சியபாரதியை போலீசார் கைது செய்தனர். அருள்மணிமுத்துவை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவேன் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். #thirumavalavan #parliamentelection

    சிதம்பரம்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரத்துக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகக்குழு ஆலோசனை கூட்டம் வருகிற 4-ந் தேதி சென்னையில் நடக்கிறது. அந்த கூட்டத்தில் தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொள்ளப்படும்.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே கூட்டணி குறித்து முடிவு செய்வோம். மேலும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட முயற்சி செய்வேன். அவ்வாறு போட்டியிட்டால் மோதிரம் சின்னத்தில் போட்டியிடுவேன்.

    கல்விக்காகவும், ஆன்மிகத்திற்காகவும், பாடுபட்ட சுவாமி சகஜானந்தாவின் பிறந்த நாளை தமிழக அரசு அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    முன்னதாக பெண்ணாடத்தில் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:-

    போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்தவர்கள் மீது 17-பி என்கிற பிரிவில் நடத்தை விதிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.

    இந்த அச்சுறுத்தல் பெரும்பான்மையான ஆசிரியர்களை பணிக்கு திரும்ப வைத்திருக்கிறது. தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதாக லட்சக்கணக்கானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை தமிழக அரசு பெற்று இருக்கிறது. அவர்களுக்கு தமிழக அரசு என்ன பதில் செல்ல போகிறது.

    தமிழக முதல்-அமைச்சர் என்ன விளக்கம் அளிக்கப்போகிறார் என்ற விவரம் தெரியவில்லை. ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கோரிக்கைகளை பரிசீலனை செய்யாமல் அவர்களை அச்சுறுத்துவது கண்டனத்துக்குரியதாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #thirumavalavan #parliamentelection

    விவசாய தேவைக்கு தண்ணீர் தேவைப்படாத நிலை இருப்பதால் வீராணம் ஏரியில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. #VeeranamLake
    ஸ்ரீ முஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர் மட்டம் 47.50 அடி ஆகும்.

    இந்த ஏரிமூலம் அந்த பகுதியில் உள்ள 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவையையும் வீராணம் ஏரி பூர்த்திசெய்கிறது. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியுள்ளது.

    வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு தண்ணீர் தேவைப்படும்போது மீண்டும் வடவாறு வழியாக தண்ணீர் திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    வீராணம் ஏரி பாசன பகுதிகளில் சம்பா நெல் அறுவடை பணிகள் நடந்து வருகிறது. விவசாய தேவைக்கு தண்ணீர் தேவைப்படாத நிலை இருக்கிறது. இதனால் தற்போது வீராணம் ஏரியில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

    வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்காக தொடர்ந்து 74 கன அடி நீர் அனுப்பப்படுகிறது. #VeeranamLake
    ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக கடலூர் மாவட்டம் முழுவதும் 1,055 பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. #JactoGeo
    கடலூர்:

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதால் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் குறைந்த அளவிலேயே ஊழியர்கள் உள்ளனர்.

    இதனால் அரசு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோல் ஆசிரியர்கள் பணிக்கு வராத காரணத்தால் அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. அதன்படி நேற்றைய நிலவரப்படி கடலூர் மாவட்டம் முழுவதும் 1,055 பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. #JactoGeo

    கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். #thirumavalavan #JactoGeo #TeachersProtest

    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடிக்கு வந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அரசு நிர்வாகத்துக்கு முதுகெலும்பாக உள்ளவர்கள் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தான். அவர்கள் முடக்கப்பட்டால், அரசு நிர்வாகம் முடங்கி விடும்.

    எனவே அவர்களை கைது செய்யும் அணுகுமுறையை கைவிட்டுவிட்டு, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

    மேலும் கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்களை விடுதலை செய்வதுடன், அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #thirumavalavan #JactoGeo #TeachersProtest

    தமிழக அரசியலில் ரவுடிகளின் கை ஓங்கி உள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். #kamal #makkalneethimaiyam

    கடலூர்:

    கடலூரில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் 40 ஆண்டுகளாக அரசியலில் ரவுடிகளின் கை ஓங்கியுள்ளது. அனைத்து கட்சிகளையும் ரவுடி என கூறவில்லை. படித்தவர்கள் என்னை அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறினார்கள். அதன்பேரில் நான் அரசியலுக்கு வந்துள்ளேன்.

    40 ஆண்டுகளில் அரசியல் கட்சிகள் செய்யாததை நான் செய்வேன். தூய்மையான அரசை கொண்டு வர அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். திராவிடம் என்பது 2 கட்சிகள், 3 குடும்பங்களுக்கு சொந்தமானது கிடையாது. நாடு தழுவியது.

    கடலூர் மாவட்டத்தில் நான் 2 நாட்களாக சுற்றுப் பயணம் மேற்கொண்டேன். அப்போது மக்கள் மாற்றத்தை விரும்புவது தெரி கிறது. தமிழகத்தில் விவசாயம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. மக்கள் மறதியாக உள்ளார்கள். அதை போக்க வேண்டும்.

    எல்லோரும் சேர்ந்தால்தான் தூய்மையான அரசியலை கொடுக்க முடியும். என்னைப்போல் மக்களும் மாற்றம் வேண்டும் என்று பதட்டத்துடன் இருக்கிறார்கள்.

    மதுரைக்கு பிரதமர் வந்தபோது ‘மோடி கோ-பேக்’ என்ற வாசகம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி உள்ளது. இது அரசியலுக்காக நடக்கிறது. அரசியல் தீண்டத்தகாதது அல்ல. அரசியலில் இழந்த மாண்பை மீட்க வேண்டும்.

    அனைவரும் சேர்ந்துதான் மது விலக்கை கொண்டு வர முடியும். அரசியல் காரணங்களுக்காக ஏழைகள் ஏழைகளாக உள்ளனர்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி வைப்பதா? அல்லது தனித்து போட்டியிடுவதா? என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #kamal #makkalneethimaiyam 

    விருத்தாசலத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய கமல்ஹாசன், என் உயிர் இருக்கும் வரை மக்களுக்காக வாழ்வேன் என்றார். #KamalHaasan #makkalneethimaiyam

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. கூட்டத்தில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    வாக்கு என்ற கூர்மையான ஆயுதத்தை சரியாகப் பயன்படுத்துங்கள். ஊழல் நிறைந்த சூழலை சுத்தப்படுத்துங்கள். அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும். நாங்களும் வராவிட்டால் குப்பை கூடிவிடும். தெருவானது குப்பைத் தொட்டியாக மாறிவிடும்.

    நான் தாமதமாக வந்தாலும் என் உயிர் இருக்கும் வரை உங்களுக்காகவே வாழ்வேன். என் பணம் புகழ் அனைத்துக்கும் நீங்கள்தான் பங்காளிகள். உங்கள் பணத்தில்தான் கஜானா நிரம்புகிறது என்பதை மறவாதீர்கள். பெருமுதலாளிகள் கோடீஸ்வரர்கள் வரி கட்டுவது கிடையாது.

    அவர்கள் கஜானாவை காலி செய்வதும், அதை நீங்கள் நிரப்புவதுமாக உள்ளது. உங்களுக்கு மீன் குழம்பு வைத்து கொடுக்க நான் வரவில்லை. தூண்டில் வாங்கித் தரவே விரும்புகிறேன்.

    நான் தமிழகத்தை சொர்க்கமாக மாற்ற வழி தேடுகிறேன். இது நான் சாவதுக்கு முன் நடக்க வேண்டும்.

    பதவி நிரந்தரம் இல்லை. அதே போல உயிரும் நிரந்தரம் இல்லை. அனைவரும் ஓட்டு போட வேண்டும். இங்கு கூடியிருக்கும் கூட்டம் எனக்கான கூட்டம் என நம்புகிறேன். இந்த கூட்டம் தமிழகத்தை சீர்திருத்த போதாது. இன்னும் பெருமளவு கூட வேண்டும்.

    ஓட்டுக்காக பணம் வாங்காதீர்கள். நேர்மையாக இருந்தால் ஓட்டு போடுங்கள். உங்கள் உதவி இல்லாமல் எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாது.

    விருத்தாசலம் மணிமுத்தாற்றில் கழிவு நீர் சாக்கடை கலந்துள்ளது. நாம் சாப்பிடும் தட்டில் சாக்கடை உள்ளது. அதை சுத்தப்படுத்த அரசு தவறிவிட்டது. அதில் நமது தவறு உள்ளது. ஆறு ஓட வேண்டும். வாழ்க்கையும் அப்படித்தான். செய்யாமல் விட்டதை பட்டியலிட்டு செய்து விட்டாலே நாடு முன்னேறும்.

    ஆறும், நீரும் பெருக வேண்டும். தாகம், பஞ்சம் பெருகக்கூடாது. அதனால்தான் நாங்கள் வந்திருக்கிறோம். ஓட்டுக்கு கொடுக்கும் பணம் உங்கள் பணம். உங்கள் பையில் இருந்து எடுத்துதான் கொடுக்கிறார்கள்.

    நான் தமிழகம் முழுவதும் ‘சேஞ்ச்’ வேண்டும் என்று கூறினேன். ஆனால் அதனை சில்லறை என நினைத்து விடாதீர்கள். தலைவரை தேடாதீர்கள். நீங்கள்தான் தலைமை ஏற்க வேண்டும். மாற்றத்தை கொண்டுவரவேண்டும். மாற்றத்தை கொண்டு வருவது நான் என்பதை விட நாம் என்பதை நம்புங்கள்.

    மாற்றத்தை உரு வாக்க நினைக்கும் என் வாழ்க்கையை அர்த்தமுள்ள தாக்குங்கள். நான் சினிமாவில் சுமாராக நடிப்பேன். எனக்கு ஏதேனும் வேலை கிடைக்கும். ஆனால் நான் உங்களுக்காக வந்துள்ளேன். உங்கள் வாழ்க்கை நன்றாக அமைய என்னால் ஆனதை செய்கிறேன். நான் உயிரை தரவில்லை. உழைப்பையும், என் உணர்வையும், எனது நேர்மையையும் தருகிறேன். அதுவே எனது கடமை. உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். அனைவரும் வாக்களியுங்கள். உங்கள் பலத்தை காட்டுங்கள். அவ்வாறு செய்தால் எந்த கோட்டையிலும் ஏறிவிடலாம்.

    பிளாஸ்டிக்கை ஒழிக்க அரசு சட்டம் கொண்டு வந்தது. அதனை நாம்தான் செயல்படுத்தி உள்ளோம். அதனால் விழிப்புடன் இருங்கள். உங்களுக்கு பிடித்த கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள். நாங்கள் உங்களுக்கு பிடித்தது போல மாறுவது எங்களது கடமை ஆகும்.

    தமிழ் நாட்டில் முன்பு ஊழல் என்பது அதிக அளவுக்கு கிடையாது. வடமாநிலத்தவர்களை நாம் பார்த்து கேலி செய்தோம். ஆனால் இன்று பீகாரில் இருப்பவர்கள் நம்மை பார்த்து கேலி செய்கிறார்கள். அதனால் தமிழகத்தை மீண்டும் சொர்க்கமாக மாற்ற வேண்டும். உங்கள் நலன்தான் கொள்கை. அதனை கூறமுடியாது. செய்து காட்டினால்தான் புரியும். நம் கொள்கையை சொல்லுங்கள் எனக் கூறுகிறார்கள். சொல்லி விட்டால் காப்பி அடித்து விடுகிறார்கள்.

    கிராமசபை கூட்டம் தான் நம் பலம் என கூறினேன். ஆனால் அதனையும் காப்பி அடித்து விட்டார்கள். காப்பியடித்து என் வாலில் நெருப்பு வைக்காதீர்கள். அது உங்கள் கோட்டையை எரித்து விடும்.

    இவ்வாறு அவர் பேசினார். #KamalHaasan #makkalneethimaiyam 

    கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் 18 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். #JactoGeo
    கடலூர்:

    ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 9- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

    கடலூர் மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் பெருஞ்சித்திரன்(வயது 55), விருத்தாசலம் ஒன்றிய செயலாளர் அறிவழகன்(35), அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பின் நல்லூர் ஒன்றிய செய்தி தொடர்பாளர் சாஸ்தா(38), தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட பொருளாளர் தாமோதரன்(38), அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன்(52), தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் கார்த்திகேயன்(44) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களை திருப்பாதிரிப்புலியூர் போலீசார் கடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதேபோல் விழுப்புரம் மாவட்டத்திலும் போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் போராட்டத்தை முன்னின்று நடத்தியதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பு நிர்வாகிகள் சண்முகசாமி, ஏழுமலை உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். #JactoGeo
    ×