என் மலர்
கடலூர்
அமெரிக்க நாட்டின் வடக்கு கரோலினா சான்போர்டு நகரை சேர்ந்தவர் பிரட்டி (வயது 22). இவரும், இவருடைய தந்தை பல்டன், தாய் பர்டிஷியா ஆகியோர் தமிழ் கலாசாரத்தை பற்றி தெரிந்து கொண்டு, அது தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்தாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்தனர். அவர்கள் அங்கு ஒரு வீட்டில் தங்கி இருந்து தமிழ் கலாசாரம் பற்றி ஆராய்ந்து வருகின்றனர்.
அந்த சமயத்தில் பிரட்டி, முகநூலில் தமிழ் கலாசாரம் பற்றி தெரிவிக்குமாறு கூறி இருந்தார். இதை பார்த்ததும் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள அகரம்சீகூர் கிராமத்தை சேர்ந்த என்ஜினீயர் சூரியபிரகாஷ்(25), தமிழ் கலாசாரம் பற்றிய தகவல் மற்றும் புகைப்படங்கள், வீடியோக்களை முகநூலில் பதிவு செய்தார். இவ்வாறு இருவரும் முகநூல் மூலமே தகவலை பரிமாறிக்கொண்டனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் தங்களது செல்போன் எண்ணை பரிமாறி, பேசி வந்தனர்.
இந்த நிலையில் இருவரும் பெற்றோரின் சம்மதத்தின் பேரில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி இருவரும், தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தனர். இவர்களது காதலுக்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பிரட்டி, சூரியபிரகாஷ் நிச்சயதார்த்த நிகழ்ச்சி திட்டக்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று காலை நடந்தது. இதில் இருவரும் மோதிரம் மற்றும் மாலை மாற்றிக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பிரட்டியின் பெற்றோர் மற்றும் சூரியபிரகாஷ் குடும்பத்தினர், உறவினர்கள் கலந்து கொண்டனர்.

இன்று வாக்குகள் எண்ணியதும் தொடக்கத்தில் திருமாவளவன் பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்டுள்ள அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் முன்னிலையை பெற்றுள்ளார்.
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள நேமம் கிராமத்தை சேர்ந்தவர் தில்லை காந்தி (வயது 30). இவர் அப்பகுதியில் உள்ள மணிமுத்தாற்றில் மணல் கடத்தியதாக கருவேப்பிலங்குறிச்சி போலீசாரால் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த நேமம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று நள்ளிரவு கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தில்லை காந்தியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறி போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியதாக தான் தில்லைகாந்தியை பிடித்து வந்து வழக்குப் பதிவு செய்து கைது செய்ய உள்ளோம். அவரை விட முடியாது என்று போலீசார் கூறினர். இதனால் பொதுமக்கள் நள்ளிரவு 12 மணி வரை போலீஸ் நிலையத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீது ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் நள்ளிரவு 1 மணிக்கு அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்கள் நள்ளிரவில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பண்ருட்டி எல்.என்.புரம் பாரதி நகரில் ஒரு சரக்கு வாகனம் வெகுநேரமாக நிற்பதாகவும், அதில் மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் இருப்பதாகவும் பண்ருட்டி போலீஸ் நிலையத்துக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் சரக்கு வாகனத்தில் இருந்த 2 பேர் இறங்கி, தப்பி ஓடினர். உடனே போலீசார் விரட்டிச்சென்று ஒருவரை பிடித்தனர். மற்றொருவர் ஓடிவிட்டார். பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில், விழுப்புரம் அருகே உள்ள மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கபிலன்(வயது 32) என்பதும், தப்பி ஓடியவர் மடுகரையை சேர்ந்த கிருஷ்ணன் மகன் குமார்(23) என்பதும் தெரியவந்தது.
பின்னர் அந்த சரக்கு வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். அதில் புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் விற்பனை செய்யக்கூடிய 500 மதுபாட்டில்கள் மற்றும் 60 லிட்டர் சாராயம் இருந்தது. இது தொடர்பாக கபிலனிடம் நடத்திய விசாரணையில், புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் சாராயத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கபிலனை போலீசார் கைது செய்தனர். மேலும் மதுபாட்டில்கள், சாராயம், இவற்றை கடத்த பயன்படுத்திய சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் என்.ஜீ.வி.நகர் பகுதியை சேர்ந்தவர் மணிமேகலை(வயது 34). இவர் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. மணிமேகலை அவரது கணவரை விவாகரத்து செய்துவிட்டு பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் மணிமேகலை நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு சென்றார். பின்னர் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் நேற்று இரவு மணிமேகலை தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மணிமேகலை மயங்கி விழுந்தார்.
உடனே அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக வடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு இருந்த டாக்டர்கள் மணிமேகலையை பரிசோதனை செய்தபோது அவர் விஷம் குடித்திருப்பது தெரியவந்தது. அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மணிமேகலைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து புகாரின்பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மணிமேகலை விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்திருப்பது தெரியவந்தது.
அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தாரா? அல்லது பணி சுமை காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெய்வேலி தெர்மல் இன்ஸ்பெக்டர் ஜெய்ஹிந்த் தேவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்தநிலையில் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி மேகலையும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நெய்வேலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலம் அடுத்த விளாங்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்டது படுகளாநத்தம் கிராமம். இங்கு 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் மினி குடிநீர் தொட்டி ஆகியன மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் இருந்து இந்த தொட்டிகளில் நீரேற்ற பயன்படும் மின்மோட்டார் பழுதடைந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, இந்த கிராமத்திற்கு கடந்த சில வாரங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
எனவே அந்த பகுதி மக்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்று விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வருகிறார்கள். கிராமத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து ஒன்றிய அதிகாரிகளிடம் தெரிவித்தும், இதுவரையில் அவர்கள் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே காலி குடங்களுடன் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊராட்சி மற்றும் ஒன்றிய அதிகாரிகளை கண்டித்து அவர்கள் கண்டன கோஷங் களை எழுப்பினர். இவர்களது போராட்டம் பற்றி அறிந்தும், அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை. இதனால் சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், தாங்களாகவே அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மேலும் இனியும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்றால், விரைவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கிராம மக்கள் தரப்பில் தெரிவித்தனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் நீதி மய்யம் கடலூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சரவணன், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் முகமது ரபிக் மற்றும் நிர்வாகிகள் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 13-ந்தேதி பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை மிரட்டும் வகையில் அவரது நாக்கை அறுப்பேன் என்றும் மற்றும் மக்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் மக்கள் கமல்ஹாசனின் நாக்கை அறுப்பார்கள் எனவும் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த செயல் ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும். எனவே அமைச்சர் வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம்-விருத்தாசலம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் பாரி (வயது 55), வக்கீல். இவருடைய மனைவி இந்திரா (58). இவர் அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
இவர்களுடன் இந்திராவின் தாய் பாப்பாத்தியும் வசித்து வருகிறார். இந்த நிலையில் பாப்பாத்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு பாரியும், அவரது மனைவியும் நேற்று காலை காரில் அழைத்து சென்றனர்.
இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர் பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.1 லட்சம், 3 பவுன் நகை மற்றும் 200 கிராம் வெள்ளி காசுகளையும் மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று மாலை பாரியும், அவரது மனைவி இந்திராவும் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பாரி, வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிகிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை-பணம் கொள்ளைபோய் இருந்தன.
இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். ஆனால் மர்ம மனிதர்கள் அவர்களது முகம் பதிவாக வண்ணம் கேமராக்களை சுவற்றின் பக்கம் திருப்பிவைத்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். கேமராவில் காட்சிகள் பதிவாகும் ஹார்ட்டிஸ்க்குகளையும் எடுத்து சென்றுவிட்டனர்.
மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்து சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சி கமிஷனராக இருப்பவர் சுரேந்தர்ஷா. இவரது வீடு சிதம்பரம் கனகசபை நகரில் உள்ளது.
நேற்று இரவு சுரேந்தர்ஷா மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் மர்ம மணிதர்கள் சிலர் அங்கு வந்தனர். பின்பு அவர்கள் வீட்டின் மீது சோடாபாட்டில்களை சரமாரியாக வீசினர். இதில் சோடாபாட்டில்கள் சுவரில் பட்டு உடைந்து நொறுங்கின.
இந்த சத்தம்கேட்டு நகராட்சி கமிஷனர் சுரேந்தர்ஷா கதவை திறந்து வெளியேவந்து பார்த்தார். உடனே அங்கு நின்ற மர்ம மனிதர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து சிதம்பரம் நகர போலீசில் சுரேந்தர்ஷா புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குபதிவு செய்து நகராட்சி கமிஷனர் வீட்டில் சோடா பாட்டில்கள் வீசிய மர்ம மனிதர்கள் யார்? எதற்காக வீசினர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.






