search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசாரை கண்டித்து, 5 குழந்தைகளுடன் தீக்குளிக்க வந்த பெண்
    X

    போலீசாரை கண்டித்து, 5 குழந்தைகளுடன் தீக்குளிக்க வந்த பெண்

    போலீசாரை கண்டித்து 5 குழந்தைகளுடன் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க வந்த பெண்ணால் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி அருகே உள்ள சிறுபாளையூர் காந்தி நகரை சேர்ந்தவர் சுரேஷ். தொழிலாளி. இவருடைய மனைவி சந்தியா(வயது 27). இவர் நேற்று தன்னுடைய 4 பெண் குழந்தைகள், 6 மாத ஆண் குழந்தையுடன் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்துக்கு வந்தார். அப்போது அவர் கொண்டு வந்த பையை அங்கிருந்த போலீசார் சோதனையிட்டனர். சோதனையில், அந்த பையில் மண்எண்ணெய் பாட்டில் இருந்தது. உடன் அந்த பாட்டிலை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர், தனக்கு புதுச்சத்திரம் போலீசார் ஒரு பிரச்சினை தொடர்பாக தொல்லை கொடுப்பதாகவும், இது பற்றி கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து அவரை போலீசார் கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல அனுமதித்தனர். பின்னர் அவர் கலெக்டர் அலுவலகத்தில் மனுவை பதிவு செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி எங்கள் ஊரை சேர்ந்த ஒருவர் மதுபோதையில், எனது கணவரிடம் புகையிலை பொருள் கேட்டார். அதற்கு எனது கணவர் இல்லை என்று கூறியதால், அவரை அந்த நபர் அடிக்க வந்தார். இதில் தவறி கீழே விழுந்த அவருக்கு காயம் ஏற்பட்டது. ஆனால் அவர் எனது கணவர் அடித்து விட்டதாக கூறி புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே எனது கணவர் வெளியூருக்கு வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் புதுச்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் எனது கணவரை தேடி வீட்டுக்கு வந்தனர்.

    ஆனால் அவர் வீட்டில் இல்லாததால் என்னை திட்டி, உங்களை குடும்பத்தோடு சிறையில் அடைத்து விடுவேன் என்று மிரட்டினர். அதன்பிறகு எனது கணவரை வரவழைத்து போலீஸ் நிலையத்துக்கு சென்றேன். அங்கு எனது கணவர் மீது புகார் கொடுத்தவருக்கு ரூ.80 ஆயிரத்தை கொடுக்குமாறு போலீசார் கூறினர்.

    இதற்கு மறுத்ததால் அந்த நபர், போலீசாருடன் தினமும் வீட்டிற்கு வந்து திட்டி, மிரட்டுகிறார். தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதால் நாங்கள் உயிரை விடுவதை தவிர வேறு வழியில்லை. ஆகவே அந்த நபர் மற்றும் போலீசார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×