என் மலர்
கடலூர்
கடலூர்:
தே.மு.திக. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் கோவிலுக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் 3 அணி அமைய வாய்ப்பு உள்ளதா ? என விஜய்பிரபாகரிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு விஜய்பிரபாகர், தமிழ்நாட்டில் தேர்தல் வரும்போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். மேலும் தே.மு.தி.க. பலமுறை தனித்து போட்டியிட்டு தேர்தல் களத்தை சந்தித்து உள்ளது.
ஆகையால் பொறுத்திருந்து பாருங்கள் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் இன்றுவரை நாங்கள் தற்போது அ.தி.மு.க கூட்டணியில் தான் உள்ளோம். மேலும் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற பிறகு தேர்தல் நிலை குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெளிவாக அறிவிப்பார்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் எந்த எந்த அணி கூட்டணி அமைக்க போகிறார்கள், யார் யார் எத்தனை சீட்டு ஜெயிக்க போகிறார்கள் எல்லாம் ஒரு புதிராகத்தான் உள்ளது. ஏனென்றால் தற்போது நடக்க உள்ள தேர்தல் எல்லோருக்கும் முதல் தேர்தலாகும்.
ஏனென்றால் கருணாநிதி இல்லாமல் ஸ்டாலின், ஜெயலலிதா இல்லாமல் அ.தி.மு.க. தேர்தல் களத்தை சந்திக்க உள்ளனர். இதனால் எல்லோருக்கும் இந்த தேர்தல் புது தேர்தல் ஆகும்.இதனால் நிச்சயமாக இந்த தேர்தல் மாற்றத்தை மக்களுக்கான நல்ல ஒரு தமிழ் நாட்டை உருவாக்க நல்ல வெற்றியை நிச்சயமாக கடவுள் தருவார் என நம்புகிறேன்.
அ.தி.மு.க. ஆட்சி பற்றி எதிர்க்கட்சித் தலைவர் என்பதால் மு.க. ஸ்டாலின் எதிரான கருத்தை தான் பதிவு செய்து வருவார். எங்களைப் பொறுத்தவரைக்கும் இந்த ஆட்சி நிறையும், குறையும் நிறைந்த ஆட்சியாக நாங்கள் பார்க்கிறோம். ஏனென்றால் நல்ல விஷயம் அதிமுக பல நல்லது செய்து உள்ளனர். இந்த கொரோனா காலத்தில் நல்ல நிர்வாகத் திறனை வெளிப்படுத்தி மக்களுக்கு தேவையான பல பணிகள் செய்து உள்ளனர். இதேபோல் அவர்கள் செய்ய வேண்டிய நிறைய விஷயங்கள் செய்யாமல் உள்ளனர். அதனை நாங்கள் சுட்டிக் காட்டுவோம்.
ஏனென்றால் மழை காலத்தில் தற்போது சாலை சரியாக இல்லாமல் குண்டு குழியுமாக காட்சி அளித்து உள்ளது. மேலும் நீர்நிலைகள் சரியான முறையில் தூர்வாரி தண்ணீரை தேக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதன் மூலம் கோடை காலத்தில் குடிநீர் மற்றும் விவசாயிகளுக்கு தண்ணீர் சரியான முறையில் சேமிக்க முடியாமல் உள்ளது. மேலும் நிர்வாக ரீதியாக செய்ய வேண்டியது பலது உள்ளது. இதனால் அ.தி.மு.க. ஆட்சி நிறையும் குறையும் சரி சமமாக உள்ளது.
ஆனால் 2021 தேர்தல் மக்களாட்சியாக தமிழகத்திற்கு விடிவுகாலம் வரக்கூடிய ஆட்சியாக அமையும். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் 10 வருடத்திற்கு முன்பு 60 வயதாகும். தற்போது இவருக்கு 70 வயது ஆகும். ஆகையால் யாராக இருந்தாலும் வயது கூடினால் உடல் நிலையில் மாற்றம் வரக்கூடும். ஆகையால் தேர்தல் நேரத்தில் விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் வருவார். தற்போது நல்ல உடல் நலமுடன் உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூரை சேர்ந்தவர் செல்வமுருகன் (வயது 39). முந்திரி தொழில் செய்து வந்தார். இவர் மனைவி பிரேமா மற்றும் 2 குழந்தைகளுடன் நெய்வேலி வடக்குத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த 30-ந்தேதி திருட்டு வழக்கு தொடர்பாக செல்வமுருகனை நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி விருத்தாசலம் கிளை சிறையில் அடைத்தனர்.
கடந்த 4-ந்தேதி இரவு உடல் நிலை பாதிக்கப்பட்ட செல்வமுருகன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் அடித்து துன்புறுத்தியதால் தான் அவர் இறந்து விட்டதாகவும், அதற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்று குடும்பத்தினர், உறவினர்கள் மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் செல்வமுருகனின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் செல்வமுருகன் சாவு குறித்து விருத்தாசலம் கிளை சிறையில் அதிகாரிகள், காவலர்கள், கைதிகளிடம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் விசாரணை நடத்தினார். விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் சந்தேக மரணம் என்றும் கூறி பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
தொடர்ந்து கடலூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையிலான போலீசார் விசாரணையை தொடங்கினர். விருத்தாசலம் கிளை சிறைக்கு சென்று, அங்கிருந்த அதிகாரிகள், காவலர்கள், கைதிகளிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
நெய்வேலி டவுன்ஷிப் போலீசாரிடம் விசாரிக்க சென்றபோது, அங்கு ஏற்கனவே நீதிபதி விசாரணை நடத்தியதால், அவர்களை நேரில் ஆஜராகுமாறு சம்மன் கொடுத்து விட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் வந்தனர். அதன்படி சம்பவத்தின் போது பணியில் இருந்த நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் 6 பேர் நேற்று கடலூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தில் ஆஜராகினர். தொடர்ந்து அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையிலான போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். தனித்தனியாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் தான் உண்மை நிலவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 14-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடலூர் நகரில் உள்ள ஜவுளிக்கடைகளில் துணிகளை வாங்க மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் பலர் தீபாவளியையொட்டி கடலூர் உள்ள சாலையோரம் தள்ளுவண்டி கடைகளை வைத்து துணி வியாபாரம் செய்ய தொடங்கி உள்ளனர். இதனால் கடலூர் லாரன்ஸ் சாலை, இம்பீரியல் சாலை, மஞ்சக்குப்பம் நேதாஜி சாலைகளில் மாலை வேளையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் வியாபாரிகள் பட்டாசு கடைகள் வைக்கும் பணியிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக் பாக்கெட், திருட்டு போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு, கடலூர் நகரில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க காவல்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி நகரில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதேபோல் கடலூர் முதுநகரிலும் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த நோய் பரவலுக்கு மத்தியிலும் பொருளாதார, வாழ்வாதார நடவடிக்கைகளை கவனிக்க வேண்டிய அவசியம் எழுந்ததால் மத்திய அரசு, 5 கட்டங்களாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து நடைமுறைப்படுத்தியுள்ளது. மேலும் தமிழக அரசும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.
இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வின்போது, வருகிற 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் சினிமா தியேட்டர்கள் இயங்கலாம் என்றும், தியேட்டர்கள் 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும், ஒரு இருக்கை விட்டு அடுத்த இருக்கையில் பார்வையாளர்கள் அமர வேண்டும், அவர்கள் காட்சியின் இறுதி வரை முக கவசம் அணிந்திருக்க வேண்டும், ஒவ்வொரு காட்சி முடியும்போதும் அரங்குக்கு உள்ளேயும், கழிவறையிலும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்று பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.
அதன்படி கடந்த 7 மாதங்களாக மூடிக்கிடந்த சினிமா தியேட்டர்கள் வருகிற 10-ந் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது. கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி சினிமா தியேட்டர்களை சுத்தம் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. தியேட்டரில் உள்ள பார்வையாளர்கள் அமரும் இடம், டிக்கெட் பெறும் மையம், வாகனங்கள் நிறுத்துமிடம், தின்பண்டங்கள் வாங்கும் இடம், கழிவறை உள்ளிட்ட அனைத்து இடங்களையும் சுத்தம் செய்து, கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.






