search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்வமுருகன்
    X
    செல்வமுருகன்

    சிறையில் கைதி மரணம்- நெய்வேலி போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை

    விருத்தாசலம் சிறையில் கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நெய்வேலி போலீசாரிடம் கடலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூரை சேர்ந்தவர் செல்வமுருகன் (வயது 39). முந்திரி தொழில் செய்து வந்தார். இவர் மனைவி பிரேமா மற்றும் 2 குழந்தைகளுடன் நெய்வேலி வடக்குத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த 30-ந்தேதி திருட்டு வழக்கு தொடர்பாக செல்வமுருகனை நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி விருத்தாசலம் கிளை சிறையில் அடைத்தனர்.

    கடந்த 4-ந்தேதி இரவு உடல் நிலை பாதிக்கப்பட்ட செல்வமுருகன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் அடித்து துன்புறுத்தியதால் தான் அவர் இறந்து விட்டதாகவும், அதற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்று குடும்பத்தினர், உறவினர்கள் மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் செல்வமுருகனின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் செல்வமுருகன் சாவு குறித்து விருத்தாசலம் கிளை சிறையில் அதிகாரிகள், காவலர்கள், கைதிகளிடம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் விசாரணை நடத்தினார். விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் சந்தேக மரணம் என்றும் கூறி பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

    தொடர்ந்து கடலூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையிலான போலீசார் விசாரணையை தொடங்கினர். விருத்தாசலம் கிளை சிறைக்கு சென்று, அங்கிருந்த அதிகாரிகள், காவலர்கள், கைதிகளிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

    நெய்வேலி டவுன்ஷிப் போலீசாரிடம் விசாரிக்க சென்றபோது, அங்கு ஏற்கனவே நீதிபதி விசாரணை நடத்தியதால், அவர்களை நேரில் ஆஜராகுமாறு சம்மன் கொடுத்து விட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் வந்தனர். அதன்படி சம்பவத்தின் போது பணியில் இருந்த நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் 6 பேர் நேற்று கடலூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தில் ஆஜராகினர். தொடர்ந்து அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையிலான போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். தனித்தனியாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் தான் உண்மை நிலவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×