என் மலர்
கடலூர்
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூரை சேர்ந்தவர் செல்வ முருகன் (வயது 39). முந்திரி வியாபாரி. இவர் ஒரு திருட்டு வழக்கில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைதான அவர் விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 4-ந் தேதி செல்வமுருகன் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து செல்வமுருகனின் மனைவி பிரேமா தனது கணவர் சாவில் மர்மம் இருப்பதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வருகிறார்.
எனவே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. சென்னையில் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.எஸ்.பி. குணவர்மன் தலைமையிலான போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனாலும் விசாரணை முறையாக நடைபெற வில்லை என்று பிரேமா தனது கணவரின் உடலை வாங்கமறுத்து உறவினர்களுடன் போராட்டம் நடத்தி வருகிறார்.
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விருத்தாசலம் கிளை சிறையில் உள்ள காவலர்கள், விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், ஊழியர்கள், நெய்வேலி டவுன்ஷிப் போலீசாரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதற்கிடையே நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் இன்ஸ் பெக்டர் ஆறுமுகம் அதிரடியாக கடலூர் முதுநகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக குறிஞ்சிப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் நெய்வேலி டவுன்ஷிப்புக்கு மாற்றப்பட்டார்.
இதற்கான உத்தரவை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. எழிலரசன் பிறப்பித்துள்ளார்.
கடலூர் மத்திய சிறையில் 2-ம் நிலை காவலர் சுரேஷ் குமார். இவர் பணிமுடிந்து வெளியே வந்தபோது கைதிகள் அறை வளாகத்துக்குள் 5 கிராம் கஞ்சா பொட்டலத்தை வீசியதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து அவரிடம் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் சிறுமி பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் மந்தாரகுப்பத்தை சேர்ந்த கைதி ஒருவருக்கு சுரேஷ்குமார் கஞ்சா சப்ளை செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சுரேஷ் குமாரை சிறை கண்காணிப்பாளர் நிகிலாநாகேந்திரன் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
கடலூர் முதுநகர் சுண்ணாம்புகார தெருவை சேர்ந்தவர் அன்பு மனைவி தமிழரசி (வயது 50). இவர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், கடலூர் பழைய வண்டிப்பாளையத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஊழியர் விஜயராகவன் (40) என்பவர், தனது அக்காள் சங்கரி என்பவருடன் சேர்ந்து 400, 700, 1000 ரூபாய் என 3 வகையான தீபாவளி பண்டு சீட்டுகள் 12 மாத தவணையில் பிடித்து வருவதாகவும், அதில் பணம் கட்டினால் சீட்டுக்கு தகுந்தாற்போல் 2 மற்றும் 4 கிராம் தங்க நாணயம், 19 வகையான மளிகை பொருட்கள் தருவதாக ஆசைவார்த்தை கூறினார்.
இதை நம்பிய நானும், கடலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த சுமார் 384 பேர் ரூ.34 லட்சத்து 24 ஆயிரத்து 600-ஐ விஜயராகவனிடம் கொடுத்தனர். பணத்தை பெற்றுக்கொண்ட அவர், தற்போது நகையை கொடுக்கவில்லை. மேலும் நாங்கள் கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை.
இதேபோல் கடலூர் வன்னியர் பாளையத்தை சேர்ந்த கோமதி என்பவர் அதே பகுதியை சேர்ந்த 94 பேரிடம் ரூ.17 லட்சம் பெற்று தீபாவளி பண்டு சீட்டுக்காக விஜயராகவனிடம் கொடுத்துள்ளார். அவர்களையும் விஜயராகவன் ஏமாற்றி விட்டார். நாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டால், அவர் தனது அக்காள் சங்கரியுடன் சேர்ந்து கொண்டு எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், அதன் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேசன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் துர்கா, குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் லிடியா செல்வி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் விஜயராகவன் தனது அக்காள் சங்கரியுடன் சேர்ந்து தீபாவளி பண்டு சீட்டு நடத்தி தமிழரசி, கோமதி உள்ளிட்டோரிடம் ரூ.51 லட்சத்து 24 ஆயிரம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயராகவனை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள், 2 செல்போன்கள் மற்றும் ரூ.35 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 17-ந்தேதி முதல் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. இந்நிலையில் சமீபத்தில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து, திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்தது. இதையடுத்து கடந்த 7 மாதங்களுக்கு பிறகு நேற்று தமிழகம் முழுவதும் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன.
இதன்படி கடலூர் மாவட்டத்திலும் அரசு வழிகாட்டுதல் படி நேற்று சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன. இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பே தியேட்டருக்குள் கிருமி நாசினி தெளித்தல், குடிநீர் வசதி, கழிவறையை சுத்தம் செய்தல், பழுதான இருக்கைகளை சரி செய்தல் போன்ற பணிகளை ஊழியர்கள் செய்து, தியேட்டரை தயார் நிலையில் வைத்திருந்தனர்.
மேலும் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளதால், 2 இருக்கைகளுக்கு நடுவில் உள்ள இருக்கையில் ரிப்பன் கட்டி தடுத்து வைத்திருந்தனர். கடலூரில் 4 தியேட்டர்கள் உள்ளன. இவற்றில் 3 தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டன. இதில் கிருஷ்ணாலயா தியேட்டரில் தீபாவளி பண்டிகை வரை இலவச காட்சி அறிவிக்கப்பட்டதால், ரசிகர்கள் காலை 10 மணிக்கே தியேட்டருக்கு வரத்தொடங்கினர்.
அவர்களுக்கு வெப்ப நிலை சோதனை செய்து, தியேட்டருக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். முக கவசம் அணிந்து வந்தவர்களை மட்டுமே உள்ளே செல்ல அனுமதித்தனர். முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கப்பட்டது. டிக்கெட் கவுண்டரில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டம் போடப்பட்டு இருந்தது. பின்னர் காலை 11 மணிக்கு படம் திரையிடப்பட்டது. இதை ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.
ஆனால் மாவட்டத்தில் உள்ள 22 சினிமா தியேட்டர்களில் பெரும்பாலான தியேட்டர்கள் நேற்று திறக்கப்படவில்லை. ஒரு சில தியேட்டர்கள் மட்டுமே திறக்கப்பட்டன. புதிய படம் திரையிடப்படாததாலும், பராமரிப்பு பணிகள் காரணமாகவும் சில இடங்களில் சினிமா தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. திறந்த தியேட்டர்களிலும் முதல் நாள் என்பதால் கூட்டம் குறைவாக இருந்தது. தீபாவளி பண்டிகைக்குள் அனைத்து தியேட்டர்களும் திறக்கப்படும் என்று திரையரங்க உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.
கடலூர் பழைய கலெக்டர் அலுவலகத்தில் அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் பழங்கால நாணயங்கள், பழமை வாய்ந்த சாமி சிலைகள், கல்வெட்டுகள், இசைக்கருவிகள் போன்ற பல்வேறு வகையான பொருட்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
இதனை பார்வையிட குழந்தைகளுக்கு ரூ.3, பெரியவர்களுக்கு ரூ.5, வெளி நாட்டை சேர்ந்தவர்கள் பார்வையிட ரூ.50 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகள் இலவசமாக பார்வையிடலாம். தினந்தோறும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிட அனுமதி உண்டு. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அரசு அருங்காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டு இருந்தது.
தற்போது அரசு புதிய தளர்வுகளை அறிவித்ததில், அருங்காட்சியகம் செயல்பட அனுமதி வழங்கியது. அதன்படி நேற்று முதல் கடலூர் அரசு அருங்காட்சியகம் செயல்பட தொடங்கியது. ஆனால் முதல் நாள் என்பதால் பார்வையாளர்கள் வரவில்லை. முன்னதாக அருங்காட்சியக ஊழியர்கள், அங்குள்ள சிலைகள், பழங்கால பொருட்களை பாதுகாப்புடன் அடுக்கி வைத்திருந்தனர். பார்வையாளர்கள் வசதிக்காக சானிடைசர், வெப்ப நிலையை அறியும் வகையில் தெர்மல் ஸ்கேனரும் தயார் நிலையில் வைத்திருந்ததை காண முடிந்தது.






