என் மலர்
கடலூர்
நெய்வேலி:
சேலம் அருகே உள்ள கெங்கைவல்லி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 52). இவர் நெய்வேலி புதுநகர் 29-வது வட்டம் பகுதியில் வசித்து, 2-வது அனல்மின் நிலையம் 6-வது யூனிட்டில் வேலைபார்த்து வந்தார்.
கடந்த 16-ந் தேதி இரவு 2-வது அனல் மின்நிலைய சுரங்கத்தில் இருந்து நிலக்கரி எடுத்து வரும் கன்வேயர் பெல்ட்டு பகுதியில் சக்திவேல் பணியில் இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சக்திவேல் கன்வேயர் பெல்டில் சிக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக என்.எல்.சி. உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கண்வெயர் பெல்டில் நிலக்கரியை சுமந்துசெல்லும் இரும்பு ரோலர்களை சரிபார்த்தபோது, சக்திவேல் இதில் சிக்கி இறந்ததாக தெரியவந்தது.
இதுதொடர்பாக 2-ம் அனல் மின்நிலைய பாய்லர் பிரிவு துணைபொதுமேலாளர் ராமலிங்கம், துணை முதன்மை பொறியாளர் எழிலரசன் ஆகியோரை என்.எல்.சி. நிர்வாகம் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் உள்ள சில மருந்துக்கடைகளில், சிலர் கிளீனிக் அமைத்து, எம்.பி.பி.எஸ். படிக்காமலேயே பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வருவதாக சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக்கிற்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சிதம்பரம் நகர பகுதிகளில் உள்ள மருந்துக்கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது வடக்கு வடுக தெருவில் உள்ள ஒரு மருந்துக்கடையின் உள்பகுதியில் கிளீனிக் அமைத்து, பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சிதம்பரம் விபீஷ்ணபுரத்தை சேர்ந்த திருஞானம்(வயது 63) என்பதும், 10-ம் வகுப்பு படித்து விட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து எம்.பி.பி.எஸ். படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த திருஞானத்தை போலீசார் கைது செய்ததோடு, கிளீனிக்கில் சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் 10-ம் வகுப்பு படித்து விட்டு சிதம்பரம் வேங்கான் தெருவில் உள்ள ஒரு மருந்துக்கடையில் கிளீனிக் அமைத்து, பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த அதே பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு மகன் சங்கர்(44) என்பவரையும், சிதம்பரம் நகர போலீசார் கைது செய்தனர். மேலும் கிளீனிக்கில் சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சிதம்பரத்தில் எம்.பி.பி.எஸ். படிக்காமலேயே பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர்கள் 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம்புலியூரை சேர்ந்த முந்திரி வியாபாரியான செல்வ முருகனை ஒரு திருட்டு வழக்கில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் கைது செய்தனர். கைதான அவர் விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 4-ந் தேதி செல்வமுருகன் மர்மமான முறையில் இறந்தார்.
செல்வமுருகனின் மனைவி பிரேமா தனது கணவர் சாவில் மர்மம் இருப்பதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. சென்னையில் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.எஸ்.பி. குணவர்மன் தலைமையிலான போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் சிறையில் மரணம் அடைந்த செல்வமுருகன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். மேலும் சில வீடியோ காட்சிகளை வெளியிட்டார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சிறையில் மரணம் அடைந்த செல்வமுருகன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. ஆய்வாளர் பொய் வழக்கு பதிவு செய்ததற்கான ஆதார வீடியோ வெளியிட்டுள்ளேன்.
செல்வமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு முதல் நாளே நகை மீட்கப்பட்டுள்ளது. செல்வமுருகன் முந்திரி ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்து வந்தவர்.
செல்வமுருகன் முந்திரி ஏற்றுமதி, இறக்குமதி செய்ததற்கான ஆதாரங்கள் என சில ஆவணங்கள் வெளியிட்டுள்ளேன். முந்திரி ஏற்றுமதி இறக்குமதி செய்த செல்வமுருகன் மீது நகை பறிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். செல்வமுருகனை போலீசார் தாக்கியதற்கு நேரடி சாட்சிகள் இருக்கின்றனர்.
அக்டோபர் 29-ந்தேதி போலீசாருடன் செல்வமுருகன் இருந்ததற்கான ஆதார வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
வளர்ந்து வந்த தொழில் அதிபர் ஒருவரை வழிப்பறி திருடனாக சித்தரித்துள்ளனர். புகாருக்கு உள்ளான காவல் ஆய்வாளரை பணியிடமாற்றம் செய்தது மட்டும் போதாது. விருத்தாசலம் சிறையில் உயிரிழந்த செல்வமுருகன் மரணத்தில் மர்மம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே வேல்முருகன் வெளியிட்டுள்ள ஆதாரங்களை பெற்று அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
சேலம் அருகே உள்ள கெங்கைவல்லி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 52). இவர் நெய்வேலி புதுநகர் 29-வது வட்டம் பகுதியில் வசித்து, 2-வது அனல்மின் நிலையம் 6-வது யூனிட்டில் வேலைபார்த்து வந்தார்.
நேற்று இரவு 2-வது அனல் மின்நிலைய சுரங்கத்தில் இருந்து நிலக்கரி எடுத்து வரும் கன்வேயர் பெல்ட்டு பகுதியில் பணியில் இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சக்திவேல் கன்வேயர் பெல்டில் சிக்கினார். இதனால் அவர் கூச்சல்போட்டார். சத்தம்கேட்டு மற்ற ஊழியர்கள் ஓடிவந்தனர். ஆனால் அதற்குள் சக்திவேல் பெல்ட்டில் சிக்கி பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த என்.எல்.சி. உயர் அதிகாரிகளும் வந்தனர். இறந்து போன சக்திவேல் உடல் குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






