என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூர் கிருஷ்ணாலயா திரையரங்கில் சமூக இடைவெளிவிட்டு ரசிகர்கள் படம் பார்த்த போது எடுத்த படம்.
    X
    கடலூர் கிருஷ்ணாலயா திரையரங்கில் சமூக இடைவெளிவிட்டு ரசிகர்கள் படம் பார்த்த போது எடுத்த படம்.

    மாவட்டத்தில் சினிமா தியேட்டர்கள் திறப்பு - ரசிகர்கள் ஆர்வத்துடன் படம் பார்த்தனர்

    மாவட்டத்தில் சினிமா தியேட்டர்கள் நேற்று திறக்கப்பட்டன. இதில் ரசிகர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு படம் பார்த்தனர்.
    கடலூர்:

    கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 17-ந்தேதி முதல் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. இந்நிலையில் சமீபத்தில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து, திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்தது. இதையடுத்து கடந்த 7 மாதங்களுக்கு பிறகு நேற்று தமிழகம் முழுவதும் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன.

    இதன்படி கடலூர் மாவட்டத்திலும் அரசு வழிகாட்டுதல் படி நேற்று சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன. இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பே தியேட்டருக்குள் கிருமி நாசினி தெளித்தல், குடிநீர் வசதி, கழிவறையை சுத்தம் செய்தல், பழுதான இருக்கைகளை சரி செய்தல் போன்ற பணிகளை ஊழியர்கள் செய்து, தியேட்டரை தயார் நிலையில் வைத்திருந்தனர்.

    மேலும் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளதால், 2 இருக்கைகளுக்கு நடுவில் உள்ள இருக்கையில் ரிப்பன் கட்டி தடுத்து வைத்திருந்தனர். கடலூரில் 4 தியேட்டர்கள் உள்ளன. இவற்றில் 3 தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டன. இதில் கிருஷ்ணாலயா தியேட்டரில் தீபாவளி பண்டிகை வரை இலவச காட்சி அறிவிக்கப்பட்டதால், ரசிகர்கள் காலை 10 மணிக்கே தியேட்டருக்கு வரத்தொடங்கினர்.

    அவர்களுக்கு வெப்ப நிலை சோதனை செய்து, தியேட்டருக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். முக கவசம் அணிந்து வந்தவர்களை மட்டுமே உள்ளே செல்ல அனுமதித்தனர். முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கப்பட்டது. டிக்கெட் கவுண்டரில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டம் போடப்பட்டு இருந்தது. பின்னர் காலை 11 மணிக்கு படம் திரையிடப்பட்டது. இதை ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.

    ஆனால் மாவட்டத்தில் உள்ள 22 சினிமா தியேட்டர்களில் பெரும்பாலான தியேட்டர்கள் நேற்று திறக்கப்படவில்லை. ஒரு சில தியேட்டர்கள் மட்டுமே திறக்கப்பட்டன. புதிய படம் திரையிடப்படாததாலும், பராமரிப்பு பணிகள் காரணமாகவும் சில இடங்களில் சினிமா தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. திறந்த தியேட்டர்களிலும் முதல் நாள் என்பதால் கூட்டம் குறைவாக இருந்தது. தீபாவளி பண்டிகைக்குள் அனைத்து தியேட்டர்களும் திறக்கப்படும் என்று திரையரங்க உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.
    Next Story
    ×