என் மலர்
செய்திகள்

கொள்ளை
விருத்தாசலம் அருகே கோவில் பூட்டை உடைத்து நடராஜர் சிலை கொள்ளை
விருத்தாசலம் அருகே கோவில் பூட்டை உடைத்து நடராஜர் சிலை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வேப்பூர் போலீஸ் சரகம் சிறுநெசலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது.
இங்கு வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை இரவு பூஜைகளை முடித்த பூசாரி கல்யாணசுந்தரம் கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
நள்ளிரவு சமயம் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்குள்ள வெண்கல நடராஜர் சிலை, பஞ்சபாத்திரங்கள், மணி ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
மறுநாள் காலை பூசாரி கல்யாணசுந்தரம் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது சிலை மற்றும் பொருட்கள் கொள்ளை போனது கண்டு வேப்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகிறார்கள்.
இதேபோல் அருகில் உள்ள மஞ்சப்பர் கோவிலின் பூட்டையும் மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். ஆனால் அங்கு பொருட்கள் எதுவும் திருடு போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






