search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

    வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    கடலூர்:

    திட்டக்குடி அருகே எடையூர் அண்ணாநகரை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகள் சுலோச்சனா (வயது 26). இவரும் கோவிலூரை சேர்ந்த கொளஞ்சி மகன் மணிகண்டன் (வயது 28) என்பவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 15.9.2013 அன்று திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின் போது 3 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசைப்பொருட்கள், வெள்ளி கொலுசு ஆகியவற்றை வரதட்சணையாக சுலோச்சனாவின் பெற்றோர் வழங்கி உள்ளனர். அப்போது மணிகண்டன் வரதட்சணையாக மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு சுலோச்சனா வீட்டார், பிறகு தருவதாக தெரிவித்துள்ளனர்.

    ஆனால் அவர்களால் வாங்கி கொடுக்கமுடியவில்லை. இதனால் மணிகண்டன் மோட்டார் சைக்கிள் மற்றும் நகை கேட்டு சுலோச்சனாவை அடிக்கடி கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதற்கிடையில் சுலோச்சனா கர்ப்பிணியானார். அதன்பிறகும் வரதட்சணை கேட்டு மணிகண்டன் அவரை கொடுமைப்படுத்தி வந்தார். இதனால் மனவேதனை அடைந்த சுலோச்சனா கடந்த 8.12.2016 அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி பாலகிருஷ்ணன் தீர்ப்பு கூறினார். அதில், இவ்வழக்கில் மணிகண்டன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வப்பிரியா ஆஜராகி வாதாடினார்.
    Next Story
    ×