search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சினிமா தியேட்டரை ஊழியர்கள் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்ததை காணலாம்
    X
    சினிமா தியேட்டரை ஊழியர்கள் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்ததை காணலாம்

    சினிமா தியேட்டர்களை சுத்தம் செய்யும் பணி தீவிரம்

    தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகளுடன் 10-ந் தேதி முதல் சினிமா தியேட்டர்களை திறக்க அரசு அனுமதியளித்துள்ளதை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள சினிமா தியேட்டர்களை சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.
    கடலூர்:

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த நோய் பரவலுக்கு மத்தியிலும் பொருளாதார, வாழ்வாதார நடவடிக்கைகளை கவனிக்க வேண்டிய அவசியம் எழுந்ததால் மத்திய அரசு, 5 கட்டங்களாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து நடைமுறைப்படுத்தியுள்ளது. மேலும் தமிழக அரசும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

    இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வின்போது, வருகிற 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் சினிமா தியேட்டர்கள் இயங்கலாம் என்றும், தியேட்டர்கள் 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும், ஒரு இருக்கை விட்டு அடுத்த இருக்கையில் பார்வையாளர்கள் அமர வேண்டும், அவர்கள் காட்சியின் இறுதி வரை முக கவசம் அணிந்திருக்க வேண்டும், ஒவ்வொரு காட்சி முடியும்போதும் அரங்குக்கு உள்ளேயும், கழிவறையிலும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்று பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

    அதன்படி கடந்த 7 மாதங்களாக மூடிக்கிடந்த சினிமா தியேட்டர்கள் வருகிற 10-ந் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது. கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி சினிமா தியேட்டர்களை சுத்தம் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. தியேட்டரில் உள்ள பார்வையாளர்கள் அமரும் இடம், டிக்கெட் பெறும் மையம், வாகனங்கள் நிறுத்துமிடம், தின்பண்டங்கள் வாங்கும் இடம், கழிவறை உள்ளிட்ட அனைத்து இடங்களையும் சுத்தம் செய்து, கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    Next Story
    ×