என் மலர்tooltip icon

    கடலூர்

    அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு போன்றவற்றில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    கடலூர்:

    தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு கடைபிடிக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. கொரோனா பரவல்

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒருவருக்கும் மட்டும் கொரோனா தொற்று இருந்தது. அது கடந்த 12-ந் தேதி 206 பேருக்கும், 13-ந் தேதி 276 பேருக்கும் தொற்று ஏற்பட்டு உள்ளது.

    தற்போது நேற்று 308 பேருக்கு கொரோனா தொற்று பரவல் அசுரவேகத்தில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தற்போது கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூடுதலாக படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    இதுமட்டுமன்றி போலீஸ் சார்பில் ஜனவரி 1-ந் தேதி முதல் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேர் முக கவசம் அணியாமல் இருந்தமைக்காக அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் கடலூர் துறைமுகத்தில் மற்றும் இறைச்சி கடைகளில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் முக கவசம் அணியாமல் சமூக இடைவெளி பின்பற்றாமல் மீன்கள் மற்றும் இறைச்சிகளை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி செல்வதால் நாளுக்கு நாள் தொற்று பரவல் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    ஆகையால் மாவட்ட நிர்வாகம் நாளுக்கு நாள் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு போன்றவற்றில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    பண்ருட்டி அருகே குடிநீர் தொட்டி ஆப்பரேட்டர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பத்திரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 48). இவர் அதே பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் ஆப்பரேட்டர் வேலை பார்த்து வந்தார். நேற்றிரவு வழக்கம்போல் குணசேகரன் மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் அடியிலுள்ள மோட்டார் கொட்டகையில் படுத்து தூங்கினார். தொடர்ந்து காலை நீண்ட நேரமாகியும் குடிநீர் வராததால் பொதுமக்கள் அங்குள்ள மோட்டார் கோட்டையைத் திறந்து பார்த்தனர்.

    அப்போது அங்கு குணசேகரன் மர்மமான முறையில் இறந்து கிடப்பது தெரியவந்தது.இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனே இது குறித்து பஞ்சாயத்து தலைவர் தெய்வானை சிங்காரவேலுவுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து நடுவீரப்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது.

    புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் தொட்டி ஆப்பரேட்டர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் ஒரே தெருவில் வசிக்கும் 3 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அப்பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    திட்டக்குடி:

    திட்டக்குடி நானூற்று ஒருவர் கோவில் தெரு பகுதியில் வசிக்கும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திட்டக்குடி அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை அடுத்து திட்டக்குடி நகராட்சி சார்பில் கொரோனா நோய் தொற்று கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு அப்பாதையை அடைத்துள்ளனர்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, திட்டக்குடியில் பொதுமக்கள் முக கவசம் அணியாமல் வெளியில் செல்ல வேண்டாம், சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும், அதிக கூட்டம் உள்ள இடத்திற்கு செல்ல வேண்டாம், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

    கிராம நிர்வாக அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடலூர்:

    கடலூர் அருகே குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் வைத்தியநாதன். இவர் தையல் குணாம் பட்டிணத்தில் தனக்கு சொந்தமான நிலத்தின் அருகில் ஓடை புறம்போக்கு இடத்தில் ஒரு ஏக்கர் இடத்தை ஆக்கிரமித்து பயிர் செய்துள்ளார்.

    இந்த ஆக்கிரமிப்பை கடந்த 18-ந் தேதி வருவாய்த்துறையினர் அகற்றி, வடிகால் வாய்க்கால் அமைத்தனர். வைத்திய நாதன், அவரது மனைவி ஜோதி மற்றும் ஆதரவாளர்கள் வாய்க்காலை வெட்டி சேதப்படுத்தினர். இதனை தட்டிக் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் தனவேல், உதவியாளர் ஞானவேல் ஆகியோரை ஆபாசமாக திட்டி பணி செய்ய விடாமல் தடுத்தனர்.

    இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் தனவேல்குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப் -இன்ஸ்பெக்டர் பிரசன்னா வழக்குப்பதிந்து சித்தாலிக் குப்பம் சந்தானராஜ், விஜய குமார், ஆடூர் குப்பம் அறிவழகன், சிவராஜ், திருநாவுக்கரசு, ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய வைத்தியநாதன், ஜோதியை போலீசார் தேடிவருகின் றனர்.

    பொது மக்கள் ஜோதி தரிசனத்தை காண்பதற்கு இணையவழி மற்றும் தொலைக் காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    கடலூர் மாவட்டம், வடலூர், வள்ளலார் சத்திய ஞானசபையில் ஆண்டு தோறும் தைப்பூச விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா இன்று (15-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    கொரோனா தொற்று காரணமாக தைப்பூசப் பெருவிழா ஜோதி தரிசனத்தில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதி இல்லை. சத்திய ஞானசபை வளாகத்திற்குள் வெளி நபர்கள் அன்னதானம் செய்வதற்கு அனுமதி இல்லை.

    உள்ளூர் நபர்கள் அன்னதானம் பார்சல் மூலமே வழங்க வேண்டும் என்று முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் ஜோதி தரிசனத்தை காண்பதற்கு இணையவழி மற்றும் தொலைக் காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதையும் படிக்கலாம்...வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் சொர்க்கவாசல் திறக்கப்படுவது ஏன்?
    மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒவ்வொரு பயிற்சி மருத்துவருக்கும் ரூ.25,000 வரை ஊக்கத்தோகை வழங்கப்படுவதாக தெரிவித்தனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரத்தில், மாதாந்திர ஊக்கத்தொகை வேண்டி அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் இளநிலை பயிற்சி மருத்துவர்களுக்கு கடந்த 8 மாதமாக ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. 

    இதைத் கண்டிக்கும் வகையில் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சுமார் 75 பயிற்சி மருத்துவர்கள் இன்று திடீர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.  
     
    இதுபற்றி பயிற்சி மருத்துவர்கள் கூறியதாவது:- 

    கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியாக இந்த கல்லூரி மாற்றப்பட்டு 8 மாதங்களாக எங்களுக்கு மாதாந்திர ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை. மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒவ்வொரு பயிற்சி மருத்துவருக்கும் மாதாந்திர உதவித்தொகை 25 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. ஆனால், பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் ஒரு ரூபாய் கூட ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை.

    அரசு கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் போல நாங்களும் கொரோனா பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். எங்களில் 45 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கக்கோரி அரசுக்கு பலமுறை தெரிவித்தும் இதுவரை வழங்கப்படவில்லை. 

    அதனால் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு பயிற்சி மருத்துவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க உத்தரவிட வேண்டும். இதை நிறைவேற்றும் வரை காலவரையற்ற போராட்டம் நடைபெறும்.

    இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
    இன்றும், நாளையும் டாஸ்மாக் மூடப்படுவதால் பொங்கல் தினமான நேற்று தமிழகம் முழுவதும் மதுக்கடைகளில் உச்சகட்ட விற்பனை நடைபெற்றது.
    சிதம்பரம்:

    இன்று திருவள்ளுவர் தினம் கடை பிடிக்கப்படுவதால் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் நாளை கொரோனா முழு ஊடரங்கு அமல்படுத்தப்படுவதால் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படுகிறது. இதனால் பொங்கல் பண்டிகையையான நேற்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலை மோதியது. 

    அடுத்த 2 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை மொத்தமாக வாங்கி இருப்பு வைத்துக்கொள்ள மதுபிரியர்கள் ஆர்வம் காட்டினர். சிதம்பரம் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் மதுபான கடையில் குவிந்த மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் முண்டியடித்து தங்களுக்கு பிடித்த மதுபானங்களை வாங்கி செல்ல ஆர்வம் காட்டினார். 

    கொரோனா நோற்று தொற்று அதிகரித்து வரும் நிலையிலும் அரசு அமல்படுத்தியுள்ள கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடிக்காமல் தொடர்ந்து அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வதாக டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் மதுபான பிரியர்கள் மீது சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
    கடலூர், நெல்லிக்குப்பம் பகுதியில் கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
    கடலூர்:

    மார்கழி மாதம் என்றாலே மாதம் முழுவதும் பனி பொழிவு மற்றும் குளிர்ந்த காற்று வீசி வருவது வழக்கம். இந்த நிலையில் மார்கழி மாதம் தொடங்கிய நிலையில் அதிகாலையில் பனி மூட்டம், மதியம் சுட்டெரிக்கும் வெயில், இரவு குளிர்ந்த காற்று என சீதோஷ்ண மாற்றம் இருந்து வந்த காரணத்தினால் பொதுமக்கள் பல்வேறு நோய்களால் தொடர்ந்து அவதி அடைந்து வந்தனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காலை 7 மணிவரை வழக்கத்தைவிட அதிக அளவில் பனிப்பொழிவு இருந்து வந்தது. இந்த நிலையில் கடலூர், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம் பாக்கம், நடுவீரப்பட்டு, திருவந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 8 மணி வரை கடும் பனிமூட்டம் காணப்பட்டது.

    மேலும் இன்று போகி பண்டிகை என்பதால் அதிகாலை முதல் பொதுமக்கள் பழைய பொருட்கள் எரித்த காரணத்தினால் கடும் பனி பொழிவுடன் புகை மூட்டமும் இணைந்து கடும் புகையாக காட்சி அளித்தது. இதன் காரணமாக அதிகாலை முதல் வாகன ஓட்டிகள் முழுவதும் முகப்பு விளக்கு எரிய வைத்தபடி சாலையில் சென்றதை காண முடிந்தது.

    மேலும் அதிகாலை முதல் சென்ற அனைத்து ரயில்களும் சில நிமிடம் காலதாமதமாக சென்றதோடு முகப்பு விளக்கு எரிய வைத்த படி சென்றதையும் காணமுடிந்தது. இதனைத் தொடர்ந்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் பனிமூட்டத்தால் அவதிப்பட்டனர்.
    பொங்கல் பண்டிகை முன்னிட்டு இன்று காலை முதல் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து காய்கறிகள், பழவகைகள், கரும்பு, மஞ்சள் கொத்து ஆகியவற்றை ஆர்வமாக வாங்கிக்கொண்டு சென்றனர்.
    கடலூர்:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகள், பழவகைகள், கரும்பு, மஞ்சள் கொத்து, பானைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி பொங்கல், மாட்டுப்பொங்கல் வெகு விமர்சையாக கொண்டாடு வது வழக்கம்.

    அதன்படி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 25 டன் காய்கறிகள், 5 டன் பழவகைகள், 10 டன் கரும்பு மற்றும் மஞ்சள் கொத்தும், உழவர் சந்தைக்கு வந்தது. பின்னர் உழவர் சந்தை வெளியில் சாலையோரத்தில் ஆயிரக்கணக்கான வாழைத்தார்கள், கரும்பு மற்றும் மஞ்சள் கொத்து என 20 டன்னுக்கு மேல் வந்தடைந்தன.

    இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து காய்கறிகள், பழவகைகள், கரும்பு, மஞ்சள் கொத்து ஆகியவற்றை ஆர்வமாக வாங்கிக்கொண்டு சென்றனர். மேலும் வாழைத்தார் பண்டிகை காலம் என்பதால் 150 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை வாழைத்தார் ரகத்திற்கு தகுந்தார்போல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வாங்கி சென்றனர்.

    இதன் காரணமாக காலை முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உழவர் சந்தை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க குவிந்ததால் கடலூர் சிதம்பரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் நேற்று போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் கடும் நடவடிக்கை எடுத்த நிலையிலும் இன்று வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்கள் திரண்டதால் மீண்டும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

    இதன் காரணமாக போலீசார் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
    பண்ருட்டி அருகே மருத்துவ முகாமுக்கு அழைத்து சென்று நர்சிங் மாணவிக்கு மது கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் குறித்து 2 பேரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    விழுப்புரம் மாவட்டம் அருகே உள்ள ஏ.கே .குச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகள் பிரபாவதி (வயது 17). இவர் பண்ருட்டி சென்னை சாலையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

    நேற்று பிரபாவதி ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கபடுகிறது.

    இந்த சம்பவம் குறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் அதிர்ச்சியான தகவல் கிடைத்தது.

    பிரபாவதி படித்து வந்த நர்சிங் கல்லூரியில் மாதம் தோறும் மருத்துவ முகாம் நடத்தப்படுவது உண்டு. கடந்த மாதம் சேலம் அருகே உள்ள ஏற்காடு பகுதியில் மருத்துவ முகாம் நடந்தது. இந்த மருத்துவ முகாமிற்கு பிரபாவதி உள்ளிட்ட மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தை சேர்ந்த நிஷா, டேவிட், அன்பு, பிரேம் ஆகியோர் சென்றனர். ஏற்காடு பகுதியில் விடுதியில் அவர்கள் அறை எடுத்து தங்கினர். பின்னர் மாணவிகளிடம் பிரபல ஆஸ்பத்திரிகளில் வேலை வாங்கி தருவதாக உடன் சென்றவர்கள் ஆசை வார்த்தை கூறினர். இதில் மயங்கிய மாணவிகளுக்கு மது கொடுத்து அவர்களை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    பின்னர் அனைவரும் ஒன்றும் நடக்காதது போல் வீடு திரும்பினர். இந்த நிலையில் கல்லூரி நிர்வாகத்தினர் மீண்டும் மாணவிகளை மருத்துவ முகாம் செல்லலாம் என அழைத்தனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை பிரபாவதியின் அண்ணனிடம் கூறி அழுதுள்ளார். இதை கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார். இந்த விசயம் தனது அண்ணனுக்கு தெரிய வந்ததால் நர்சிங் மாணவி பிரபாவதி தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

    இதன் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ வழக்கு பதிவு செய்து கல்லூரி நிர்வாகத்தை சேர்ந்த நிஷா, டேவிட், அன்பு மற்றும் பிரேம் உள்ளிட்டவர்களை வலை வீசி தேடி வந்தனர். இதற்கிடையில் பண்ருட்டியில் பதுங்கி இருந்து நிஷா, அன்பு ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
    பண்ருட்டி அருகே அரசுபள்ளி தலைமை ஆசிரியை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே பூங்குணம் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ராணி. இவர் சக ஆசிரியர்களை ஒருமையில் பேசி திட்டுவதாக புகார் எழுந்தது. இதுபற்றி இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர், ஆசிரியைகள் மாவட்ட கல்வி அதிகாரியை நேரில் சந்தித்து பணி மாறுதல் கேட்டு மனு கொடுத்தனர்.

    இந்த விவரம் தலைமை ஆசிரியை ராணிக்கு தெரிய வந்தது இதனால் அவர் வருத்தமுடன் காணப்பட்டார்.

    நேற்று மதிய உணவு இடைவேளையின்போது ராணி தனது வீட்டுக்கு சென்றார். அங்கு அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதனால் வாந்தி,மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார் இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ராணியை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    அரசு பணிக்கு தயாராகி வரும் கடலூர் மாவட்ட வேலைதேடும் இளைஞர்கள் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என கலெக்டர் பாலசுப்பிரமணியம் கேட்டுக்கொண்டுள்ளார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தற்போது பல்வேறு துறைகளில் உள்ள குரூப்பி மற்றும் குரூப்சி பணிக்காலியிடங்கள் அடங்கிய எஸ்.எஸ்.சி. சி.ஜி.எல். தேர்விற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

    இப்பணிக்காலியிடங்களுக்கு தேர்வாணைய இணையதளம் வாயிலாக வருகிற 23-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேற்குறிப்பிட்ட தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்கவுள்ள விண்ணப்பதாரர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வருகிற 19-ந் தேதி முதல் வெள்ளி வரை பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை இணைய வழியில் நடத்தப்பட உள்ளது.

    இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு 04142 290039 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகளில் அரசு பணிக்கு தயாராகி வரும் கடலூர் மாவட்ட வேலைதேடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என கலெக்டர் பாலசுப்பிர மணியம் விடுத்துள்ள செய் திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

    ×