என் மலர்tooltip icon

    கடலூர்

    • ேமாட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் காமாட்சி கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்தனர்.
    • மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் ஜி.பி. நகரை சேர்ந்தவர் ரேணுகோபால். அவரது மனைவி காமாட்சி. இவர்கள் சம்பத்தன்று சென்னை சென்று வீட்டுக்கு வந்தனர். அப்போது ேமாட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் காமாட்சி கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்தனர். அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டார். ஆனால் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குபதிந்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். 

    • பண்ருட்டி அருகே சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • மோட்டார் சைக்கிள் செல்வோர் பலமுறை சாலையில் உள்ள பள்ளத்தில் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து கும்பகோணம் சென்னை செல்லும் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விரிவாக்க பணிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் நிலம் கையகப்படுத்தப்பட்ட பின்னர் இதுவரை சாலை எந்தவித பராமரிப்பும் இன்றி விரிவாக்கப்படவில்லை. இதனால் சாலை குண்டும் குழியுமாக பஞ்சரான சாலையாக உள்ளது. இந்த சாலையில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பண்ருட்டி எல் என் புரம் பகுதியில் சாலை விரிவாக்க பணி முற்றிலுமாக நடைபெறவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால் அந்த பகுதி சாலையில் மழை நீர் தேங்கியதால் மோட்டார் சைக்கிலிள் செல்வோர் நடந்து செல்வோர் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

    இது மட்டுமல்லாமல் கோடை காலத்தில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் எல் என் புரம் பகுதியில் புழுதி புயலுடன் காற்று வீசும். இதனால் நடந்து செல்வோர் மோட்டார் சைக்கிலிள் செல்வோர்களின் கண்களை பட்டு நோய் ஏற்படுத்தும் வகையில் இருக்கும். மேலும் குறிப்பாக இந்த சேதமான சாலையால் மோட்டார் சைக்கிள் செல்வோர் பலமுறை சாலையில் உள்ள பள்ளத்தில் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் வாகன விபத்து ஏற்பட்டு பலர் இந்த சாலையில் உயிரிழந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் பலர் சாலையை சீரமைக்க கோரி பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று காலை திடீரென்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பண்ருட்டி தாசில்தார் வெற்றிவேல் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் பொறுப்பு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது,

    சேதமான சாலையை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை அதனால் கலெக்டர் கூறிய அதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி இதனை சரி செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். காலை 9:00 மணி முதல் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடும் பாதிப்புக்குள்ளானது. இதனால் போலீசார் வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பி போக்குவரத்தை சரி செய்தனர். ஆனால் போலீசார் தொடர்ந்து பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த இடம் பெரும் பரபரப்பாக உள்ளது.

    • திருமணமாகி 11 வயதில் பெண் குழந்தையும்,7 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.
    • கழுத்தை பிடித்து வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும் கண்ணீர் மல்க போலீசாரிடம் தெரிவித்தார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே செம்பளாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த முனியம்மாள் என்பவ ருக்கும் திருமணமாகி 11 வயதில் பெண் குழந்தையும்,7 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தமது கணவருக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும், இதனால் அவரது கணவர் அவரையும், பிள்ளைகளையும் விட்டு சென்று விட்டதாக விருத்தா சலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    மேலும் அவரின் மாமியார், நாத்தனார், நாத்தனாரின் கணவர் உள்ளிட்டவர்கள் தம்மை கழுத்தை பிடித்து வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும் கண்ணீர் மல்க போலீசாரிடம் தெரிவித்தார். தனது கணவரை அவரது குடும்பத்தினரிடம் இருந்து மீட்டு தன்னுடன் இணைந்து வாழ வைக்க வேண்டும் என்ற தனது 7 வயது மகன் மற்றும் உறவினர்களுடன் வந்து முனியம்மாள் புகார் அளித்தார்.

    • தமிழகத்தில் ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும் ஏழை மக்களுக்காக செயல்படும் ஒரே இயக்கம் அ.தி.மு.க.
    • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, நான் முதல்வராக இருக்கும் வரை ஏழை மக்களுக்காக பணி செய்தோம்.

    சிதம்பரம்:

    வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக சிதம்பரம் பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. ஒரே நாளில் 30 செ.மீ.மழை பெய்ததால் அந்த பகுதி முழுவதும் உள்ள விளைநிலங்கள் பாதிக்கப்பட்டது. இந்த பகுதியை பார்வையிடுவதற்காக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடலூர் மாவட்டம் வந்தார்.

    சிதம்பரம் அருகே வல்லம்படுகையில் அவர் வெள்ள சேதங்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கினார். அதன் பின்னர் அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும் ஏழை மக்களுக்காக செயல்படும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, நான் முதல்வராக இருக்கும் வரை ஏழை மக்களுக்காக பணி செய்தோம். பருவமழை காலங்களில் குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் கனமழைக்கு பாதிக்காத வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வெள்ளபாதிப்புகளை தடுத்தது அ.தி.மு.க. அரசு.

    குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ஆதனூர், குமாரமங்கலம் இடையே ரூ.500 கோடி செலவில் கதவணை அமைத்து வெள்ள பாதிப்பை தடுத்தது அ.தி.மு.க. அரசு. ஒரே ஆண்டில் 2 முறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு பயிர்கடனை முறையாக தள்ளுபடி செய்தது அ.தி.மு.க. அரசு.

    எம்.ஜி.ஆர். காலம் தொட்டு ஏழை மக்களுக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருவது அ.தி.மு.க. அரசு. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை காழ்புணர்ச்சி காரணமாக தி.மு.க. அரசு கைவிட்டது. குறிப்பாக அம்மா கிளினிக் மூடப்பட்டது. ஏழை மக்களுக்காக தி.மு.க. அரசு எதையும் செய்யவில்லை.

    மக்கள் விரோத அரசை அ.தி.மு.கவினர் வன்மையாக கண்டிக்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்போது எம்.எல்.ஏ.க்கள் பாண்டியன், அருண்மொழிதேவன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முருகுமாறன், செல்வி ராமஜெயம், அருள் ஆகியோர் இருந்தனர்.

    • இரவு 10 மணியளவில் மின் ஊழியர்களை கைது செய்ய கோரி, கடலூர் - சேலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
    • காவ்யா கிராம மக்களிடம் சமரச பேச்சில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனஉறுதி அளித்தார்.

    வேப்பூர், நவ. 16-

    வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி, 54. இவரது வயலில் மின் அழுத்த கம்பி தாழ்வாக செல்வதாக, 2 நாட்களுக்கு முன் வேப்பூர் துணை மின் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் வயலில் சாகுபடி செய்த மக்காச்சோளம் பயிரை பார்வையிட ராமசாமி சென்றார். ராமசாமி, வயலுக்கு சென்று பல மணிநேரம் ஆகியும் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த அவரது மகன் செல்வகுமார், இரவு 7:30 மணியளவில் வயலுக்கு சென்று அவரை தேடினார்.

    அப்போது, அறுந்து விழுந்த மின்கம்பியை ராமசாமி மிதித்து, மின்சாரம் தாக்கி இறந்தது தெரிய வந்தது. தகவலறிந்து வந்த அப்பகுதி கிராம மக்கள் சிலர், இரவு 10 மணியளவில் மின் ஊழியர்களை கைது செய்ய கோரி, கடலூர் - சேலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனையறிந்த திட்டக்குடி டி.எஸ்.பி., காவ்யா கிராம மக்களிடம் சமரச பேச்சில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனஉறுதி அளித்தார். பின்னர், 10:30 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. 

    • அனைவரும் ஒன்றாக வீட்டில் வசித்து வருகின்றனர்.
    • வீட்டுக்கு வந்து பார்த்தபோது தாய் மற்றும் தங்கை காணவில்லை.

    கடலூர்:

    கடலூர் முதுநகரை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 21).மீனவர். இவரது தாய் வனரோஜா (வயது 42). தங்கை அனுசியா (வயது 19). அனைவரும் ஒன்றாக வீட்டில் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று ஆகாஷ் வீட்டில் இருந்து வெளியில் சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது தாய் மற்றும் தங்கை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த ஆகாஷ் 2 பேரையும் பல்வேறு இடத்தில் தேடிப் பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வன ரோஜா, அனுசியா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் முதுநகரில் தாய், மகள் மாயமான சம்பவம் பரபரப்பாக காணப்பட்டு உள்ளது.

    • பாலமுருகன் சென்னையில் இருந்து அரியலூருக்கு கனரக வாகனம் ஓட்டி சென்றார்.
    • அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி உயிரிழந்தார்.

    கடலூர்:

    திட்டக்குடி அருகே ராமநத்தம் போலீஸ் சரகம் தனியார் பள்ளி முன் இரவு சுமார் 11மணி அளவில் அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் (28) இவர் சென்னையில் இருந்து அரியலூருக்கு கனரக வாகனம் ஓட்டி சென்றார். ராமநத்தம் அருகே தனியார் பள்ளி அருகில் அங்கு வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக நடந்து சென்றபோது அவ்வழியே பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி உயிரிழந்தார்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ராமநத்தம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • வேப்பூர் அருகே தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னையிலிருந்து வீட்டிற்கு தனியாக வந்தார்.

    கடலூர்:

    வேப்பூர் அருகே சேவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன்(வயது22). 9ம் வகுப்பு படித்துள்ளார். இவர், கடந்த 4 ஆண்டுகளாக தனது பெற்றோருடன், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னையிலிருந்து வீட்டிற்கு தனியாக வந்தார். நேற்று காலை அவரது நண்பர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது, குணசேகரன் வீட்டின் மேற்கூரையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து வந்த வேப்பூர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பேரையும் கிராம மக்கள் மீட்டனர். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது.
    • டி.புத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மா.கொத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம்.

    இவரது வீட்டுசுவர் கனமழையில் நனைந்து இருந்தது. நேற்றும் இந்த பகுதியில் விடாது மழை பெய்தது. தொடர் மழை காரணமாக சோமசுந்தரத்தின் வீட்டு சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

    இந்த இடிபாடுகளுக்குள் சோமசுந்தரம், அவரது மனைவி நிர்மலா, மகன் அய்யப்பன் ஆகியோர் சிக்கினர். அப்போது வலிதாங்கமுடியாமல் அலறிதுடித்தனர். சத்தம்கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பேரையும் கிராம மக்கள் மீட்டனர். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது.

    உடனடியாக 3 பேரும் சிதம்பரம் ராஜாமுத்தையா அரசு மருத்துவகல்லூரி ஆஸ்ப த்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து டி.புத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பரங்கிபேட்டை முகத்துவாரம் பகுதியில் சென்றபோது பேரலை எழும்பியது. இதில் படகு திடீரென நடுகடலில் கவிழ்ந்தது.
    • பரங்கிபேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிதம்பரம்:

    சிதம்பரம் அருகே உள்ள சின்னூர்தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் கேசவராஜ். இவரது தலைமையில் இன்று காலை மீனவர்கள் 5 பேர் நாட்டு படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அப்போது பரங்கிபேட்டை முகத்துவாரம் பகுதியில் சென்றபோது பேரலை எழும்பியது. இதில் படகு திடீரென நடுகடலில் கவிழ்ந்தது. அப்போது 6 மீனவர்களும் தண்ணீரில் தத்தளித்தனர். உயிர்பிழைக்க அவர்கள் கூச்சலிட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்தவர்கள் 6 பேரையும் மீட்டனர். இது குறித்து பரங்கிபேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பஸ் கே.என்.பேட்டை பகுதியில் சென்ற போது மாணவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டது.
    • பஸ்சின் உள்ளே இருந்த விளக்குகள் அடித்து நொறுக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப் புலியூர் பஸ் நிலையத்தில் இருந்து பாலூர் வழியாக பண்ருட்டிக்கு அரசு பஸ் நேற்று மாலை புறப்பட்டு சென்றது.

    இந்த பஸ்சில் திருப்பாதிரிப்புலியூர் அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஏராளமானோர் பயணித்தனர்.

    இந்த பஸ் கே.என்.பேட்டை பகுதியில் சென்ற போது மாணவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.

    இந்த கட்டத்தில் பஸ்சின் உள்ளே இருந்த விளக்குகள் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர். உடனடியாக டிரைவர் பஸ்சை நிறுத்தி திருப்பா திரிப்புலியூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதனையறிந்த மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    ஓடும் பஸ்சில் ரகளை செய்த மாணவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்த வர்கள்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    • சீட் பெல்ட் அணியாத சென்ற 13 பேர் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் 216 பேர் மீது வழக்கு பதிவு செய்து அபராத தொகை வசூல் செய்து உள்ளனர்.
    • மோட்டார் வாகன சட்டத்தை பின்பற்ற வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தி உள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவு பேரில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், சிதம்பரம், சேத்தியாதோப்பு, திட்டக்குடி ஆகிய 7 உட்கோட்டதிற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிய 13 பேர், மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் சென்றதில் 23 பேர், தலைக்கவசம் அணியாமல் சென்ற 100 பேர், சீட் பெல்ட் அணியாத சென்ற 13 பேர் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் 216 பேர் மீது வழக்கு பதிவு செய்து அபராத தொகை வசூல் செய்து உள்ளனர். மேலும் பொதுமக்கள் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிந்து கொண்டும், மோட்டார் வாகன சட்டத்தை பின்பற்ற வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தி உள்ளார்.

    ×