என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • அத்திக்கடவு-அவினாசி திட்டம் நாளை தொடங்கப்பட உள்ளது.
    • காணொலி காட்சி வாயிலாக நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது.

    கோவை:

    நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டங்களின் முன்னோடி திட்டமாகவும், கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களின் மூன்று தலைமுறை கனவு திட்டமாகவும் கருதப்படும் அத்திக்கடவு-அவினாசி திட்டம் நாளை தொடங்கப்பட உள்ளது.

    திட்டத்தின் தொடக்க விழா ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராயன் அணைக்கட்டு அருகில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது நீரேற்று நிலையத்தில் நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு, காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    3 தலைமுறைகளின் கனவுதிட்டமான அத்திக்கடவு-அவினாசி திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    3 மாவட்ட மக்களின் 65 ஆண்டு கால கனவாக உள்ள இந்த அத்திக்கடவு-அவினாசி திட்டம் உருவானது பற்றிய விவரம் வருமாறு:-

    பவானி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக நீலகிரியும், கேரளத்தின் அட்டப்பாடி, ஆனைகட்டி போன்ற பகுதிகளும் உள்ளன. இந்தப் பகுதியில் உருவாகி வரும் பவானி ஆறு மீண்டும் தமிழகத்தின் நுழைவுப் பகுதியான அத்திக்கடவு வழியாக பில்லூர் அணைப் பகுதியை வந்தடைகிறது.

    பில்லூர் அணையில் சேகரிக்கப்படும் தண்ணீர் கோவை மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்யும்போது வேகமாக பில்லூர் அணை நிரம்பிவிடுகிறது.

    அணை நிரம்பியதும் பவானி ஆற்றின் வழியே வெளியேறும் நீர் சுமார் 60 கி.மீ தூரம் பயணித்து பவானிசாகர் (கீழ்பவானி) அணையை வந்தடைகிறது.

    பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன வாய்க்கால் மூலம் 2.07 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கும், கொடிவேரி அணைக்கட்டில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்துக்கு 25,000 பாசன நிலங்களும், காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலுக்கு 15,000 ஏக்கர் ஆயக்கட்டு நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

    பல்வேறு சந்தர்ப்பங்களிலும் கீழ்பவானி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து பில்லூர் அணை, கீழ்பவானி அணைகள் நிரம்பியதும் திறக்கப்படும் உபரிநீர் பயனின்றி 75 கி.மீ பயணித்து காவிரி ஆற்றில் கலக்கிறது மொத்தம் 225 கி.மீது தூரம் பயணிக்கும் பவானி ஆற்றில் ஆங்காங்கே வனப்பகுதியில் இருந்து வரக்கூடிய சிற்றாறுகளும் கலக்கின்றன.

    இதனால் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் போது ஆற்றில் வீணாகும் தண்ணீரை வறட்சி பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வகையில் அத்திக்கடவு-அவினாசி திட்டம் செயல்படுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

    இந்த திட்டத்தின் மூலம் ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள அவினாசி, அன்னூர், காரமடை, திருப்பூர், சேவூர், பெருந்துறை, காங்கயம், ஊத்துக்குளி, நம்பியூர், புளியம்பட்டி பகுதிகளில் உள்ள குளம், குட்டை ஏரிகளுக்கு குழாய் மூலம் தண்ணீரை கொண்டு சென்று அந்த பகுதிகளின் குடிநீர் ஆதாரத்தை பெருக்கும் வகையிலும், பாசன பரப்பை அதிகரிக்கும் வகையில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டது.

    காமராஜர் முதல்-அமைச்சர் ஆவதற்கு முன்பே இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.

    இந்த திட்டத்திற்காக 1957-ம் ஆண்டும் முதன் முதலில் அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

    அதன்பின்னர் பல்வேறு காலகட்டங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக பலமுறை முயற்சிகள் எடுத்தும் அது கைகூடவில்லை.

    50 ஆண்டு கால கோரிக்கையாக உள்ள இந்த திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூர், ஈரோடு, கோவையில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் தொடர் போராட்டங்கள் நடந்தன.

    குறிப்பாக கடந்த 2016-ம் ஆண்டு அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, அவினாசியில் பலரும் தொடர் பட்டினிப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, ஆய்வு பணிகளுக்கான ஆரம்ப கட்ட நிதியாக ரூ.3.27 கோடியை ஒதுக்கினார். அதனை தொடர்ந்து அரசாணை வெளியிட்டார். இந்த நிலையில் மீண்டும் 2017-ம் ஆண்டு அவினாசியில் ஒரு நாள் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    இதற்கிடையே 2016-2017ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் அ.தி.மு.க அரசு அத்திக்கடவு-அவினாசி திட்டம் 3 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும் என அறிவித்தது.

    அதனை தொடர்ந்து 2018-ம் ஆண்டு ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இன்றைக்கு இந்த திட்டம் ரூ.1,916.41 கோடி நிதியில் முழுமை அடைந்துள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந் தேதி அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவினாசிக்கு நேரில் வந்து அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

    இதையடுத்து 10 மாதங்களில் 1,045 குளம், குட்டைகளின் நீர் வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, வரைபடம் தயாரிக்கப்பட்டு, 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ந் தேதி பணிகள் அதிகார பூர்வமாக தொடங்கப்பட்டன.

    ஈரோடு மாவட்டம், பவானி அருகே காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் தண்ணீரை தேக்கி வைத்து அங்கிருந்து ஆண்டுக்கு 1.50 டி.எம்.சி உபரிநீரை பம்பிங் செய்து நிலத்துக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள ராட்சத குழாய்களின் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட உள்ளது.

    இதற்காக பவானி, நல்ல கவுண்டன்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர் ஆகிய 6 இடங்களில் நீரேற்று நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன.

    கடந்த ஆண்டு இந்த நீரேற்று நிலையங்கள் அனைத்திலும் சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது.

    கடந்த ஆண்டு ஈரோடு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தற்போது மழை பெய்து வருவதால் பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    இதையடுத்து இத்திட்டத்திற்கு தேவையான தண்ணீர் காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து உபரியாக வெளியேறி வருவதால், உபரிநீரை அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு நீரேற்றம் செய்ய இதுவே சரியான காலகட்டம் என நீர்வளத்துறை அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை செய்தனர்.

    அதன்படி நாளை 50 ஆண்டு கால கோரிக்கையான அத்திக்கடவு-அவினாசி திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நீர்வள ஆதாரத்துறைக்கு சொந்தமான 32 ஏரிகள், ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 32 ஏரிகள், 971 குளம், குட்டைகள் என மொத்தம் 1045 குளங்களில் நீர் நிரப்பப்பட உள்ளது. இதற்காக மொத்தம் 958 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது.

    நிலத்தடி நீரை செறிவூட்டும் இந்த திட்டத்தின் மூலம், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு நீங்குவதுடன், பெருந்துறை, சென்னிமலை, நம்பியூர், கோபிசெட்டிபாளையம், ஊத்துக்குளி, அவினாசி, திருப்பூர், அன்னூர், சூலூர், பெரியநாயக்கன்பாளையம் மற்றும் காரமடை ஆகிய 13 ஒன்றியங்களில் 24 ஆயிரத்து 468 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறும் என கணக்கிடப்பட்டுள்ளது.

    அத்திக்கடவு அவினாசி திட்டமானது தமிழ்நாட்டில் இதுவரை நிறைவேற்றப்பட்ட நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டங்களில் முன்னோடி திட்டமாக அமைந்துள்ளது.

    இதுகுறித்து அத்திக்கடவு-அவினாசி திட்ட செயற்பொறியாளர் நரேந்திரன் கூறியதாவது:-

    அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 1045 குளங்கள், குட்டைகளில் ஏற்கனவே வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. அந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று விட்டன.

    மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழையால் பவானி ஆற்றில் தேவைக்கு ஏற்ப தண்ணீர் உள்ளது. இந்த திட்டபணிகளை மேற்கொண்டு வரும் எல் அண்டு டி நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு இதனை இயக்கி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும்.

    சில இடங்களில் பிறதுறையினர், உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் பராமரிப்பு மேற்கொள்ளப்படும். சில இடங்களில் சாலையோரம் பதிக்கப்பட்டுள்ள குழாய்களில் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

    அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் கீழ் குளம், குட்டைகளில் சேகரமாகும் தண்ணீரின் அளவை அறிந்து கொள்ள சென்சார் உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் அவை திருட்டு போய் உள்ளது. சில இடங்களில் சேதம் அடைந்துள்ளது. இந்த திட்டம் செயல்பாட்டு வந்தவுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி அவை உடனடியாக சரி செய்யப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • விஜயா மகாதேவன் தன்னுடைய வெற்றி அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
    • கேன்டீனில் அவர்களுக்கு சிறுதானிய உணவுகளை வழங்குவது குறித்தும் எடுத்துரைத்தோம்.

    ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் வேளாண் தொழில் முனைவோர்களுக்கான "அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா" எனும் பிரம்மாண்ட பயிற்சி கருத்தரங்கு கோவையில் இன்று (ஆக 15) நடைப்பெற்றது.

    கோவை சின்னியம்பாளையம் பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் பிரம்மாண்டமாக நடைப்பெற்ற இவ்விழாவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் பெண்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

    ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் வரவேற்புரை வழங்கினார். 

    இந்நிகழ்ச்சியில், வசீகர வேதா என்ற நிறுவனத்தை தன்னுடைய 50 வயதுக்கு மேல் நிறுவி வேளாண் மதிப்பு கூட்டல் பொருட்கள் விற்பனையில் சாதித்த விஜயா மகாதேவன் தன்னுடைய வெற்றி அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

    அவரைத் தொடர்ந்து இன்றைய சூழலில் வேளாண் சார் தொழில்களுக்கு அரசு வழங்கும் திட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்து, தமிழ்நாடு வேளாண் கல்லூரியின் வணிக மேம்பாடு துறையின் தலைமை செயல் அலுவலர் ஏ.வி. ஞானசம்பந்தம் அவர்கள் விரிவாக விளக்கிப் பேசினார்.

    மேலும் கோவை நபார்டு வங்கி அதிகாரி திருமலா ராவ், விவசாயிகள் தொழில் துவங்க நபார்டு வங்கியின் மூலம் வழங்கப்படும் கடன உதவித் திட்டங்கள் குறித்து விளக்கினார். 

    இதனைத் தொடர்ந்து சிறுதானியத்தின் மூலம் கோடிகளில் வருமானம் ஈட்டும் பி.வி.ஆர் புட்ஸ் நிறுவனர் சுபத்ரா அவர்கள் பேசுகையில் "சிறுதானிய விற்பனையில் துவக்கத்தில் பல்வேறு சிக்கல்களை சந்தித்தோம். ஆனால் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்று சிறுதானியங்கள் குறித்து எடுத்துக் கூறினோம்.

    முக்கியமாக கோவையில் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு சென்று அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் ஆரோக்கியம் குறித்தும், கேன்டீனில் அவர்களுக்கு சிறுதானிய உணவுகளை வழங்குவது குறித்தும் எடுத்துரைத்தோம்.

    உலகத்தில் அதிகளவில் பால் உற்பத்தி இந்தியாவில் நடைபெறுகிறது. ஆனால் அதில் இருந்து தயாரிக்கும் வே புரோட்டீன் எனும் பொருளை நாம் இறக்குமதி செய்கிறோம்.

    ஏன் அந்தப் பொருளை நாமே உற்பத்தி செய்யக் கூடாது. தொழில் துவங்க நினைப்பவர்கள் உங்களுக்கான துறையை முதலில் தேர்ந்தெடுங்கள், பின் அதற்கான தகவல் மையங்களுக்கு சென்று கற்றுக் கொள்ளுங்கள்."எனக் கூறினார்

    அடுத்ததாக முருங்கை மதிப்புகூட்டு பொருட்களின் ஆன்லைன் விற்பனையில் சாதித்து வரும் பெண் விவசாயி பொன்னரசி, ஜீரோவில் தொடங்கி லட்சங்களில் வருமானம் ஈட்டும் தாய் ஹெர்பல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் திருமதி. அர்ச்சனா, ஐடித் துறையிலிருந்து கால்நடை தீவனப் பொருட்கள் தயாரிப்பு மூலம் கோடிகளில் வருமானம் ஈட்டி வரும் ஆர்.பி. கேட்டல் பீட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் திருமதி. அன்னபூரணி, உள்ளிட்ட வேளாண் சார் தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு சாதனையாளர்கள், வேளாண் வல்லுனர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

    இதுமட்டுமின்றி இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக சிறப்பாக செயல்படும் தொழில் முனைவோர்களை தேர்வு செய்து அவர்களுக்கு மண் காப்போம் விருதுகள் வழங்கப்பட்டது.

    • ஒவ்வொரு நிலையத்திலும் 2 மாணவர்கள் இடம்பெற்று இருந்தனர்.
    • அருங்காட்சியகத்திற்கு பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர்.

    கோவை

    சுதந்திர தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களின் சார்பில் 78 செல்வாக்கு மிக்க இந்திய ஆளுமைகளுக்கு 'வாழும் மெழுகு அருங்காட்சியகம்' அமைக்கப்பட்டு புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

    நம் பாரதத்தின் சுதந்திர தின விழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்கள் வாழும் மெழுகு அருங்காட்சியகத்தை அமைத்து இருந்தனர். பொதுவாக மெழுகு அருங்காட்சியகங்களில் குறிப்பிட்ட மனிதரின், அசலான தோற்றத்தில் மெழுகுச் சிலைகள் செய்து வைக்கப்பட்டு இருக்கும்.


    ஆனால் இந்த வாழும் மெழுகு அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலைகள் இல்லாமல், மாணவர்களே நம் பாரத தேசத்தின் புகழ்பெற்ற நாயகர்கள் போன்று வேடமணிந்து இருந்தனர். இதில் மொத்தம் 40 நிலையங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு நிலையத்திலும் 2 மாணவர்கள் இடம்பெற்று இருந்தனர். இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட நபர்கள் அரசியல், விளையாட்டு, பாரம்பரிய நடனக் கலை, மற்றும் கல்வி என அனைத்து துறைகளையும் சேர்ந்த வாழ்ந்து மறைந்த மற்றும் நம் காலத்தில் வாழ்கின்ற ஆளுமைகளாக இருந்தனர்.


    குறிப்பாக அம்பேத்கர், நேரு, சுபாஷ் சந்திர போஸ், இந்திரா காந்தி ஆகிய தேசத் தலைவர்கள் எம்.எஸ். சுப்புலட்சுமி, இளையராஜா, எஸ்.பி. பாலசுப்பிரமணியம் போன்ற இசைத்துறை கலைஞர்கள், ஜி.டி. நாயுடு, சி.வி. ராமன், ஹோமி பாபா, எம்.எஸ்.சுவாமிநாதன் போன்ற விஞ்ஞானிகள் மற்றும் வேலு நாச்சியார், ராணி மங்கம்மாள் ஆகிய பெண் சாதனையாளர்கள் என 78 புகழ்பெற்ற இந்திய ஆளுமைகளின் தோற்றத்தில் மாணவர்கள் உடையணிந்து இந்த அருங்காட்சியகத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

    அருங்காட்சியகத்தை பார்வையிடும் பார்வையாளர்கள் புரிந்து கொள்ள ஏதுவாக, ஒவ்வொரு நிலையத்திற்கும் முன் ஒரு பொத்தான் அமைக்கப்பட்டு இருந்தது. அதை அழுத்தினால் அந்த நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் செல்வாக்கு மிக்க இந்தியர்கள் குறித்த குறிப்புகளை மாணவர்கள் சொல்லும் படியாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் அருங்காட்சியகத்திற்கு பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர்.


    இதில் சிறப்பு விருந்தினராக 'கரடி டேல்ஸ் பதிப்பகத்தின்' உரிமையாளரும், எழுத்தாளருமான ஷோபா விஸ்வநாத் கலந்து கொண்டார். இந்நிகழ்வு குறித்து அவர் கூறுகையில் "இந்த வாழும் அருங்காட்சியகம் படைப்பாற்றல் மற்றும் கற்றலின் மதிநுட்பமான வெளிப்பாடாக இருந்தது. இந்தப் பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஈர்க்கக்கூடிய முயற்சியால் வரலாறு உயிர்ப்பிக்கப்பட்டு இருந்தது.

    நம் பாரதத்தின் அடையாளங்களாக இருக்கும் நாயகர்கள் போன்று விரிவான விவரங்களுடன் வேடமணிந்து இருந்தது அவர்களின் அர்ப்பணிப்பை கண்கூடாகத் காட்டியது. மேலும் உரையாடும் வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு இருந்ததால், இந்த அனுபவம் கற்றுக்கொள்ளவும், ஈடுபாட்டை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைந்தது. என்னைப் பொறுத்த வரையில் ஆழ்ந்த கற்றல் ஆற்றலுக்கு ஒரு உண்மையான சான்றாக இது இருந்தது" என அவர் கூறினார்.

    • கண்காட்சியில் மொத்தம் 62 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
    • பல்வேறு தளவாடப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன

    கோவை:

    இந்திய விமானப்படை சார்பில் தாரங் சக்தி 2024 என்ற பன்னாட்டு விமானப்படை கூட்டுப்பயிற்சி இந்தியாவில் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

    முதல் கட்ட பயிற்சி கடந்த 6-ந் தேதி சூலூர் விமானப்படை தளத்தில் தொடங்கியது. இதில் இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட 5 நாடுகளை சேர்ந்த 130-க்கும் மேற்பட்ட வீரர்கள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அடங்கிய குழுக்கள் பங்கேற்றுள்ளனர்.

    இந்த நிலையில் சர்வதேச விமானப்படை பயிற்சியின் ஒரு பகுதியாக இன்று ராணுவத் தளவாட கண்காட்சி நடந்தது. கண்காட்சியை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். பின்னர் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ராக்கெட்டுகள், ஏவுகணைகள், போர் விமானங்கள், சிறிய ரக போர் விமானங்கள், ஆளில்லா போர் விமானம் உள்ளிட்டவற்றையும் கவர்னர் பார்வையிட்டார்.

    இன்று தொடங்கிய கண்காட்சியானது வருகிற 15-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.


    முதல் 2 நாட்கள் ராணுவ தளவாட உற்பத்தியாளர்கள், ராணுவவீரர்கள் கண்காட்சியை பார்வையிட உள்ளனர். நாளை மறுநாள் சுதந்திர தினத்தையொட்டி, பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட அனுமதி அளிக்கப்பட உள்ளது.

    கண்காட்சியில் மொத்தம் 62 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு துறை தளவாட பொருட்கள், உற்பத்தியில் ஈடுபடும் இந்தியாவை சேர்ந்த ஹிந்துஸ்தான், பெல் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிரபலமான தனியார் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தி உள்ளன.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, சர்வதேச நாடுகளின் ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பதையும், உலகளவில் இந்தியாவின் முன்னேறி வரும் பாதுகாப்புத் திறன்களை முன்னிலைப்ப டுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த பன்னாட்டு கூட்டு விமானப்படை பயிற்சி நடைபெற்று வருகிறது.

    இதில் பாதுகாப்பு படையில் பயன்படுத்தப்படும் போர் விமானங்கள், ட்ரோன், ராக்கெட்டுகள், மற்றும் பல்வேறு தளவாடப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்றனர்.

    • முத்துராமலிங்கத் தேவர் குறித்த சர்ச்சை பேச்சு புகாரில் ரேஸ்கோர்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
    • மூன்று நாள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு போலீஸ் தரப்பில் மனு தாக்கல்.

    முத்துராமலிங்கத் தேவர் குறித்த சர்ச்சை பேச்சு வழக்கில் சவுக்கு சங்கரை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்க வேண்டி போலீஸ் தரப்பில் கோவை 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    அப்போது சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீஸ்க்கு கோவை 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    பெண் காவலர்களை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அதனை எதிர்த்து அவரது தாயார் மனுதாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் குண்டர் சட்டத்தை ரத்து செய்தது.

    அதேவேளையில் நேற்று கஞ்சா வைத்திருந்ததாக போடப்பட்ட வழக்கில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தற்போது சென்னை சிறையில் இருந்து சவுக்கு சங்கர் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    சவுக்கு சங்கர் மீது பல வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன. ஒரு வழக்கில் ஜாமின் கிடைக்கும்போது மற்றொரு வழக்கில் கைது நடவடிக்கை பாய்கிறது. இதனால் அனைத்து மனுக்களையும் ஒன்றாக இணைத்து விசாரணை நடத்க்கோரி சவுக்கு சங்கர் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    கார் பந்தயம் முடியும் வரை நான் ஜாமினில் வெளியில் வரக்கூடாது என உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் என்மீது தினந்தோறும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறார்கள். எல்லா கைதுக்கும் காரணம் உதயநிதி ஸ்டாலின்தான் என சவுக்கு சங்கர் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பேட்டி அளித்தபோது, முத்துராமலிங்கத் தேவர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கூறியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் சவுக்கு சங்கர் ரேஸ்கோர்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    • பொள்ளாச்சியிலும் நகராட்சி அதிகாரிகள் வரிவசூல் செய்து வந்தனர்.
    • பஸ் நிலைய பகுதியில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், உணவகங்கள் செயல்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் 1971-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட விதிகளின் படி 5 ஆண்டுக்கு ஒரு முறை மறுசீராய்வு செய்து வரி வசூல் செய்யப்படுகிறது.

    அதன்படி பொள்ளாச்சியிலும் நகராட்சி அதிகாரிகள் வரிவசூல் செய்து வந்தனர். இந்த நிலையில் நகர பகுதிகளில் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டி உள்ளதாக தனி நபர் ஒருவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    கோர்ட்டு விதிகளை மீறிய கட்டிடங்களை கண்டறிந்து சீல் வைக்க பொள்ளாச்சி நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் நகராட்சி அதிகாரிகள் வரி வசூல் செய்வதை நிறுத்தி விட்டு, விதிமீறிய கட்டிடங்களுக்கு சீல் வைத்து வந்தனர்.

    நகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு அனைத்து வணிகர் சங்கத்தினர் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். இந்த நிலையில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் பொள்ளாச்சியில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.

    அதன்படி இன்று காலை முதல் பொள்ளாச்சியில் உள்ள கடைவீதிகள் உள்பட அனைத்து முக்கிய வீதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    அங்குள்ள மளிகை கடைகள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், உள்பட அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பொள்ளாச்சி கடைவீதிகள் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது.

    பஸ் நிலைய பகுதியில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பொள்ளாச்சிக்கு வந்தவர்கள் அத்தியாவசிய தேவையான பொருட்களை கூட வாங்க முடியாமல் சிரமம் அடைந்தனர்.

    வியாபாரிகளின் கடையடைப்பு போராட்டம் காரணமாக பொள்ளாச்சியில் உள்ள கடைவீதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

    இதற்கிடையே அனைத்து வணிகர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட முடிவு செய்திருந்தனர். ஆனால் போலீசார் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர். இதையடுத்து அனைத்து வணிகர் சங்கத்தினர் அங்குள்ள திருமண மண்டபத்தில் ஒன்றிணைய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    • ஈஷாவில் நேற்று எளிய மற்றும் சக்திவாய்ந்த யோகப் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டனர்.
    • முதற்கட்டப் பயிற்சிகள் தென்னிந்தியாவில் கோவையில் நடைப்பெற்று வருகிறது.

    கோவை ஈஷா யோக மையத்திற்கு ஜெர்மனியின் விமானப்படை தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் இங்கோ கெர்ஹார்ட்ஸ், அவரது மனைவி மற்றும் பிற அதிகாரிகள் வருகைப் புரிந்திருந்தனர்.

    மேலும், இந்திய விமானப் படை வீரர்களுடன் ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் ஈஷாவில் நேற்று எளிய மற்றும் சக்திவாய்ந்த யோகப் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டனர்.

    ஈஷா யோக மையத்திற்கு வருகைப் புரிந்திருந்த பன்னாட்டு விமானப்படை வீரர்களில் ஆண்கள் சூர்ய குண்டத்திலும், பெண்கள் சந்திர குண்டத்திலும் நீராடினர்.

    பின்னர், தியானலிங்கம் மற்றும் ஆதியோகியை அவர்கள் தரிசனம் செய்தனர். மேலும், விமானப்படை வீரர்கள் 'ஆதியோகி திவ்ய தரிசனம்' எனும் வீடியோ இமேஜிங் நிகழ்ச்சியையும் கண்டு வியந்தனர். 

    ஈஷாவில் இவ்வீரர்கள் எளிய மற்றும் சக்தி வாய்ந்த 'நாடி சுத்தி, யோக நமஸ்காரம்' என்ற யோகப் பயிற்சிகளை கற்றுக் கொண்டனர். இப்பயிற்சிகள் மிகவும் அழுத்தமான சூழல்களில் அவர்களின் நெகிழ்வுத் தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துகிறது.

    இந்திய விமானப் படையின் மூலம் முதல் முறையாக 'தரங் சக்தி' எனும் பன்னாட்டு விமானப்படை பயிற்சி நடத்தப்படுகிறது. இதில் இந்திய விமானப்படை வீரர்களுடன் ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த விமானப் படை வீரர்கள் பங்கேற்று உள்ளனர். 

    இதன் முதற்கட்டப் பயிற்சிகள் தென்னிந்தியாவில் கோவையில் நடைப்பெற்று வருகிறது. இந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக பன்னாட்டு விமானப்படை வீரர்கள் ஈஷா யோகா மையத்திற்கு வருகைப் புரிந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

    • வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் உலா வந்தன.
    • யானைகள் நடமாடும் பகுதிகளில் தொழிலாளர்கள் விறகு சேகரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சோலையாறு அணை, கல்லாறு நீர்வீழ்ச்சி, நல்லமுடி காட்சிமுனை, பிர்லா நீர்வீழ்ச்சி, கூழாங்கல் ஆறு உள்ளிட்ட சுற்றுலாதலங்களை காண ஏராளமான சுற்றுலாபயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.

    ஆனைமலை புலிகள் காப்பக பகுதிக்குள் அமைந்துள்ள வால்பாறை மலைப்பகுதியில் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. வனப்பகுதியில் பசுமை நிறைந்து காணப்படுவதால் மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய இரு வனச்சரகங்களிலும் யானைகள் பல்வேறு எஸ்டேட்களில் கூட்டம், கூட்டமாக முகாமிட்டுள்ளன.

    குறிப்பாக குரங்கு முடி, வில்லோனி, பன்னிமேடு, அய்யர்பாடி உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் யானைகள் முகாமிட்டுள்ளன. பகல் நேரத்தில் தேயிலை தோட்டங்களிலும், இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளிலும் யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. பகல் நேரத்தில் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் அச்சத்துடனேயே ஈடுபட்டுள்ளனர்.

    தென்மேற்கு பருவமழைக்கு பின் வால்பாறையில் பசுமை திரும்பியுள்ளதால் தேயிலை எஸ்டேட்களில் யானைகள் முகாமிட்டுள்ளன. யானைகளுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் திருப்திரகமாக இருப்பதால் யானைகள் இங்கு வருகின்றன.

    மனித விலங்கு மோதலை தடுக்க யானைகள் நடமாடும் பகுதிகளில் தொழிலாளர்கள் விறகு சேகரிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    வால்பாறையில் எஸ்டேட் தொழிலார் குடியிருப்பு பகுதிகளில் யானைகள் விரும்பி உட்கொள்ளும் வாழை, பலா, கொய்யா மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. யானைகளுக்கு எவ்வித சிரமமும் இன்றி உணவு கிடைப்பதால் குடியிருப்பு பகுதியிலேயே முகாமிட்டுள்ளன.

    யானைகளுக்கு பிடித்தமான தோட்டப்பயிர்களை குடியிருப்பு பகுதிகளில் பயிரிட வேண்டாம் என்று வனத்துறையினர் பலமுறை நோட்டீஸ் கொடுத்தும் அதை எஸ்டேட் நிர்வாகங்கள் கண்டுகொள்ளவில்லை. அதனால் தான் எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மேற்கு தொடர்ச்சி மலையில் தற்போது மழையின் அளவு குறைந்து விட்டது.
    • சில மணி நேரங்களில் நீர் வெளியேற்றுவதும் நிறுத்தப்பட்டது.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை மழை பெய்து வந்தது.

    மழை பெய்ததால் பொள்ளாச்சி மற்றும் வால்பாறையில் உள்ள அணைகளுக்கு தண்ணீர் அதிகளவு வந்து கொண்டிருந்தது.

    பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார், பரம்பிக்குளம் அணைகளுக்கும் மழை காரணமாக தண்ணீர் அதிகளவு வந்தது. தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரிக்கவே ஆழியார், பரம்பிக்குளம் அணைகள் அடுத்தடுத்து நிரம்பின.

    அணைகள் நிரம்பியதை தொடர்ந்து, பாதுகாப்பு கருதி அணையில் இருந்து மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் தற்போது மழையின் அளவு குறைந்து விட்டது. இருந்தாலும் அணைகளுக்கு வரும் தண்ணீர் அளவு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.

    120 அடி கொண்ட ஆழியார் அணையின் நீர்மட்டம் தற்போது 119.40 அடியாக உள்ளது. அப்பர் ஆழியார் அணையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வினாடிக்கு 1000 கன அடி நீர் வருகிறது.

    இதன் காரணமாக அணையில் இருந்து வினாடிக்கு 1000 முதல் 1200 கன அடி வரை உபரிநீர் வெளியேற்றப்பட்டது. சில மணி நேரங்களில் நீர் வெளியேற்றுவதும் நிறுத்தப்பட்டது.

    அதேபோல டாப்சிலிப்பை அடுத்துள்ள பரம்பிக்குளம் அணைக்கும் நீர்வரத்து அதிகமாக உள்ளது. 78 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 68 அடியாக உள்ளது.

    வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. 900 கன அடி தண்ணீர் திருமூர்த்தி அணைக்கு திறக்கப்படுகறது. தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக ஆழியார், பரம்பிக்குளம் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தமிழ்ப்புதல்வன் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக முதலமைச்சர் என்னிடம் நன்றி கூறினார்.
    • கருணாநிதியின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    கோவை:

    கோவை அரசு கலைக்கல்லூரியில் நடந்த தமிழ்ப்புதல்வன் திட்ட தொடக்க விழாவில் பங்கேற்ற கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் விழா மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சிறிது நேரம் பேசினார். பின்னர் அது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்ப்புதல்வன் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னிடம் நன்றி கூறினார். தமிழ்ப்புதல்வன் திட்டம் மிகவும் நல்ல திட்டம். இந்த பணத்தை மாணவர்கள் போதை பழக்கத்திற்கு பயன்படுத்தாமல் இருந்தால் சிறப்பான திட்டம் தான்.

    கோவை விமான நிலையம் மற்றும் எனது தொகுதிக்கு உட்பட்ட டவுன்ஹால், காந்திபுரம் பகுதியில் மல்டிலெவல் கார் பார்க்கிங் உள்பட தொகுதி சார்ந்த உள்கட்டமைப்பு பிரச்சினைகள் மற்றும் விமான நிலையம் விரிவாக்கம் தொடர்பாக பேசுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அதற்கு அவர் வந்து பாருங்கள் என்று சொன்னார்.

    அதோடு வருகிற 18-ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இதில் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என்று என்னிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். அதற்கு நான் கட்சியில் சொல்கிறேன் என்று தெரிவித்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 28 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுகிறார்கள்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலமாக உக்கடம் புறப்பட்டு சென்றார்.

    கோவை:

    தமிழகத்தில் பெண்கள் உயர்கல்வி படிப்பதை ஊக்குவிக்கும் வகையில் அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி செயல்படுத்தி வருகிறார்.

    இந்தநிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர் கல்வி பயின்று வரும் கல்லூரி மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். இந்த திட்டத்திற்கு தமிழ்ப்புதல்வன் திட்டம் என பெயர் சூட்டப்பட்டது.

    அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்குவதற்கான தமிழ்ப்புதல்வன் திட்டம் மாநில அளவில் இன்று தொடங்கப்பட்டது. இதற்கான தொடக்கவிழா கோவையில் உள்ள அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடந்தது.

    இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை விமான நிலையத்திற்கு வந்தார். பின்னர் அவர் கார் மூலமாக தமிழ்ப்புதல்வன் திட்ட தொடக்க விழா நடைபெற்ற கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு கலைக்கல்லூரி மைதானத்திற்கு சென்றார்.

    அங்கு அவரை அமைச்சர்கள், கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி, மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    அதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா மேடைக்கு சென்றார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் விழா தொடங்கியது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 28 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுகிறார்கள். விழாவில் தமிழ்ப்புதல்வன் திட்டம் தொடர்பான சிறு வீடியோவும் ஒளிபரப்பப்பட்டது.

    அதனை தொடர்ந்து கோவை செம்மொழி பூங்கா வளாகத்தில் அமைக்கப்படும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் ஆகிய புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    அதேபோல் பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயிரியல் துறை மற்றும் சமூக அறிவியல் துறைகளுக்கான புதிய கட்டிடங்கள் மற்றும் கோவை வ.உ.சி மைதானம் அருகே ரூ.1 கோடியில் கட்டப்பட்ட உணவு வீதி, புலியகுளம் அரசு மகளிர் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தையும் முதலமைச்சர் காணொலி வாயிலாக திறந்து வைத்து பேசினார்.

    அதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலமாக உக்கடம் புறப்பட்டு சென்றார். அங்கு உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரையிலான ரூ.481 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அத்துடன் அந்த மேம்பாலத்தில் காரிலும் பயணித்தார்.

    கோவை மாநகரில் 2 நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் கருமத்தம்பட்டி கணியூர் இந்திரா நகர் பகுதிக்கு சென்றார். அங்கு 8 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் வெண்கல சிலையை திறந்து வைத்து பார்வையிட்டார்.

    தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள கலைஞர் அறிவுசார் நூலகத்தை திறந்து வைத்து, 116 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சியின் கொடியினையும் ஏற்றி வைத்தார்.

    இந்த விழாக்களில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், மாநகர மேயர், கவுன்சிலர்கள், மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமி, மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ.ரவி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதேபோல் முதலமைச்சர் சென்ற அனைத்து இடங்களிலும் தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள் திரண்டு வந்து கைகளில் உதய சூரியன் சின்னம், தி.மு.க கொடியை பிடித்தபடி சாலையின் இருபுறங்களிலும் நின்று உற்சாகத்துடன் வரவேற்றனர்.

    முதலமைச்சர் வருகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்பட அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    விழா நடைபெறும் இடமான அரசு கலைக்கல்லூரி பகுதி, உக்கடம், கணியூர், விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோவையில் 3 விழாக்களையும் முடித்துக் கொண்டு பிற்பகலில் கோவை விமான நிலையத்திற்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து விமானம் மூலமாக மீண்டும் சென்னை செல்கிறார்.

    • 6- 12 அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வியில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்.
    • 3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.360 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் "தமிழ்ப் புதல்வன்" திட்டத்தை கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பற்றி பேசி மாணவர்களை ஊக்குவித்தார்.

    மேலும் அவர் பேசியதாவது:-

    ஒலிம்பிக்கில் பங்கேற்ற சகோதரி வினேஷ் போகத் எப்படிப்பட்ட தடைகளை எதிர்கொண்டார் என அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் பலவீனமாக வீட்டிற்குள் முடங்கிவிடாமல், தைரியமும், தன்னம்பிக்கையும், அசாத்திய துணிச்சலும் கொண்ட பெண்ணாக போராடி நாம் அனைவரும் பாராட்டும் அளவிற்கு கொடி கட்டி பறக்கிறார்.

    தடைகள் என்பது உடைத்தெறியத்தான். தடைகளை பார்த்து ஒருபோதும் சோர்ந்துவிடக்கூடாது. வெற்றி ஒன்றே இலக்காக இருக்க வேண்டும்.

    உங்கள் மேல் உங்களைவிட நான் அதிக நம்பிக்கை வைத்துள்ளேன். உங்களுக்கு பின் உங்கள் பெற்றோர் மட்டுமல்ல திமுக அரசும் உள்ளது.

    வரலாற்றில் என்றைக்கும் நம்ம பெயரை சொல்லப் போகிறத் திட்டமாக அது இருக்கும். அப்படிப்பட்ட திட்டமாக உருவாகியுள்ள 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தை தொடங்கி வைத்ததில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×