என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • கோவை மாவட்டத்தில் தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • பெரும்பாலான குடிசை வீடுகளில் ஆட்கள் இல்லை என்பதால் பெரியளவில் ஆபத்து இல்லையென அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அப்போது தீபாவளியை வரவேற்கும் வகையில் பொதுமக்கள் இரவு முதலே மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்து கொண்டாட தொடங்கினர்.

    தமிழக அரசின் சார்பில் பட்டாசுகள் வெடிக்க குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். புத்தாடை அணிந்து, சாமி கும்பிட்டு பலகாரங்களை ஒருவருக்கொருவர் கொடுத்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

    அதன்பிறகு அவர்கள் பட்டாசுகளுடன் தெருக்களுக்கு வந்திருந்து வெடிகளை வெடித்து மகிழ்ச்சி அடைந்தனர். தீபாவளி வெடிவிபத்துகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

    இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் நேற்று 11 இடங்களில் ராக்கெட் வெடிகளால் தீவிபத்துக்கள் ஏற்பட்டது தெரியவந்து உள்ளது. அதாவது கோவை மாநகரில் ஒலம்பஸ் பெருமாள்கோவில் வீடு, மேட்டுப்பாளையத்தில் 2 வீடுகள், தொண்டாமுத்தூர், அன்னூர், கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் ராக்கெட் வெடிகள் விழுந்து குடிசை வீடுகள் தீப்பிடித்தன. ஆனாலும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    மேலும் தீபாவளி வெடி வெடித்ததில் பல்வேறு இடங்களில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து அவர்கள் ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    கோவை மாவட்டத்தில் தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனால் கடந்தாண்டை விட இந்தாண்டு விபத்துக்கள் பெருமளவில் குறைந்து இருந்தது. மேலும் கோவையில் உள்ள 13 தீயணைப்பு நிலையங்களில் வேலை பார்க்கும் 110-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீபாவளி அன்று பணியில் இருந்தனர். மொத்தம் 16 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. தீ விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் வீரர்கள் விரைந்து சென்று தீயை இணைத்தனர். பெரும்பாலான குடிசை வீடுகளில் ஆட்கள் இல்லை என்பதால் பெரியளவில் ஆபத்து இல்லையென அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • கிருஷ்ணவேணி வால்பாறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
    • தலையில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணவேணி, பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள அங்கலக்குறிச்சியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (வயது 51). இவர் வால்பாறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

    நேற்று இவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். மாலை 6 மணி அளவில் அங்கலக்குறிச்சியில் இருந்து கோட்டூர் வழியாக போலீஸ் நிலையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    கோட்டூர் வள்ளியம்மாள் தியேட்டர் அருகே சென்றபோது அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள் கிருஷ்ணவேணியின் மோட்டார்சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் கிருஷ்ணவேணி தூக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணவேணி, பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் கிருஷ்ணவேணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    விபத்து குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிருஷ்ணவேணியின் மீது மோட்டார்சைக்கிளை மோதிய வாலிபர் அங்கலகுறிச்சியைச் சேர்ந்த சிவகுமார் (21) என்பவர் என தெரியவந்தது. விபத்தில் இவரும் காயம் அடைந்துள்ளார். அவர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவகுமார் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.

    • தீபாவளி முன்னிட்டு 30 கிராமங்களில் இனிப்புகள் வழங்கப்பட்டன.
    • தீபாவளி அன்றும் மலைவாழ் கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட உள்ளன.

    தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ஈஷா யோக மையத்தை சுற்றியுள்ள பல்வேறு மலைவாழ் கிராமங்களைச் சேர்ந்த பழங்குடி குழந்தைகளுக்கு, ஈஷா சார்பில் புத்தாடை மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட்டன. மேலும் 30 கிராமங்களில் உள்ள மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    ஈஷாவை சுற்றியுள்ள தாணிக்கண்டி, மடக்காடு, பட்டியார் கோவில்பதி, சாவுக்காடு, முள்ளங்காடு, குளத்தேறி உள்ளிட்ட பழங்குடி கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு ஈஷா சார்பில் புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட்டன. மேலும் தீபாவளி நாளன்றும் இந்த மலைவாழ் கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட உள்ளன.

    இதனுடன் முட்டத்துவயல், செம்மேடு, காந்தி காலனி, நொய்யல் நகர், இருட்டுப்பள்ளம், சாடிவயல் சோதனை சாவடி, ராஜீவ் காலனி உள்ளிட்ட 30 கிராமங்களில் இருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வீடு வீடாக சென்று இனிப்புகள் வழங்கப்பட்டன.

    ஈஷா யோக மையத்தை சுற்றியுள்ள பழங்குடியின குடியிருப்புகள் மற்றும் கிராம மக்களின் நல்வாழ்விற்காக பல்வேறு பணிகளை ஈஷாவின் கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் மூலம் கடந்து 20 வருடங்களாக செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாணவர் பிரபு சூப்பர் ஹீரோ, சூப்பர் பவர் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வந்துள்ளார்.
    • கடந்த வாரம் தான் சூனியத்தால் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தனது நண்பர்களிடம் கூறி உள்ளார்.

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த பிரபு (19) என்ற மாணவர் கோவையில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று மாலை திடீரென கல்லூரி விடுதியின் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.

    4 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்ததால் அவருக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதுடன், தலையிலும் காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்..

    மாணவர்கள் விடுதியின் 4வது மாடியில் இருந்து பிரபு கீழே குதிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மாணவர் பிரபு சூப்பர் ஹீரோ, சூப்பர் பவர் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வந்ததுடன் அதுபோன்ற பவர் தனக்கு இருப்பதாகவும் நண்பர்களிடம் கூறியுள்ளார். தனக்கு யாரோ ஒருவர் சூனியம் வைத்ததாகவும், கடந்த வாரம் தான் சூனியத்தால் பாதிக்கப்பட்டதாகவும் அவர் தனது நண்பர்களிடம் கூறி உள்ளார்.

    தனக்கு சூப்பர் ஹீரோக்கள் போன்ற சூப்பர் பவர் இருப்பதாகவும், அதனால் எந்த கட்டிடத்தில் இருந்தும் தன்னால் குதிக்க முடியும் என்றும் பிரபு நம்பியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    மேலும், இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 4 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • வர்ணம் பூசும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

    கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். செவ்வாய், வெள்ளி, அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவில் இருக்கும்.

    இந்தநிலையில் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை இந்த ஆண்டு நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதற்காக கோவில் கோபுரங்கள் புனரமைப்புபணிகள் நடைபெற்றது. தற்போது புனரமைப்பு பணிகள் அனைத்தும் முடிந்து வர்ணம் பூசும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

    வருகிற டிசம்பர் 12-ந்தேதி ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஆனைமலை மாசாணியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் சிறந்து விளங்கும் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

    இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் உத்தரவின் பேரில், தற்போது கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கோவிலில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் ராஜ கோபுரத்திற்கு வர்ணம் பூசப்பட்டு மகா கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.

    இதையடுத்து வரும் டிசம்பர் 12-ந்தேதி மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்று காலை 9 மணி முதல் 9.45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் 4 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதி மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    மகா கும்பாபிஷேகத்திற்கான நிகழ்ச்சியின் முழு விவரம் விரைவில் அறிவிக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா சிறப்புடன் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    முன்னதாக கோவிலில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன், உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர்கள் தங்க மணி, திருமுருகன், மஞ்சுளா தேவி, மருதமுத்து, கண்காணிப்பாளர்கள் அர்ஜூன், புவனேஸ்வரி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    • ஏராளமான தனியார் பஸ்கள், வேன்கள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன.
    • மாநாட்டுக்கு கோவை ரசிகர்கள் அணிவகுத்து செல்ல உள்ளனர்.

    கோவை:

    விக்கிரவாண்டியில் நாளை மறுநாள் (27-ந் தேதி) நடைபெறும் தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பங்கேற்க விஜய் ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள்.

    நடிகர் விஜய்க்கு கொங்கு மண்டலமான கோவையில் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். இவர்களில் ஆயிரக்கணக்கானோர் விக்கிரவாண்டி மாநாட்டில் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஏராளமான தனியார் பஸ்கள், வேன்கள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், துடியலூர் போன்ற இடங்களில் இருந்து வாகனங்கள் மாநாட்டுக்கு புறப்பட உள்ளன.

    கட்சிக் கொடி ஏந்தி, தாரை-தப்பட்டை முழங்க மாநாட்டுக்கு கோவை ரசிகர்கள் அணிவகுத்து செல்ல உள்ளனர்.

    இதற்கிடையே மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து கோவையில் பல இடங்களில் சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும் நகர் முழுக்க சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டு உள்ளன. சுவரொட்டிகளில் மாநாடு தொடர்பாக பரபரப்பு வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.

    கோவை ரெயில்நிலையம் முன்பு அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அந்த வழியாகச் செல்லும் பொதுமக்களை கவரும் வகையில் உள்ளன.

    அதில் மீண்டும் எம்.ஜி.ஆர் வருகிறார், மக்களாட்சி தருகிறார் என்ற வாசகம் இடம்பிடித்துள்ளது. சுவரொட்டியில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். படமும், விஜய் படமும் இடம்பெற்றுள்ளது.

    எங்க வீட்டு பிள்ளை படத்தில் எம்.ஜி.ஆர். சாட்டையை சுற்றுவது போல் தோன்றும் காட்சியும், அதேபோல் விஜய் சாட்டையை சுற்றுவது போன்று படம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

    மற்றொரு சுவரொட்டியில் தமிழகத்தின் எதிர்காலமே, நல்லாட்சியை எதிர்நோக்கும் இளைய தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரமே என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

    ஏற்கனவே மாநாடு நடைபெறும் மைதான முகப்பில் பெரியார், அண்ணா போன்ற தலைவர்களின் கட்-அவுட்டுகள் இடம்பெற்றுள்ள நிலையில் கோவையில் எம்.ஜி.ஆர். படத்துடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • அணைக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.
    • தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் தண்ணீரின் வரத்து அதிகரித்து.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    இந்த மழையால் மாவட்டத்தில் உள்ள குளம், குட்டைகள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    பரம்பிக்குளம்-ஆழியாறு பிஏபி திட்டத்தில் அதிக கொள்ளளவு கொண்ட அணையாக பரம்பிக்குளம் அணை உள்ளது.

    இந்த அணையின் முழு கொள்ளளவான 17.82 டி.எம்.சியை எட்டிவிட்டால் ஒரு ஆண்டுக்கு குடிநீருக்கும், பாசனத்துக்கும் போதுமானதாக இருக்கும்.

    இந்த பிஏபி திட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்ததால் திட்டத்தில் உள்ள அனைத்து தொகுப்பு அணைகளும் நிரம்பின. இதையடுத்து பரம்பிக்குளம், ஆழியாறு ஆகிய அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

    தென்மேற்கு பருவமழை குறைந்த பிறகு அணைகளில் இருந்து நீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வால்பாறை மற்றும் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் தண்ணீரின் வரத்து அதிகரித்து. நேற்று பரம்பிக்குளம் அணை தனது முழு கொள்ளளவை எட்டி முழுவதுமாக நிரம்பியது.

    அணை நிரம்பியதை அடுத்து, பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து மதகுகள் வழியாக 2,500 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.

    • மோட்டார் சைக்கிளை பறித்துக் கொண்டு தகராறு.
    • 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை.

    கோவை:

    தேனி மாவட்டம், பங்களா மேடு, பழைய டி.வி.எஸ். ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ராகுல் (வயது 18). இவர் நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக கோவை சவுரி பாளையம் ரோட்டில் அண்ணா நகர் பகுதியில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி வருகிறார்.

    இந்த நிலையில் ராகுலுக்கும், அதே கல்லூரியில் பி.பி.ஏ.முதலாம் ஆண்டு படிக்கும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர் ராகுல்காந்தி என்பவருக்கும் சீனியர்-ஜூனியர் பிரச்சனை தொடர்பாக மோதல் இருந்து வந்தது.

    இந்த நிலையில் கல்லூரியில் கடந்த 19-ந் தேதி தனியார் டி.வி. நிகழ்ச்சி அங்கு உள்ள ஆடிட்டோரியத்தில் நடந்தது. அப்போது மீண்டும் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்படடது. சக மாணவர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர்.

    நேற்று முன்தினம் ராகுல் அங்கு உள்ள டீக்கடை அருகில் நின்ற போது மீண்டும் ராகுல்காந்தி மற்றும் அவரது நண்பர்கள் அவரிடம் தகராறு செய்தனர். அப்போது ராகுலுடன் தங்கி படிக்கும் மாணவர் கதிர் என்பவர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார். அப்போது ராகுல் காந்தியின் நண்பர்கள் அவரது மோட்டார் சைக்கிளை பறித்துக் கொண்டு சென்றனர்.

    அந்த மோட்டார் சைக்கிளில் ஜிபிஎஸ் கருவி வசதி இருந்ததால் அதன் மூலம் மோட்டார் சைக்கிள் ராம நாதபுரம் ஒலம்பஸ், பாரதி நகரில் இருப்பதை கண்டு பிடித்து நேற்று மாலை கதிர் மற்றும் நண்பர்கள் மீண்டும் எடுத்துக் கொண்டு திரும்பி வந்தனர்.

    நேற்று மாலை ராகுல் காந்தி, தனது நண்பர்கள் சிலருடன் ராகுல் தங்கியிருந்த அறைக்கு சென்றனர். அங்கிருந்த ராகுல் மற்றும் கதிர் அவரது நண்பர்களை அடித்து உதைத்து கத்தியால் குத்தினர்.

    இதில் ராகுல் மற்றும் அவரது நண்பர்கள் தினேஷ் பாண்டியன், ரோஷன் ராஜா ஆகியோருக்கு தலை, கை, மார்பு, கழுத்து பகுதிகளில் கத்திக்குத்து விழுந்தது.

    அதோடு நிற்காமல் ராகுல் காந்தி மற்றும் அவரது நண்பர்கள் அவர்கள் தங்கியிருந்த அறையையும் அடித்து நொறுக்கினர். அதன் பிறகு அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதை பார்த்த மற்ற மாண வர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். காயம் அடைந்த மாண வர்கள் மீட்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகி ச்சை அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர் ராகுல் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவம் தொடர்பாக முதலாம் ஆண்டு மாணவர் ராகுல்காந்தி, கெவின் சதீஷ் மற்றும் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பஸ்சின் என்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது.
    • சாலையில் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    குனியமுத்தூர்:

    பொள்ளாச்சி புதிய பஸ் நிலையத்தில் இருந்து கோவைக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிகளவில் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த பஸ்களில் பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு பள்ளி, கல்லூரிக்கு வரும் மாணவ-மாணவிகள் மற்றும் பணி நிமித்தமாக வருவோர் என ஏராளமான பயணிகள் தினமும் பயணம் செய்து வருகின்றனர்.

    இன்று காலை பொள்ளாச்சி புதிய பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ் ஒன்று கோவைக்கு புறப்பட்டது. இந்த பஸ்சில் பொள்ளாச்சியை சேர்ந்த டிரைவர் சுரேஷ் (27) என்பவர் ஓட்டுனராக இருந்தார். கண்டக்டராக கதிரேசன் (55) என்பவர் இருந்தார்.

    அதிகாலை நேரம் என்பதால் பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு வேலைக்கு வருவோர் உள்பட 40 பயணிகள் பஸ்சில் இருந்தனர்.

    காலை 8 மணியளவில் ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ்சின் என்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது.

    இதை பார்த்த டிரைவர் சுரேஷ் அதிர்ச்சியானார். ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போவதை உணர்ந்த அவர் உடனடியாக பஸ்சை சாலையோரம் நிறுத்தினார்.

    பின்னர் பஸ்சில் இருந்த பயணிகள் 40 பேரையும் உடனடியாக பஸ்சை விட்டு கீழே இறங்குமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் மற்றும் டிரைவர், கண்டக்டர் அனைவரும் பஸ்சை விட்டு இறங்கினர்.

    அவர்கள் இறங்கிய சிறிது நேரத்தில் பஸ் தீப்பிடித்து எரிய தொடங்கியது. பஸ்சின் முன்பகுதியில் எரிய தொடங்கிய தீ பஸ் முழுவதும் வேகமாக பரவி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

    இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் தண்ணீரை பீய்ச்சி அடித்து பஸ்சில் பற்றி எரிந்த தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் பஸ்சின் இருக்கைகளும் எரிந்து விட்டன. பஸ் தற்போது பாதி எரிந்த நிலையில் உள்ளது.

    தகவல் அறிந்து செட்டிப்பாளையம் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் எரிந்த பஸ்சை பார்வையிட்டனர்.

    பஸ்சில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி? தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போக்குவரத்து கழக அதிகாரிகளும் விசாரிக்கின்றனர்.

    என்ஜினில் புகை வருவதை பார்த்ததும் டிரைவர் உடனடியாக சாமர்த்தியமாக செயல்பட்டு பஸ் நிறுத்தி பயணிகளை கீழே இறக்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 40 பயணிகளும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

    காலை நேரத்தில் பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த அரசு பஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    • மக்களை கவரும் வகையில் கடைகளிலும் பல்வேறு சலுகை அறிவிப்புகளும் வெளியிட்டுள்ளனர்.
    • பொதுமக்கள் சிரமமின்றி பொருட்களை வாங்கி செல்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    கோவை:

    தீபாவளி பண்டிகை வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இன்னும் சில நாட்களே இருப்பதால் கோவையில் உள்ள கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    ஜவுளிக்கடைகள், எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், நகைக்கடைகள், மளிகை கடைகள், பலகார கடைகள் உள்பட அனைத்து கடைகளிலுமே மக்கள் கூட்டம் காணப்படுகிறது.

    மக்கள் தங்களுக்கு தேவையான புதுத்துணிகள், வீட்டு உபயோக பொருட்களை வாங்கி செல்கின்றனர். மக்களை கவரும் வகையில் கடைகளிலும் பல்வேறு சலுகை அறிவிப்புகளும் வெளியிட்டுள்ளனர்.

    இந்த நிலையில் தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் பகல் நேரங்களில் கடைவீதிக்கு செல்ல முடியாதவர்களின் வசதியை கருத்தில் கொண்டு நள்ளிரவு 1 மணி வரை கடைகளை திறக்க கோவை மாநகர போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.

    இதுகுறித்து கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மாநகரில் உள்ள கடைவீதிகளில் தற்போது கூட்டம் அதிகமாக உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கும், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவன ஊழியர்களின் அன்றாட வேலை பாதிக்காத வகையில் கடைவீதிக்கு சென்று பொருட்கள் வாங்குவதற்கு வசதியாக கடை மற்றும் வியாபார நிறுவனங்களின் விற்பனை நேரத்தை அதிகரிப்பது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் தீபாவளி பண்டிகை வரை கோவை மாநகரில் உள்ள அனைத்து வியாபார தளங்களும் வழக்கமான நேரத்தை விட கூடுதலாக நள்ளிரவு 1 மணி வரை செயல்பட தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் பொதுமக்கள் சிரமமின்றி பொருட்களை வாங்கி செல்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    போலீசாரின் இந்த அறிவிப்பு வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசாரின் அனுமதிக்கு வியாபாரிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

    • நூலகத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
    • விழாக்கள் நவம்பர் 4-ந் தேதி நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    கோவை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    விழாவில் அவர் பேசுகையில் அடுத்த மாதம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வரும் அரசு திட்டப்பணிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு கள ஆய்வு செய்யப்போவதாக அறிவித்தார்.

    அதன்படி முதல் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவம்பர் மாதம் கோவை வருகிறார். காந்திபுரத்தில் 6.9 ஏக்கர் பரப்பளவில் ரூ.300 கோடியில் கருணாநிதி நூற்றாண்டு நூலகம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நூலகத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

    முன்னதாக விளாங்குறிச்சி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2-வது ஐ.டி. பார்க் வளாகத்தை திறந்து வைக்கிறார். பீளமேடு பகுதியில் ஏற்கனவே ஐ.டி. பார்க் செயல்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திற்காக பொதுப்பணித்துறை மூலம் கோவை விளாங்குறிச்சி தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் ரூ.114.16 கோடி மதிப்பில் இந்த புதிய ஐ.டி. பார்க் கட்டப்பட்டது. இதை முதலமைச்சர் திறந்துவைத்து ஐ.டி. பொறியாளர்களுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த விழாக்கள் நவம்பர் 4-ந் தேதி நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் கோவை வருவது உறுதியாகிஉள்ளது. ஆனால் விழா 4-ந் தேதி நடைபெறுமா, தள்ளிப்போகுமா என்பது தெரியவில்லை. காரணம் 4-ந் தேதி என்பது தீபாவளி விடுமுறைக்கு பிறகு வரும் முதல் வேலைநாளாக ஆகும். இதனால் முதலமைச்சர் வருகை தேதி முறைப்படி அறிவிக்கப்பட்டதும் தெரிவிக்கிறோம் என்றனர்.

    • சிவானந்தா காலனியில் வசிக்கும் மற்றொரு தொழில் அதிபர் வீட்டிலும் இன்று வருமான வரிச்சோதனை நடந்தது.
    • கோவையில் ஒரேநாளில் 3 தொழில் அதிபர்கள் வீடுகளில் வருமான வரிச்சோதனை நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    கோவை:

    கோவை சிங்காநல்லூர் சென்ட்ரல் ஸ்டுடியோ சாலையில் வசிக்கும் தொழில் அதிபர் வீட்டுக்கு இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென வந்தனர். அவர்கள் தொழில் அதிபரின் நிறுவனம் தொடர்பாக வரவு-செலவு விவரங்களை கேட்டறிந்து சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இதேபோல உப்பிலிபாளையம் ராமானுஜம் நகரில் வசிக்கும் தொழில் அதிபர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சிவானந்தா காலனியில் வசிக்கும் மற்றொரு தொழில் அதிபர் வீட்டிலும் இன்று வருமான வரிச்சோதனை நடந்தது.

    கோவையில் ஒரேநாளில் 3 தொழில் அதிபர்கள் வீடுகளில் வருமான வரிச்சோதனை நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×