என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த சுபாஷினி குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாழ்க்கையில் விரக்தி அடைந்து டீசலை உடலில் ஊற்றி தீ பற்ற வைத்தார்.
    • கண்இமைக்கும் நேரத்தில் சுபாஷினி உடல் முழுவதும் தீ பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார்.

    கோவை:

    கோவை சூலூர் அருகே உள்ள வையாபுரி நகரை சேர்ந்தவர் வைகுந்தன்.

    இவரது மனைவி சுபாஷினி (வயது 28). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் குழந்தைகள் இல்லை. மேலும் வைகுந்தன் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து சுபாஷினியிடம் தகராறு செய்து வந்தார்.

    இதன் காரணமாக மனவேதனை அடைந்த அவர் 3 முறை தற்கொலைக்கு முயன்றார். சுபாஷினியை அவரது உறவினர்கள் காப்பாற்றினர்.

    சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாழ்க்கையில் விரக்தி அடைந்து டீசலை உடலில் ஊற்றி தீ பற்ற வைத்தார்.

    கண்இமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று சுபாஷினியை மீட்டனர்.

    பின்னர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சுபாஷினி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குறைதீர்ப்பு கூட்டம் வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடக்க உள்ளது.
    • கலெக்டர் கிராந்திகுமார்பாடி நேரடியாக கலந்து கொள்ள உள்ளார்.

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடப்பு மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடக்க உள்ளது.

    இதில் கலெக்டர் கிராந்திகுமார்பாடி நேரடியாக கலந்து கொண்டு விவசாயிகளிடம் இருந்து மனுக்களை பெற உள்ளார். எனவே கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், இந்த கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கேட்டு பயன் பெறலாம். குறைதீர்ப்பு கூட்டத்துக்கு வரும் விவசாயிகள், கொரோனா விதிமுறைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாலகிருஷ்ணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.
    • புகாரின் பேரில் ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    திருப்பூர் மாவட்டம் பெத்தம்பட்டி என்.எம்.காலனியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (35). இவர் தச்சு வேலை செய்து வந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக பாலகிருஷ்ணன் மனைவியை பிரிந்து, தனது தாயாருடன் வசித்து வந்தார்.

    இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. சம்பவத்தன்று பாலகிருஷ்ணன் பொள்ளாச்சி அம்பாரம்பாளையம் ஆற்றில் குளித்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மர்பநபர் ஒருவர் ஓடுவதை கண்டு சஞ்சீவ்குமார் சார்தா அதிர்ச்சி அடைந்தார்.
    • இதுகுறித்து அவர் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை வேலாண்டிபாளையம் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் சஞ்சீவ்குமார் சார்தா(55). இவர் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தார்.

    பின்னர் குடும்பத்தினருடன் வீட்டில் உள்ள 1-வது மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து அடையாளம் தெரியாத மர்பநபர் ஒருவர் ஓடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 6½ கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.42 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

    • முதுமலை புலிகள் சரணாலயத்தில் பல்லுயிரின பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
    • மாணவர்களிடம் களிமண்களை கொடுத்த வனத்துறை அதிகாரிகள், வனவிலங்குகளின் உருவத்தை வடிவமைக்கும்படி கூறினர்.

    மேட்டுப்பாளையம்,

    நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் சரணாலயம் உள்ளது. இங்கு உள்ள மசினகுடி, யானைப்பாடி ஆகிய காட்டுப்பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களில் பலர் வனத்துறையில் வனவராக வேலை பார்த்து வருகின்றனர். இன்னும் சிலர் தெப்பக்காடு யானைகள் புத்துணர்வு முகாமில் பாகன்களாக உள்ளனர்.

    இதுதவிர வனவிலங்கு வேட்டை தடுப்பு, தீ பரவல் தடுப்பு மற்றும் பல்லுயிரின பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் பழங்குடியின மக்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    முதுமலை புலிகள் சரணாலயத்தில் பல்லுயிரின பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி பழங்குடியின மாணவர்களை அடர்வனத்திற்குள் சுற்றுலா அழைத்து செல்ல வனத்துறையினர் திட்டமிட்டனர்.

    அதன்படி மசினகுடி, ஆனைப்பட்டியை சேர்ந்த 40 பழங்குடியின மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, நேற்று அவர்கள் யானை சவாரி மூலம் புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்வனத்திற்குள் அழைத்து செல்லப்பட்டனர்.

    10 கி.மீ சுற்றளவுக்கு சென்ற மாணவ-மாணவிகள், காட்டுப்பகுதியில் சுற்றித்திரியும் மான்கள், யானை உள்பட பல்வேறு வனவிலங்குகளை நேரடியாக கண்டு களித்து உற்சாகம் அடைந்தனர்.

    இதனை தொடர்ந்து மீண்டும் அவர்கள் சரணாலய அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

    அங்கு அவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. பின்னர், மாணவ-மாணவிகளின் சுவாரசியத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டது.இதன் ஒருபகுதியாக மாணவர்களிடம் களிமண்களை கொடுத்த வனத்துறை அதிகாரிகள், வனவிலங்குகளின் உருவத்தை வடிவமைக்கும்படி கூறினர்.

    அப்போது மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் பாம்பு, பறவைகள் ஆகியவற்றின் உருவங்களை களிமண்ணால் வடிவமைத்து அசத்தினார்கள். மேட்டுப்பாளையம் முதுமலை புலிகள் சரணாலயத்தில் முதல்முறையாக பழங்குடியின மாணவ- மாணவிகள் யானை சவாரி மூலம் காட்டை சுற்றிப்பார்த்த சம்பவம், அந்த பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் விஜயலட்சுமி மனவேதனை அடைந்தார்.
    • போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குனியமுத்தூர்,

    கோவை போத்தனூர் அருகே உள்ள பிள்ளையார்புரத்தை சேர்ந்தவர் ஜோதிமணி.

    இவரது மகள் விஜயலட்சுமி (வயது 20). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து முடித்து இருந்தார்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜயலட்சுமிக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

    2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் விஜயலட்சுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் வாலிபருடனான காதலை கைவிடுமாறு அறிவுரை கூறினார். இதனால் அவர் கடந்த 2 மாதங்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று விஜயலட்சுமியின் தாய் தனது மகனுடன் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது வீட்டில் விஜயலட்சுமி மட்டும் இருந்தார்.

    அவர் செல்போன் மூலமாக தனது தாயை தொடர்பு கொண்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

    பின்னர் செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதனால் சந்தேகம் அடைந்த சாந்தி தனது மகளுக்கு செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் நீண்ட நேரமாக அவர் போனை எடுக்கவில்லை.

    உடனடியாக அவர் தனது உறவினர் ஒருவரை தொடர்பு கொண்டு வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறினார். அவர் சென்று பார்த்த போது விஜயலட்சுமி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனை கேட்டு அவரது தாய் அதிர்ச்சியடைந்தார்.

    இந்த தகவல் கிடைத்ததும் போத்தனூர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் தற்கொலை செய்து கொண்ட விஜயலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வாலிபர் கண்டக்டரிடம் மீதி ரூ.5 சில்லறை தரும்படி கேட்டார்.
    • இது குறித்து சசிகுமார் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கோவை,

    ஈரோடு மாவட்டம் அரச்சலூரை சேர்ந்தவர் சசிகுமார்(வயது50). இவர் கோவை அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் அப்பநாயக்கன்பட்டியில் இருந்து காந்திபுரம் செல்லும் பஸ்சில் பணி செய்து கொண்டிருந்தார். அப்போது சூலூர் பஸ் நிலையத்தில் இளம்பெண்ணுடன் வாலிபர் ஒருவர் பஸ்சில் ஏறினார்.சிறிது தூரம் சென்ற பின்னர் இருவரும் ரூ.20 கொடுத்து டிக்கெட் வாங்கினர்.

    இதையடுத்து அந்த வாலிபர் கண்டக்டரிடம் மீதி ரூ.5 சில்லறை தரும்படி கேட்டார். அதற்கு சசிகுமார் சிறிது நேரம் கழித்து மீதி தொகையை தருவதாக அந்த வாலிபரிடம் கூறினார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் சசிகுமாரை தகாத வார்த்தைகளால் திட்டி அவரது முகத்தில் அடித்தார்.

    இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, சசிகுமார் அரசு பஸ் டிரைவரிடம் பஸ்சை நிறுத்தாமல் போலீஸ் நிலையத்திற்கு செல்லுமாறு கூறினார். அப்போது போக்குவரத்து நெரிசல் காரணமாக பஸ் சிக்னலில் மெதுவாக சென்றிருந்த போது அந்த வாலிபரும் அவருடன் வந்த இளம்பெண்ணும் பஸ்சில் இருந்து தப்பித்து சென்றனர். இது குறித்து சசிகுமார் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.

    • அடிக்கப்பட்ட திருமண பத்திரிகையிலும் மும்மதங்களை சேர்ந்த குருமார்களின் பெயர்களும் அச்சிடப்பட்டுள்ளது.
    • போலீஸ் அதிகாரி ஒருவர் மதங்களைக் கடந்து மகளின் திருமணத்தை நடத்த வேண்டும் என்று முனைப்பு காட்டியிருப்பது, போலீஸ்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக உள்ளது.

    கோவை:

    கோவையில் மும்மதங்களைச் சேர்ந்த குருமார்கள் முன்னிலையில் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் போலீஸ் டி.எஸ்.பி. வீட்டு திருமண அழைப்பிதழ் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

    கோவை மாவட்ட குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி.யாக பணியாற்றி வருபவர் வெற்றிச்செல்வன்.

    இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.ஐ.சி எனப்படும் மதம் சார்ந்த பிரச்சனைகளை கண்காணிக்கும் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவில் பணியாற்றி வந்தார்.

    அப்போது அவர் மதம் சார்ந்த பிரச்சினைகளை சிறப்பாக கையாண்டு சுமூகமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். பல பிரச்சினைகளின் போது துரிதமாக செயல்பட்டு கலவரங்களை தடுத்தும், கட்டுப்படுத்தியும் உள்ளார். இதற்காக அவர் ஜனாதிபதி விருது மற்றும் அண்ணா விருதையும் பெற்றுள்ளார்.

    இவருக்கு நிஷாந்தினி என்ற மகள் உள்ளார். இவர் பி.எச்.டி படித்து வருகிறார். இந்நிலையில் வெற்றி செல்வன், தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க அவர் முடிவு செய்தார்.

    அதன்படி நெல்லையை சேர்ந்த சுதர்சன் என்பவரை தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க பேசி முடித்தார். எம்மதமும் சம்மதம் என்ற எண்ணத்தில் இருக்கும் வெற்றி செல்வன் தனது மகளின் திருமணத்தையும் மதத்தை கடந்து இந்து, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மத குருமார்கள் முன்னிலையில் நடத்த முடிவெடுத்தார்.

    அதன்படி பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அடிகளார், கவுமார மடாலயம் குருமகா சந்நிதானம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், காமாட்சி புரி ஆதீனம் ஞானகசாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள், கோவை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்வினாஸ் மற்றும் போத்தனூர் இமாம் மஸ்ஜிதே இப்ராஹிம் சுன்னத் ஜமாஅத் தலைவர் மவுளவி அல்லாஜ் அப்துல் ரஹீம் இம்தாதி பாகவி ஆகியோருக்கு தனது மகள் திருமணத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார்.

    இது தொடர்பாக அடிக்கப்பட்ட திருமண பத்திரிகையிலும் மும்மதங்களை சேர்ந்த குருமார்களின் பெயர்களும் அச்சிடப்பட்டுள்ளது.

    மேலும் திருமண பத்திரிக்கையில்,

    "உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன

    மடந்தையொடு எம்மிடை நட்பு."

    என்ற திருக்குறளும் அச்சிடப்பட்டுள்ளது.

    தற்போது இந்த திருமண பத்திரிக்கை சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

    போலீஸ் அதிகாரி ஒருவர் மதங்களைக் கடந்து மகளின் திருமணத்தை நடத்த வேண்டும் என்று முனைப்பு காட்டியிருப்பது, போலீஸ்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக உள்ளது. இந்நிலையில் இவரின் மத நல்லினக்கத்திற்கு பொதுமக்கள் மற்றும் சக போலீசார் வரவேற்பையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

    இந்த திருமண நிகழ்ச்சி நாளை (புதன்கிழமை) மற்றும் 25-ந் தேதி (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்களில் கோவை மாவட்டம் சூலூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. தமிழக போலீஸ் டி.ஜி.பி.க்கள் ஏ.கே.விஸ்வநாதன், சீமா அகர்வால், கூடுதல் டி.ஜி.பி அமல்ராஜ் மற்றும் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

    • தலையில் பிளாஸ்டிக் டப்பா மாட்டியதால் உணவு உண்ண முடியாமலும், சாப்பிடததால் மிகுந்த சோர்வுடன் காணப்பட்டது.
    • நாய் மிகவும் சிரமப்படுவதை பார்த்த பொதுமக்கள் தன்னார்வ விலங்குகள் நல அமைப்புக்கு தகவல் அளித்தனர்.

    கோவை:

    கோவை பீளமேடு அருகே சேரன் மாநகரில் குமுதம் நகர் உள்ளது.

    இந்த நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தெருநாய் ஒன்று சுற்றி திரிந்தது.

    அப்போது அந்த தெருநாய் அந்த பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் உணவினை தேடி கொண்டிருந்தது. அங்கு கிடந்த பிளாஸ்டிக் டப்பாவை பார்த்ததும் நாய் அதனுள் தலையைவிட்டது. எதிர்பாராத விதமாக பிளாஸ்டிக் டப்பாவுக்குள் தலையைவிட்ட நாயால் அதன்பின்னர் வெளியே எடுக்க முடியவில்லை.

    இதனால் நாய் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தலையில் மாட்டிய பிளாஸ்டிக் டப்பாவுடனேயே அந்த பகுதியில் சுற்றி திரிந்து வந்தது. தலையில் பிளாஸ்டிக் டப்பா மாட்டியதால் உணவு உண்ண முடியாமலும், சாப்பிடததால் மிகுந்த சோர்வுடன் ஒரு இடத்தில் படுத்தபடியே கிடந்தது.

    இதனை பார்த்த அந்த பகுதி மக்களுக்கு மிகவும் கவலை ஏற்பட்டது. எப்படியாவது நாயின் தலையில் சிக்கிய பிளாஸ்டிக் டப்பாவை கழற்றி நாயை மீட்க வேண்டும் என நினைத்து பல முறை அதனை அகற்ற முயன்றனர். ஆனால் அது முடியாமல் போனது.

    நாய் மிகவும் சிரமப்படுவதை பார்த்த பொதுமக்கள் தன்னார்வ விலங்குகள் நல அமைப்புக்கு தகவல் அளித்தனர்.

    இதையடுத்து அவர்கள் நேற்று குமுதம் நகர் பகுதிக்கு வந்து நாயை தேடினர். அப்போது நாய் அந்த பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே சோர்வாக படுத்திருந்தது.

    தொடர்ந்து அவர்கள், குடியிருப்பு வாசிகளின் உதவியோடு, தாங்கள் கொண்டு வந்த வலையை விரித்து லாவகமாக நாயை பிடித்தனர். பின்னர் நாயின் தலையில் இருந்த பிளாஸ்டிக் டப்பாவை கழற்றி, நாயை விடுவித்தனர்.

    10 நாட்களாக உணவு உண்ணாமலும், தலையில் மாட்டிய பிளாஸ்டிக் டப்பாவில் அவதிப்பட்டு வந்த நாய் துள்ளிகுதித்து ஓடியது. இதனை பார்த்து மக்களும், தன்னார்வ குழுவினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நாயின் தலையில் மாட்டிய பிளாஸ்டிக் டப்பாவை அகற்ற உதவிய தன்னார்வ குழுவினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திவிட்டு அலட்சியமாக தூக்கி எறிவதன் விளைவு தான் இது என கூறிய தன்னார்வலர்கள், பிளாஸ்டிக் பொருட்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் குடியிருப்பு வாசிகளிடம் கேட்டுக் கொண்டனர்.

    • பள்ளி விடுமுறை என்பதால் மாணவி தனது தாய் வீட்டிற்கு சென்றார்.
    • சம்பவத்தன்று மாணவியின் தாய் வேலைக்கு சென்று இருந்தார்.

    கோவை:

    கோவை மாவட்டம் ஆனைமலையை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் கிணத்துக்கடவில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    மாணவியின் தந்தைக்கு குடிபழக்கம் இருந்தது. எனவே அவருக்கும் அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் மாணவியின் தாய்க்கு பக்கத்து வீட்டில் வசித்து வந்த கூலித்தொழிலாளி சுரேஷ் (வயது35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் மாணவியின் தந்தைக்கு தெரிய வரவே அவர் தனது மனைவியை கண்டித்தார்.

    இதனையடுத்து சிறுமியின் தாய் தனது கணவரை பிரிந்தார். அவர் தனது மகள் மற்றும் மகனை தனது தாய் வீட்டில் விட்டார். பின்னர் அவர் வேட்டைக்காரன் புதூரியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். அப்போது சுரேஷ் அடிக்கடி அங்கு சென்று அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

    பள்ளி விடுமுறை என்பதால் மாணவி தனது தாய் வீட்டிற்கு சென்றார். சம்பவத்தன்று மாணவியின் தாய் வேலைக்கு சென்று இருந்தார். வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்தார். அப்போது அவரது தாயின் கள்ளக்காதலன் அங்கு சென்றார்.

    அவர் கதவை சாத்தி தாழிட்டார். பின்னர் அவர் மாணவியின் ஆடைகளை கழற்றி அவரை நிர்வாணமாக்கினார். தொடர்ந்து அவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போட்டார். உடனடியாக கூலித்தொழிலாளி நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் உன்னையும், உனது தாயையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    தனது தாய் வேலை முடிந்து வந்ததும் நடந்த சம்பவங்களை மாணவி அவரது தாயிடம் கூறி கதறி அழுதார். இது குறித்து ஆனைமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    புகாரின் பேரில் 11-ம் வகுப்பு மாணவியை நிர்வாணமாக்கி அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தாயின் கள்ளக்காதலன் சுரேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இளம்பெண் தனது பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினார்.
    • புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மாயமான பெண்ணை தேடி வந்தனர்.

    கோவை:

    திருப்பூர் பூண்டி ரிங்ரோட்டை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண்.

    இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த ஒற்றர்பாளையத்தை சேர்ந்த 29 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த வாலிபர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவரவே பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 17-ந் தேதி அதிகாலை வீட்டில் இருந்த இளம்பெண், தனது பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினார்.

    அப்போது வீட்டில் இருந்த 5 அரை பவுன் தங்க நகை, ரூ.5 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை எடுத்து கொண்டு சென்றார். வீட்டில் இருந்த மகள் மாயமானதால் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து பெற்றோர் 15 வேலம்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மாயமான பெண்ணை தேடி வந்தனர்.

    இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண், நேராக அன்னூர் வந்து, தனது காதலனை சந்தித்துள்ளார். பின்னர் 2 பேரும் அங்குள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    நேற்று காதலர்கள் 2 பேரும் பாதுகாப்பு கேட்டு அன்னூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் விசாரித்தபோது, ஏற்கனவே இளம்பெண் மாயமானதாக திருப்பூர் 15 வேலம்பாளையத்தில் பெண்ணின் பெற்றோர் கொடுத்து இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அன்னூர் போலீசார் காதலர்கள் 2 பேரையும், திருப்பூர் 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு போலீசார் பெண்ணின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர்.

    அவர்கள் போலீஸ் நிலையம் விரைந்து வந்து, காதலருடன் நின்றிருந்த தங்கள் மகளை பார்த்து அழுதனர். பின்னர் பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளிடம் சென்று பேசினர்.

    அப்போது அவரிடம், உன்னை எப்படி எல்லாம் வளர்த்தோம். நீ கேட்டதை எல்லாம் நாங்கள் வாங்கி கொடுத்துள்ளோம். உனக்கு எந்த குறையும் வைக்கவில்லை. அப்படி இருக்கையில் நீ இப்படி பண்ணலமா? என கண்ணீர் விட்டு கெஞ்சி பாசப்போரா ட்டம் நடத்தினர்.

    முதலில் ஒன்றும் சொல்லாமல் இளம்பெண் நின்று கொண்டிருந்தார். தொடர்ந்து பெற்றோர் மகளிடம் பேசினர். பெற்றோர் பேசிய பேச்சை கேட்டதும் இளம்பெண்ணின் மனது மாறிவிட்டது.

    அவர், தனது பெற்றோரிடம் நான் எனது காதலனை விட்டு, விட்டு உங்களுடனே வந்துவிடுகிறேன். ஆனால் அவர் மீது எந்த வழக்கும் பதிய வேண்டாம்.

    ஏனென்றால் நகையை எடுத்து கொண்டு சென்றது நான் தான், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம். அப்படி என்றால் வருகிறேன் என தெரிவித்தார். பெற்றோரும் அதற்கு சம்மதித்தனர்.

    இதையடுத்து இளம்பெண் போலீசாரிடம் நான் எனது பெற்றோருடனே சென்று விடுகிறேன் என தெரிவித்தார். மேலும் தனது காதல் கணவர் கட்டிய தாலியையும், கழுத்தில் இருந்து கழற்றி காதல் கணவரிடம் கொடுத்து விட்டு பெற்றோருடன் சென்றுவிட்டார்.

    இதையடுத்து போலீசார் வாலிபருக்கு அறிவுரைகளை கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    • பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10 மோப்ப நாய்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
    • நாய்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட நாங்களும் மோப்ப நாய் பிரிவில் சேர்ந்து பணியாற்ற விரும்பினோம்.

    கோவை:

    கோவை மாநகர காவல்துறையில் துப்பறியும் மோப்பநாய் பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போது 7 மோப்ப நாய்கள் உள்ளன.

    போதை பொருட்களை கண்டறிவதற்காக புதிதாக பெல்ஜியம் மெலானாய்டு வகையை சேர்ந்த மதனா என பெயரிடப்பட்ட 8 மாதமே ஆன மோப்ப நாய் சேர்க்கப்பட்டு தற்போது 8 மோப்பநாய்கள் உள்ளன.

    இதுதவிர திண்டுக்கல், பாளையங்கோட்டை மத்திய சிறை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10 மோப்ப நாய்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அம்பலவாணன் தலைமையில் இந்த பிரிவு இயங்குகிறது. இங்கு உள்ள போலீஸ் மோப்ப நாய் பயிற்சி பிரிவில் கடந்த 2001-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை ஆண் போலீசார் மட்டுமே மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து வந்தனர்.

    இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கோவை மோப்ப நாய் பிரிவில் நாய்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஆயுதப்படை பிரிவில் பணியாற்றிய திருப்பூரை சேர்ந்த கவிப்பிரியா (வயது25), தேனியை சேர்ந்த பவானி(26) ஆகிய 2 பெண் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    அவர்கள் வில்மா என்றபெயர்கொண்ட லேப்ரடார் வகை நாய், பெல்ஜியம் மெலானாய்டு நாய் உள்ளிட்ட மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே மோப்ப நாய் பிரிவில் நியமிக்கப்பட்ட பெண் போலீசார் எவ்வாறு பயிற்சி அளிக்கிறார்கள் என்பதை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    இதுகுறித்து பெண் போலீசார் கவிப்பிரியா, பவானி ஆகியோர் கூறியதாவது:-

    நாங்கள் கடந்த 2022-ம் ஆண்டு கோவை மாநகர ஆயுதப்படை பிரிவில் பணியில் சேர்ந்தோம். நாங்கள் ஏற்கனவே வீடுகளில் நாய்களை வளர்த்து வருகிறோம். இதனால் எங்களுக்கு நாய்கள் மீது அலாதி பிரியம் உண்டு.

    நாய்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட நாங்களும் மோப்ப நாய் பிரிவில் சேர்ந்து பணியாற்ற விரும்பினோம். அப்போது தான் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் போலீஸ் மோப்ப நாய் பிரிவில் சேர பெண் போலீசாரிடம் ஆர்வம் உள்ளதா? என கேட்டிருந்தார்.

    இதையடுத்து நாங்கள் எங்களின் ஆர்வத்தை கூறவே, எங்களை தற்போது மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்க நியமித்துள்ளனர். மோப்ப நாய் பிரிவில் சேர்ந்து நாய்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்ற எங்களுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறியது மகிழ்ச்சியாக உள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×