search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dustbin"

    • கொருக்குப்பேட்டை பெருமாள் தோட்டம் தெருவில் 500-க் கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஏராளமான ஸ்டீல் பட்டறைகளும் உள்ளன.
    • சாலையோரம் மற்றும் தெருக்களின் முன்பு குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது.

    வடசென்னை என்றாலே நெரிசலான பகுதி. இந்த பகுதியை சுத்தமாக பராமரிக்க மாநகராட்சி ஊழியர்கள் எவ்வளவு விழிப்புடன் செயல்பட வேண்டும்? ஆனால் சில நேரங்களில் சிலர் தங்கள் பொறுப்பை தட்டிக் கழித்து விடுகிறார்கள். இதனால் ஏற்பட்டுள்ளதுதான் இந்த அவலம்.

    கொருக்குப்பேட்டை பெருமாள் தோட்டம் தெருவில் 500-க் கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஏராளமான ஸ்டீல் பட்டறைகளும் உள்ளன.

    பெருமாள் கோவில் தோட்டம், ஆர்.டி.ரங்கன் தெரு பகுதியில் உள்ளவர்கள் வீடுகளில் இருந்து குப்பை கழிவுகளை கொட்டுவதற்காக இளைய தெருவில் மாநகராட்சி சார்பில் குப்பை தொட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்த மாதிரி தொட்டிகளில் சேகரமாகும் குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் தினமும் குப்பைகளை அகற்றுவது வழக்கம்.

    இந்நிலையில் இளைய தெருவில் இருந்த குப்பை தொட்டிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென அகற்றப்பட்டன. இப்போது அந்த பகுதி மக்கள் சாலை ஓரங்களில் குப்பைகள் கொட்டி வருகின்றனர். இதன் காரணமாக சாலையோரம் மற்றும் தெருக்களின் முன்பு குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது.

    பல நாட்களாக சாலை மற்றும் தெருக்களின் முன்பு குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. குவிந்து கிடக்கும் குப்பைகளை கால்நடைகள் மற்றும் நாய்கள் இழுத்து சாலை வரை போடுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்தபடி தான் சாலையை கடந்து செல்ல வேண்டி உள்ளது.

    சாலையில் செல்பவர்கள் குப்பைகளை மிதித்துக் கொண்டு செல்லும் நிலை காணப்படுகிறது. குப்பைகள் கொட்டப்படும் இடத்தின் அருகிலேயே மின்சார பெட்டிகள் மற்றும் டிரான்ஸ்பார்மர் உள்ளன. மின்சாரம் பாயும் ஆபத்தும் உள்ளது.

    இது தொடர்பாக பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலரான எழுத்தாளர் லதா சரவணனும் ஆதங்கப்பட்டார்.

    குப்பை தொட்டி இல்லாததால் ரோட்டில் கொட்டப்படும் குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கிறது. அதை தினமும் லாரிகள் மூலம் முறையாக அகற்றுவதும் இல்லை என்கிறார் அந்த பகுதி வியாபாரி வினோத்.

    ரோட்டோரத்தில் இருக்கும் மின்சார பெட்டிகளை சுற்றிலும் குப்பைகள் கிடப்பதால் மழை நேரத்தில் சொத சொத என்றாகி விடுகிறது. மின் கசிவு நிகழ்ந்தால் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் சூழ்நிலை உள்ளது.

    கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை போடாதீர்கள் என்று சொல்வதில் நியாயம் இருக்கிறது. குப்பை தொட்டியை கண்ணில் கண்டால்தானே அதில் போடுவார்கள். ஒரு குப்பை தொட்டியை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால் மாற்று ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டுமா? இல்லையா?

    தெருக்களில் குப்பைகளை கொட்டுகிறார்கள். நகரின் அழகையே கெடுக்கிறார்கள் என்று ஒட்டு மொத்தமாக மக்களை மட்டும் குறை சொன்னால் எப்படி?

    தங்கள் பக்கம் இருக்கும் தவறுகளை மாநகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் திருத்திக் கொள்ள வேண்டும்.

    • பல உட்புற தெருக்களில் குப்பைகளை வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே அள்ளுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
    • சுமார் 250 தெருக்களில் 100 தெருக்களுக்கும் மேலாக குப்பைகள் தேங்கி கிடக்கிறது.

    சென்னை:

    பார்க்க நல்லாத்தான் இருக்கு. ஆனால் நிலைமை சரியில்லையே என்று சொல்லும் அளவுக்கு சென்னை மாநகராட்சியின் குப்பை கழிவுகள் மேலாண்மை இருப்பதாக பொதுமக்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

    சென்னை மாநகரை பொறுத்தவரை தினமும் லட்சக்கணக்கான டன் குப்பைகள் குவிகிறது. இவற்றை அகற்றுவதும், கையாள்வதும் சவாலான பணிதான். சேகரிக்கும் குப்பைகளை எளிதாக பிரிப்பதற்காக மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தனித்தனியாகவும் சேகரிக்கப்படுகிறது.

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றல் துறை இணைந்து குப்பை கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுவது பற்றிய விழிப்புணர்வு குறும் படங்களை தயாரித்துள்ளது. நடிகர் யோகிபாபு, ரோபோ சங்கர், ரெடின் கிங்ஸ்வி ஆகியோர் நடித்த 4 விழிப்புணர்வு வீடியோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    குப்பைகளை பிரித்து கொட்டினாலே எளிதாக மறுசுழற்சிக்கு உதவும். இதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். விழிப்புணர்வு வீடியோக்கள் மூலம் குப்பைகளை பிரித்தெடுப்பதின் முக்கியத்துவத்தை மக்களுக்கு தெரிவித்து வருகிறோம் என்றார்கள் திடக்கழிவு மேலாண்மைதுறை அதிகாரிகள்.

    விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஒரு பக்கம் நடந்தாலும் சென்னையில் பல இடங்களில் குப்பை தொட்டிகள் நிரம்பி கிடக்கின்றன. பணியாளர்கள் வராததால் குப்பை அள்ளுவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    குப்பை தொட்டிகள் நிரம்பிவிட்டதால் சுற்றிலும் குப்பைகள் சிதறி கிடக்கின்றன. அழுகிய பொருட்களால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு விளைவதாக பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள். பல உட்புற தெருக்களில் குப்பைகளை வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே அள்ளுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

    குப்பைகளை கையாள்வதற்கு பணியாளர்கள் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் அடுத்த சில மாதங்களில் பலர் ஓய்வு பெறுகிறார்கள்.

    மொத்தமுள்ள 15 மண்ட லங்களில் 11 மண்டலங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்போது மேலும் திரு.வி.க.நகர், ராயபுரம் ஆகிய மண்டலங்களையும் தனியார் வசம் ஒப்டைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அண்ணா நகர் 104-வது வார்டில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக கவுன்சிலர் செம்மொழி கூறினார். இங்குள்ள சுமார் 250 தெருக்களில் 100 தெருக்களுக்கும் மேலாக குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இந்த பகுதியில் 3 நாட்களுக்கு ஒருமுறைதான் குப்பை அள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

    செங்கொடி சங்க பொதுச் செயலாளர் ஸ்ரீனிவாசலு கூறும்போது, கடந்த 2021-ம் ஆண்டிலேயே 4,600 காலிப் பணியிடங்கள் இருந்தது. கடந்த ஆண்டில் சுமார் 500 பேர் ஓய்வு பெற்றுள்ளார்கள். மாநகராட்சி அதிகாரிகள் காலி பணியிட விவரங்களை வெளியிடவில்லை என்றார்.

    • தலையில் பிளாஸ்டிக் டப்பா மாட்டியதால் உணவு உண்ண முடியாமலும், சாப்பிடததால் மிகுந்த சோர்வுடன் காணப்பட்டது.
    • நாய் மிகவும் சிரமப்படுவதை பார்த்த பொதுமக்கள் தன்னார்வ விலங்குகள் நல அமைப்புக்கு தகவல் அளித்தனர்.

    கோவை:

    கோவை பீளமேடு அருகே சேரன் மாநகரில் குமுதம் நகர் உள்ளது.

    இந்த நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தெருநாய் ஒன்று சுற்றி திரிந்தது.

    அப்போது அந்த தெருநாய் அந்த பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் உணவினை தேடி கொண்டிருந்தது. அங்கு கிடந்த பிளாஸ்டிக் டப்பாவை பார்த்ததும் நாய் அதனுள் தலையைவிட்டது. எதிர்பாராத விதமாக பிளாஸ்டிக் டப்பாவுக்குள் தலையைவிட்ட நாயால் அதன்பின்னர் வெளியே எடுக்க முடியவில்லை.

    இதனால் நாய் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தலையில் மாட்டிய பிளாஸ்டிக் டப்பாவுடனேயே அந்த பகுதியில் சுற்றி திரிந்து வந்தது. தலையில் பிளாஸ்டிக் டப்பா மாட்டியதால் உணவு உண்ண முடியாமலும், சாப்பிடததால் மிகுந்த சோர்வுடன் ஒரு இடத்தில் படுத்தபடியே கிடந்தது.

    இதனை பார்த்த அந்த பகுதி மக்களுக்கு மிகவும் கவலை ஏற்பட்டது. எப்படியாவது நாயின் தலையில் சிக்கிய பிளாஸ்டிக் டப்பாவை கழற்றி நாயை மீட்க வேண்டும் என நினைத்து பல முறை அதனை அகற்ற முயன்றனர். ஆனால் அது முடியாமல் போனது.

    நாய் மிகவும் சிரமப்படுவதை பார்த்த பொதுமக்கள் தன்னார்வ விலங்குகள் நல அமைப்புக்கு தகவல் அளித்தனர்.

    இதையடுத்து அவர்கள் நேற்று குமுதம் நகர் பகுதிக்கு வந்து நாயை தேடினர். அப்போது நாய் அந்த பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே சோர்வாக படுத்திருந்தது.

    தொடர்ந்து அவர்கள், குடியிருப்பு வாசிகளின் உதவியோடு, தாங்கள் கொண்டு வந்த வலையை விரித்து லாவகமாக நாயை பிடித்தனர். பின்னர் நாயின் தலையில் இருந்த பிளாஸ்டிக் டப்பாவை கழற்றி, நாயை விடுவித்தனர்.

    10 நாட்களாக உணவு உண்ணாமலும், தலையில் மாட்டிய பிளாஸ்டிக் டப்பாவில் அவதிப்பட்டு வந்த நாய் துள்ளிகுதித்து ஓடியது. இதனை பார்த்து மக்களும், தன்னார்வ குழுவினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நாயின் தலையில் மாட்டிய பிளாஸ்டிக் டப்பாவை அகற்ற உதவிய தன்னார்வ குழுவினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திவிட்டு அலட்சியமாக தூக்கி எறிவதன் விளைவு தான் இது என கூறிய தன்னார்வலர்கள், பிளாஸ்டிக் பொருட்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் குடியிருப்பு வாசிகளிடம் கேட்டுக் கொண்டனர்.

    • தாரணி அப்பகுதியில் உள்ள மார்க்கெட்டிற்கு மளிகை பொருட்கள் வாங்க சென்றார்.
    • குப்பை தொட்டியில் 4 கால்களும், வாயும் கட்டப்பட்ட நிலையில் ஒரு நாய் கிடப்பதை கண்டார்.

    குனியமுத்தூர்,

    கோவையை அடுத்த கோவைப்புதூர் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் தாரணி(41). இவர் அப்பகுதியில் உள்ள மார்க்கெட்டிற்கு மளிகை பொருட்கள் வாங்க சென்றார்.

    அப்போது அருகே உள்ள ஒரு குப்பை தொட்டியில் 4 கால்களும், வாயும் கட்டப்பட்ட நிலையில் ஒரு நாய் கிடப்பதை கண்டார். உடனே திரும்பி வீட்டுக்கு சென்று, தனது மகனை அழைத்துக் கொண்டு அந்த நாயை தூக்கிக் கொண்டு செல்வபுரம் விலங்குகள் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அந்த நாய்க்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த நாய் இறந்தது. பின்னர் அது யாருடைய நாய் என்று விசாரிக்கும் போது, கோவைப்புதூர் பாரதிநகரை சேர்ந்த கிருபாகரன் என்பவர் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் என்பது தெரியவந்தது. எனவே கிருபாகரன் மீது குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருபாகரனிடம் விசாரித்து வருகின்றனர்.

    ஆரணி அருகே பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை குப்பை தொட்டியில் வீசபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆரணி:

    ஆரணி அடுத்த களம்பூர் அரசு ஆரம்ப தொடக்க பள்ளி அருகே இன்று அதிகாலை பொதுமக்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் தேடிபார்த்தனர்.

    அப்போது பள்ளி அருகே உள்ள குப்பை தொட்டியில் பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை தொப்புள் கொடி அறுபட்ட நிலையில் கிடந்தது தெரியவந்தது.

    இதை பார்த்த அதிர்ச்சியடைந்த பொது மக்கள் கிராம நிர்வாக அலுவலர் சண்முகத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர் குழந்தையை மீட்டு களம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தார். அங்கு குழந்தைக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கபட்டது.

    குழந்தைக்கு எடை குறைபாடு இருந்ததால் மேல் சிகிச்சைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்றவர்கள் யார் என்பது குறித்து களம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கருக்கலைப்பு சம்பவங்கள் அதிகம் நடந்து வருகிறது. இதனால் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் ஆயிரத்திற்கு, 881 விகிதம் தான் உள்ளது.

    இது குறித்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் கடந்த மாதம் திருவண்ணாமலையில் உள்ள ஒரு ஸ்கேன் சென்டரில் கருக்கலைப்பு அதிகம் நடப்பது கண்டுபிடிக்கபட்டு 3 பேரை கைது செய்தனர்.

    இந்நிலையில் பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை குப்பை தொட்டியில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×