என் மலர்
கோயம்புத்தூர்
- மாநகராட்சியே சுத்திகரிப்பதால் லிட்டருக்கு ரூ.6 மட்டுமே செலவாகும்.
- கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் 90 சதவீதம் முடிந்து விட்டது.
கோவை,
கோவை மாநகராட்சிக்கு சிறுவாணி ஆற்றில் இருந்து குடிதண்ணீர் குழாய்கள் மூலம் கொண்டுவரப்பட்டு, சுத்திகரித்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளில் குடிநீர் வடிகால் வாரியம் ஈடுபடுகிறது.
இந்த நிலையில் கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிறுவாணியில் இருந்து குடிதண்ணீரை கொண்டு வந்து சுத்திகரித்து, மாநகராட்சி முழுவதும் விநியோகம் செய்து வருகிறோம். இதற்கான பணிகளில் குடிநீர் வடிகால் வாரியம் ஈடுபட்டு வருகிறது. இதற்காக அவர்களுக்கு லிட்டருக்கு ரூ.11 வீதம் மாதந்தோறும் ரூ.4 கோடி வழங்க வேண்டி உள்ளது.
எனவே சிறுவாணி ஆற்றில் இருந்து கொண்டு வரப்படும் தண்ணீரை மாநகராட்சியே சுத்திகரித்து வழங்குவது என்று முடிவு செய்து உள்ளது. இந்த வகையில் லிட்டருக்கு ரூ.6 மட்டுமே செலவாகும். இதுதொடர்பாக தமிழக அரசுக்கு உத்தேச அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் 90 சதவீதம் முடிந்து விட்டது.
குறிச்சிகுளத்தில் இறுதிகட்ட பணிகள் நடக்கிறது. ரேஸ்கோர்ஸ், கிராஸ்கட் ரோடு ஆகிய பகுதியில் 10 சதவீதம் பணிகள் நிலுவையில் உள்ளது. இது வருகிற ஜூலை மாதத்துக்குள் முடிந்துவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.
- போலீசார் இறந்த ஆணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் சிறுமுகை பகுதிக்கு பஸ்கள் புறப்பட்டு செல்லும் இடத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து சிக்கதாசம்பாளையம் கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து இறந்த ஆணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்த இறந்த ஆண் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல பெரியநாயக்கன்பாளையம் கோவை- மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள துணிக்கடை முன்பு 60 வயது மதிக்கதக்க முதியவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதனையடுத்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் உடனடியாக சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தினமும் ஏராளமானோர் வால்பாறைக்கு வந்து சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்து செல்கின்றனர்.
- அரசு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
வால்பாறை,
வால்பாறையில் நாளை முதல் 3 நாட்களுக்கு கோடை விழா நடக்கிறது. கோவை மாவட்டம் வால்பாறையில் சின்னக் கல்லாறு நீர்வீழ்ச்சி, நல்லமுடி பூஞ்சோலையாறு அணை, பாலாஜி கோயில், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன.
தினமும் ஏராளமானோர் வால்பாறைக்கு வந்து சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்து செல்கின்றனர். கோடை காலங்களில் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி நாளை (26-ந்தேதி) முதல் 28-ந் தேதி வரை 3 நாட்கள் கோடை விழா நடைபெறவுள்ளது.
கோடை விழாவின் போது தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொது மக்கள் பார்த்து பயனடையும் வகையில் அரசு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. மலர் கண்காட்சியும் இடம் பெறுகிறது.
கலை பண்பாட்டு துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பரத நாட்டியம், யோகா, நடனம், செண்டை மேளம், நையாண்டி மேளம், கரகம், காவடியாட்டம், படுகர் நடனம், மாரியம்மன் முருகன் வள்ளி கும்மி பாடல், துடும்பாட்டம், பழங்குடியின வாத்தியம், பொய்க்கால் குதிரை, ஜிக்காட்டம், டிரம்ப்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
காவல்துறை சார்பில் நாய்களின் சாகச நிகழ்ச்சி மற்றும் குன்னூர் டீ போர்டு மூலம் டீ தயாரிப்பு போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளது. மகிழ்ச்சிக்கு காரணம் சொந்த பந்தமா? சொத்து பத்தா? மனிதன் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தது அந்த காலமா? இந்த காலமா? பெற்றோர்களை பேணிக்காப்பவர்கள் மகள்களா? மகன்களா? ஆகிய தலைப்புகளில் சனிக்கிழமை அன்று பட்டிமன்றமும் நடைபெறவுள்ளது.
இக்கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கவுள்ளார்.
விழாவில் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
- தற்போது, பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு குறித்து 2-ம் கட்ட பணி நடக்கிறது
- மாணவர்களுக்கு வழங்கப்படும். அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகாவுக்கு உட்பட்ட நகரம், ஒன்றிய குடியிருப்பு பகுதிகளில் 2-ம் கட்ட கணக்கெடுப்பு பணியில், 5 வயது நிறைவடைந்த குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை தாலுகாவிற்கு உட்பட்ட நகர். ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குக்கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இலவச கட்டாய உரிமை சட்டப்படி அனைத்து குழந்தைகளையும் முறையாக பள்ளியில் சேர்த்து, கல்வி கற்க வழிவகை செய்யும் வகையில், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிய கணக்கெடுப்பு பணி ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது.
அதுபோல, 5 வயது நிறைவடைந்த குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி, கல்வித்துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் 2 வாரங்கள் கிராமங்களில் உள்ள குடியிருப்புகளில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் வட்டார கல்வித்துறை சார்பில், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது.
இதையடுத்து 2-ம் கட்டமாக பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள், பள்ளியில் இடை நின்ற மாணவர்கள் குறித்து கண்டறிந்து கணக்கெடுக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு குழுவிலும் உள்ள ஆசிரியர், சிறப்பாசிரியர், சத்துணவு பணியாளர், தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
அதிலும், கிராமப்புறங்களில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு தொடர்ந்து நடக்கிறது. அப்போது ஆசிரியர்கள் பெற்றோர்களை சந்தித்து தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், இலவச கட்டாய உரிமை சட்டப்படி அனைத்து குழந்தைகளையிம் முறையாக பள்ளியில் சேர்த்து, கல்வி கற்க வழி வகை செய்யும் வகையில், பள்ளி செல்லா குழந்தைகளே இல்லை என்ற நோக்கத்தில் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
தற்போது, பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு குறித்து 2-ம் கட்ட பணி நடக்கிறது. இப்பணி வரும் 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது. அத்துடன், 5 வயது நிறைவடை்ந்த பள்ளி வயதுள்ள குழந்தைகளை, அரசு பள்ளியில் சேர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அரசு பள்ளியில் சேர விருப்பமுள்ள பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை அருகேயுள்ள பள்ளியில் சேர்க்க முன் வர வேண்டும்.
மேலும், மாணவர்களுக்கு வழங்கப்படும். அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நடப்பாண்டில், கல்விக்காக தமிழக அரசு அதிகளவு நிதி ஒதுக்கியதுடன், பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகள், அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது என்றனர்.
- பீளமேடு போலீசார் தகவல் வந்த மசாஜ் சென்டருக்கு சென்று சோதனை செய்தனர்.
- கைது செய்யப்பட்ட புரோக்கர் ஜெயந்த் தாஸ் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
கோவை,
கோவை ஆவாரம்பாளையம் எம்.ஜி. ரோட்டில் தனியார் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் மசாஜ் சென்டர் செயல்பட்டு வந்தது.
இங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து பீளமேடு போலீசார் தகவல் வந்த மசாஜ் சென்டருக்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது அங்கு மசாஜ் சென்டர் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து போலீசார் அழகிகளை வைத்து விபசார தொழில் செய்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த புரோக்கர் ஜெயந்த் தாஸ் (வயது 30) என்பவரை கைது செய்தனர்.
அங்குள்ள அறையில் விபசாரத்துக்காக அடைத்து வைக்கப்பட்டு இருந்த 24, 31 மற்றும் 25 வயதுடைய 3 அழகிகளை போலீசார் மீட்டனர். பின்னர் போலீசார் மீட்கப்பட்ட அழகிகளை காப்பகத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட புரோக்கர் ஜெயந்த் தாசை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- ஜெயாகவுரி தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
- கைது செய்யப்பட்ட டாக்சி டிரைவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
குனியமுத்தூர்,
கோவை வெள்ளலூர் அருகே உள்ள என்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் வாசு. இவரது மனைவி ஜெயாகவுரி (வயது 44). இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது ஜெயாகவுரியை பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் அவர் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் செல்ல முயன்றார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயாகவுரி திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் தப்பி ஓட முயன்ற வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை போத்தனூர் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த டாக்சி டிரைவர் அருண்குமார் (25) என்பது தெரியவந்தது. விசாரணை முடிந்ததும் போலீசார் கைது செய்யப்பட்ட டாக்சி டிரைவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- மதுவிலக்கு அமலாக்க பிரிவின் 7604910581 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.
- தகவல் தெரிவிப்பவர்களின் பெயர் மற்றும் அவர்களது விவரங்கள் ரகசியம் காக்கப்படும்.
கோவை,
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில், கோவை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை குறித்து பொதுமக்கள் வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட மதுவிலக்கு, அமலாக்கப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் கடத்தல், விற்பனை செய்தல், போலி மதுபானம் தயாரித்தல் போன்ற குற்றங்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் கோவை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவின் 7604910581 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். புகார் கொடுப்பவர்களின் பெயர், விவரம் உள்ளிட்டவை ரகசியம் காக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் ஜனனி பிரியா கூறியதாவது:-
கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வது, கடத்துவது போன்ற சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் உடனுக்குடன் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்க 7604010581 என்ற செல்போன் எண்ணை அறிமுகப்படுத்தி உள்ளோம்.இந்த எண் மூலம் வாட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்தியாகவும் தகவல் தெரிவிக்கலாம்.
குறிப்பாக முக்கிய பகுதியாக கருதப்படும் சூலூர், கருமத்தம்பட்டி, அன்னூர், துடியலூர், தடகாம், காரமடை, மேட்டுப்பாளையம், வடவள்ளி, ஆலாந்துறை, பொள்ளாச்சி, ஆனைமலை ஆகிய பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.
அதில் உள்ள செல்போன் எண் மூலம் கள்ளச்சாராயம், கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்வது குறித்து தகவல் தெரிவிப்பவர்களின் பெயர் மற்றும் அவர்களது விவரங்கள் ரகசியம் காக்கப்படும். எனவே பொதுமக்கள் தைரியமாக புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
- விரக்தியடைந்த மாணவர் திடீரென 80 அடி உயரம் கொண்ட கல்லூரியின் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்தார்.
- மாணவருக்கு இடுப்பு மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. எலும்புகளும் உடைந்தன.
கோவை:
கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் 19 வயது மாணவர்.
இவர் கோவை வேலந்தாவளம் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லூரியில் மாதிரி தேர்வு நடந்தது. அப்போது மாணவர் தேர்வு எழுதும் போது காப்பியடித்ததாக தெரிகிறது.
இதனை தேர்வு மையத்தில் பணியில் இருந்த 2 பேராசிரியர்கள் பார்த்து விட்டனர். உடனே அவர்கள் மாணவரை தேர்வு மையத்தில் இருந்து வெளியே அனுப்பினர்.
மேலும் தேர்வில் காப்பியடித்தற்காக மாணவரிடம் உனது பெற்றோரை அழைத்து கொண்டு கல்லூரிக்கு வர வேண்டும் என எச்சரித்தனர். ஆனால் மாணவர் பெற்றோரை அழைத்து வரவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாணவர் வழக்கம் போல் கல்லூரிக்கு வந்தார். அப்போது பேராசிரியர்கள் அவரிடம் மீண்டும் நீ உனது பெற்றோரை அழைத்து கொண்டு வா என தெரிவித்தனர்.
இதனால் விரக்தியடைந்த மாணவர் திடீரென 80 அடி உயரம் கொண்ட கல்லூரியின் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவருக்கு இடுப்பு மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. எலும்புகளும் உடைந்தன.
வலியால் மாணவர் அலறி துடித்து கொண்டிருந்தார். இதனை பார்த்த கல்லூரி நிர்வாகத்தினர் மாணவரை மீட்டு கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே கல்லூரி மாடியில் இருந்து மாணவர் குதித்த தகவல் அங்கு படிக்கும் சக கல்லூரி மாணவர்கள் மத்தியில் வேகமாக பரவியது. இதையடுத்து 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாணவர் கீழே குதித்ததற்கு காரணமான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தகவல் அறிந்ததும் கே.ஜி.சாவடி போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து கே.ஜி.சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுவனின் தாய் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.
- ஒண்டிப்புதூர் பஸ் நிலையம் வழியாக சென்ற லோடு வேனில் சிறுவன் ஏறிச்சென்றது தெரியவந்தது.
கோவை:
சென்னை அயப்பாக்கம் ராஜம்மாள் நகரை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவரது மகன் யுவன் கதிரவன் (வயது 13). இவர் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
கோடை விடுமுறையொட்டி பள்ளி விடுமுறை என்பதால் மகாலட்சுமி தனது மகன் மற்றும் குடும்பத்தாருடன் கோவை மசக்காளிபாளையம் சின்னசாமி லே-அவுட் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்தார்.
நேற்று காலை 8.30 மணியளவில் வீட்டில் உள்ள யாரிடமும் சொல்லாமல் யுவன் கதிரவன் வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
தொடர்ந்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம்பக்கத்தில் அவரை தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து சிறுவனின் தாய் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுவன் குறித்து விசாரணை நடத்தினர்.
போலீசார் அந்தப் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது ஒண்டிப்புதூர் பஸ் நிலையம் வழியாக சென்ற லோடு வேனில் சிறுவன் ஏறிச்சென்றது தெரியவந்தது.
அந்த லோடு வேனின் பதிவு எண்ணை கொண்டு வேனை ஓட்டி சென்றது யார்? அவருடன் சிறுவன் ஏன் சென்றான் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர்.
விசாரணையில், அந்த வேன் வேடப்பட்டியில் உள்ள சவுண்ட் சர்வீஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த லோடு வேனை யாரோ மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. திருட்டு லோடு வேனில் சிறுவன் சென்றால் அவனை மர்ம நபர்கள் யாராவது கடத்திச் சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
சிறுவனை கண்டுபிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் மாணவி ஒருவர் திடீரென மாயமானார். அப்போது சமூக வலைதளங்களில் இந்த தகவல் பரவி மாநிலம் முழுவதும் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த மாணவியை போலீசார் மீட்டனர். இந்நிலையில் சென்னையில் இருந்து கோவை வந்த சிறுவன் மாயமாகி இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- வார இறுதி நாட்களான கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளான 2 நாளில் மட்டும் 10 ஆயிரத்து 500 சுற்றுலா பயணிகள் இங்கு வந்துள்ளனர்.
- கோவை குற்றாலத்தில் உரிய அடிப்படை வசதிகள் இல்லை என சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவை:
கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மிகவும் முக்கியமானது கோவை குற்றாலம். அடர்ந்த வனத்திற்கு நடுவே இந்த அருவி இருப்பதால் இந்த சுற்றுலா தலத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
அவர்கள் அருவியில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்து, வனத்தில் உள்ள இயற்கை காட்சிகள் மற்றும் வனவிலங்குகளையும் கண்டு ரசித்து வருகின்றனர்.
தற்போது பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த சில வாரங்களாகவே கோவை குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
பல்வேறு பகுதிகளில் இருந்தும், கார், மோட்டார் சைக்கிள், வேன் போன்ற வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
வார இறுதி நாட்களான கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளான 2 நாளில் மட்டும் 10 ஆயிரத்து 500 சுற்றுலா பயணிகள் இங்கு வந்துள்ளனர். கடந்த திங்கள் முதல் தற்போது வரை 2,500 பேர் வந்துள்ளனர்.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து கொண்டே சென்றாலும், கோவை குற்றாலத்தில் உரிய அடிப்படை வசதிகள் இல்லை என சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் குடும்பத்துடன் பொழுதை கழிப்பதற்காக கோவை குற்றாலத்திற்கு வந்துள்ளோம். இங்குள்ள அருவியில் குளித்து மகிழ்ந்து விட்டு, இயற்கை காட்சியை கண்டு ரசித்து வருகிறோம்.
கூட்டம் மிகவும் அதிகமாக உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளுக்கு என நுழைவு வாயில் 2 கழிப்பறைகள் மற்றும் நீர்வீழ்ச்சியின் அருகே சில கழிப்பறைகள் உள்ளன.
ஆனால் தற்போது கோடை விடுமுறையையொட்டி இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இதனால் இந்த கழிப்பறைகள் போதுமானதாக இல்லை. கழிப்பறை செல்வதற்கு வெகுநேரம் வரிசையில் காத்திருக்கும் நிலையும் ஏற்படுகிறது. எனவே சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் நடமாடும் கழிப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் டிக்கெட் கவுண்டரிலும் டிக்கெட் எடுப்பதற்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. கூடுதல் பணியாளர்களை நியமித்து, விரைவில் டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இங்கு சுற்றுலா பயணிகள் தங்கி கொள்வதற்காக மர வீடுகள் உள்ளன. ஆனால் அந்த வீடுகளில் மழைக்காலங்களில் தண்ணீர் கசிந்து வருகிறது. மேலும் மின்தடையும் ஏற்படுகிறது. எனவே கோவை குற்றாலத்தில் முக்கிய அடிப்படை வசதிகளை வனத்துறையினர் செய்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக கழிப்பறைகள் மற்றும் நடமாடும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
பெருகி வரும் தேவைக்கு ஏற்ப மேலும் சில நடமாடும் கழிப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு ரூ.30 லட்சம் செலவில் தொங்குபாலம் புதுப்பிக்கும் பணி நடக்க உள்ளது என்றார்.
- வால்பாறையில் சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சி, நல்லமுடி பூஞ்சோலை காட்சி முனை, சோலையாறு அணை, பாலாஜி கோவில், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன.
- போலீசார் சார்பில் நாய்களின் சாகச நிகழ்ச்சி மற்றும் குன்னூர் டீ போர்டு மூலம் சுற்றுலா பயணிகளுக்கு டீ தயாரிப்பு போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
கோவை:
கோவை மாவட்டம் வால்பாறையில் சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சி, நல்லமுடி பூஞ்சோலை காட்சி முனை, சோலையாறு அணை, பாலாஜி கோவில், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. தினந்தோறும் ஏராளமானோர் வந்து சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்து செல்கின்றனர்.
கோடை காலங்களில் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தமிழக முதல்-அமைச்சரின் வழிகாட்டுதல்படி நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை 3 நாட்கள் கோடை விழா நடைபெறவுள்ளது.
கோடை விழாவின்போது தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் பார்த்து பயனடையும் வகையில் அரசு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இதுதவிர மலர் கண்காட்சியும் இடம்பெறுகிறது.
கலை பண்பாட்டு துறை, பள்ளிகல்வித்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பரத நாட்டியம், யோகா, நடனம், செண்டைமேளம், நையாண்டி மேளம், கரகம், காவடியாட்டம், படுகர் நடனம், மாரியம்மன் முருகன் வள்ளி கும்மி பாடல், துடும்பாட்டம், பழங்குடியின வாத்தியம், பொய்க்கால் குதிரை, ஜிக்காட்டம், டிரம்ப்ஸ் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
போலீசார் சார்பில் நாய்களின் சாகச நிகழ்ச்சி மற்றும் குன்னூர் டீ போர்டு மூலம் சுற்றுலா பயணிகளுக்கு டீ தயாரிப்பு போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் மகிழ்ச்சிக்கு காரணம் சொந்த பந்தமா? சொத்து பத்தா?, மனிதன் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தது? அந்த காலமா? இந்த காலமா?, பெற்றோர்களை பேணிக்காப்பவர்கள் மகள்களா? மகன்களா? ஆகிய தலைப்புகளில் 27-ந் தேதி அன்று பட்டிமன்றம் நடைபெறவுள்ளது.
இந்த கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார். விழாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
இந்த தகவலை கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.
- கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
- நடுரோட்டில் வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 4 பேர் திடீரென, அந்த மாணவியின் கன்னத்தில் கேக்கை தடவினார்கள்.
கோவை:
கொண்டாட்டம்....குத்தாட்டம்....குதூகலம் என்பது இருக்கட்டும்... ஆனால் அதில் எல்லை மீறும்போது தொல்லை தானே. என்னதான் நண்பர்கள், சேர்ந்து பிறந்தநாள் கொண்டாட்டங்களை நடத்தினாலும், கவனமாக இருக்க வேண்டும் அல்லவா...? உற்சாக மிகுதியால் உணர்ச்சி வசப்பட்டு விட்டால் பிரச்சினை தானே. அது பற்றி பார்க்கலாம்:-
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஆறுமுக கவுண்டர் வீதியில் உள்ளபழனி ஆண்டவர் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு நடுரோட்டில் வைத்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய 4 பேர் திடீரென, அந்த மாணவியின் கன்னத்தில் கேக்கை தடவினார்கள். இதனை மாணவி தடுத்தார். ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று தட்டிக்கேட்டாள்.
இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து மாணவியை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் முருகன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நடுரோட்டில் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய அதே பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (வயது 21), சஞ்சீவி (19). சந்தோஷ் (20), 16 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தார். இவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், மானபங்க முயற்சி உட்பட 4 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.






