என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • அடுக்குமாடி குடியிருப்புகளின் பெயர்களை பயன்படுத்தி ஒருசிலர் மோசடியில் ஈடுபட்டு வந்தனர்.
    • கூட்டத்தில் துணை கமிஷனர்கள் சந்தீஷ், சண்முகம் மதிவாணன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கோவை,

    கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகிகள், மகளிர் தங்கும் விடுதி மற்றும் தனியார் விடுதி உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:-

    கோவை மாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் பெயர்களை பயன்படுத்தி ஒருசிலர் மோசடியில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் கைது செய்து உள்ளோம்.

    இன்னும் நிறைய அடுக்கு மாடி குடியிருப்புகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்படாமல் உள்ளது. எனவே அங்கு விரைவில் கண்காணிப்பு காமிராவை பொருத்த வேண்டும். அப்போதுதான் குற்றசம்பவங்கள் நடந்தால், குற்றவாளிகளை கைது செய்ய ஏதுவாக இருக்கும்.

    கோவை மாநகரில் ஏராளமான கல்லூரி, தொழிற்சாலைகள் உள்ளன. எனவே வெளியூரில் இருந்து பலர் இங்கு வந்து தங்கி உள்ளனர்.

    அவர்கள் பற்றிய முழு விவரங்களை நீங்கள் கேட்டுப்பெற வேண்டும். அவர்களின் நடவடிக்கைகளையும் கண்காணிக்க வேண்டும்

    கோவை விடுதிகளில் தங்கி உள்ள ஒருசிலர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கலாம். அப்படி இருந்தால் அவர்கள் குறித்த தகவல்களை எங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

    இதற்காக நாங்கள் விரைவில் புதிய சாப்ட்வேரை அறிமுகப்படுத்த உள்ளோம். அதில் விடுதியில் அறை எடுத்து தங்குபவர்கள் பற்றிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் குற்ற சம்பவங்கள் ஏதாவது நிகழ்ந்தால், குற்றவாளிகளின் விவரங்களை முழுமையாக அறிய உதவியாக இருக்கும். இதற்கு நீங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் துணை கமிஷனர்கள் சந்தீஷ், சண்முகம் மதிவாணன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

    • பள்ளி மாணவர்கள் வருகைப்பதிவேடு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
    • 8-ம் வகுப்பு மாணவர் ஒருவரிடம் பாடங்களை வாசிக்க சொல்லி அமைச்சர் கேட்டறிந்தார்.

    வடவள்ளி,

    பள்ளி கல்வித்துறையின் சார்பில் நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி என்ற நிகழ்ச்சி கோவையில் நடந்தது. இதில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொண்டாமுத்தூர் அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.

    பள்ளிக்கு வந்த அவரை தலைமை ஆசிரியர் வரவேற்றார். இதனை தொடர்ந்து அங்கு பள்ளி மாணவர்கள் வருகைப்பதிவேடு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

    அதன்பிறகு 8-ம் வகுப்பு மாணவர் ஒருவரிடம் பாடங்களை வாசிக்க சொல்லி அமைச்சர் கேட்டறிந்தார்.

    பள்ளி சமையல் அறை மிகவும் தூய்மையாக சுகாதாரமாக இருப்பதை பாராட்டிய அமைச்சர், பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறையை நேரில் பார்வையிட்டார்.

    இங்கு ஒரு சில ஓட்டு கட்டிடங்கள் உள்ளன, அதை இடித்து விட்டு தரமான கான்கிரீட் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

    பின்னர் அங்கு படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் அமைச்சர் நேரடியாக கலந்து ரையாடினார். தொண்டாமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு 97 சதவீதம் தேர்ச்சி விகிதம் உள்ளது. இதை நடப்பாண்டில் 100 சதவீதமாக உயர்த்துவோம் என்று ஆசிரியர்கள் உறுதி அளித்து உள்ளனர்.  

    • யானை ஊருக்குள் நுழையும் போதே பிளிறியபடி ஆக்ரோஷத்துடன் பொதுமக்களை அச்சுறுத்தும்படி வந்தது.
    • யானையை வனத்துறையினர் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம், ஓடந்துறை, நெல்லித்துறை, சமயபுரம், தேக்கம்பட்டி, குரும்பனூர், கிட்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள், காட்டெருமை, மான், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.

    அவை தற்போது வனப்பகுதியை ஒட்டிய விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதம் செய்வதுடன் மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன.

    மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வன பத்திரகாளியம்மன் கோவில் செல்லும் வழியில் உள்ள சமயபுரம் பகுதியில் பாகுபலி என்ற ஒற்றை யானை தினந்தோறும் சாலையை கடந்து செல்வது வழக்கம். ஆனால் அது யாரையும்,தாக்கவோ, வழிம றிக்கவோ முயற்சிப் பது இல்லை.

    இந்த நிலையில் பாகுபலி யானைக்கு அடுத்த படியாக இன்னொரு யானை அதே சமயபுரம் சாலையை கடந்தது. அதை பார்த்த பொது மக்கள் பாகுபலி என்றே நினைத்தனர்.

    ஆனால் இந்த யானை ஊருக்குள் நுழையும் போதே பிளிறியபடி ஆக்ரோஷத்துடன் பொதுமக்களை அச்சுறுத்தும்படி வந்தது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் தற்போது அச்சத்தில் ஆழ்ந்து உள்ளனர். எனவே பாகுபலியுடன் ஊருக்குள் சுற்றி திரியும் காட்டு யானையையும் வனத்துறையினர் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ஆறுமுகத்துக்கும் ஜெயந்திக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.
    • உயிருக்கு போராடிய 2 பேரையும் அங்கு இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை,

    கோவை ஒண்டிப்புதூர் காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி ஜெயந்தி (வயது 38). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்து வருகிறார்.

    ஜெயந்தி சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சமையல் தொழிலாளி ஆறுமுகம் (67) என்பவரிடம் கடன் வாங்கியிருந்தார். இது தொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு இருந்து வந்ததது.

    சம்பவத்தன்று ஜெயந்தி வேலைக்கு செல்வதற்காக தனது தாயுடன் சிங்காநல்லூரில் உள்ள ஒரு மில் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்றிருந்த ஆறுமுகத்துக்கும் ஜெயந்திக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெயந்தியின் இடுப்பில் குத்தினார்.

    இதனை தடுக்க முயன்ற அவரது தாயாருக்கும் கத்திக்குத்து விழுந்தது. தாயும், மகளும் வலியால் அலறி துடித்தனர். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் ஆறுமுகம் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    உயிருக்கு போராடிய 2 பேரையும் அங்கு இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கோவை சீரநாயக்கன்பாளையம் ஜீவானந்தம் தெருவை சேர்ந்த சமையல் தொழிலாளி ஆறுமுகம் என்பவரை கைது செய்தனர்.

    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • தனது காதலன் தற்கொலைக்கு முயன்ற தகவல் கிடைத்ததும் யுவஸ்ரீ மிகுந்த மனவேதனை அடைந்தார்.
    • உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கோவை,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகள் யுவஸ்ரீ (வயது 19).

    இவர் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக மாணவி கல்லூரி விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

    யுவஸ்ரீக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.

    தற்போது காதலன் சிங்கப்பூரில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார். இதனால் காதலர்கள் செல்போன் மூலமாக பேசி அவர்களது காதலை வளர்த்து வந்தனர்.

    நேற்று விடுதியில் இருந்த யுவஸ்ரீ செல்போன் மூலமாக காதலனிடம் பேசினார். அப்போது அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த காதலன் தற்கொலை செய்யப் போவதாக கூறி விட்டு செல்போனை சுவிட்ச்ஆப் செய்து விட்டார். பின்னர் அவர் மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்து அவரது நண்பர்கள் அவரை மீட்டு அங்கு உள்ள ஆஸ்பத்திரி சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    தனது காதலன் தற்கொலைக்கு முயன்ற தகவல் கிடைத்ததும் யுவஸ்ரீ மிகுந்த மனவேதனை அடைந்தார். பின்னர் அவரும் தற்கொலை செய்வது என முடிவு செய்தார். அதன்படி அறையில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து சக மாணவிகள் அதிர்ச்சி யடைந்தனர்.

    பின்னர் இதுகுறித்து அவர்கள் கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் தற்கொலை செய்து கொண்ட யுவஸ்ரீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கொலை செய்யப்பட்ட கோகுலின் வீட்டின் அருகே சந்தேக நபர்கள் சுற்றுவதாக அவரது நண்பர்கள் கருதினர்.
    • இதுகுறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    கோவை,

    கோவை கோவில்பாளையம் அருகே உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் கோகுல் என்ற சொண்டி கோகுல் (வயது 22). இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

    இவர் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த கண்ணப்பநகரை சேர்ந்த குரங்கு ஸ்ரீராம் என்பவரது கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.

    பின்னர் கோகுல் ஜாமீனில் வெளியே வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி கோர்ட்டில் ஆஜராகி விட்டு வெளியே வந்த கோகுலை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தனர்.

    இந்தநிலையில் கொலை செய்யப்பட்ட கோகுலின் வீட்டின் அருகே சந்தேக நபர்கள் சுற்றுவதாக அவரது நண்பர்கள் கருதினர். சம்பவத்தன்று அந்த வழியாக சென்ற 3 பேரை கோகுலின் கூட்டாளிகளான சந்தோஷ்குமார், பிரதீப், சுபாஷ் என்ற போலோ ஆகியோர் சேர்ந்து கத்தியால் குத்தினர். இந்த வழக்கில் இவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். பின்னர் 3 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

    கடந்த 9-ந் தேதி இரவு வரதையங்கார்பாளையத்தில் உள்ள சந்தோஷ்குமாரின் வீட்டின் முன்பு மர்மநபர்கள் சிலர் வந்துள்ளனர். அவர்கள் பயமுறுத்தும் நோக்கில் அவரது வீட்டின் கதவை தட்டி விட்டு சென்றனர். அப்போது சந்தோஷ்குமார் வீட்டில் இல்லை. அவரது தாய் மட்டுமே வீட்டில் இருந்துள்ளார்.

    எனவே சந்தோஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் தங்களை பயமுறுத்துவது கோகுலை கொலை செய்த ரத்தினபுரியை சேர்ந்த குரங்கு ஸ்ரீராமின் கூட்டாளிகளாக இருக்கலாம் என கருதினர். எனவே அங்கு சென்று அந்த கும்பலை சேர்ந்தவர்களை கொலை செய்ய திட்டமிட்டனர்.

    அதன்படி கோகுலின் கூட்டாளிகளான வரதையங்கார்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (22), லட்சுமி கார்டன் பிரம்மா நகரை சேர்ந்த பிரதீப் (20), சாய்பாபா காலனி கே.கே. புதூரை சேர்ந்த சுபாஷ் என்ற போலோ (23), கொண்டையாம்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ் (26), கீரநத்தத்தை சேர்ந்த கிஷோர்குமார் (20) ஆகியோர் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஆறுவதுசெட்டிபுதூரில் ஒன்று கூடினர்.

    இதுகுறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து போலீசார் உடனடியாக தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு கொலை செய்வதற்காக பயங்கர ஆயுதங்களுடன் நின்று கொண்டு இருந்த 5 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து அரிவாள்-2, கத்தி-1, ஆட்டோ-1, மோட்டார் சைக்கிள்-1, சைக்கிள் 1 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • 30-வது ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா வருகிற 18-ந்தேதி பூச்சாட்டு தல் நிகழ்ச்சியுடன் தொடங்க உள்ளது.
    • நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து அம்மனுக்கு கிடா வெட்டியும், மொட்டை அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடிக்குண்டம் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 30-வது ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா வருகிற 18-ந்தேதி பூச்சாட்டு தல் நிகழ்ச்சியுடன் தொடங்க உள்ளது.

    அதனை முன்னிட்டு தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலில் இன்று காலை குண்டம் கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது காலை 8.30 மணி அளவில் வன பத்ரகாளியம்மனுக்கு கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு அலங்காரம், அபிஷேகம், பூஜைகளும் நடத்தப்பட்டன. அப்போது பல வண்ண மலர்களால் அலங்கரிங்கப்பட்ட குண்டத்திற்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    பரம்பரை அறங்காவலர் வசந்தா மேள, தாளங்கள் முழங்க மண்வெட்டியால் குண்டம் கண் திறந்து வைத்தார். அதன்பிறகு கோவில் பணியாளர்கள் பூஜை மற்றும் சடங்குகளை நடத்தினார்கள்.

    • தமிழக அரசின் சார்பில் செல்போன் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது.
    • ரேஷன் கடைகளில் உதவி மையம் அமைகிறது

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பான பயிற்சிக்கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் கிராந்திகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இந்த கூட்டத்தில் துணை தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டன.

    இதனை தொடர்ந்து கலெக்டர் கிராந்திகுமார் கூட்டத்தில் பேசும்போது கூறியதாவது:-

    தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கி வைக்க உள்ளார். இதில் ரேஷன்கடைகள் ஒரு கணக்கெடுப்பு அலகாக எடுத்து கொள்ளப்பட உள்ளது.

    இதற்காக சம்பந்தப்பட்ட ஊழியர்கள் அந்தந்த மண்டல அலுவலகங்களில் தேவையான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். அதன்பிறகு அந்தந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பான விண்ணப்பங்களை வழங்க வேண்டும்.

    அதில் குடும்ப அட்டை எண், எந்த தேதியில் எப்போது முகாமுக்கு வர வேண்டும் ஆகிய விவரங்கள் இருக்க வேண்டியது அவசியம். இதற்காக தமிழக அரசின் சார்பில் செல்போன் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது.

    அதனை ஊழியர்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். இதற்காக பயோ மெட்ரிக் சாதனங்கள், மொபைல் கனெக்டர்கள் ஆகியவை வழங்கப்படும்.

    குடும்ப அட்டைதாரர்களில் 70 சதவீதம் பேர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விடுவர். அதே நேரத்தில் எழுத படிக்க தெரியாதவர்கள் விண்ணப்பத்தை நிரப்புவதற்காக, ரேஷன் கடைகளில் உதவி மையம் அமைக்க வேண்டும். இங்கு இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

    கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பத்தில் ஆதார் எண், ரேஷன் கார்டு எண், மின் இணைப்பு எண், குடும்ப உறுப்பினர் ஆகியவை சரியாக பூர்த்தி செய்யப்பட்டு உள்ளதா? என்பதை சரி பார்த்து அதன்பிறகு மேற்கண்ட அம்சங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    குடும்ப அட்டை, ஆதார் அட்டை இல்லாத சிலர் வறுமைக் கோட்டின்கீழ் இருக்கலாம். எனவே அவர்கள் பற்றிய விவரங்களை தனியாக பட்டியலிட வேண்டும். அவர்களும் மேற்கண்ட திட்டத்தின்கீழ் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வங்கி கணக்கு இல்லாதவர்களின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு அதன்பிறகு கூட அவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு செய்து தரலாம்.

    கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பாக அனைத்து நிலை அதிகாரிகளுக்கும் பயிற்சிகள் தரப்பட்டு கையேடுகளும் விநியோகிக்கப்பட உள்ளன. அவற்றில் விண்ணப்பதாரர் கேள்விக்கு எப்படி பதில் தரவேண்டும் என்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடைகளில் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • 6 உழவர் சந்தைகளில் கூட்டம் அலை மோதுகிறது.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளில் தக்காளி விலை உச்சத்தை எட்டி உள்ளது. அங்கு ஒரு கிலோ ரூ.120 முதல் 140 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர், வடவள்ளி, மேட்டுப்பாளையம், சுந்தராபுரம், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் உள்ள உழவர் சந்தைகளில் விவசாயிகளிடம் இருந்து தக்காளியை நேரடியாக கொள்முதல் செய்து, பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்வது என்று தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆகியவை முடிவு செய்தன.

    அதன்படி கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளிடம் சுமார் 1800 கிலோ தக்காளிப் பழங்கள் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டன. அதன்பிறகு இவை உழவர் சந்தைக்கு கொண்டுவரப் பட்டது. அங்கு உள்ள கடைகளில் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    கோவை மாவட்ட வெளிமார்க்கெட் சந்தைகளில் தக்காளி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால், அங்கு உள்ள 6 உழவர் சந்தைகளில் கூட்டம் அலை மோதுகிறது.

    பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு தக்காளிப்பழங்களை குறைந்த விலைக்கு வாங்கி சென்றனர். இதனால் ஒரே நாளில் 1800 கிலோ தக்காளிப்பழங்கள் விற்று தீர்ந்து உள்ளன.

    கோவை மாவட்ட உழவர் சந்தைகளில் இன்றும் தக்காளி விற்பனையில் ஈடுபடுவது என்று தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் வணிகத்துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    • கோவை மண்டலத்தில் கடந்த ஜூன் மாதம் மட்டும் 169 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 165 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
    • 3 மாநில எல்லைகளில் தீவிர சோதனை

    கோவை,

    ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக, கடந்த 6 மாதங்களில் மொத்தம் 568 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரிசி கடத்தலைத் தடுக்க 3 மாநில எல்லைகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் தெரிவித்தனர்.

    குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை (உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஐ.ஜி. காமினி உத்தரவின் பேரில், கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பி.பாலாஜி அறிவுறுத்தலின் பேரில், கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், திருப்பூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ரேஷன் அரிசி கடத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதனால் ரேஷன் அரிசி கடத்தல், பதுக்கல் சம்பவங்கள் குறைந்துள்ளன. நடப்பாண்டு ஜனவரி முதல் ஜூன் 30-ந் தேதி வரை ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 568 வழக்குகள், மண்எண்ணை கடத்தல் தொடர்பாக ஒரு வழக்கு, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் முறைகேடு தொடர்பாக 247 வழக்குகள், டீசல் பதுக்கி வைக்கப்பட்டது தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. கடத்த முயன்ற 3,010 டன் ரேஷன் அரிசி, 250 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    தவிர, 445 சமையல் எரிவாயு உருளைகள், 1,500 லிட்டர் டீசல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    கோவை மண்டலத்தில் கடந்த ஜூன் மாதம் மட்டும் 169 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 165 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 385 வழக்குகள் நீதிமன்ற விசாரணை முடிக்கப்பட்டு எதிரிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.

    கேரளா மாநில எல்லையான வாளையாறு, வேலந்தாவளம், செம்மனாம்பதி, நடுப்புணி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், கோவிந்தாபுரம், வீரப்பகவுண்டனூர், வடக்குக்காடு, ஜமீன் காளியாபுரம், ஆனைகட்டி, தோளம்பாளையம், கக்க நள்ளா, நாடுகாணி, தேவாலா, எப்பநாடு, எருமாடு, சோழடி, கர்நாடக எல்லைப் பகுதிகளான பண்ணாரி, ஆசனூர், வேப்பண்ணஹள்ளி, நேர்லகிரி, ஆந்திரா எல்லை பகுதிகளான குருவிநாயனப்பள்ளி, ஜூஜூவாடி ஆகிய சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வதால், பிரதமர் மோடி எரிச்சல் அடைந்துள்ளதாக முதல்வர் பேசுகிறார்.
    • உங்கள் எதிர்க்கட்சி கூட்டணிக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கிறது.

    கோவை:

    கோவை ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் துளிர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்யாண மேடைகளை, எதிர்கட்சிகளை திட்ட பயன்படுத்தி கொள்கிறார். பிரதமர் மோடியின் மீது விமர்சனம் வைத்ததுடன், தனது ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் பரவாயில்லை என்றும் சொல்லி இருக்கிறார். அவருக்கு எதற்காக இந்த பயம் வந்திருக்கிறது என்பது தெரியவில்லை.

    அவரது ஆட்சியை, மாநில அரசை கலைப்பதற்கான காரணங்கள் கூறுவதற்கு இடம் இருக்கிறதோ? அதுவெல்லாம் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக முதலமைச்சர் நினைக்கிறாரா?.

    எந்த ஒரு மாநில அரசையும், ஜனநாயகத்திற்கு விரோதமாக கலைக்க பாஜனதாவிற்கு விருப்பம் இல்லை. கலைத்ததும் இல்லை. எதற்காக முதல்வருக்கு இந்த பயம் வந்திருக்கிறது என்பது தெரியவில்லை.

    எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வதால், பிரதமர் மோடி எரிச்சல் அடைந்துள்ளதாக முதல்வர் பேசுகிறார். உங்கள் எதிர்க்கட்சி கூட்டணிக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கிறது.

    நீங்களே உங்களை பெரிதாக நினைத்துக் கொண்டு, பிரதமர் மோடி உங்களை பார்த்து பயப்படுவதாக நினைப்பது கற்பனை. முதல்வர் ஸ்டாலின் அந்த கற்பனை உலகத்தில் இருந்து வெளியே வந்து, தமிழகத்தில் இருக்கும் பிரச்சினைகளை பார்க்க வேண்டும்.

    பிரதமர் மோடி தங்களைப் பார்த்து பயப்படுகிறார் என பேசுவது மாநிலத்தின் பிரச்சினைகளை மூடி மறைக்கவே. தங்களின் ஆட்சிக்கு ஏதோ பிரச்சினை வரப்போகிறது என்பதைப் போல காட்ட முதல்வர் முயல்கிறார். தமிழகத்தின் ஆட்சியை நன்றாக நடத்த ஸ்டாலின் முயற்சி செய்யவேண்டும்.

    தமிழக கவர்னர் குறித்து ஜனாதிபதிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியிருக்கும் கடிதம் முழுக்க முழுக்க கற்பனை. அவர், மாநிலத்தின் வரலாற்றை, நாட்டின் கலாச்சார பதிவுகளை, பண்பாட்டு தளங்களை பற்றி மாணவர்களிடமும், பொது வெளியிலும் கவர்னர் பேசுகிறார்.

    இது எந்த விதத்தில் சிக்கலை உருவாக்குகிறது. ஒரு கற்பனை கோட்டையை கட்டிக்கொண்டு யாரும் மாற்றுக்கருத்தை பேசக்கூடாது என்ற சர்வாதிகாரத்திற்குள் செல்கிறீர்களா.

    கவர்னரைப் பற்றி எழுதியிருக்க கூடிய கடிதம் உண்மை இல்லாத ஒன்று. தேவையில்லாமல் ஒவ்வொரு முறையும் அவரை விமர்சனம் செய்து, சிக்கலான நிலையை நீங்கள் தான் உருவாக்கிக் கொள்கிறீர்கள்.

    மாநிலத்தின் கவர்னர் எதற்கு அனுமதி கொடுப்பது? எதனால் தாமதம் என்பது குறித்து செய்தி குறிப்பாக வெளியிடப்படுகிறது. முன்னாள் அமைச்சர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் வெளியாகி வருகிறது. ஒவ்வொன்றிற்கும் கவர்னர் அலுவலகம் பதில் தருவதால் எரிச்சல் உங்களுக்கு வந்திருக்கிறதா.

    பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலைக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அக்காவும் தம்பியுமாக சேர்ந்து கட்சியை வளர்க்கின்றோம். தேசிய அரசியலில் இருப்பதால் கோவைக்கு அவர் வரும் போது இல்லாமல் இருப்பதை போன்ற சூழல் இருக்கிறது. இருவரும் அடுத்து ஒரே கூட்டத்தில் பங்கேற்பதை போல திட்டமிடுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னர் ஆர்.என்.ரவி குறித்து ஜனாதிபதிக்கு புகார் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
    • தி.மு.க.வினர் கவர்னருக்கு எப்போதும் மரியாதை கொடுப்பதில்லை.

    கோவை:

    இங்கிலாந்தில் படிக்க சென்ற கோவையை சேர்ந்த ஜீவந்த் என்ற என்ஜினீயர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உடல் சில நாட்களுக்கு முன்பு கோவை கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

    ஜீவந்தின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இன்று கோவை வந்தார். அவர் கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னர் ஆர்.என்.ரவி குறித்து ஜனாதிபதிக்கு புகார் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தை பார்த்த போது, அதில் உள்ள தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாகவே இருக்கிறது.

    அவர் எழுதிய கடிதமானது வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் தோல்வி பயம் காரணமாக எழுதப்பட்ட கடிதமாகவே பார்க்கப்படுகிறது. அந்த கடிதமானது முதலமைச்சரின் இயலாமையை தான் காட்டுகிறது. தமிழகத்தின் உண்மையான நிலைமைய பிரதி பலிக்கும் விதமாக அவரது கடிதம் இல்லை.

    முதலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணாடியில் பார்த்து தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் தமிழகத்தில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கிறது. இவர்கள் தேர்தலின் போது பல வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள். அந்த வாக்குறுதிகளில் பல வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமலே உள்ளது.

    இந்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றுவதை விட்டு விட்டும், மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணியை ஆற்றாமலும், எப்போது பார்த்தாலும் கவர்னர் என்ன சொல்கிறார். அதில் என்ன குறை கண்டுபிடிக்கலாம் என்பதிலும், அவரை சீண்டி பார்ப்பதிலுமே தங்களது நேரத்தை தி.மு.க. அரசானது செலவிட்டு வருகிறது.

    தமிழகத்தில் கள்ளச்சாராய சாவு, பெண்களுக்கு பாதுகாப்பற நிலை என பல பிரச்சினைகள் இருக்கிறது. ஆனால் அதனை எல்லாம் இந்த அரசு கண்டு கொள்வதாக தெரியவில்லை.

    அதற்கு மாறாக தங்கள் கட்சியினர் செய்யக் கூடிய தவறுகளை மறைக்க அனைத்து பழிகளையும் தூக்கி கவர்னர் மீது போட்டு வருகிறார்கள். இதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

    கவர்னர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கியதை முதலமைச்சர் மற்றும் அவரது கட்சியினர் தவறு என்று சொல்கின்றனர். இது தொடர்பாக விவாதிப்பதற்கு நேரம் இருக்கிறது. அப்போது நாம் அது பற்றி பேசிக் கொள்ளலாம்.

    அமைச்சரை நீக்குவதற்கு அதிகாரம் இல்லை என்று சொல்லக்கூடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தான் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, கவர்னரை சந்தித்து அப்போது அமைச்சர்களாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை நீக்க வலியுறுத்தியது ஏன்? அப்போது மட்டும் கவர்னருக்கு அதிகாரம் இருந்தது. தற்போது அவருக்கு அதிகாரம் இல்லையா?

    தி.மு.க.வினர் ஏதோ செந்தில்பாலாஜி என்னவோ ஒரு உத்தமர் போலவும், அவரை ஒரு புத்தர் போலவும், தமிழகத்தை காக்க வந்த சேவகராவும் கூறி வருகின்றனர். முதலமைச்சர் எழுதிய கடிதத்திலும் செந்தில்பாலாஜியை புத்தராக நினைத்து அதில் கருத்துக்களை தெரிவித்து அனுப்பி இருக்கின்றனர்.

    தாங்கள் செய்யக் கூடிய தவறுகள் அனைத்தையும் மறைப்பதற்காக கவர்னரை ஒரு வில்லனை போல காட்ட தி.மு.க.வினர் முயற்சித்து வருகிறார்கள்.

    தி.மு.க.வினர் கவர்னருக்கு எப்போதும் மரியாதை கொடுப்பதில்லை. எப்போதுமே தி.மு.க.வினர் கவர்னரை ஒருமையில் பேசுவது, தரக்குறைவாக விமர்சிப்பது போன்ற செயல்களிலேயே ஈடுபட்டு வருகிறார்கள். முதலில் அவரது பதவிக்கு மரியாதை கொடுத்து பேசுவதற்கு தி.மு.க. எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சியினர் கற்று கொள்ள வேண்டும். கவர்னரிடம் தாங்கள் என்ன கொடுக்கிறோமோ அதனை கொடுப்பதை அப்படியே படித்து விட வேண்டும் என தி.மு.கவினர் நினைக்கின்றனர். இவர்கள் கொடுப்பதை மட்டுமே படிக்க வேண்டும் என எந்த சட்டமும் இல்லை.

    அவர் எங்கெல்லாம் பொய் இருக்கிறதோ அதனை எல்லாம் தவிர்த்து விட்டு படித்து இருக்கிறார். தி.மு.க. சொல்வதை எல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் அவருக்கு கிடையாது.

    ஜி.யு. போப் திருக்குறளை மொழி மாற்றம் செய்ததிலும் சில பிழைகள் இருக்கத்தான் செய்கிறது. இதில் மாறுபட்ட கருத்துக்களும் நிலவுகிறது.

    கவர்னர் அவருக்கான கருத்துக்களை சொல்லவும், பேசவும் உரிமை உள்ளது. அவர் என்ன பேச வேண்டும். என்ன பேசக்கூடாது என்பதை நாம் சொல்லக்கூடாது. அவர் கலாசாரத்தை பற்றியும், பண்பாட்டை பற்றியும் பேசுவதற்கு அனைத்து உரிமையும் இருக்கிறது. அதனை அவர் பேசலாம். அதேசமயம் கவர்னர் அரசியல் பேசக்கூ டாது என்பது எனது கருத்து.

    சிதம்பரம் குழந்தைகள் விவகாரம் தொடர்பாக கவர்னர் மீது வழக்குப்பதிவு செய்ய முடியும் என கூறுகிறார்கள். அது எப்படி முடியும். தேசிய குழந்தைகள் ஆணையம் விசாரித்து ஒரு அறிக்கை கொடுத்து இருக்கிறது. அவர்கள் சொல்வது தவறா? காவல்துறை சொல்வது தவறா? என்பது தான் விவாதமே தவிர இதற்கு எப்படி கவர்னர் பொறுப்பாவார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டது. அதன் வெளிப்பாடே கவர்னரை பற்றிய இந்த கடிதம். மற்றபடி அவர் தமிழகத்தின் உண்மையான நிலைமையை அந்த கடிதத்தில் விளக்கவில்லை. வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க இந்தியா முழுவதும் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×