என் மலர்
நீங்கள் தேடியது "568 வழக்கு"
- கோவை மண்டலத்தில் கடந்த ஜூன் மாதம் மட்டும் 169 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 165 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
- 3 மாநில எல்லைகளில் தீவிர சோதனை
கோவை,
ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக, கடந்த 6 மாதங்களில் மொத்தம் 568 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரிசி கடத்தலைத் தடுக்க 3 மாநில எல்லைகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் தெரிவித்தனர்.
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை (உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஐ.ஜி. காமினி உத்தரவின் பேரில், கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பி.பாலாஜி அறிவுறுத்தலின் பேரில், கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், திருப்பூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ரேஷன் அரிசி கடத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனால் ரேஷன் அரிசி கடத்தல், பதுக்கல் சம்பவங்கள் குறைந்துள்ளன. நடப்பாண்டு ஜனவரி முதல் ஜூன் 30-ந் தேதி வரை ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 568 வழக்குகள், மண்எண்ணை கடத்தல் தொடர்பாக ஒரு வழக்கு, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் முறைகேடு தொடர்பாக 247 வழக்குகள், டீசல் பதுக்கி வைக்கப்பட்டது தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. கடத்த முயன்ற 3,010 டன் ரேஷன் அரிசி, 250 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தவிர, 445 சமையல் எரிவாயு உருளைகள், 1,500 லிட்டர் டீசல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவை மண்டலத்தில் கடந்த ஜூன் மாதம் மட்டும் 169 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 165 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 385 வழக்குகள் நீதிமன்ற விசாரணை முடிக்கப்பட்டு எதிரிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.
கேரளா மாநில எல்லையான வாளையாறு, வேலந்தாவளம், செம்மனாம்பதி, நடுப்புணி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், கோவிந்தாபுரம், வீரப்பகவுண்டனூர், வடக்குக்காடு, ஜமீன் காளியாபுரம், ஆனைகட்டி, தோளம்பாளையம், கக்க நள்ளா, நாடுகாணி, தேவாலா, எப்பநாடு, எருமாடு, சோழடி, கர்நாடக எல்லைப் பகுதிகளான பண்ணாரி, ஆசனூர், வேப்பண்ணஹள்ளி, நேர்லகிரி, ஆந்திரா எல்லை பகுதிகளான குருவிநாயனப்பள்ளி, ஜூஜூவாடி ஆகிய சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






