என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் தாய்-மகளை கத்தியால் குத்திய சமையல் தொழிலாளி கைது
    X

    கோவையில் தாய்-மகளை கத்தியால் குத்திய சமையல் தொழிலாளி கைது

    • ஆறுமுகத்துக்கும் ஜெயந்திக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.
    • உயிருக்கு போராடிய 2 பேரையும் அங்கு இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை,

    கோவை ஒண்டிப்புதூர் காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி ஜெயந்தி (வயது 38). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்து வருகிறார்.

    ஜெயந்தி சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சமையல் தொழிலாளி ஆறுமுகம் (67) என்பவரிடம் கடன் வாங்கியிருந்தார். இது தொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு இருந்து வந்ததது.

    சம்பவத்தன்று ஜெயந்தி வேலைக்கு செல்வதற்காக தனது தாயுடன் சிங்காநல்லூரில் உள்ள ஒரு மில் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்றிருந்த ஆறுமுகத்துக்கும் ஜெயந்திக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெயந்தியின் இடுப்பில் குத்தினார்.

    இதனை தடுக்க முயன்ற அவரது தாயாருக்கும் கத்திக்குத்து விழுந்தது. தாயும், மகளும் வலியால் அலறி துடித்தனர். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் ஆறுமுகம் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    உயிருக்கு போராடிய 2 பேரையும் அங்கு இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கோவை சீரநாயக்கன்பாளையம் ஜீவானந்தம் தெருவை சேர்ந்த சமையல் தொழிலாளி ஆறுமுகம் என்பவரை கைது செய்தனர்.

    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×