என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் கொலையுண்ட கோகுலின் கூட்டாளிகள் 5 பேர் அதிரடி கைது
- கொலை செய்யப்பட்ட கோகுலின் வீட்டின் அருகே சந்தேக நபர்கள் சுற்றுவதாக அவரது நண்பர்கள் கருதினர்.
- இதுகுறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
கோவை,
கோவை கோவில்பாளையம் அருகே உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் கோகுல் என்ற சொண்டி கோகுல் (வயது 22). இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.
இவர் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த கண்ணப்பநகரை சேர்ந்த குரங்கு ஸ்ரீராம் என்பவரது கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.
பின்னர் கோகுல் ஜாமீனில் வெளியே வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி கோர்ட்டில் ஆஜராகி விட்டு வெளியே வந்த கோகுலை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தனர்.
இந்தநிலையில் கொலை செய்யப்பட்ட கோகுலின் வீட்டின் அருகே சந்தேக நபர்கள் சுற்றுவதாக அவரது நண்பர்கள் கருதினர். சம்பவத்தன்று அந்த வழியாக சென்ற 3 பேரை கோகுலின் கூட்டாளிகளான சந்தோஷ்குமார், பிரதீப், சுபாஷ் என்ற போலோ ஆகியோர் சேர்ந்து கத்தியால் குத்தினர். இந்த வழக்கில் இவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். பின்னர் 3 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.
கடந்த 9-ந் தேதி இரவு வரதையங்கார்பாளையத்தில் உள்ள சந்தோஷ்குமாரின் வீட்டின் முன்பு மர்மநபர்கள் சிலர் வந்துள்ளனர். அவர்கள் பயமுறுத்தும் நோக்கில் அவரது வீட்டின் கதவை தட்டி விட்டு சென்றனர். அப்போது சந்தோஷ்குமார் வீட்டில் இல்லை. அவரது தாய் மட்டுமே வீட்டில் இருந்துள்ளார்.
எனவே சந்தோஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் தங்களை பயமுறுத்துவது கோகுலை கொலை செய்த ரத்தினபுரியை சேர்ந்த குரங்கு ஸ்ரீராமின் கூட்டாளிகளாக இருக்கலாம் என கருதினர். எனவே அங்கு சென்று அந்த கும்பலை சேர்ந்தவர்களை கொலை செய்ய திட்டமிட்டனர்.
அதன்படி கோகுலின் கூட்டாளிகளான வரதையங்கார்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (22), லட்சுமி கார்டன் பிரம்மா நகரை சேர்ந்த பிரதீப் (20), சாய்பாபா காலனி கே.கே. புதூரை சேர்ந்த சுபாஷ் என்ற போலோ (23), கொண்டையாம்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ் (26), கீரநத்தத்தை சேர்ந்த கிஷோர்குமார் (20) ஆகியோர் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஆறுவதுசெட்டிபுதூரில் ஒன்று கூடினர்.
இதுகுறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து போலீசார் உடனடியாக தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு கொலை செய்வதற்காக பயங்கர ஆயுதங்களுடன் நின்று கொண்டு இருந்த 5 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து அரிவாள்-2, கத்தி-1, ஆட்டோ-1, மோட்டார் சைக்கிள்-1, சைக்கிள் 1 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.






