என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • இறந்த நாய்க்கு சூலூர் கால்நடை மருத்துவமனையில் உடற்கூராய்வு பரிசோதனை நடத்தப்பட்டது.
    • விபீஷ் வளர்ப்பு நாயை அடித்து கொன்றது தெரிய வந்தது.

    சூலூர்:

    சூலூர் ரங்கநாதபுரம் செங்காளியப்பன் நகரை சேர்ந்தவர் விபீஷ் (வயது 35). கேரளாவை சேர்ந்த இவர் தனது சகோதரி ராஜகிருஷ்ணகுமாரி வீட்டில் தங்கி, அங்கு உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ராஜகிருஷ்ண குமாரிக்கு மகள், மகன் உள்ளனர்.

    இந்த நிலையில் அவது மகன் ரஜத்தை வளர்ப்பு நாய் கடித்து உள்ளது. எனவே விபீஷ் அதனை பிடித்து சென்று மொட்டை மாடியில் கட்டினார். அப்போது அவரையும் அந்த நாய் கடித்தது. இதனால் கடும் ஆத்திரம் அடைந்த விபீஷ் அருகில் இருந்த கட்டையை எடுத்து நாயை கொடூரமாக தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த நாய் இறந்து விட்டது.

    இந்த தகவல், புளூகிராஸ் அமைப்புக்கு தெரியவந்தது. அந்த அமைப்பின் கோவை திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், இதுகுறித்து சூலூர் போலீஸ் நிலையத்தில் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக இறந்த நாய்க்கு சூலூர் கால்நடை மருத்துவமனையில் உடற்கூராய்வு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் விபீஷ் வளர்ப்பு நாயை அடித்து கொன்றது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    • குருபிரசாத் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர் குருபிரசாத்தை கைது செய்தனர்.

    கோவை,

    கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது மாணவி. இவர் அங்கு உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 10- ம்வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் குனியமுத்தூர் கல்லூரி மாணவர் குருபிரசாத் (வயது 19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இது நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் மாணவி சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த குருபிரசாத் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

    இதனால் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே பெற்றோர்கள் விசாரித்தனர். அப்போது சிறுமி நடந்த சம்பவத்தை தெரிவித்து உள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சூலூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர் குருபிரசாத்தை கைது செய்தனர்.

    • ஓட்டல், மால் போன்றவை தொடர்பாக ரேட்டிங் கொடுத்தால் கமிஷன் வழங்கப்படும் என மெசேஜ் வந்தது.
    • சதீஷ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை இருகூர் தீபம் நகரை சேர்ந்தவர் சதீஷ் (வயது 31). இவர் பகுதி நேர வேலை தேடி வந்தார். சதீஷின் வாடஸ் அப்பிற்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் ஓட்டல், மால் போன்றவை தொடர்பாக ரேட்டிங் கொடுத்தால் கமிஷன் வழங்கப்படும்.

    இதனை பகுதி நேரமாக அதிகம் சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதில் இலவச டாஸ்க் என்ற பெயரில் ரூ. 150 கமிஷன் பெற்றார். பின்னர் ரூ.1000 செலுத்தி கமிஷனாக ரூ.1300 ரூபாயும், பின்னர் ரூ 5 ஆயிரம் கட்டி ரூ.6500 பெற்றார்.

    இதை தொடர்ந்து சதீசை தொடர்பு கொண்ட ஒரு நபர் டாஸ்க்கில் அதிக முதலீடு செய்யுமாறு கேட்டு கொண்டார்.

    பல்வேறு தவணைகளில் சதீஷ் ரூ.14.45 லட்சம் செலுத்தினார். அதற்கு பின்னர் இவர் முதலீடு செய்த தொகையும் கிடைக்கவில்லை. கமிஷனும் வழங்கப்படவில்லை.

    இவரை தொடர்பு கொண்டு பேசிய நபரின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி விட்டது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சதீஷ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இடத்தை போகியத்திற்கு தருவதாக கூறி கடந்த 2020-ம் ஆண்டில் ரூ.6½ லட்சம் பெற்றனர்.
    • சாத்தூர்சாமி ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சாத்தூர்சாமி (வயது 63). ஓய்வு பெற்ற ராணுவவீரர்.

    இவருக்கு கோவை கலிக்கநாயக்கன்பாளையம் நாராயணா நகரை சேர்ந்த விஜயலட்சுமி (40). இவரது கணவர் சுதாகரன் (43) ஆகியோருக்கும் அறிமுகம் கிடைத்தது. சுதாகரனும், அவர் மனைவியும் ஆர்.எஸ்.புரம் சி.வி.ராமன் ரோட்டில் துணிவியாபாரம் செய்வதாக கூறினர்.

    மேலும் அங்கே இருக்கும் தங்களது இடத்தை போகியத்திற்கு தருவதாக கூறி கடந்த 2020-ம் ஆண்டில் ரூ.6½ லட்சம் பெற்றனர். பின்னர் வேறு ஒரு அவசர தேவை என கூறி ரூ.15 லட்சம் பெற்றனர். அதன்பின் பாலக்காடு கோட்டத்துறை பகுதியில் தங்களது பெயரில் உள்ள 9 ஏக்கர் நிலத்தை கிரயம் செய்து தருவதாக கூறி ரூ.1 லட்சம் வாங்கினார்கள்.

    இப்படியே இவர்கள் மொத்தமாக ரூ.22½ லட்சம் பெற்றனர். ஆனால் அந்த பணத்தை அவர்கள் திருப்பி கொடுக்கவில்லை. நிலத்தையும் கிரயம் செய்து கொடுக்க வில்லை.

    இது குறித்து சாத்தூர்சாமி ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி ராணுவ வீரரிடம் மோசடி செய்த விஜயலட்சுமி, சுதாகரன் ஆகியோரை கைது செய்தனர். நில விற்பனைக்கு புரோக்கராக செயல்பட்ட சதீஷ், சீனிவாசன் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • இளம்பெண் பணம் வாங்கி கொடுக்க காலதாமதம் ஆனதால் மன ரீதியாக தொல்லை கொடுத்து வந்தனர்.
    • வாலிபருக்கு உறுதுணையாக இருந்த அவரது தாய், தந்தை, சகோதரர் மீது போலீசார் வழக்குப்பதிவு

    குனியமுத்தூர்,

    கோவை கரும்புக்கடை அருகே உள்ள சாரமேட்டை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும், எங்களது பகுதியை சேர்ந்த கார் பெயிண்டருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. எங்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. நான் எனது கணவரின் வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தேன்.

    இந்த நிலையில் எனது கணவர் தனியார் கார் பெயிண்டிங் கம்பெனி தொடங்க திட்டமிட்டார். இதற்காக எனது பெற்றோரிடம் பணம் வாங்கி வரும்படி கேட்டார். நான் முடிந்தால் வாங்கி தருகிறேன் என்று கூறியிருந்தேன். நான் பணம் வாங்கி கொடுக்க காலதாமதம் ஆனதால் எனது கணவர் மற்றும் அவரது தந்தை, தாய் மற்றும் சகோதரர் ஆகியோர் எனக்கு மன ரீதியாக தொல்லை கொடுத்து வந்தனர்.

    எனது கணவர் நான் பணம் வாங்கி கொடுக்காத ஆத்திரத்தில் இயற்கைக்கு மாறான உடலுறவு வைத்து எனக்கு தொல்லை கொடுத்தார். மேலும் எனது கணவர் என்னுடைய புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து எனது உறவினர்களிடம் காண்பித்துள்ளார். பணம் வாங்கி தராவிட்டால் மார்பிங் செய்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டுகிறார். எனவே எனது கணவர் மற்றும் அவரது தாய், தந்தை, சகோதரர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் தெற்கு அனைத்து மகளிர் போலீசார் பெயிண்டர் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த அவரது தாய், தந்தை, சகோதரர் ஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், மிரட்டில், கொடுமை, தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போதை தலைக்கேறிய நிலையில் ஸ்ரீரேகாவை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்தார்.
    • நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள பழனியப்பா கவுண்டன்புதூரை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 26). கூலித் தொழிலாளி.

    இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி பாலக்காடு ரோட்ைட சேர்ந்த ஸ்ரீரேகா (24) என்ற இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து ஸ்ரீரேகா கணவரை பிரிந்து மகனுடன் பொள்ளாச்சியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று விக்னேஷ் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த இவர் அவரது மனைவியின் வீட்டிற்கு சென்றார். அங்கு சென்ற அவர் ஸ்ரீரேகாவை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்து விட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த விக்னேஷ் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக குத்தினார். இதில் மனைவியின் இடுப்பு, தோள்பட்டை ஆகிய பகுதிகளில் குத்தினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஸ்ரீரேகாவின் தாயார் தீபா ராணி தடுக்க முயன்றார். அவரையும் விக்னேஷ் கத்தியால் குத்தினார். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    கத்திக்குத்தில் தாய், மகள் ஆகியோர் காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கார் தேக்கம்பட்டி அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது.
    • விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை கணபதி அருகே உள்ள மணியக்காரம்பாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ். இவர் தனது மகன்களான அபிநவ் (வயது 9), ஆதவ் (7) ஆகியோருக்கு மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் மொட்டை அடிப்பதற்காக காரில் உறவினர்களுடன் புறப்பட்டார்.

    கோவிலுக்கு சென்று மொட்டை அடித்த பின்னர் அனைவரும் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டனர். காரை சவுந்தர் என்பவர் ஓட்டி வந்தார். கார் தேக்கம்பட்டி அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது.

    இதில் காரில் பயணம் செய்த அபிநவ், ஆதவ், மித்ரன் (5), தீரன் (2), டிரைவர் சவுந்தர் (25), பொன்ெமாழி (28), சண்முக பிரியா (28), லட்சுமி (50), இந்துராணி (30) ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த 9 பேரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த தகவல் கிடைத்ததும் மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாணவ- மாணவிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
    • வனத்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    வடவள்ளி,

    கோவை மருதமலை சாலையில் பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளது. இது மேற்கு மலைத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. இதனால் அங்கு வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுவது வாடிக்கையாகயுள்ளது.

    இந்த நிலையில் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவ மாணவிகள் படித்து கொண்டு இருந்தனர். அப்போது காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்தன. இதனை பார்த்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

    இதுகுறித்து அந்த பகுதியில் வசிப்பவர்கள் கூறுகையில், மருதமலை பகுதியில் காட்டு பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. பகல் நேரங்களில் குட்டிகளுடன் கூட்டமாக சுற்றி திரிகிறது. பல்கலைக்கழக வளாகத்திலும் உலா வருகிறது. இது வாகன ஓட்டிகள், மாணவ மாணவியரிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சாலையில் ெசல்லும் காட்டுப்பன்றிகள் வாகனங்களை முட்டி விபத்து ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே வனத்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து மருதமலை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    பல்கலைக்கழக வளாகத்திலும் அடிக்கடி ரோந்து சென்று காட்டுப்பன்றிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ஈஸ்வரி பெண் இருப்பது தெரிந்தும் கூட வெட்கம் இல்லாமல் சிறுநீர் கழிக்கிறாய் என தட்டிக்கேட்டார்.
    • புகாரின் பேரில் நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கோவை,

    கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள செட்டிப்புதூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி ஈஸ்வரி (வயது 45). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவரும் பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வாலிபர் ஒருவர் வந்தார். அந்த வாலிபர் பெண்கள் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்தார். பின்னர் அவர்களின் அருகிலேயே சிறுநீர் கழித்தார்.

    இதனை பார்த்த ஈஸ்வரி பெண் இருப்பது தெரிந்து வெட்கம் இல்லாமல் சிறுநீர் கழிக்கிறாய் என தட்டிக்கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் அங்கு இருந்த தென்னை மட்டையை எடுத்து ஈஸ்வரியை தாக்கினார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த வாலிபர் கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    இதுகுறித்து ஈஸ்வரி நெகமம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பெண்ணை தாக்கிய வாலிபர் மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்த ரங்கசாமி (38) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் போலீசார் ரங்சாமியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • காரமடை மின் மயானம் அருகே சென்றபோது மோட்டார்சைக்கிள் எதிரே வந்த பஸ் மீது மோதியது.
    • காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேட்டுப்பாளையம் ,

    காரமடை அருகே உள்ள சிக்காரம்பாளையம் கள்ளிப்பாளையம் பகுதியைச்சேர்ந்தவர் மகாலிங்கம் (52).அதே பகுதியைச்சேர்ந்தவர் மங்களம்(32). இவர்கள் 2 பேரும் மோட்டார்சைக்கிளில் காரமடை - மேட்டுப்பாளையம் சாலையில் சென்று கொண்டு இருந்தனர். மகாலிங்கம் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார்.

    அப்போது கோவையில் இருந்து ஊட்டி நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சை நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியைச் சேர்ந்த ரவி (50) என்பவர் ஓட்டிச் சென்றார். அதில் 30-க்கும் அதிகமாக பயணிகள் இருந்தனர்.

    காரமடை மின் மயானம் அருகே சென்றபோது மோட்டார்சைக்கிள் எதிர் பாராதவிதமாக நிலைதடுமாறி எதிரே வந்த பஸ் மீது மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் வந்த மகாலிங்கம், மங்களம் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.

    பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி மங்களம் இறந்தார். மகாலிங்கம் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மகாலிங்கம் மோட்டார் சைக்கிளை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கான விண்ணப்பம் வழங்கும் பணி இன்று தொடங்கியது.
    • விண்ணப்பத்தை சமர்ப்பிக்க டோக்கனும் வழங்கப்பட்டது

    கோவை,

    தமிழகத்தில் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்து இருந்தார். அதற்கான விண்ணப்பம், டோக்கன்கள் வழங்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

    இந்தநிலையில் கோவை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கான விண்ணப்பம் வழங்கும் பணி இன்று தொடங்கியது. அந்தந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் வீடு- வீடாக நேரடியாக சென்று விண்ணப்பங்களை வழங்கினர். அத்துடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க டோக்கன்களும் வினியோகிக்கப்பட்டது. டோக்கனில் முகாம் நடக்கும் நாள், நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதுதொடர்பாக கலெக்டர் கிராந்திகுமார்பாடி கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் 11 லட்சத்து 43 ஆயிரத்து 875 குடும்ப அட்டைகள் உள்ளன. 1401 ரேஷன்கடைகள் உள்ளன. விண்ணப்ப பதிவு முகாம் முதல்கட்டமாக 839 ரேஷன் கடைகளைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு வருகிற 24-ந் தேதி முதல் அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடைபெறும். இரண்டாம் கட்ட முகாம் 562 ரேஷன் கடைகளைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெறும்.

    முகாம் நடைபெறும் இடங்களில் 500 நபர்களுக்கு ஒரு தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் தகவல் பதிவிற்கு 2979 தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். 5 கடைக்கு ஒரு பகுதி அலுவலர், 15 கடைக்கு ஒரு வட்டார அலுவலர் மற்றும் ஒவ்வொரு வட்டத்திற்கும் அந்தந்த வட்டத்தின் வட்டாட்சியர்கள் கண்காணிப்பு பணியினை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ளனர்.

    முகாம் நடைபெறும் இடங்களில் காவல்துறையின் சார்பில் பாதுகாப்பு பணியும் மேற்கொள்ளப்படும். முதல் இரண்டு நாட்களுக்கு ஒரு நாளைக்கு 60 பேருக்கு, மூன்றாவது நாளிலிருந்து ஒரு நாளைக்கு 80 பேருக்கு விண்ணப்பபதிவு மேற்கொள்ளப்படும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் எடுத்துவர வேண்டும். விண்ணப்பபதிவு முகாமிற்கு வருகை புரியும் விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு, அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கப்படும்.

    பயனாளிகளின் விரல் ரேகைப் பதிவு சரியாக அமையவில்லை எனில், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள கைப் பேசி வழியாக ஒருமுறை கடவுச்சொல் (ஓடிபி) பெறப்படும். விண்ணப்பதாரரின் ஆதார் அட்டையுடன் தொலைபேசி இணைக்கப்பட்டு இருந்தால் அந்த கைப்பேசியை முகாமிற்கு எடுத்து வருவது விண்ணப்பப்பதிவை எளிமைப்படுத்தும். விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்கத் தேவையில்லை.

    குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாக கருதப்படுவர். ஒவ்வொரு தகுதிவாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத்தலைவி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டையில் குடும்பத்தலைவர் எனக்குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார். குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராக குறிப்பிடப்பட்டிருந்தால், அந்த குடும்பத் தலைவரின் மனைவி குடும்பத் தலைவியாக கருதப்படுவார். குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவரின் மனைவியின் பெயர் ஏதேனும் காரணத்தினால் இல்லாத பட்சத்தில், குடும்பத்தில் உள்ள இதர பெண்களில் ஒருவர் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார்.

    ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஒரு நபரைக் குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கச் செய்யலாம். திருமண மாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாக கருதப்படுவர்.

    குடும்ப அட்டைகள், ஆதார் அட்டைகள் இல்லா தவர்களுக்கென்று தனியாக பதிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அவர்களுக்கென்று சிறப்பு முகாம் நடத்தப்படும். அரசின் நோக்கம் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியான யாரும் விடுபட்டு விடக்கூடாது என்பதாகும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர். மாற்றுத்திறனாளியாக இருந்து விண்ணப்ப பதிவு முகாம் வர முடியாதவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறுவாணியில் குடிநீர் தேவைக்காக தண்ணீர் எடுத்தும், 11 அடி என நிலையாக இருந்தது.
    • தொடர் மழை காரணமாக ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 3.5 அடியாக உயர்ந்துள்ளது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை விளங்கி வருகிறது. இந்த அணை தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. கேரளத்தில் தற்போது தென் மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை.

    இந்த மாதம் முதல் வாரத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து 3 நாட்களுக்கு மழை பெய்தது. தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில் அணையின் நீர்மட்டம், 11 அடி என நிலையாக இருந்து வந்தது. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு மலைப்பகுதியில் திடீரென கனமழை பெய்தது.

    சிறுவாணியில் நேற்று காலை நிலவரப்படி அடிவாரத்தில் 31 மி.மீ. மழையும், அணைப்பகுதியில், 27 மி.மீ. மழையும் பதிவாகி இருந்தது. இதன் காரணமாக நீர்மட்டம் 12.14 அடியாக உயர்ந்துள்ளது.

    இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், சிறுவாணியில் குடிநீர் தேவைக்காக தண்ணீர் எடுத்தும், 11 அடி என நிலையாக இருந்தது. தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளதால் நீர்மட்டம் உயர்ந்து இருக்கிறது. நல்ல மழையை எதிர்பார்த்துள்ளோம் என்றனர்.

    இதேபோல மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம் அட்டப்பாடி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சி பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நேற்றுமுன்தினம் அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியில் 80 அடி அணையில் நீர் இருப்பு இருந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் நேற்று ஒரே நாளில் நீர்மட்டம் 83.5 அடியாக உயர்ந்தது. தொடர் மழை காரணமாக ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 3.5 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் பவானியாற்றின் இருகரைகளையும் தொட்டவாறு தண்ணீர் செல்கிறது.

    அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த குடிநீர் பிரச்சினை நீங்கும் என பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×