search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    6-வது நாளாக தொடரும் வேலைநிறுத்தம்: நூற்பாலை அதிபர்களுடன் நாளை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
    X

    6-வது நாளாக தொடரும் வேலைநிறுத்தம்: நூற்பாலை அதிபர்களுடன் நாளை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

    • தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் இயங்கி வருகின்றன.
    • சென்னை தலைமை செயலகத்தில் நாளை நூற்பாலை அதிபர்களுடனான பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

    கோவை:

    தமிழகத்தில் சிறு, குறு நூற்பாலைகள் மூலப்பொருட்களின் விலைஉயர்வு, மின்கட்டண உயர்வு, வங்கி கடன் வட்டி உயர்வு, துணிகள் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு ஆகியவற்றை கண்டித்து கடந்த 15-ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டம் இன்று 6-வது நாளாக நீடித்து வருகிறது.

    தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அமைந்து உள்ளன. இங்கு 1.5 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    தமிழகம் முழுவதிலும் உள்ள நூற்பாலைகளில் தினந்தோறும் லட்சக்கணக்கில் நூல்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இதன்மூலம் தமிழக அரசுக்கு ரூ.400 கோடிக்கும் மேல் அன்னிய செலாவணி கிடைத்து வந்தது.

    இந்த நிலையில் நூற்பாலைகளின் காலவரையற்ற வேலைநிறுத்தம் காரணமாக அங்கு வர்த்தகம் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு வேலை பார்த்து வரும் தொழிலாளிகளின் வேலைவாய்ப்பும் கேள்விக்குறியாக உள்ளது.

    இந்த நிலையில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நூற்பாலை அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்று தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. இதற்காக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஜவுளித்துறை அமைச்சர் காந்தி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    சென்னை தலைமை செயலகத்தில் நாளை நூற்பாலை அதிபர்களுடனான பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இதற்காக தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம், இந்திய நூற்பாலை உரிமையாளர்கள் சங்கம், ஓபன் என்ட் நூற்பாலைகள் சங்கம், மறுசுழற்சி ஜவுளித்தொழில் கூட்டமைப்பு, இந்திய ஜவுளித்தொழில் முனைவோர் கூட்டமைப்பு, தென்னிந்திய மில்கள் சங்கம், தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து நூற்பாலை உரிமையாளர்கள் கூறுகையில், நாங்கள் கடந்த சில ஆண்டுகளாக தொழில் முடக்கம் காரணமாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளோம். எனவே வேறுவழியின்றி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்து உள்ள தமிழக அரசுக்கு நன்றி.

    தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் எங்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    எனவே தமிழகம் முழுவதும் 6-வது நாளாக தொடரும் காலவரையற்ற வேலைநிறுத்தம் முடிவுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பு, பஞ்சாலை தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது.

    Next Story
    ×