என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    76 ஆயிரம் பேரிடம் ரூ.1300 கோடி மோசடி- நிதி நிறுவன இயக்குனரின் தாய், தந்தை உள்பட 3 பேர் கைது
    X

    76 ஆயிரம் பேரிடம் ரூ.1300 கோடி மோசடி- நிதி நிறுவன இயக்குனரின் தாய், தந்தை உள்பட 3 பேர் கைது

    • மோசடி குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், துணை சூப்பிரண்டு தலைமையில் கோவையில் தனி குழு அமைத்து விசாரித்தனர்.
    • தலைமறைவான ரமேஷ் கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி கோவை டான்பிட் கோர்ட்டில் சரணடைந்தார்.

    கோவை:

    கோவை சூலுாரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது30). இவர் பீளமேட்டில் யு.டி.எஸ்., என்ற நிதி நிறுவனத்தை கடந்த 2012 ம் ஆண்டு தொடங்கினார்.

    கோவையில் தொடங்கப்பட்ட இந்த நிதி நிறுவனத்தை சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், கேரளாவிலும் கிளைகளாக விரிவுபடுத்தினார்.

    பின் அவர் நிறுவனம் சார்பில், 4 கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தார். இதனை நம்பி அந்த நிதி நிறுவனத்தில், 76,597 பேர் ரூ.1,300 கோடி முதலீடு செய்தனர்.

    இந்தநிலையில் மக்களின் முதலீட்டு பணத்தை திருப்பி கொடுக்காமல் அவர் மோசடி செய்தார். இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், துணை சூப்பிரண்டு முருகானந்தம் தலைமையில் கோவையில் தனி குழு அமைத்து விசாரித்தனர்.

    தலைமறைவான ரமேஷ் கடந்த, ஜூன் மாதம் 6-ந்தேதி கோவை டான்பிட் கோர்ட்டில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    தொடர்ந்து அவரது நிறுவனத்தின், 36 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, அதில், 2 வங்கி கணக்குகளில் இருந்து ரூ. 16 லட்சம் மீட்கப்பட்டது.

    மேலும் தமிழகம் முழுவதும், யு.டி.எஸ்., நிறுவனம் மற்றும் ரமேசுக்கு சொந்தமான, 10 இடங்களில் உள்ள வீடு, நிலம் உட்பட ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்துக்களை கையகப்படுத்த போலீசார் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

    மேலும் தலைமறைவாக இருந்த ரமேஷின் அம்மா லட்சுமி, அப்பா கோவிந்தசாமி மற்றும் ஜஸ்டின் பிரபாகரன் ஆகிய 3பேரை கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கும் பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×