என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்திய பக்தர்கள்
- 5 மணிக்கு அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை திரவிய அபிஷேகங்கள் நடைபெற்றது.
- பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
கோவை,
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் தினந்தோறும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடப்பது வழக்கம். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு செல்வார்கள்.
இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை. இதனை யொட்டி கோவையில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் காலையிலேயே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
அதிகாலை முதலே பக்தர்களும் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றதை காண முடிந்தது. கோவை பெரியகடை வீதியில் கோனியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் நடை இன்று அதிகாலையிலேயே திறக்கப்பட்டது.
5 மணிக்கு அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை திரவிய அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் நடந்தது.
அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. கோனியம்மன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். ஆடி வெள்ளிக்கிழமை என்பதால் 5 மணிக்கே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் அம்மனை மனமுருகி தரிசித்து சென்றனர்.
இன்று இரவு நடைபெறும் சிறப்பு பூஜையில் முதல் வெள்ளிக்கிழமையான இன்று கோனியம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். அத்துடன் கோவிலில் ஊஞ்சல் உற்சவமும் நடைபெற உள்ளது.
இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
கோவை-அவினாசி சாலை உப்பிலிபாளையத்தில் உள்ள தண்டுமாரியம்மன் கோவிலும் ஆடி வெள்ளிக்கிழமையான இன்று சிறப்பு வழிபாடு நடந்தது.
அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று தண்டு மாரியம்மனை தரிசித்து சென்றனர்.
இதேபோல் ஆர்.எஸ்.புரம் திருவேங்கடசாமி சாலையில் உள்ள காமாட்சி அம்மன், அன்னபூர்னேஸ்வரி அம்பாள் கோவிலிலும் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு நடந்தது.
வைசியாள் வீதியில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி பெரியகடை வீதியில் உள்ள மாகாளியம்னம், தர்மராஜா கோவில் வீதியில் உள்ள தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் மற்றும் காமாட்சியம்மன் கோவிலில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
அனைத்து அம்மன் கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்து சென்றனர்.
இதேபோல் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில், பொள்ளாச்சி மாரியம்மன் கோவில், சூலக்கல் மாரியம்மன் கோவில் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் இன்று ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகளும், வழிபாடும் நடைபெற்றது.






