என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • நஞ்சுண்டன் என்பவர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள மேட்டுப்பாளையம்- கோவை ரோட்டை கடக்க முயன்றார்.
    • பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் நஞ்சுண்டன் (வயது 71). சம்பவத்தன்று இவர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள மேட்டுப்பாளையம்- கோவை ரோட்டை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த கார் முதியவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே நஞ்சுண்டன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சூலூர் அருகே உள்ள ஜடயம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (78). சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் கோவை- அவினாசி ரோட்டில் தென்னம்பாளையம் பஸ் நிலையம் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி மொபட் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகம் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கும்பகோணம் வைகந்தன்கரை வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (48), இவர் தனது மகன் மோகன் பிரசாத் மற்றும் உறவினர்கள் கோபிநாத், கோபால் ஆகியோருடன் ஒரு காரில் கோவைக்கு வந்தார்.

    காரை இந்திரா காந்தி ரோட்டை சேர்ந்த ராம்குமார் என்பவர் ஓட்டி வந்தார். கார் சேலம்- பாலக்காடு ரோட்டில் சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிரே வந்த லாரி கார் மீது மோதியது. இதில் காரில் சென்ற 4 பேர் படுகாயம் அடைந்த உயிருக்கு போராடினர். அவர்கள் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார்.

    மோகன் பிரசாத், கோபிநாத், கோபால் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காதல் விவகாரம் பிரியதர்ஷினியின் வீட்டிற்கு தெரிய வரவே அவரது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • 2 பேரும் துடியலூரில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த சோலையார் அணை அருகே உள்ள இடது கரையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 21).

    இவர் திருப்பூரில் உள்ள பிரிண் டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மணிகண்டனுக்கு திருச்சூர் மாவட்டம் மளுக்கு பாறையை சேர்ந்த கல்லூரி மாணவி பிரியதர்ஷினி (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் பிரியதர்ஷினியின் வீட்டிற்கு தெரிய வரவே அவரது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து அவர் தனது காதலனிடம் தெரிவித்தார்.

    எனவே 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்வது என முடிவு செய்தனர். அதன்படி சம்பவத்தன்று 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் துடியலூரில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்தனர்.

    திருமணம் முடிந்த கையோடு பிரியதர்ஷினியை, மணிகண்டன் தனது சொந்த ஊரான வால்பாறைக்கு அழைத்து சென்றார்.

    மகள் மாயமானது குறித்து மாணவியின் பெற்றோர் துடியலூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த காதலர்கள் பாதுகாப்பு கேட்டு ஷேக்கல்முடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    போலீசார் 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வனத்துறையினருக்கு இந்த மக்னா யானை போக்கு காட்டியது.
    • ஓரிரு நாட்களில் மக்னா யானை வனத்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பொள்ளாச்சி,

    ஆனைமலை அருகே விளைநிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வரும் மக்னா யானையை வனப்பகுதிக்குள் விரட்ட கோழிகமுத்தி யானைகள் முகாமில் இருந்து கும்கி யானை சின்னத்தம்பி வரவழைக்கப்பட்டுள்ளது.

    தருமபுரியில் விளைநிலங்களை சேதப்படுத்தி வந்த மக்னா யானை பிடிக்கப்பட்டு ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் விடப்பட்டது. இந்த யானை சரளப்பதி அருகே கடந்த சில மாதங்களாக முகாமிட்டு, பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

    தொடர்ந்து விளைநிலங்களை சேதப்படுத்தியும், அங்குள்ள மக்களை தாக்கவும் முற்பட்டது. இதையடுத்து, வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தினர். ஆனால் வனத்துறையினருக்கு இந்த மக்னா யானை போக்கு காட்டியது. மேலும் வனத்துறையினரின் வாகனத்தையும் சேதப்படுத்தியது.

    தற்போது யானையை பிடிக்க வனத்துறையினர் ஆயத்தமாகி உள்ளனர். இதன் ஒரு பகுதியாக கும்கிகளான ராஜவர்தன், கபில்தேவ் ஆகிய யானைகள் சரளப்பதி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், முரட்டுத்தனமான மக்னா யானைகளை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படும் கும்கி யானையான சின்னத்தம்பியும் களமிறக்கப்பட்டுள்ளது.

    இன்னும் ஓரிரு நாட்களில் மக்னா யானை வனத்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • போலீசார் சண்முகத்திடமிருந்து 11 கிராம் செயினை பறிமுதல் செய்தனர்.
    • போலீசார் சண்முகத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை பெரிய நாயக்கன் பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பெண்களிடம் தொடர் செயின் பறிப்பு சம்பவம் நடந்து வந்தது. செயினை பறிகொடுத்தவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்தது பழனி கவுண்டன்புதூரை சேர்ந்த சண்முகம் (வயது 40) என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் தலைமறைவாக இருந்த அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த 11 கிராம் செயினை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் சண்முகத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • கோவை மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த மாதம் 21-ந் தேதி வரை வாக்காளர் சரிபார்ப்பு பணி நடக்கிறது.
    • கணக்கெடுப்பு பணிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவையான விவரங்கள் அளித்து ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த மாதம் 21-ந் தேதி வரை வாக்காளர் சரிபார்ப்பு பணி நடக்கிறது. கோவை மாவட்டத்தில் உள்ள 3,069 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், தங்கள் பாகத்திற்கு உட்பட்ட பகுதியில் வீடு வீடாக சென்று வாக்காளர்கள் சரிபார்க்கும் பணியில் ஈடுபடுகிறார்கள்.

    இது குறித்து கோவை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிராந்திகுமார் பாடி கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் ஜனவரி 5-ந் தேதியில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 14 லட்சத்து 98 ஆயிரத்து 721 ஆண்களும், 15 லட்சத்து 51 ஆயிரத்து 421 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 558 பேரும் என மொத்தம் 30 லட்சத்து 50 ஆயிரத்து 700 வாக்காளர்கள் உள்ளனர்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி எதிர்வரும் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் இன்று முதல் அடுத்த மாதம் 21-ந் தேதி வரையிலான காலத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள 3,069 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், தங்கள் பாகத்திற்கு உட்பட்ட பகுதியில் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சரிபார்க்கும் பணி நடைபெறவுள்ளது. இப்பணியினை புதிய செயலி மூலமாக பதிவு செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே உள்ள வாக்காளர்களின் விவரங்களை முழுமையாக சரிபார்த்திடவும், திருத்தங்கள் இருப்பின் மாற்றம் செய்திடவும் புதிய செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    புதிதாக வாக்காளர்களின் விவரங்களை புதிய செயலி மூலமாக விண்ணப்பம் செய்திடவும், இணையவழி விண்ணப்பங்கள் மற்றும் நேரில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை கள சரிபார்ப்பு செய்து, அங்கீகரிக்கவும் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள் மற்றும் நிரந்தரமாக குடிபெயர்ந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    எனவே, இத்திட்டத்தினை சிறப்பாகவும், விரைவாகவும் முடித்திடும் பொருட்டு பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, தங்கள் வீட்டிற்குக் கணக்கெடுப்பு பணிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவையான விவரங்கள் அளித்து ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
    • கடந்த கல்வியாண்டில் 1,300 பள்ளிகளில் படிக்கும் 2.11 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    கவுண்டம்பாளையம்,

    கோவை மாவட்ட காவல்துறையின் சார்பில் 'புராஜெக்ட் பள்ளிக்கூடம்' என்ற திட்டம் கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டும் 'புராஜெக்ட் பள்ளிக்கூடம் 2.0' என்ற பெயரில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறார்கள், பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை மையப்படுத்தி இத்திட்டம் தொடங்கப்பட்டது.

    பாலியல் துன்புறுத்தல், தவறான தொடுதல், அதனால் பாதிக்கப்பட்டால் யாரிடம் தெரிவிக்க வேண்டும். பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படாமல் தற்காத்துக் கொள்ளும் முறை உள்ளிட்டவை குறித்து காவலர்கள் மூலமாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மாவட்ட காவல்துறையினர் கூறும்போது, புராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டத்தின் மூலம் கடந்த கல்வியாண்டில் 1,300 பள்ளிகளில் படிக்கும் 2.11 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதற்கு நல்ல வரவேற்பு எழுந்ததை தொடர்ந்து இந்த ஆண்டும் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றனர்.

    மேலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு குறும்படமும் திரையிட்டு காட்டப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ லட்சுமி, துடியலூர் இன்ஸ்பெக்டர் ரத்தினகு மார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நடராஜ் இறந்து 5 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால் அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.
    • போலீசார் நடராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள அம்மன் நகரை சேர்ந்தவர் நடராஜ் (வயது 53). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பேபி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனால் பேபி தனது கணவரை பிரிந்து தேவாலாவில் உள்ள பெற்றோர் வீட்டில் மகளுடன் வசித்து வந்தார். நடராஜ் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்தது.

    இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் நடராஜ் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் இறந்து 5 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால் அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

    பின்னர் போலீசார் நடராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் நடராஜ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போத்தனூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.
    • கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்தபோது சிக்கினர்

    குனியமுத்தூர்,

    கோவையில் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. கல்வி மற்றும் வேலைக்காக வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கோவையில் வந்து தங்கி உள்ளனர்.

    இந்தநிலையில் கோவையில் சிலர் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.இதனை தடுக்க மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த கும்பலை கண்காணித்து அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் டாக்டர்களின் பரிந்துரை கடிதம் இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது என மருந்துக் கடை உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.

    கல்லூரிகளில் போதை தொடர்பான விழிப்புணர்வை போலீசார் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் போத்தனூர் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள பேக்கரி அருகே சிலர் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து போத்தனூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த போத்தனூர் பஜனை கோவில் வீதியை சேர்ந்த கூலித் தொழிலாளி இம்ரான்கான் (வயது 26), எம்.ஜி.ஆர். வீதியை சேர்ந்த முகமது யூசுப் (25) ஆகியோரை கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1041 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் கைது செய்யப்பட்ட 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • 5 மணிக்கு அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை திரவிய அபிஷேகங்கள் நடைபெற்றது.
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    கோவை,

    ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் தினந்தோறும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடப்பது வழக்கம். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு செல்வார்கள்.

    இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை. இதனை யொட்டி கோவையில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் காலையிலேயே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    அதிகாலை முதலே பக்தர்களும் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றதை காண முடிந்தது. கோவை பெரியகடை வீதியில் கோனியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் நடை இன்று அதிகாலையிலேயே திறக்கப்பட்டது.

    5 மணிக்கு அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை திரவிய அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் நடந்தது.

    அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. கோனியம்மன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். ஆடி வெள்ளிக்கிழமை என்பதால் 5 மணிக்கே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் அம்மனை மனமுருகி தரிசித்து சென்றனர்.

    இன்று இரவு நடைபெறும் சிறப்பு பூஜையில் முதல் வெள்ளிக்கிழமையான இன்று கோனியம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். அத்துடன் கோவிலில் ஊஞ்சல் உற்சவமும் நடைபெற உள்ளது.

    இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    கோவை-அவினாசி சாலை உப்பிலிபாளையத்தில் உள்ள தண்டுமாரியம்மன் கோவிலும் ஆடி வெள்ளிக்கிழமையான இன்று சிறப்பு வழிபாடு நடந்தது.

    அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று தண்டு மாரியம்மனை தரிசித்து சென்றனர்.

    இதேபோல் ஆர்.எஸ்.புரம் திருவேங்கடசாமி சாலையில் உள்ள காமாட்சி அம்மன், அன்னபூர்னேஸ்வரி அம்பாள் கோவிலிலும் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு நடந்தது.

    வைசியாள் வீதியில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி பெரியகடை வீதியில் உள்ள மாகாளியம்னம், தர்மராஜா கோவில் வீதியில் உள்ள தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் மற்றும் காமாட்சியம்மன் கோவிலில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    அனைத்து அம்மன் கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்து சென்றனர்.

    இதேபோல் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில், பொள்ளாச்சி மாரியம்மன் கோவில், சூலக்கல் மாரியம்மன் கோவில் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் இன்று ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகளும், வழிபாடும் நடைபெற்றது.

    • மோசடி குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், துணை சூப்பிரண்டு தலைமையில் கோவையில் தனி குழு அமைத்து விசாரித்தனர்.
    • தலைமறைவான ரமேஷ் கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி கோவை டான்பிட் கோர்ட்டில் சரணடைந்தார்.

    கோவை:

    கோவை சூலுாரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது30). இவர் பீளமேட்டில் யு.டி.எஸ்., என்ற நிதி நிறுவனத்தை கடந்த 2012 ம் ஆண்டு தொடங்கினார்.

    கோவையில் தொடங்கப்பட்ட இந்த நிதி நிறுவனத்தை சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், கேரளாவிலும் கிளைகளாக விரிவுபடுத்தினார்.

    பின் அவர் நிறுவனம் சார்பில், 4 கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தார். இதனை நம்பி அந்த நிதி நிறுவனத்தில், 76,597 பேர் ரூ.1,300 கோடி முதலீடு செய்தனர்.

    இந்தநிலையில் மக்களின் முதலீட்டு பணத்தை திருப்பி கொடுக்காமல் அவர் மோசடி செய்தார். இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், துணை சூப்பிரண்டு முருகானந்தம் தலைமையில் கோவையில் தனி குழு அமைத்து விசாரித்தனர்.

    தலைமறைவான ரமேஷ் கடந்த, ஜூன் மாதம் 6-ந்தேதி கோவை டான்பிட் கோர்ட்டில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    தொடர்ந்து அவரது நிறுவனத்தின், 36 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, அதில், 2 வங்கி கணக்குகளில் இருந்து ரூ. 16 லட்சம் மீட்கப்பட்டது.

    மேலும் தமிழகம் முழுவதும், யு.டி.எஸ்., நிறுவனம் மற்றும் ரமேசுக்கு சொந்தமான, 10 இடங்களில் உள்ள வீடு, நிலம் உட்பட ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்துக்களை கையகப்படுத்த போலீசார் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

    மேலும் தலைமறைவாக இருந்த ரமேஷின் அம்மா லட்சுமி, அப்பா கோவிந்தசாமி மற்றும் ஜஸ்டின் பிரபாகரன் ஆகிய 3பேரை கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கும் பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

    • G20 பிரதிநிதிகளின் 2 நாள் சந்திப்பில் யோக அறிவியல் குறித்த கல்வி அமர்வும் இடம்பெற உள்ளது.
    • முந்தைய நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொகுத்து கலந்துரையாட உள்ளனர்.

    கோவைக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்தியாவில் நடைபெற்று வரும் G20 சந்திப்புகளின் ஒரு அங்கமாக விளங்கும் S20 என்ற அறிவியல் மாநாடு (Science 20 Meet) கோவை ஈஷா யோகா மையத்தில் ஜூலை 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் 20 நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், வல்லுநர்கள், சட்டம் இயற்றும் திறன் படைத்தவர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். அவர்கள் சத்குரு உடனான சிறப்பு கலந்துரையாடல் கூட்டத்திலும் பங்கேற்க உள்ளனர்.

    S20 குழுவில் இடம்பெற்றுள்ள பிரதிநிதிகள் பசுமை எரிசக்தி, முழுமையான ஆரோக்கியம், சமூகத்துடன் அறிவியலை இணைப்பது போன்ற தலைப்புகளில் ஏற்கனவே மூன்று கூட்டங்களை நடத்தியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, ஈஷாவில் நடக்கும் கூட்டத்தில் முந்தைய நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட முடிவுகளை தொகுத்து அதுகுறித்து கலந்துரையாட உள்ளனர்.

    ஈஷாவில் S20 மாநாடு நடக்க இருப்பது தொடர்பாக சத்குரு கூறுகையில், "G20 கூட்டங்கள் ஆன்மீக மையம் உட்பட பல்வேறு விதமான இடங்களில் நடத்தப்படுவது மிகவும் சிறப்புக்குரியது. பாரதத்தை உணர்வதற்கு இது சிறந்த வழியாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

    G20 பிரதிநிதிகளின் 2 நாள் சந்திப்பில் யோக அறிவியல் குறித்த கல்வி அமர்வும் இடம்பெற உள்ளது. இந்த அமர்வை ஹார்வர்டு மருத்துவ பள்ளியின் பேராசிரியரும், விழிப்புணர்வான உலகிற்கான சத்குரு மையத்தின் (Sadhguru Center for a Conscious planet) இயக்குநருமான டாக்டர் பாலசுப்பிரமணியம் நடத்த உள்ளார்.

    மேலும், சர்வதேச பிரதிநிதிகள் ஈஷாவில் உள்ள பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களான தியானலிங்கம், லிங்கபைரவி, தீர்த்த குண்டங்கள் ஆகிய இடங்களுக்கும் செல்ல உள்ளனர். சம்ஸ்கிருதி பள்ளி மாணவர்கள் களரிப் பயட்டு மற்றும் பரத நாட்டியத்தின் மூலம் பாரதத்தின் பாரம்பரியத்தை பறைச்சாற்ற உள்ளனர்.

    நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதிநிதிகள் இன்று காலை முதலே ஈஷாவிற்கு வருகை தர தொடங்கிவிட்டனர். அவர்களுக்கு ஈஷா யோகா மையத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் இயங்கி வருகின்றன.
    • சென்னை தலைமை செயலகத்தில் நாளை நூற்பாலை அதிபர்களுடனான பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

    கோவை:

    தமிழகத்தில் சிறு, குறு நூற்பாலைகள் மூலப்பொருட்களின் விலைஉயர்வு, மின்கட்டண உயர்வு, வங்கி கடன் வட்டி உயர்வு, துணிகள் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு ஆகியவற்றை கண்டித்து கடந்த 15-ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டம் இன்று 6-வது நாளாக நீடித்து வருகிறது.

    தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அமைந்து உள்ளன. இங்கு 1.5 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    தமிழகம் முழுவதிலும் உள்ள நூற்பாலைகளில் தினந்தோறும் லட்சக்கணக்கில் நூல்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இதன்மூலம் தமிழக அரசுக்கு ரூ.400 கோடிக்கும் மேல் அன்னிய செலாவணி கிடைத்து வந்தது.

    இந்த நிலையில் நூற்பாலைகளின் காலவரையற்ற வேலைநிறுத்தம் காரணமாக அங்கு வர்த்தகம் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு வேலை பார்த்து வரும் தொழிலாளிகளின் வேலைவாய்ப்பும் கேள்விக்குறியாக உள்ளது.

    இந்த நிலையில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நூற்பாலை அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்று தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. இதற்காக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஜவுளித்துறை அமைச்சர் காந்தி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    சென்னை தலைமை செயலகத்தில் நாளை நூற்பாலை அதிபர்களுடனான பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இதற்காக தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம், இந்திய நூற்பாலை உரிமையாளர்கள் சங்கம், ஓபன் என்ட் நூற்பாலைகள் சங்கம், மறுசுழற்சி ஜவுளித்தொழில் கூட்டமைப்பு, இந்திய ஜவுளித்தொழில் முனைவோர் கூட்டமைப்பு, தென்னிந்திய மில்கள் சங்கம், தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து நூற்பாலை உரிமையாளர்கள் கூறுகையில், நாங்கள் கடந்த சில ஆண்டுகளாக தொழில் முடக்கம் காரணமாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளோம். எனவே வேறுவழியின்றி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்து உள்ள தமிழக அரசுக்கு நன்றி.

    தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் எங்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    எனவே தமிழகம் முழுவதும் 6-வது நாளாக தொடரும் காலவரையற்ற வேலைநிறுத்தம் முடிவுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பு, பஞ்சாலை தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது.

    ×