என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • தே.மு.தி.க சார்பில் செஞ்சிலுவை சங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • தமிழகத்துக்கான காவிரி நதிநீரை கர்நாடக அரசு உடனடியாக வழங்க வேண்டும்

    கோவை

    கோவை ஒருங்கிணைந்த மாவட்ட தே.மு.தி.க சார்பில் செஞ்சிலுவை சங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சி நிர்வாகிகள் ஏ.ஆர்இளங்கோவன், செந்தில் குமார், சிங்கை சந்துரு, ஜெகன், சண்முக வடிவேல் உள்பட 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது தி.மு.க அரசு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின்படி அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க வேண்டும், தமிழகத்துக்கான காவிரி நதிநீரை கர்நாடக அரசு உடனடியாக வழங்க வேண்டும், விளை நிலங்க ளை அழிப்பதை என்எல்சி நிர்வாகம் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    • செந்தில்குமார் வேலை முடிந்து ஆட்டோவில் வீடு திரும்பினார்.
    • காட்டுப்பன்றி வேகமாக ஓடிவந்து ஆட்டோவின் முன்பக்க சக்கரத்தில் மோதியது.

     மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை எம்.ஜி.ஆர் காலனி மங்களக்கரை புதூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்(43). கூலிதொழிலாளி.

    இவர் நேற்று இரவு வேலை முடிந்து பயணிகள் ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது குருந்தமலை-புங்கம்காளையம் அருகே ஒரு காட்டுப்பன்றி வேகமாக ஓடிவந்து ஆட்டோவின் முன்பக்க சக்கரத்தில் மோதியது.இதில் நிலைதடுமாறிய ஆட்டோ ரோட்டில் கவிழ்ந்தது.

    இதில் செந்தில்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. எனவே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, காரமடை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினார்.

    இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீர்வு கிடைக்குமா? விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
    • நொய்யலாற்றுக்கு காஞ்சனா நதி என்ற மற்றொரு சிறப்பு பெயரும் உள்ளது.

    நீலாம்பூர்,

    கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை யொட்டிய அடிவாரத்தில் சாடிவயல் என்ற பகுதியில் இருந்து சிற்றோடைகள் இணைந்து நொய்யல் ஆறு உருவெடுக்கிறது.

    அங்கு உருவெடுத்து சமவெளி பகுதியாக செல்லும் நொய்யாலானது கோவை, சூலூர், பல்லடம், மங்கலம், திருப்பூர், ஈரோடு வழியாக சென்று கரூர் அருகே உள்ள நொய்யல் என்ற கிராமத்தில் கலந்து காவிரியுடன் சங்கமம் ஆகிறது.

    சுமார் 180 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த நொய்யாலானது பயணிக்கி றது. இவ்வளவு கிலோமீட்டர் தூரம் பயணித்து காவிரி ஆற்றில் கலக்கும் ஒரே ஆறு என்ற அருமை நொய்யலாற்றுக்கே உள்ளது. இந்த நதிக்கு காஞ்சனா நதி என்ற மற்றொரு சிறப்பு பெயரும் உள்ளது.

    மழைக்காலங்களில் இந்த ஆற்றின் வழியாக காட்டா ற்று வெள்ளம் பெரு க்கெடுத்து ஓடும். இந்த நொய்யல் ஆற்றை சுற்றிலும் 32 அணைக்கட்டுகளும் 40-க்கும் மேற்பட்ட குளங்களும் உள்ளன. இவை அனைத்தும் நொய்யல் ஆற்றை சார்ந்தே இருக்கிறது.

    மேலும் இந்த நொய்யல் ஆறு பயணிக்க கூடிய கிராம ஆற்றுப்படுக கைகளிலும் தடுப்பு அணை களும் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆற்றின் மூலம் நொய்யல் ஆறு செல்லும் வழியில் இருபுறங்களிலும் உள்ள விவசாய நிலங்களும் பயன் அடைந்து வருகிறது. இதுதவிர குடிநீருக்கும் இந்த தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இப்படி பல்வேறு சிறப்புகளுடன், மக்களுக்கு பயனளித்து வந்த நொய்யல் ஆறு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவுகள் கலந்து மாசற்று கிடக்கிறது. நொய்யல் ஆற்றில் தற்போது, தண்ணீர் நுரையுடன் செல்வதை காண முடிகிறது. போதிய மழை இல்லாததால் ஆறும் வறண்டு காணப்படுகிறது. அப்படியே தண்ணீர் வந்தாலும் அதனை எதற்கும் பயன்படுத்த முடியாத நிலையே காணப்படுகிறது.

    நொய்யல் ஆற்றை காப்பாற்றும் விதமாக இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து போராடி வருகின்றனர். ஆனாலும் கழிவுகள் ஆற்றில் கலந்து கொண்டு தான் இருக்கிறது என கூறுகின்றனர் விவசாயிகள்.

    நொய்யல் ஆறு தொடங்கிய பகுதியில் சிறிது மாசு ஏற்பட்டாலும் ஆறு செல்ல செல்ல கோவையின் புறநகர் பகுதியில் உள்ள சூலூர், சாமளாபுரம், இருகூர் உள்ளிட்ட பகுதிகளில் முழுவதுமாக சாக்கடையாக மாறிவிடுகிறது. அதேபோல இதனை சார்ந்துள்ள குளங்களும் சாக்கடை நீர் நிறைந்ததாகவே காணப்டுகிறது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    இங்குள்ள உள்ளாட்சி அமைப்புகளின் நீர் ஆதாரமாகவும், கால்நடைகளுக்கான நீர் ஆதாரமாகவும் நொய்யல் ஆறு விளங்கி வருகிறது. தொழிற்சாலை மற்றும் சாயப்பட்டறை கழிவுகளால் நொய்யல் ஆறு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் எங்களால் விவசாயமும் செய்ய முடியாத நிலையே உள்ளது. பலமுறை விவசாயிகள் போராட்டம் நடத்தியும், மாசு கட்டுப்பாட்டு வா ரியம், பொதுப்பணித்துறை இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    மேலும் தற்போது உள்ள காலகட்டத்தில் குளத்தில் தண்ணீர் இருந்ததா என வருங்கால சமுதாயம் கேட்கும் நிலை உருவாகும். நொய்யல் ஆற்றில் வரும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து குளத்தில் விட வேண்டும். அதற்கான சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க வேண்டும் அதுவே இதற்கான தீர்வு எட்ட முடியும் அவ்வாறு அமைத்தால் மட்டுமே கொங்கு மண்டலத்தை காப்பாற்ற முடியும் இல்லை என்றால் கொங்கு மன்ற த்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய நிலைமை உருவாகும்.

    எனவே அரசு நொய்யல் ஆற்றை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை யாக உள்ளது.

    இது குறித்து பேசிய ஆறுகள் பாதுகாப்பு மற்றும் கவுசிகா நதி பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த செல்வராஜ் கூறும்போது, சூலூர் பகுதியில் விவசாய நிலங்களில் உள்ள தென்னை மரங்கள், வாழை மரங்கள் உள்ளிட்டவை இந்த நீர் நிலைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. பயிர்கள் அனைத்தும் விஷத்தன்மை உடையதா கவும், தென்னை மரங்களில் தென்னை காய் காய்க்கக்கூடிய அளவில் கூட இல்லை. அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்வில் பயன்ப டுத்தக்கூடிய நிலத்தடி நீரின் தன்மை மாறி உள்ளது உப்புத்தன்மை நிறைந்ததாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சம்பவம் குறித்து மாணவியின் தாய் வால்பாறை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
    • போலீசார் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் தனது தாயுடன் அந்த பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.

    இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வருகிறார். இதற்கிடையே சிறுமிக்கு, தன்னுடன் படிக்கும், சக மாணவரின் சகோதரரான அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது.

    2 பேரும் நட்பாக பழகி வந்தனர். அடிக்கடி சிறுவன், மாணவியை, அவரது தாய் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு சென்று சந்தித்து பேசி வந்தார். ஒரு நாள் சிறுவன், மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி, மாணவியை பலாத்காரம் செய்து விட்டார்.

    மேலும் இதனை வெளியில் தெரிவிக்க வேண்டாம் எனவும் சிறுவன் தெரிவித்து விட்டார். இதனால் மாணவி யாரிடமும் தெரிவிக்க வில்லை.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாணவி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவரது தாயார், மாணவியை சிகிச்சைக்காக பொள்ளாச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, மாணவி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதை கேட்டு, மாணவியின் தாய், அதிர்ச்சியானார்.

    இதுகுறித்து மாணவியிடம் விசாரித்த போது, தனக்கு நடந்தவற்றை மாணவி தாயிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து சம்பவம் குறித்து மாணவியின் தாய் வால்பாறை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் விசாரணை நடத்தியதில், சிறுவன், மாணவியை ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறன்றனர்.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பாப்பாத்தியை கைது செய்தனர்.
    • பாப்பாத்தியிடமிருந்து 2 பவுன் செயின், ஒரு ஜோடி கொலுசு, பணம் ரூ.6 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    பொள்ளாச்சி,

    கோவை பொள்ளாச்சி அடுத்த சேத்துமடை அருகே உள்ள நரிக்கல்பதி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். டிரைவர்.

    இவரது மனைவி மகாதேவி(வயது38) இவர் அந்த பகுதியில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்கள் தங்கள் தாய், மாமியார் மற்றும் குழந்தைகளுடன் ஓரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் இவர்களுக்கு அதே ஊரை சேர்ந்த ஒருவர் ரூ.40 ஆயிரம் பணம் கொடுத்தார். அதனை வாங்கி மகாதேவி தனது வீட்டு பீரோவில் வைத்தார். பீரோவில் 2 செயின், ஒரு ஜோடி கொலுசும் இருந்தது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மகாதேவி வேலைக்கு சென்று விட்டார். மாலையில் வீட்டிற்கு வந்தார். பின்னர் பீரோவில் பணம் எடுப்பதற்காக சென்றார். அப்போது, வீட்டில் இருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த 1 ஜோடி கொலுசு, 2 பவுன் செயின் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்க பணம் மாயமாகி இருந்தது.

    இதுகுறித்து அவர் ஆனைமலை போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வீட்டை பார்வையிட்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களையும் ஆய்வு செய்தனர்.

    அப்போது வீட்டிற்குள் பெண் ஒருவர் சென்று வரும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதனை வைத்து விசாரித்ததில், அதே பகுதியை சேர்ந்த பாப்பாத்தி என்பது தெரியவந்தது.

    சந்தேகத்தின் பேரில் போலீசார் பாப்பாத்தியை அழைத்து விசாரித்தனர். அப்போது அவர் நகை, பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாப்பாத்தியை கைது செய்தனர்.

    மேலும் அவரிடம் இருந்து 2 பவுன் செயின், ஒரு ஜோடி கொலுசு, பணம் ரூ.6 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

    • வேலைக்கு சேர்வதற்கான கடிதம் மற்றும் மாத சம்பளம் குறித்த தகவல்களையும் வாலிபருக்கு ஆன்லைன் வாயிலாகவே அனுப்பினர்.
    • வாலிபர் சம்பவம் குறித்து கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை கே.கே.புதூர் அருணாச்சல கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் 21 வயது வாலிபர்.

    இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி..இ மெக்கானிக்கல் படித்து ள்ளார்.

    படித்து முடித்து விட்டு கடந்த சில மாதங்களாகவே வேலை தேடி வந்தார். ஒருநாள் செல்போனில் நேரத்தை செலவிட்டு கொண்டிருந்தார்.

    அப்போது ஒரு ஆன்லைன் தளத்தில் வேலை இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து வாலிபர், அந்த இணையதளத்திற்கு சென்று பார்த்தார்.

    அதில் வேலைகளுக்கு ஆட்கள் தேவை என்று காட்டியது. இதையடுத்து வாலிபரும் அந்த வேலைக்கு விண்ணப்பம் செய்தார்.

    விண்ணப்பம் செய்த சில தினங்களில் வாலிபரை, அந்த ஆன்லைதளத்தில் இருந்து போனில் அழைத்துள்ளனர். அப்போது, பேசிய அவர்கள் மனித வளத்துறையில் வேலை உள்ளது என தெரிவித்தனர்.

    மேலும் ஆன்லைன் வாயிலாகவே வாலிபரிடம் நேர்முகத் தேர்வும் நடத்தினர். சில நாட்கள் கழித்து, வேலைக்கு சேர்வதற்கான கடிதம் மற்றும் மாத சம்பளம் குறித்த தகவல்களையும் அவருக்கு ஆன்லைன் வாயிலாகவே அனுப்பினர்.

    கடிதம் அனுப்பியவுடன், அவரிடம் உங்களுக்கு சில நாட்கள் பயிற்சி கொடுக்கப்படும். அதனை தொடர்ந்து சில வேலைகள் உங்களுக்கு என்று கொடுக்கப்படும்.

    அதனை நீங்கள் செய்து முடிக்க வேண்டும். இதற்கெ ல்லாம் முன்பாக நாங்கள் கொடுக்கும் பயிற்சி உள்பட அனைத்துக்கும் நீங்கள் பணம் செலுத்த வேண்டும் என கூறினர்.

    வாலிபரும் வேலை கிடைத்து விட்டது என்று நம்பி, அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் பல தவணைகளாக ரூ.16 லட்சத்து 25 ஆயிரத்து 277 பணத்தை அனுப்பியுள்ளார்.

    பணம் சென்ற பிறகு அந்த நபர்கள் வாலிபரை தொடர்பு கொள்ளவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வாலிபர், தனக்கு வந்த கடிதத்தை எடுத்து கொண்டு அந்த முகவரிக்கு சென்றார். அப்போது அப்படி ஒரு நிறுவனம் இல்லை என்பதும், தான் ஏமாற்றப்பட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து வாலிபர் சம்பவம் குறித்து கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை ஏமா ற்றிய மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.

    • பிரதமர் கிஷான் திட்டத்தின் கீழ் கோவையில் மட்டும் 62,659 விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.
    • கோவை மாவட்டத்தில் 5817 விவசாயிகள் இதுவரை வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை.

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பிரதமர் கிஷான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவையில் மட்டும் 62,659 விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ள வங்கி கணக்கில் மட்டும் தான் பணம் செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. கோவை மாவட்டத்தில் 5817 விவசாயிகள் இதுவரை வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை. எனவே அவர்கள் உடனடியாக வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்க வேண்டும்.

    இதற்காக அவர்கள் சேமிப்பு கணக்கு வைத்து உள்ள வங்கிக்கு நேரடியாக சென்று ஆதாரை இணைக்கலாம். வங்கியில் கணக்கு இல்லாத விவசாயிகள் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி மூலம் ஜீரோ பேலன்ஸ் அடிப்படையில் கணக்கு தொடங்கலாம். அப்போது அவர்களின் ஆதார் எண் 48 மணி நேரத்துக்குள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு விடும்.

    இதுகுறித்து மேலும் விவரங்கள் பெற விரும்புவோர் அந்தந்த பகுதிகளில் உள்ள வேளாண்மை விரிவாக்க மைய அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகளை அணுகி பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • போட்டிகளில் 60,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
    • இறுதிப் போட்டிகள் ஆதியோகி முன்பு மிக பிரமாண்டமாக நடத்தப்படும்.

    கோவை:

    மொத்தம் 56 லட்சத்திற்கும் மேற்பட்ட மதிப்பிலான பரிசு தொகைகளை கொண்ட 15-வது 'ஈஷா கிராமோத்சவம்' விளையாட்டு போட்டிகள் வரும் 12-ம் தேதி துவங்க உள்ளன. ஆதியோகி முன்பு பிரமாண்டமாக நடைபெற உள்ள இறுதிப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

    இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று (ஆகஸ்ட் 9) நடைபெற்றது. இதில் 'ஈஷா கிராமோத்சவம்' குழுவின் கள ஒருங்கிணைப்பாளர் ஸ்வாமி நகுஜா பங்கேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    விளையாட்டு போட்டிகள் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்வில் புத்துணர்வையும், ஆரோக்கியத்தையும் கொண்டு வரும் விதமாக 'ஈஷா கிராமோத்சவம்' என்ற கிராமிய விளையாட்டு திருவிழாவை சத்குரு 2004-ம் ஆண்டு தொடங்கி வைத்தார். வெறும் 4 தாலுக்காவில் மிகச் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த திருவிழா இந்தாண்டு தென்னிந்திய அளவில் நடைபெறும் அளவிற்கு பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது.

    இந்தாண்டு தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் நடைபெறும் இப்போட்டிகளில் 25,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 60,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். கோவை மாவட்டத்தில் மட்டும் 150 கிராம பஞ்சாயத்துக்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட அணிகளும், 2,600-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

    இத்திருவிழாவில் ஆண்களுக்கு வாலிபால், பெண்களுக்கு த்ரோபால், இருபாலருக்குமான கபாடி போட்டிகள் என 4 போட்டிகள் பிரதானமாக நடத்தப்படும். பல்கலைக்கழக வீரர்கள், மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடும் வீரர்கள், தொழில் முறை வீரர்கள் இப்போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது.

    முழுக்க முழுக்க கிராமப்புற மக்களுக்காக இப்போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 14 வயதை கண்ட கிராமப்புற மக்கள் தங்கள் கிராமத்தில் ஒரு அணியை உருவாக்கி இப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.

    ஆக.12-ம் தேதி தொடங்கி செப்.23-ம் தேதி வரை கிளெஸ்டர், டிவிஸினல், பைனல் என 3 கட்டங்களாக நடத்தப்படும் இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு தொகைகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படும். இறுதிப் போட்டிகள் சத்குரு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் ஆதியோகி முன்பு மிக பிரமாண்டமாக நடத்தப்படும். இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு வாலிபால் (ஆண்கள்) - ரூ.5 லட்சம், த்ரோபால் (பெண்கள்) - ரூ. 2 லட்சம், கபாடி (ஆண்கள்) - ரூ.5 லட்சம், கபாடி (பெண்கள்) - ரூ.2 லட்சம் பரிசு தொகைகள் வழங்கப்படும். மேலும், விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் அணியில் இடம்பெறாத மக்கள் பங்கேற்று மகிழ்வதற்காக பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.

    இதில் பங்கேற்க விரும்பும் அணிகள் https://isha.co/gramotsavam-tamil என்ற இணையதள முகவரியில் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 83000 30999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    இத்திருவிழாவை நடத்தும் ஈஷா அவுட்ரீச் அமைப்பு, மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் துறையிடம் இருந்து தேசிய விளையாட்டு ஊக்குவிப்பு அமைப்பு (National Sports Promotion Organization) என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது. மேலும், 2018-ம் ஆண்டு 'ராஷ்ட்ரிய கேல் புரோத்சாஹன் புரஸ்கார்' என்ற உயரிய விருதை அப்போதைய மாண்புமிகு பாரத குடியரசு தலைவர், ஈஷா அவுட்ரீச்சிற்கு வழங்கி கெளரவித்துள்ளார். மேலும், இத்திருவிழாவின் இறுதிப் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர், மித்தாலி ராஜ், பி.வி.சிந்து, ஷிகர் தவான், வீரேந்திர சேவாக் போன்ற விளையாட்டு துறை பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

    • கோவை மாவட்டத்தில் உள்ள போலீஸ் உயர் பதவிகளில் கடந்த சில ஆண்டுகளாக ஆண்களே அதிகளவில் இருந்தனர்.
    • கோவை மாவட்ட போலீஸ் உயர் பதவிகளை பெண்களும் அலங்கரித்து வருகின்றனர்.

    கோவை:

    மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்தல் வேண்டும் என கூறப்படுகிறது.

    ஒரு காலத்தில் பெண்கள் வீடுகளுக்குள்ளாகவே அடைபட்டு கிடந்தனர். அவர்களும் படித்து நல்ல நிலையை அடைய பலர் போராடினர். போராட்டத்தின் விளைவாக தற்போது பெண்கள் பலரும் படித்து பற்பல சாதனைகளை படைத்து வருகின்றனர்.

    தற்காலத்தில் ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் கால்பதித்து மிக பெரும் சாதனைகளை படைத்து வருகின்றனர் பெண்கள்.தாங்கள் எந்த துறையில் பணியாற்றினாலும், அதனை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோள். அதற்கு ஏற்ப திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.

    தென்னிந்தியாவின் மான்செஸ்டர், தொழில் நகரமான கோவையில் குற்ற சம்பவங்களை நடக்காமல் தடுக்கவும், குற்றம் செய்தவர்களை திருத்தி அவர்களை நல்வழிப்படுத்தி, அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை கொடுக்கும் பணியை போலீசார் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    குறிப்பாக எந்தவொரு குற்றசம்பவங்களும் நடைபெறாத வண்ணம் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள போலீஸ் உயர் பதவிகளில் கடந்த சில ஆண்டுகளாக ஆண்களே அதிகளவில் இருந்தனர்.

    தற்போது கோவை மாவட்ட போலீஸ் உயர் பதவிகளை பெண்களும் அலங்கரித்து வருகின்றனர். கருமத்தம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு தையல் நாயகி, பயிற்சி ஏ.எஸ்.பி கரீமா, பொள்ளாச்சி சப்-டிவிசனில் பணியாற்றி வரும் பிருந்தா மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள போலீஸ் நிலையங்களின் இன்ஸ்பெக்டர்களாகவும் பெண்கள் அதிகளவில் அந்த பதவிகளை அலங்கரிக்கின்றனர்.

    அவர்கள் அந்த பதவியில் இருந்து தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கை காப்பது, குற்ற சம்பவங்களை தடுப்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அடிக்கடி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடமும் குற்ற சம்பவங்கள் குறித்தும், பாலியல் ரீதியிலான குற்றங்கள் குறித்தும் விரிவாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இதற்கெல்லாம் ஒருபடி மேலாக, தற்போது மேற்கு மண்டலத்தின் ஐ.ஜியாகவே ஒரு பெண் ஐ.பி.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளது.

    கோவை மேற்குமண்டலம் என்பது, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியது. இந்த பகுதிகளுக்கு எல்லாம் ஐ.ஜி.யாக இருந்து எந்தவிதமான குற்றசம்பவங்களும் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டியது உள்பட பல்வேறு வேலைகளை செய்ய வேண்டியது இவரது கடமையாகும்.

    இந்த உயர்ந்த பதவியில் தான் தற்போது பவானிஸ்வரி என்ற பெண் ஐ.பி.எஸ்.அதிகாரி பொறுப்பேற்றுள்ளார். அவர் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் முக்கிய பங்கு அளிப்பதே தனது முக்கிய பணி என தெரிவித்துள்ளார்.

    மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் ஒழுங்குக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மேற்கு மண்டலத்தில் எந்தவித குற்ற சம்பவங்கள் நடந்தாலும், அதில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் எந்தவித பாகுபாடுமின்றி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

    ஐ.ஜி., டி.எஸ்.பி. பதவிகளை தவிர இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் பொறுப்பிலும், நிறைய பெண்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    இப்படி உயர் பதவி முதல் பல்வேறு பதவிகளிலும் கோவை மாவட்ட போலீசில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவது பொதுமக்களிடையேயும், பெண்களிடையேயும் அதிகமாக வரவேற்பினை பெற்றுள்ளது. இது பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், தாமும் இதுபோன்று சாதித்து உயர் பதவியை அடைய ஒரு உந்துதலாகவும் இருக்கும்.

    இதுதொடர்பாக பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் கூறியதாவது:- கோவையில் போலீஸ் உயர் பதவிகளை பெண்கள் அலங்கரிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் வரவேற்கத்தக்கது.

    பெண் போலீஸ் உயர் அதிகாரிகளாக பணியாற்றி வருபவர்கள், பெண்களின் உரிமைகளையும், பெண்களின் பாதுகாப்பையும் உறுதிபடுத்துவார்கள் என நம்புகிறோம்.யாருக்கும், யாரும் சளைத்தவர்கள் அல்ல.

    எல்லோரும் ஒன்று என்ற வழியில் பெண்களாலும் எல்லா துறையிலும் திறம்பட பணியாற்ற முடியும் என்பதையே இது காட்டுகிறது. எனவே அனைத்து பெண்களும் தங்கள் வாழ்வில் சாதித்து, உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றனர்.

    • தீயணைப்பு படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை.

    கோவை காட்டூர் பகுதியில் உள்ள சோமசுந்தரா மில்லில் இருந்து குபுகுபுவென கரும்புகை வெளியானது. இதனால் அந்த பகுதியில் கரும் புகைமண்டலம் ஏற்பட்டது.

    அடுத்த சில நிமிடங்களில் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதுகுறித்து தீயணைப்பு படைக்கு தகவல் அளிக்கப்பட்டன.

    தகவலின் பேரில் தீயணைப்பு படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    சோமசுந்தரா மில் தற்போது மூடப்பட்டு உள்ளது. எனவே அங்கு காய்ந்த சருகுகள் குவிந்து புதர் மண்டி கிடக்கிறது. எனவே அந்த வழியாக சென்ற சிலர் பீடி அல்லது சிகரெட் குடித்துவிட்டு வீசியதால் மில்லுக்குள் தீவிபத்து ஏற்பட்டதா என்று தெரியவில்லை.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோட்டில் சிமெண்ட் விற்பனை செய்ததில் ரூ.26 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.
    • புகாரின் பேரில் கோவை ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சபரீசனை கைது செய்தனர்.

    கோவை.

    கோவை ராமநாதபுரம், சக்தி நகரை சேர்ந்தவர் ராதா (வயது 67). இவர் கோவை ராமநாதபுரத்தில் உள்ள தனியார் சிமெண்டு நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் கோவை ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவை பொள்ளாச்சி ஆறுமுகம் வீதியை சேர்ந்தவர் சபரீஸ்வரன்(35). நாமக்கல் ராசிபுரத்தை சேர்ந்தவர் குணசேகரன்(30).

    இவர்கள் 2 பேரும் எங்கள் நிறுவனத்தில், விற்பனை அதிகாரிகளாக வேலை பார்த்து வருகின்றனர். கடந்த 3 வருடமாக சிமெண்ட் விற்பணை செய்ததில் பணம் கையாடல் செய்து இருப்பதாக சந்கேம் எழவே2 பேரையும் அழைத்து விசாரித்ததோம்.

    அப்போது அவர்கள் ஈரோட்டில் சிமெண்ட் விற்பனை செய்ததில் ரூ.26 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.இது தொடர்பாக நான் அவர்களிடம் கேட்டபோது, சபரீஸ்வரன் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடு த்தார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் கோவை ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சபரீசனை கைது செய்தனர்.

    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • டெலிகிராம் குறுஞ்செய்தியில் ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக கூறப்பட்டிருந்தது.
    • இளம்பெண் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

    கோவை.

    கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவரது செல்போனுக்கு அண்மையில், டெலிகிராம் மூலம் ஒரு குறுஞ்செய்தி வந்தது.

    அதில் ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த பெண், அந்த லிங்க்கை கிளிக் செய்து உள்ளே சென்று தனது விவரங்களை பதிவிட்டார்.

    அவரை செல்போனில் பெண் ஒருவர் தொடர்பு கொண்டார். அவர் தன்னை திரிஷா என அறிமுகப்படுத்தி கொண்டார்.

    மேலும், டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் ஆலோசகராக வேலை உள்ளதாகவும், அதற்கு நீங்கள் ரிவ்யூ கொடுத்தால் அதிகளவு கமிஷன் கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தை கூறினார்.

    இதனை நம்பி இளம்பெண்ணும், அவர்கள் கொடுத்த வேலையை செய்து வந்தார். மேலும் இளம்பெண், அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் முதலீடு செய்தார். அவருக்கு கமிஷன் தொகையாக ரூ. 13,407 கிடைத்தது. மற்றொரு பணியை முடித்ததற்காக அவருக்கு மீண்டும் ரூ. 11,706 கிடைத்தது.

    இளம்பெண்ணை மீண்டும் தொடர்பு கொண்ட நபர் நீங்கள் அதிகமாக முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என தெரிவித்தார். இதனை நம்பி, இளம்பெண், அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.7,61,916 செலுத்தினார்.

    ஆனால் அதன் பின்னர் அவருக்கு கமிஷன் தொகை கிடைக்கவில்லை. இதையடுத்து இளம்பெண் அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் முடியவில்லை.

    அதன்பின்னர் தான் ஏமாற்றப்பட்டது இளம்பெண்ணுக்கு தெரியவந்தது. இதுகுறித்து இளம்பெண் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×