என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் இளம்பெண்ணிடம் ரூ.7.61 லட்சம் மோசடி
    X

    கோவையில் இளம்பெண்ணிடம் ரூ.7.61 லட்சம் மோசடி

    • டெலிகிராம் குறுஞ்செய்தியில் ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக கூறப்பட்டிருந்தது.
    • இளம்பெண் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

    கோவை.

    கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவரது செல்போனுக்கு அண்மையில், டெலிகிராம் மூலம் ஒரு குறுஞ்செய்தி வந்தது.

    அதில் ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த பெண், அந்த லிங்க்கை கிளிக் செய்து உள்ளே சென்று தனது விவரங்களை பதிவிட்டார்.

    அவரை செல்போனில் பெண் ஒருவர் தொடர்பு கொண்டார். அவர் தன்னை திரிஷா என அறிமுகப்படுத்தி கொண்டார்.

    மேலும், டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் ஆலோசகராக வேலை உள்ளதாகவும், அதற்கு நீங்கள் ரிவ்யூ கொடுத்தால் அதிகளவு கமிஷன் கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தை கூறினார்.

    இதனை நம்பி இளம்பெண்ணும், அவர்கள் கொடுத்த வேலையை செய்து வந்தார். மேலும் இளம்பெண், அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் முதலீடு செய்தார். அவருக்கு கமிஷன் தொகையாக ரூ. 13,407 கிடைத்தது. மற்றொரு பணியை முடித்ததற்காக அவருக்கு மீண்டும் ரூ. 11,706 கிடைத்தது.

    இளம்பெண்ணை மீண்டும் தொடர்பு கொண்ட நபர் நீங்கள் அதிகமாக முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என தெரிவித்தார். இதனை நம்பி, இளம்பெண், அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.7,61,916 செலுத்தினார்.

    ஆனால் அதன் பின்னர் அவருக்கு கமிஷன் தொகை கிடைக்கவில்லை. இதையடுத்து இளம்பெண் அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் முடியவில்லை.

    அதன்பின்னர் தான் ஏமாற்றப்பட்டது இளம்பெண்ணுக்கு தெரியவந்தது. இதுகுறித்து இளம்பெண் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×