என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவை வாலிபரிடம் ரூ.16.25 லட்சம் மோசடி
- வேலைக்கு சேர்வதற்கான கடிதம் மற்றும் மாத சம்பளம் குறித்த தகவல்களையும் வாலிபருக்கு ஆன்லைன் வாயிலாகவே அனுப்பினர்.
- வாலிபர் சம்பவம் குறித்து கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
கோவை,
கோவை கே.கே.புதூர் அருணாச்சல கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் 21 வயது வாலிபர்.
இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி..இ மெக்கானிக்கல் படித்து ள்ளார்.
படித்து முடித்து விட்டு கடந்த சில மாதங்களாகவே வேலை தேடி வந்தார். ஒருநாள் செல்போனில் நேரத்தை செலவிட்டு கொண்டிருந்தார்.
அப்போது ஒரு ஆன்லைன் தளத்தில் வேலை இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து வாலிபர், அந்த இணையதளத்திற்கு சென்று பார்த்தார்.
அதில் வேலைகளுக்கு ஆட்கள் தேவை என்று காட்டியது. இதையடுத்து வாலிபரும் அந்த வேலைக்கு விண்ணப்பம் செய்தார்.
விண்ணப்பம் செய்த சில தினங்களில் வாலிபரை, அந்த ஆன்லைதளத்தில் இருந்து போனில் அழைத்துள்ளனர். அப்போது, பேசிய அவர்கள் மனித வளத்துறையில் வேலை உள்ளது என தெரிவித்தனர்.
மேலும் ஆன்லைன் வாயிலாகவே வாலிபரிடம் நேர்முகத் தேர்வும் நடத்தினர். சில நாட்கள் கழித்து, வேலைக்கு சேர்வதற்கான கடிதம் மற்றும் மாத சம்பளம் குறித்த தகவல்களையும் அவருக்கு ஆன்லைன் வாயிலாகவே அனுப்பினர்.
கடிதம் அனுப்பியவுடன், அவரிடம் உங்களுக்கு சில நாட்கள் பயிற்சி கொடுக்கப்படும். அதனை தொடர்ந்து சில வேலைகள் உங்களுக்கு என்று கொடுக்கப்படும்.
அதனை நீங்கள் செய்து முடிக்க வேண்டும். இதற்கெ ல்லாம் முன்பாக நாங்கள் கொடுக்கும் பயிற்சி உள்பட அனைத்துக்கும் நீங்கள் பணம் செலுத்த வேண்டும் என கூறினர்.
வாலிபரும் வேலை கிடைத்து விட்டது என்று நம்பி, அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் பல தவணைகளாக ரூ.16 லட்சத்து 25 ஆயிரத்து 277 பணத்தை அனுப்பியுள்ளார்.
பணம் சென்ற பிறகு அந்த நபர்கள் வாலிபரை தொடர்பு கொள்ளவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வாலிபர், தனக்கு வந்த கடிதத்தை எடுத்து கொண்டு அந்த முகவரிக்கு சென்றார். அப்போது அப்படி ஒரு நிறுவனம் இல்லை என்பதும், தான் ஏமாற்றப்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து வாலிபர் சம்பவம் குறித்து கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை ஏமா ற்றிய மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.






