என் மலர்
கோயம்புத்தூர்
- உடனடியாக வேலுச்சாமியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
- மனைவி இந்துசெல்வி மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
கோவை,
கோவை காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 35). இவர் அந்த பகுதியில் உள்ள மில்லில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி இந்து செல்வி (27). இவர்களுக்கு 4 வயதில் ஒருமகள் உள்ளார்.
கடந்த 7 நாட்களுக்கு முன்பு வேலுச்சாமிக்கு கிட்னியில் கல் அடைப்பு ஏற்பட்டது. இதற்காக அவர் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றார். பின்னர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பினார். வீட்டில் அவர் 3 நாட்கள் ஓய்வில் இருந்தார்.
மீண்டும் வேலுச்சாமி கடந்த 23-ந் தேதி வேலைக்கு சென்றார். அப்போது மில்லில் காவலாளியாக வேலை பார்க்கும் சார்லி என்பவர் வழக்கமாக வேலுச்சாமியை தூக்கி விளையாடுவது வழக்கம். அதேபோல சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவரை தூக்கி விளையாடினார். அப்போது நிலைகுலைந்த வேலுச்சாமி தலை சுற்றி மயங்கி கீழே விழுந்தார். அவரது வாயிலும் மூக்கிலும் இருந்து ரத்தம் வந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கு இருந்தவர்கள் உடனடியாக வேலுச்சாமியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே வேலுச்சாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அவரது மனைவி இந்துசெல்வி மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் காவலாளி விளையாட்டாக தூக்கியதால் வேலுச்சாமி இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மக்கள் நீதிமன்றத்தில் முடித்து கொள்ளும் வழக்குகளுக்கு மேல் முறையீடு செய்ய முடியாது.
- மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் செப்டம்பர் 8 -ந் தேதி வரை சிறப்பு அமர்வுகள் நடைபெறும்.
கோவை,
கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் வருகிற 9-ந் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது.
இதுகுறித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படி கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் செப்டம்பர் 9-ந் தேதி (சனிக்கிழமை) கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதி மன்றம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, குலூர், மதுக்கரை, அன்னூர் நீதி மன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.
இதில், நிலுவையிலுள்ள சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், பாகப் பிரிவினை, வாடகை விவகாரங்கள், நிலம் ஆர்ஜித வழக்குகள், தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கிக் கடன், கல்விக்கடன் தொடர்பான வழக்குகள், விவகாரத்து தவிர மற்ற குடும்ப பிரச்சினை வழக்குகள், விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி பிரச்சினைகள் மற்றும் நிலுவையில் இல்லாத வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு பெற்றுக் கொள்ளலாம்.
மக்கள் நீதிமன்றத்தில் முடித்து கொள்ளும் வழக்குகளுக்கு மேல் முறையீடு செய்ய முடியாது. மக்கள் நீதிமன்றம் மூலமாக முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழுமையாக திருப்பித் தரப்படும் வாய்ப்பு உள்ளது.
எனவே, யாருக்காவது நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தால் சட்ட ரீதியாக தீர்வுகாணலாம்.
மேலும், இந்த வழக்குகளுக்குத் தீர்வுகாண்பதற்காக கோவை சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் செப்டம்பர் 8 -ந் தேதி வரை சிறப்பு அமர்வுகள் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- கலெக்டர் கிராந்திகுமார் தொடங்கி வைத்தார்.
- நகராட்சி பகுதிகளில் ஒரு இடத்தில் சமைத்து அந்த பகுதிகளில் உள்ள 15 பள்ளிகளுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
கோவை,
கோவை மாவட்டத்தில் 121 மாநகராட்சி பள்ளிகள், மதுக்கரை நகராட்சியில் 4 பள்ளிகள், மேட்டுப்பாளையம் நகராட்சியில் 11 பள்ளிகள் என மொத்தம் 136 பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கோவை மாவட்டத்தில் கூடலூர், காரமடை, கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 5 நகராட்சிகள் மற்றும் 15 வட்டாரங்களில் உள்ள 859 பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் 44,358 மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.
விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். கோவை மாவட்டத்தில் கிணத்து க்கடவு பேரூராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 136 பள்ளிகளில் 17,621 குழந்தைகள் உணவு அருந்தி வருகிறார்கள். தற்போது 2-வது கட்டமாக மேலும் கூடுதலாக 859 பள்ளிகளில் 44,538 குழந்தைகள் பயன்பெறுவார்கள். இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகப்பட்டி ணத்தில் இன்று தொடங்கி வைத்தார். அதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் படி அனைத்து குழந்தைகளுக்கு காலை உணவு பள்ளிகளிலேயே கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
நகராட்சி பகுதிகளில் ஒரு இடத்தில் சமைத்து அந்த பகுதிகளில் உள்ள 15 பள்ளிகளுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மலை பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அந்த பள்ளிகளிலேயே உணவு சமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதனை கண்காணிக்க 15 பள்ளிகளுக்கு ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் ஒரு செயலி மூலமாக எப்போது சமையல் தொடங்கியது, சாப்பாடு வழங்கும் நேரம், எத்தனை பேருக்கு சாப்பாடு வழங்கப்பட்டது என்ற எல்லா விபரங்களும் சேகரிக்கப்படும். பள்ளிக் கல்வித்து துறை மற்றும் மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சித்துறை அலுவ லர்கள் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அவ்வபோது ஆய்வு செய்து உணவின் தரம் எப்படி உள்ளது? என்பதை கண்காணிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பொள்ளாச்சி தொகுதி எம்.பி. சண்முகசுந்தரம், கிணத்துக்கடவு பேரூராட்சி கதிர்வேல், உதவி கலெக்டர் (பயிற்சி) ஆஷிக் அலி ஆகியோர் பங்கேற்றனர்.
- சுருதி கலையரசன் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
- கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
கோவை.
கோவை கணபதி பாரதிநகரை சேர்ந்தவர் சுருதி கலையரசன்(வயது51). இவர் அந்த பகுதியில் தனது மகனுடன் வசித்து வருகிறார்.
சுருதி கலையரசன், கோவை விமான நிலைய பகுதியில், பெண்கள் விடுதி நடத்த முடிவு செய்து, அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.
சம்பவத்தன்று காலை சுருதி கலையரசன், வீட்டை பூட்டி சாவியை, அங்கு பணியில் இருந்த காவலாளியிடம் கொடுத்து விட்டு வேலை விஷயமாக வெளியில் சென்றார்.
மாலையில் வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டி ருந்த ரூ.20 லட்சம் ரொக்க பணம் மாயமாகி இருந்தது.
இதனால் அதிர்ச்சியான அவர் சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
தொடர்ந்து போலீசார் அந்த பகுதிகளில் உள்ளவர்களிடம் விசாரித்தனர். அப்போது சுருதி கலையரசன் வீட்டிற்கு, அவரது மகனின் நண்பர் என ஒருவர் வந்ததாகவும், அவர் சாவியை கேட்டு வாங்கி சென்றதாகவும் காவலாளி தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் அந்த நபர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆங்கிலேயர்கள் நம் கலாச்சாரம், உயிர்த்தன்மையை சிதைக்கும் எண்ணத்துடன் வந்தார்கள்.
- அனைவரும் ஒரு குடும்பம் என இந்தியாவை எழுப்ப வேண்டும்.
கோவை:
கோவை பேரூர் தமிழ் கல்லூரி வளாகத்தில் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சார்பில் 7 நாட்கள் நடைபெறும் நொய்யல் பெருவிழா இன்று தொடங்கியது.
விழாவினை கவர்னர் ஆர்.என்.ரவி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:
சந்நியாசிகள் பங்கேற்றுள்ள இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதை நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்.
நம் நாட்டில் நீர்நிலைகளுடனான தொடர்பு என்பது நமது உணர்வுகளுடன் தொடர்புடையதாகும்.
ஆனால், பல ஆண்டுகளாக அந்தியர்களால் படையெடுப்பு காரணமாக அந்த உணர்வானது மறைக்கப்பட்டது.
ஆங்கிலேயர்கள் நம் கலாச்சாரம், உயிர்த்தன்மையை சிதைக்கும் எண்ணத்துடன் வந்தார்கள்.
அவர்களின் படையெடுப்புக்கு பிறகே இந்தியர்கள் சாதி, மதம் என பிரிக்கப்பட்டோம். அந்நியர்களே ஆரியன், திராவிடன் என பிரிவினையை ஏற்படுத்தினார்கள். அந்நியர்களின் படையெடுப்புக்கு பிறகே நாம் தனித்து விடப்பட்டோம்.
அன்னை இயற்கையை பாழாக்கி வரும் இந்த காலத்தில் இதுபோன்று நிகழ்வு அவசியம். அன்னை இயற்கையை பாழாக்கி வருவதன் விளைவு தான், பருவநிலை மாற்றத்திற்கு காரணம். தண்ணீர் இல்லையென்றால் ஒன்றும் இல்லை. அதனால், நீரை அன்னையாக பாவித்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.
ரிஷிகளின் வெளிச்சமே தற்போது உலகத்திற்கு தேவையானது. அனைவரும் ஒரு குடும்பம் என இந்தியாவை எழுப்ப வேண்டும். நாம் யார் என்பதை உணர வைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஆதியோகி சிலை மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டடங்களுக்கு முன் அனுமதியும், தடையில்லா சான்றும் பெறவில்லை என வாதம்.
- சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோவை நகர திட்ட இணை இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
கோவையில், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளதாக வெள்ளியங்கிரி மலை பழங்குடியின பாதுகாப்பு சங்க தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியின் முன்னிலையில் வந்தது.
அப்போது, ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை மற்றும் அருகில் உள்ள கட்டடங்களுக்கு அனுமதி பெறவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், ஈஷா யோகா மையம் "ஆதியோகி சிலைக்கான உரிய ஆவணங்கள் தங்களிடம் உள்ளதாக" பதிலடி கொடுத்துள்ளது.
இதுகுறித்து ஈஷா மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஆதியோகி சிலைக்கான உரிய ஒப்புதல்கள் எங்களிடம் உள்ளது. அதை எங்கேயும் எப்போதும் சமர்ப்பிக்க தயாராக உள்ளோம். ஆதியோகி சிலை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய அனுமதிகளை பெற்றுள்ளோம்.
மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி அதிகாரிகள் முன் அதை சமர்பிப்போம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் அரசியல்களம் மாறிவிட்டது என்பதை பொன்முடி புரிந்து கொள்ள வேண்டும்.
- கவர்னரை தி.மு.க.வினர் பேசும் முறை சரியல்ல. தொட்டுப்பார், சீண்டிப்பார் என்று சவால் விடுத்து வருகின்றனர்.
கோவை:
பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பாரதியாரின் கனவு இப்போது நனவாகி உள்ளது. இதுவரை யாரும் செல்லாத தென்துருவத்திற்கு இந்தியா சென்று சாதனை படைத்து உள்ளது. இது அனைவருக்கும் கிடைத்த பெருமை.
உலக நாடுகள் இந்தியாவை கிண்டல் செய்து வந்த நிலையில், தனித்துவமான நாடாக இந்தியா தற்போது உருவாகி உள்ளது.
இஸ்ரோ விண்வெளி நிறுவனத்துக்கும், தமிழகத்துக்கும் மிகப்பெரிய பந்தம் உள்ளது. நாகப்பட்டினம் வரவேண்டிய விண்கல ஏவுதளம், தி.மு.க. அமைச்சர் முயற்சி செய்யாததால் ஹரிகோட்டாவிற்கு சென்றது.
2-வது விண்கல ஏவுதளத்தை குலசேகர பட்டிணத்தில் அமைக்க வேண்டிய கடமை தி.மு.க. அரசிற்கு உள்ளது.
தமிழகத்தில் பா.ஜ.க.வின் நடைபயணம் குறித்து பொன்முடி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கருத்து தெரிவித்து உள்ளனர். அவர்கள் ஏ.சி. அறையில் இருந்து அரசியல் செய்கிறார்கள்.
23 நாளில் 128 கி.மீ. தொலைவுக்கு நடைபயணம் மேற்கொண்டு உள்ளோம். 234 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடும் முதல் கட்சியாக பா.ஜ.க தான் இருக்கும்.
தமிழகத்தில் அரசியல்களம் மாறிவிட்டது என்பதை பொன்முடி புரிந்து கொள்ள வேண்டும். மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர்.
பா.ஜ.க. நடை பயணத்தால் அரசியல் புரட்சி ஏற்பட்டு உள்ளது. எனக்கு நடைபயணத்தின் போது பகவத் கீதையை விட 21 பைபிள், 7 குர்ஆன் புத்தகங்கள் அன்பளிப்பாக வந்தன. அவை தற்போது என் பூஜை அறையில் உள்ளது.
பா.ஜ.க.வை இந்துத்துவா கட்சி என எத்தனை நாளுக்கு சொல்ல முடியும்? பா.ஜ.க. மீதான பிம்பம் உடைந்து தற்போது அனைவருக்காகவும் உழைக்கும் கட்சியாக உள்ளது.நடைபயணத்தின்போது இஸ்லாமியர், கிறிஸ்துவர்களும் என்னுடன் நடந்து வந்தனர்.
நீட் மசோதாவில் கவர்னரின் பங்களிப்பு எதுவும் இல்லை. ஜனாதிபதி தான் இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும். கவர்னரை தி.மு.க.வினர் பேசும் முறை சரியல்ல. தொட்டுப்பார், சீண்டிப்பார் என்று சவால் விடுத்து வருகின்றனர்.
ஆளுநர் தி.மு.க.வின் சவாலை ஏற்று, சொந்த மாநிலமான பீகாருக்கு வரச்சொன்னால் என்ன செய்யலாம்? வாய் உள்ளது என தி.மு.க.வினர் எல்லாவற்றையும் பேசக்கூடாது.
கவர்னரை சம்மந்தம் இல்லாமல் வம்புக்கு இழுக்கிறார்கள். டி.என்.பி.எஸ்.சி தலைவர் நியமன மசோதாவை திருப்பி அனுப்புவதற்கு கவர்னரிடம் அதிகாரம் உள்ளது.
கவர்னருக்கும், அரசுக்கும் இடையேயான தொடர்பு குறித்து தலைமை செயலாளர் பதில் சொல்ல வேண்டும். இதுகுறித்து பதில் சொல்ல தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு என்ன உரிமை உள்ளது?.
காவிரி பிரச்சினைக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் தான் காரணம். அதனை இவர் தற்போது இடியாப்ப சிக்கலாக்கி ரசித்து வருகிறார்.
அனைவருக்கும் சாதி அடையாளம் கொடுப்பது அருவருக்கத்தக்க செயல். ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்துவது தி.மு.க.வின் முதல் கடமையாக உள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி எதுவும் நடக்காது. காவல்துறைக்கு தான் சிரமம்.
அ.தி.மு.க மாநாடு அந்த கட்சிக்கு முக்கியமானது.மாநாடு என்றால் ஒருசில குறைகள் இருக்கத்தான் செய்யும். அதுகுறித்து நாம் கருத்து சொல்ல எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- சம்பந்தப்பட்ட கால்நடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
- இருந்தபோதிலும் கோவை மாநகராட்சி ரோடுகளில் கால்நடைகள் சுற்றி திரிவது தொடர்கதையாக நீடித்து வருகிறது.
ேகாவை,
கோவை மாநகராட்சியில் உள்ள போக்குவரத்து சாலைகளில் கால்நடைகளில் திரிகின்றன. இதனால் அந்த பகுதியில் விபத்துகள் ஏற்படும அபாயம் உள்ளது. எனவே கோவை ரோடுகளில் கால்நடைகளை திரியவிட்டால் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். கால்நடைகள் 2-வது முறையாக மீண்டும் சாலைக்கு வந்தால், அவற்றை பிடித்து கோசாலையில் ஒப்படைத்து விடுவோம் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்தது.
ஆனாலும் கோவை மாநகர சாலைகளில் கால்நடைகளின் நடமாட்டம் குறையவில்லை. இந்த நிலையில் 62-ம் வார்டுக்கு உட்பட்ட சாரமேடு, ஜெ.ஜெ.நகர் ஆகிய பகுதிகளில் கால்நடைகள் ரோட்டில் திரிவதாக மாநகராட்சிக்கு புகார் வந்தது.
இதனை தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது அங்கு நடுரோட்டில் திரிந்த 4 மாடுகள் மற்றும் ஒரு குதிரை ஆகியவை சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டது. அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் வாகனங்கள் மூலம், கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவுக்கு கொண்டு சென்றனர். பின்னர் சம்பந்தப்பட்ட கால்நடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இருந்தபோதிலும் கோவை மாநகராட்சி ரோடுகளில் கால்நடைகள் சுற்றி திரிவது தொடர்கதையாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் மாநகர போலீசார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதில், கால்நடைகளை வளர்ப்போர் வீட்டில் கட்டி வைத்து வளர்க்க வேண்டும். ரோட்டில் திரியவிடக்கூடாது. அப்படி செய்தால் சம்பந்தப்பட்ட உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
- குடியிருப்புகளுக்கு மாதாந்திர கட்டணமாக 600 சதுரஅடிவரை ரூ.110 கட்டணம் மற்றும் வைப்புத்தொகையாக ரூ.7500 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
- நடப்பு மாதம் முதல் அமலுக்கு வந்தது.
கோவை,
கோவை மாநகராட்சியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களில் பாதாள சாக்கடை இணைப்புக்கான மாதாந்திர கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர வைப்புத்தொகை கட்டணமும் திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது.
அதன்படி கோவை மாநகராட்சியில் உள்ள குடியிருப்புகளுக்கு மாதாந்திர கட்டணமாக 600 சதுரஅடிவரை ரூ.110 கட்டணம் மற்றும் வைப்புத்தொகையாக ரூ.7500 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல 1200 சதுரஅடிவரை ரு.140 (ரூ.10 ஆயிரம்), 1800 சதுரஅடிவரை ரு.180 (ரூ.12,500), 2400 சதுரஅடிவரை ரூ.210 (ரூ.15,000), 2400 சதுரஅடிக்கு மேல் ரூ.250 (ரூ.17500) கட்டணம் மற்றும் வைப்புத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
கோவை மாநகராட்சியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு மாதாந்திர கட்டணமாக 600 சதுரஅடி வரை ரூ.330 கட்டணம் மற்றும் வைப்புத்தொகையாக ரூ.15000 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதே போல 1200 சதுரஅடிவரை ரு.420 (ரூ.20 ஆயிரம்), 1800 சதுரஅடிவரை ரு.540 (ரூ.25000), 2400 சதுரஅடி வரை ரூ.630 (ரூ.30,000), 2400 சதுரஅடிக்கு மேல் ரூ.660 (ரூ.35000) கட்டணம் மற்றும் வைப்புத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கோவை மாநகராட்சியில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் அதிகாரிகள் நேரடியாக சென்று கணக்கெடுப்பு மற்றும் அளவீட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்படி அவர்கள் வரும்போது சம்பந்தபட்ட பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சொத்து வரி, மின்கட்டணம், குடிநீர் இணைப்பு ஆகியவற்றுக்கான ரசீதுகளை காட்ட வேண்டும். பாதாள சாக்கடைக்கு ஏற்கெனவே முன்வைப்பு தொகை செலுத்தி இருந்தால் அதற்கான ஆவண நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.மேற்கண்ட தகவலை கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் தெரிவித்து உள்ளார்.
கோவை,
கோவை மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பொள்ளாச்சியில் நாளை (25-ந்தேதி) மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் நடக்கிறது.
மேலும் சப்-கலெக்டர் தலைமையில் சிறப்பு குறைதீர்ப்பு கூட்டமும் அன்றைய தினம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்க உள்ளது.
இதில் தேசிய அடையாள அட்டை பெற்ற மாற்றுத்திறனாளிகள் ஆதார் கார்டு மற்றும் புகைப்படத்துடன் நேரடியாக கலந்து கொண்டு அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று செல்லலாம். இதுவரை தேசிய அடையாள அட்டை பெறாத வர்கள் ஆதார் கார்டு மற்றும் 4 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்து உள்ளார்.
- கருத்து வேறுபாடு காரணமாக சிலம்பரசனிடம் அந்த பெண் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.
- போலீசார் ஜவுளிக்கடை ஊழியர்கள் 2 பேரை கைது செய்தனர்.
கோவை,
கோவை பேரூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 31 வயது இளம் பெண். இவருக்கு திருமணம் ஆகி விட்டது. இவர் கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
அதே ஜவுளிக்கடையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சிலம்பரசன் (வயது 32), தூத்துக்குடியைச் சேர்ந்த மதன் (31) ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். ஒரே நிறுவனத்தில் பணியாற்றியதால் இளம்பெண்ணுக்கும், சிலம்பரசனுக்கும் நட்பு ஏற்பட்டது. 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர்.
இந்தநிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சிலம்பரசனிடம் அந்த பெண் பேசுவதை நிறுத்திக் கொண்டார். ஆனால் சிலம்பரசனும், மதனும் விடாமல் அந்த பெண்ணை தங்களுடன் பேசுமாறு வலியுறுத்தி உள்ளனர்.
சம்பவத்தன்று செல்போனில் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு உன்னை புகைப்படம் எடுத்து வைத்துள்ளோம். எங்களிடம் பேசாவிட்டால் அந்த படத்தை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவோம் என மிரட்டி உள்ளனர்.
இதனால் அச்சம் அடைந்த அந்த பெண் தனது கணவரிடம் கூறி கண்ணீர் வடித்துள்ளார். பின்னர் அவர் பெரியகடை வீதி போலீஸ்நிலையத்தில் தனது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக 2 பேர் மிரட்டுகிறார்கள்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த சிலம்பரசன், மதன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
- மக்னா யானை மீண்டும் மானாம்பள்ளிக்குள் நுழையும் அபாயம் உள்ளது.
- மக்னா யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை,
தர்மபுரி மாவட்டத்தில் மக்னா யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. எனவே அந்த யானையை வனத்துறை அதிகாரிகள் கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி சுற்றி வளைத்து பிடித்தனர்.
அதன்பிறகு மக்னா யானை ஆனைமலை அடுத்த மானாம்பள்ளி காட்டுக்குள் விடப்பட்டது. அங்கும் இந்த யானை ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி யது.இதனை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி மக்னா யானையை மீண்டும் சுற்றி வளைத்து பிடித்தனர். அதன்பிறகு அந்த யானை வால்பாறை அருகில் உள்ள சின்னக்கல்லாற்றில் விடப்பட்டது.
அப்போது வனத்துறை ஊழியர்கள் மக்னாவின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில், அதன் கழுத்தில் ரேடியோகாலர் பொருத்தி உள்ளனர். இதன்மூலம் அவர்கள் யானை நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மக்னா யானை அடர்ந்த காட்டு க்குள் செல்லாமல், ஊசி மலை டாப், அக்காமலை புல்மேடு ஆகிய பகுதி களுக்கு இடம்பெயர்ந்து சிங்கோனா பகுதிக்குள் சுற்றி திரிவது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர், அந்த யானையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்தனர். இதில் மக்னா நேற்று காலை சிறுகுன்றா எஸ்டேட் பகுதிக்கு வந்து அங்கு உள்ள பசுந்தீவனங்களை தின்றபடி, தேயிலை தோட்டத்துக்குள் தஞ்சம் புகுந்து உள்ளது தெரிய வந்தது.
சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் இருந்து மானாம்பள்ளி வெகு அருகில்தான் உள்ளது. எனவே மக்னா யானை அடுத்த சில நாட்களில் மானாம்பள்ளிக்குள் நுழையும் அபாயம் உள்ளது.
அப்படி ஒருவேளை மானாம்பள்ளிக்கு வந்தால் மக்னா யானை தொடர்ந்து ஆனைமலை, சேத்துமடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்லும் வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.
எனவே சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு உள்ள மக்னா யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கேரள மாநிலத்தில் இருந்து காட்டு யானைகள் வலசைப்பாதைகள் வழியாக வால்பாறைக்குள் இடம்பெயர்ந்து வருகின்றன. அவை தற்போது வழியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டு உள்ளன. இந்தநிலையில் மக்னா யானை மீண்டும் மானாம்பள்ளியை நோக்கி ஒய்யாரமாக உலா வருவது வனத்துறையினர் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது.






