என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்னா யானையை தீவிரமாக கண்காணிக்கும் வனத்துறை
    X

    மக்னா யானையை தீவிரமாக கண்காணிக்கும் வனத்துறை

    • மக்னா யானை மீண்டும் மானாம்பள்ளிக்குள் நுழையும் அபாயம் உள்ளது.
    • மக்னா யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை,

    தர்மபுரி மாவட்டத்தில் மக்னா யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. எனவே அந்த யானையை வனத்துறை அதிகாரிகள் கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி சுற்றி வளைத்து பிடித்தனர்.

    அதன்பிறகு மக்னா யானை ஆனைமலை அடுத்த மானாம்பள்ளி காட்டுக்குள் விடப்பட்டது. அங்கும் இந்த யானை ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி யது.இதனை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி மக்னா யானையை மீண்டும் சுற்றி வளைத்து பிடித்தனர். அதன்பிறகு அந்த யானை வால்பாறை அருகில் உள்ள சின்னக்கல்லாற்றில் விடப்பட்டது.

    அப்போது வனத்துறை ஊழியர்கள் மக்னாவின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில், அதன் கழுத்தில் ரேடியோகாலர் பொருத்தி உள்ளனர். இதன்மூலம் அவர்கள் யானை நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மக்னா யானை அடர்ந்த காட்டு க்குள் செல்லாமல், ஊசி மலை டாப், அக்காமலை புல்மேடு ஆகிய பகுதி களுக்கு இடம்பெயர்ந்து சிங்கோனா பகுதிக்குள் சுற்றி திரிவது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர், அந்த யானையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்தனர். இதில் மக்னா நேற்று காலை சிறுகுன்றா எஸ்டேட் பகுதிக்கு வந்து அங்கு உள்ள பசுந்தீவனங்களை தின்றபடி, தேயிலை தோட்டத்துக்குள் தஞ்சம் புகுந்து உள்ளது தெரிய வந்தது.

    சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் இருந்து மானாம்பள்ளி வெகு அருகில்தான் உள்ளது. எனவே மக்னா யானை அடுத்த சில நாட்களில் மானாம்பள்ளிக்குள் நுழையும் அபாயம் உள்ளது.

    அப்படி ஒருவேளை மானாம்பள்ளிக்கு வந்தால் மக்னா யானை தொடர்ந்து ஆனைமலை, சேத்துமடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்லும் வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.

    எனவே சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு உள்ள மக்னா யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கேரள மாநிலத்தில் இருந்து காட்டு யானைகள் வலசைப்பாதைகள் வழியாக வால்பாறைக்குள் இடம்பெயர்ந்து வருகின்றன. அவை தற்போது வழியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டு உள்ளன. இந்தநிலையில் மக்னா யானை மீண்டும் மானாம்பள்ளியை நோக்கி ஒய்யாரமாக உலா வருவது வனத்துறையினர் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது.

    Next Story
    ×