என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • உணவு பாதுகாப்பு துறையினர் மாவட்டம் முழுவதும் 249 கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • 24 கடைகளில் சுமார் 44.59 கிலோ புகையிலைபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

    கோவை,

    கோவை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கடந்த 18-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை மாவட்டம் முழுவதும் 249 கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 24 கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட சுமார் 44.59 கிலோ புகையிலைபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

    இவற்றின் சந்தை மதிப்பு சுமார் ரூ.44,593 ஆகும். ஆய்வின் முடிவில் முதல்முறை குற்றம் புரிந்த 24 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறையின் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதோடு, அந்த கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இது குறித்து உணவு பாதுகாப்புத் துறையினர் கூறியதாவது "இதே கடைக்காரர்கள்2-வது முறையாக குற்றம் புரிந்தால் ரூ.10 ஆயிரமும், 3-வது முறை குற்றம்புரிந்தால் ரூ.25 ஆயிரமும் விதிக்கப்படும்.

    மேலும், அவர்களது கடையில் வணிகம் மேற்கொள்ள தடை விதிப்பதுடன் உணவு வணிகத்தின் உரிமம் ரத்து செய்யப்படும். இதுபோன்று தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தால் 94440 42322 என்ற உணவு பாதுகாப்பு வாட்ஸ் ஆப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 52 நகரங்களில் இருந்து 88 முன்மொழிவுகள் இந்த விருதுக்காக சமர்பிக்கப்பட்டன.
    • மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் அடுத்த மாதம் 27-ந் தேதி விருதுகள் வழங்கப்பட உள்ளது.

    கோவை,

    ஒன்றிய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சகம் சார்பில், ஸ்மார்ட் சிட்டி விருது-2022, ஸ்மார்ட் சிட்டி மிஷன் இயக்குனரால் நேற்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, பில்டு என்வைரான்மென்ட் பிரிவில் கோவை மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு முதல்பரிசு கிடைத்துள்ளது.

    ஆர்.எஸ்.புரம், ரேஸ் கோர்ஸ் சாலை போன்ற பகுதிகளில் சிறந்த மாதிரி சாலைகள் அமைத்தல், வாலாங்குளம், பெரியகுளம், குறிச்சி குளம், முத்தண்ணன் குளம் உள்பட பல்வேறு குளங்கள் புனரமைப்பு மற்றும் மேம்படுத்துதல் பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக மத்திய அரசு சார்பில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

    இந்திய அளவில் 52 நகரங்களில் இருந்து 88 முன்மொழிவுகள் இந்த விருதுக்காக சமர்பிக்கப்பட்டன. இதில், கோவை மாநகராட்சி அசத்தலாக முதலிடம் பிடித்துள்ளது.

    மேலும், திட்ட செயல்பாட்டில் சிறந்த ஸ்மார்ட் சிட்டி நகரங்களுக்கான விருதில், இந்தியாவின் தெற்கு மண்டலத்தில் கோவை மாநகராட்சி முதலிடம் பிடித்துள்ளது.

    நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்ட செயலாக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த நகரங்கள், சிறந்த திட்டப்பணிகள் மற்றும் செயல்படுத்தப்பட்ட புதுமையான திட்டப்பணிகளுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

    மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் அடுத்த மாதம் 27-ந் தேதி விருதுகள் வழங்கப்பட உள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, இந்த விருதுகளை வழங்குகிறார். ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை செயல்படுத்தும் பல்வேறு மாநிலங்களுக்கு இடையே நடைபெற்ற தேர்வில், தமிழ்நாடு, தேசிய அளவில் 2-வது இடம் பிடித்துள்ளது. மேற்கண்ட தகவலை கோவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் தெரிவித்தார்.

    • மோட்டார் சைக்கிள் டிராக்டரின் பின் பக்கத்தில் மோதி அஸ்வால் தூக்கி வீசப்பட்டார்.
    • சுல்தான் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் அஸ்வால் (வயது26). இவர் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    அஸ்வால் அவரது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா வருவதற்கு திட்டமிட்டார். அதன்படி கடந்த 24-ந் தேதி நள்ளிரவில் அஸ்வால் பெங்களூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    மோட்டார் சைக்கிளில் அஸ்வால் வேகமாக சென்றார். மோட்டார் சைக்கிள் பல்லடம்-பொள்ளாச்சி ரோட்டில் தனியார் கல்லூரி அருகே சென்ற போது அந்த வழியாக சென்ற டிராக்டரின் பின் பக்கத்தில் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயம் அடைந்த அவரை அவரது நண்பர்கள் மீட்டு கோவை சூலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்ைச பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அஸ்வால் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சுல்தான் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குறைதீர்ப்பு கூட்டம் வருகிற 28-ந்தேதி நடக்கிறது
    • pghs/rocbe@epfindia/gov/in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் குறைகளை பதிவு செய்யலாம்.

    கோவை,

    கோவை மாவட்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சார்பில் கோவை மாவட்டத்தில் வருகிற 28-ந்தேதி அலுவலக மாநாட்டு மண்டபம், பி.பி.டி.சி எஸ்டேட்ஸ் குழு மற்றும் வால்பாறை அலுவலகம் உள்ளிட்ட 3 இடங்களில் குறை தீர்ப்புக்கூட்டம் நடக்க உள்ளது.

    இதேபோல திருப்பூரில் நெட்வொர்க்கிங் ஆடை நிறுவனம், நீலகிரியில் மஞ்சூர் தொழில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை, குந்தா பிரிட்ஜ் போஸ்ட் ஆகிய பகுதிகளிலும் குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்படுகிறது.

    எனவே வருங்கால வைப்புநிதி உறுப்பினர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் வருகிற 28-ந்தேதி காலை 10.30 மணி முதல் மாலை 12.30 மணி வரை மேற்கண்ட முகாம்களுக்கு நேரில் வந்து உரிய வைப்பு நிதி கணக்கு எண் மற்றும் ஓய்வூதிய நியமன ஆணை எண் ஆகியவற்றுடன் தங்களின் குறைகளை தெரிவிக்கலாம்.

    அல்லது pghs/rocbe@epfindia/gov/in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் குறைகளை பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிர்ச்சியடைந்த புதுப்பெண் இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார்.
    • வீட்டிற்கு அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கோவை:

    கோவை ராமநாதபுரம் அருகே உள்ள 80 அடி ரோட்டை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண்.

    இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. புதுப்பெண் அவரது கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று புதுப்பெண்ணின் கணவர் வேலைக்கு சென்றுவிட்டார். அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    புதுப்பெண் மதியம் சமையல் வேலைகளை முடித்து சாப்பிட்டு விட்டு வீட்டில் அமர்ந்து டி.வி. பார்த்து கொண்டு இருந்தார்.

    அப்போது வாலிபர் ஒருவர் இளம்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார்.

    வாலிபர் இளம்பெண்ணை கீழே தள்ளி அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த இளம்பெண் சத்தம் போட்டார்.

    இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் இளம்பெண்ணின் வீட்டிற்கு விரைந்து சென்றனர். அதற்குள் வாலிபர் நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    இதில் அதிர்ச்சியடைந்த புதுப்பெண் இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் வீட்டில் தனியாக இருந்த புதுப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தர்மபுரியை சேர்ந்தவரும் தற்போது 80 அடி ரோட்டில் வசித்து வரும் கட்டிட தொழிலாளி ஆனந்த் (வயது 21) என்பது தெரிய வந்தது.

    அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஆனந்தை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    வீட்டில் தனியாக இருந்த புதுப்பெண்ணை பட்டப்பகலில் வாலிபர் வீட்டிற்கு அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தேசத் தலைவர்களின் உருவம், தேசிய சின்னங்கள் உள்ளிட்டவற்றை வடிவமைத்து பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
    • சந்திரயான் வெற்றியைக் கொண்டாடும் விதமாக மரத்தூள்களில் சந்திரயான்-3, லேண்டர், தேசியக்கொடி, அசோக சின்னம் ஆகியவற்றை வடிவமைத்துள்ளார்.

    கோவை:

    சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர், நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக இறங்கியதை நாடு முழுவதும் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    கோவையை சேர்ந்தவர் ரேவதி சவுந்தர்ராஜன். இவர் நல்லூர்வயல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் விடுதி பொறுப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.

    நுண்கலை ஆர்வலரான இவர் அரிசி, மரத்தூள், வீணாகும் காகிதங்கள் போன்றவற்றில் பாரதியார் உள்ளிட்ட தேசத் தலைவர்களின் உருவம், தேசிய சின்னங்கள் உள்ளிட்டவற்றை வடிவமைத்து பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இந்த நிலையில், சந்திரயான் வெற்றியைக் கொண்டாடும் விதமாக மரத்தூள்களில் சந்திரயான்-3, லேண்டர், தேசியக்கொடி, அசோக சின்னம் ஆகியவற்றை வடிவமைத்துள்ளார். இதனை பெயிண்ட்டை ஊற்றி இந்த ஓவியத்தை வடிவமைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

    • உடனடியாக அங்கு ஊர் மக்கள் திரண்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    • பழமையான கோவிலில் அம்மன் சிலையை உடைத்து சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.

    கோவை:

    கோவை காருண்யா நகர் அருகே நல்லூர் வயல்பதி என்ற மலைவாழ் மக்களின் கிராமம் உள்ளது.

    இந்த கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான சடையாண்டியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக ராம் கணேஷ் (வயது28) என்பவர் இருந்து வருகிறார்.

    இவர் வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழைமைகளில் கோவிலுக்கு சென்று பூஜை செய்வது வழக்கம். அதன்படி பூசாரி ராஜ்குமார் நேற்று காலை 10.30 மணியளவில் கோவிலுக்கு பூஜை செய்வதற்காக சென்றார்.

    அப்போது கோவில் உள்ள பூமாரியம்மன் சாமி சிலையில் தலை மற்றும் இடது கை ஆகியவை சேதப்படுத்தப்பட்டு உடைந்து கிடந்தது.

    சிலையை யாரோ மர்மநபர் உடைத்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து பூசாரி ராஜ்குமார் ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக அங்கு ஊர் மக்கள் திரண்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த தகவல் கிடைத்ததும் காருண்யாநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஊர் பொதுமக்கள் அம்மன் சிலையை உடைத்தவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இது குறித்து காருண்யா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மலைவாழ் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான கோவிலில் அம்மன் சிலையை உடைத்து சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.

    • கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது.
    • ஏராளமான விவசாயிகள் அவர்களது கோரிக்கை சம்பந்தமான மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கிராந்தி குமார் பாடி தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிசாமி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டம் பொ ள்ளாச்சி, கருமத்தம்பட்டி, மேட்டுப்பாளையம், சூலூர், பெரியநாய க்கன்பாளையம், சிறுமுகை, காரமடை, அன்னூர், ஆகிய பகுதிகளை சார்ந்து இருக்கும் நீர் நிலைகளான குளம், குட்டை, ஏரி, பள்ளம், ஆறு ஆகிய பகுதிகளில் கழிவுநீர் கலந்து நீர் மாசடைந்து வருகிறது.

    ஆகையால் நீர்நிலை சார்ந்த தொழிற்சாலை கழிவுநீர்களும், நகர்ப்புற மற்றும் கிராமப்புற கழிவுநீர்களும் சில இடங்களில் கலந்து நீரின் தன்மை கெட்டு நிலத்தடி நீர் மாசடைந்து விவசாயமும் பொதுமக்களும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் கிராமப்புற சாலைகளில் வீட்டு கழிவுகளை கொட்டப்படுவதால் பொது சாலை விவசாயத்திற்கு இடையூறாக இருந்து வருவதாலும், சுற்றுச்சூழல் மாசுபட்டு மக்களுக்கு நோய்கள் பரவும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    மேலும் இந்த கூட்ட த்தில் கலந்து கொண்ட ஏராளமான விவசாயிகள் அவர்களது கோரிக்கை சம்பந்தமான மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். 

    • கோவை மண்டல செயலாளராக பிரின்ஸ் சுந்தர் நியமிக்கப்பட்டார்.
    • கோவை மாவட்டம், ஒன்றியம், பகுதிகளுக்கு புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கோவை,

    தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் கோவை மண்டல செயலாளராக பிரின்ஸ் சுந்தரை கட்சியின் நிறுவனத்தலைவர் ஜான்பாண்டியன் மற்றும் பொதுச்செயலாளர் பிரிசில்லா பாண்டியன் ஆகியோர் நியமித்துள்ளனர்.மேலும் கோவை மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகளையும் நியமித்துள்ளனர்.

    கோவை மாவட்ட புதிய நிர்வாகிகள் பட்டியல் வருமாறு:-

    தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் கோவை மண்டல செயலாளராக பிரின்ஸ் சுந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    கோவை மாவட்ட தலைவராக ஜெயராஜ், மாவட்ட செயலாளராக வில்லியம் ஜோஸ், வடக்கு மாவட்ட செயலாளராக ரங்கசாமி, தெற்கு மாவட்ட தலைவராக செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல் சிறு பான்மை பிரிவு மாவட்ட செயலாளராக அக்பர் ெஷரீப், தகவல் தொழில் நுட்ப மாவட்ட செயலாளராக நித்யானந்தன், மாவட்ட இணை செயலாளராக சண்முகம், மாவட்ட பொருளாளராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதுபோன்று கோவை மாவட்டம், ஒன்றியம், பகுதிகளுக்கு புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் கோவை மண்டல செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரின்ஸ் சுந்தருக்கு கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    • வெங்கடாபுரத்தில் சூலூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது.
    • உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு மாதாமாதம் உதவித்தொகை வழங்கி வருகிறது.

    சூலூர்,

    சூலூர் அருகே வெங்கடாபுரத்தில் சூலூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் முத்துசாமி, பொன்முடி ஆகியோர் பங்கேற்று பேசினர். சூலூர் வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் அன்பரசு அனைவரையும் வரவேற்றார்.

    கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-

    தி.மு.க அரசு பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. உயர்கல்வி பயிலும் பெண்களுக்கு மாதாமாதம் உதவித்தொகை வழங்கி வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் பெண்களுக்கு ஆண்களுக்கு நிகராக குடும்பச் சொத்தில் பங்கு உண்டு என்பதை சட்டமாக்கினார் கலைஞர். தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்களுக்கு மாதா மாதம் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை அடுத்த மாதம் தொடங்கி வைக்க உள்ளார்.

    இந்த திட்டம் இந்தியாவிற்கு முன்னோடி திட்டமாக பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் ஒண்றிைணந்து இந்தியா என்ற கூட்டணி உருவாவதற்கான பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வனே செய்தார்.இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் சூலூர் ஒன்றிய குழு உறுப்பினர் ரகு, பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் பி.எஸ்.செல்வராஜ், சூலூர் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் மன்னவன், கலங்கள் சிவகுமார், அரசூர் கார்கி, கண்ணம்பாளையம் நடராஜ் பத்மநாபன் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக திமுக உறுப்பினர் சேர்க்கை துவக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து வெங்கடாபுரத்தில் பயணிகள் நிழற்குடை திறந்து வைக்கப்பட்டது.

    • மாணவியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • காதலர்கள் பாதுகாப்பு கேட்டு மேட்டுப்பாளையம் போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள எல்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் பிரதீப் (வயது 26). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் அந்த பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார்.

    கடந்த கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது பிரதீப்புக்கு திருப்பூர் சாவக்காட்டுபாளையத்தை சேர்ந்த ரஷ்யாவில் மருத்துவ படிப்பு படித்து வரும் மாணவி சந்தியா (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் செல்போன் மூலமாக பேசி காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் வீட்டிற்கு தெரிய வரவே அவரது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பின்னர் சந்தியாவை ரஷ்யாவுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு இருந்தபடி அவர் தனது காதலன் பிரதீப்புடன் செல்போனில் பேசி வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தியா விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து இருந்தார். பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்வது என முடிவு செய்தனர். அதன்படி சந்தியா கடந்த 23-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறினார்.

    பின்னர் காதலர்கள் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொண்ட கையோடு காதலர்கள் பாதுகாப்பு கேட்டு மேட்டுப்பாளையம் போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் 2 பேருடைய பெற்றோரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    • ஓணப்பண்டிகை விழா கடந்த 20-ந் தேதி அத்தப்பூ கோல மிடுதலுடன் தொடங்கியது.
    • கேரள மக்கள் வீடுகள் முன்பு பல வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்து வருகிறார்கள்.

    கோவை,

    கேரள மக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஓணம் திருவிழா. இந்த பண்டிகை 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஓணப்பண்டிகை வருகிற 29-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கான விழா கடந்த 20-ந் தேதி அத்தப்பூ கோல மிடுதலுடன் தொடங்கியது.

    கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கோவை, நீலகிரியிலும் இந்த பண்டிகை களை கட்டத் தொடங்கி உள்ளது. கோவை மாவட்டத்தில் வாளையார், பொள்ளாச்சி மீனாட்சிபுரம், ஆனைக்கட்டி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், தேவாலா உள்ளிட்ட பகுதி கேரள எல்லையில் உள்ள பகுதிகளாகும். இங்கு கேரள மக்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். இங்கும் கோவை மாநகர், ஊட்டி, குன்னூர் பகுதிகளிலும் ஓணம் பண்டிகை களை கட்டி உள்ளது.

    கேரள மக்கள் வீடுகள் முன்பு பல வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்து வருகிறார்கள். இதேபோல பள்ளி, கல்லூரிகளிலும் ஓணம் கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது.குன்னூரில் உள்ள பிராவிடன்ஸ் கல்லூரியில் ஓணம் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. பல வண்ண பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு மலையாள பாடல்களுக்கு மாணவிகள், பேராசிரியைகள் நடனமாடி அசத்தினர்.

    கேரளாவின் பாரம்பரிய உடை அணிந்து, மாவே லியை வரவேற்கும் விதமாக பல்வேறு, வண்ண பூக்களால் அத்தப் பூக்கோலமிட்டனர். இதுமட்டுமில்லாமல் திருவாதிரைக்களி உட்பட மலையாள பாடல்களுக்கு ஏற்ப மாணவிகளும், பேராசிரியைகளும் நடனமாடி அசத்தினர்.

    தொடர்ந்து, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது. தொடர்ந்து செண்டை மேளக் கலை ஞர்கள் இசை வாத்தியங்கள் இசைக்க, கேரள பாரம்ப ரிய கதகளி நடனம் அனை வரையும் வெகுவாக கவர்ந் தது.

    பல்வேறு பாடல்களுக்கு ஆயிரக்கணக்கான மகளிர் ஒன்றாக இணைந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சாதி, மத வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஒன்றாக ஓணம் திருவிழாவை கொண்டாடியது மகிழ்ச்சி அளிப்பதாக மாணவிகள் தெரிவித்தனர்.

    இதேபோல மாவட்டம் முழுவதும் ஓணம் பண்டிகை களை கட்டி உள்ளது.

    ×