என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் வீட்டை விட்டு வெளியேறி காதலனை கரம்பிடித்த மருத்துவ மாணவி
    X

    கோவையில் வீட்டை விட்டு வெளியேறி காதலனை கரம்பிடித்த மருத்துவ மாணவி

    • மாணவியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • காதலர்கள் பாதுகாப்பு கேட்டு மேட்டுப்பாளையம் போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள எல்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் பிரதீப் (வயது 26). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் அந்த பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார்.

    கடந்த கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது பிரதீப்புக்கு திருப்பூர் சாவக்காட்டுபாளையத்தை சேர்ந்த ரஷ்யாவில் மருத்துவ படிப்பு படித்து வரும் மாணவி சந்தியா (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் செல்போன் மூலமாக பேசி காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் வீட்டிற்கு தெரிய வரவே அவரது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பின்னர் சந்தியாவை ரஷ்யாவுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு இருந்தபடி அவர் தனது காதலன் பிரதீப்புடன் செல்போனில் பேசி வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தியா விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து இருந்தார். பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்வது என முடிவு செய்தனர். அதன்படி சந்தியா கடந்த 23-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறினார்.

    பின்னர் காதலர்கள் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொண்ட கையோடு காதலர்கள் பாதுகாப்பு கேட்டு மேட்டுப்பாளையம் போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் 2 பேருடைய பெற்றோரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×