என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் புகையிலை பொருட்களை பதுக்கி விற்ற 24 கடைகளுக்கு ரூ.1.20 லட்சம் அபராதம்
- உணவு பாதுகாப்பு துறையினர் மாவட்டம் முழுவதும் 249 கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
- 24 கடைகளில் சுமார் 44.59 கிலோ புகையிலைபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
கோவை,
கோவை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கடந்த 18-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை மாவட்டம் முழுவதும் 249 கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 24 கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட சுமார் 44.59 கிலோ புகையிலைபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
இவற்றின் சந்தை மதிப்பு சுமார் ரூ.44,593 ஆகும். ஆய்வின் முடிவில் முதல்முறை குற்றம் புரிந்த 24 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறையின் மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதோடு, அந்த கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து உணவு பாதுகாப்புத் துறையினர் கூறியதாவது "இதே கடைக்காரர்கள்2-வது முறையாக குற்றம் புரிந்தால் ரூ.10 ஆயிரமும், 3-வது முறை குற்றம்புரிந்தால் ரூ.25 ஆயிரமும் விதிக்கப்படும்.
மேலும், அவர்களது கடையில் வணிகம் மேற்கொள்ள தடை விதிப்பதுடன் உணவு வணிகத்தின் உரிமம் ரத்து செய்யப்படும். இதுபோன்று தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தால் 94440 42322 என்ற உணவு பாதுகாப்பு வாட்ஸ் ஆப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






