என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
    • ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் தேன்கூடு அமைப்பினர் செய்திருந்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அருகே ஒன்னிபாளையம் எல்லை கருப்பராயன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.

    அப்போது சந்திராயன்-3 விண்கலம் நிலாவில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 108 மீட்டர் நீளம் கொண்ட இந்திய தேசியக்கொடியும், இஸ்ரோவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பலவண்ண கோலமும் உருவாக்கப்பட்டு, 1,008 மண்விளக்கு தீபங்கள் ஏற்றப்பட்டது. மேலும் 108 ஆன்மீகப் பெரியவர்களும், 108 தூய்மைப் பணியாளர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிலவிற்கு தீபாராதனை காட்டி சிறப்பு வழிப்பாடு செய்தனர். இதில் கோவை, திருப்பூர் , சென்னை, ஈரோடு மற்றும் உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் தேன்கூடு அமைப்பினர் செய்திருந்தனர்.

    • ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
    • சாலையில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம், காரமடை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் போலவே வெயிலின் தாக்கம் சற்று அதிகமா காணப்பட்டது.

    இந்நிலையில் நேற்று காலையில் சூரியன் சுட்டெரித்ததுடன், பிற்பகலில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் இருட்ட தொடங்கியது. இதனால் இதமான சூழ்நிலை நிலவியது.

    மாலையில் காரமடை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மாலை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கனமழையால் காரமடை-வெள்ளியங்காடு சாலையில் ரெயில்வே கேட் பகுதியில் இருந்த ராட்சத மரம் ஒன்று வேருடன் சாய்ந்து மின் கம்பியின் மீது விழுந்தது.

    இதனால் அப்பகுதியில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் மின்தடை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள், காவல் துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    மேலும் மின்வாரிய அதிகாரிகள் சாலையில் விழுந்திருந்த மின் கம்பிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் காரமடையிலிருந்து தோலம்பாளையம், வெள்ளியங்காடு சாலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதனால் காரமடையில் இருந்து தோலம்பாளையம், வெள்ளியங்காடு செல்லும் வாகனங்கள் மங்களக்கரைபுதூர் வழியாக போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது.

    வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

    காலை முதலே இதமான கால நிலை நிலவிய நிலையில் மழை பெய்தது. பள்ளி விடும் நேரத்தில் பெய்த மழையால் பள்ளி மாணவர்கள் பாதிப்படைந்தனர்.

    ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக கேரளாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகமானோர் வால்பாறையில் குவிந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து கொண்டிருந்தனர்.

    திடீரென மழை பெய்ய தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடி சுற்றுலா தலங்களை பார்வையிட்டனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் வால்பாறையில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து காணப்பட்டது.

    • 15 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவையொட்டி கிராமமே விழாக்கோலம் பூண்டது.
    • 100-க்கும் மேற்பட்ட பன்றிகளுக்கு மாலை மரியாதை செய்து மேளதாளங்கள் முழங்க கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்‌.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே கரியாக்கவுண்டனூர் கிராமத்தில் பழமையான அண்ணன்மார் பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா காரணமாக திருவிழா நடைபெறாமல் இருந்தது.

    இந்தாண்டு இந்த கோவில் திருவிழா கடந்த 15-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 15 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவையொட்டி கிராமமே விழாக்கோலம் பூண்டது.

    விழாவின் முக்கிய நிகழ்வான பன்றி குத்துதல் நிகழ்வு நேற்று நடைபெற்றது. கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்ட பன்றிகளுக்கு மாலை மரியாதை செய்து மேளதாளங்கள் முழங்க கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

    பன்றி ஊர்வலத்தை கொம்பன் ஊர்வலம் என அழைக்கும் கிராம மக்கள், இப்பன்றிகளை கோவிலில் பலியிட்டு, கடவுள்களுக்கு படைத்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாக கூறுகின்றனர்.

    மேலும் தங்கள் வேண்டுதல் நிறைவேற ஆடு மற்றும் பன்றிகள் கோவிலுக்கு தானமாக வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும், தொழில் வளம் பெறுக விவசாயம் செழிக்க கிராம மக்கள் ஒற்றுமையுடன் இருக்க இந்த திருவிழா நடத்தப்படுவதாகவும் தெரிவித்தனர்.

    சாலையில் மாலை மரியாதையுடன் பன்றிகள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் வினோத நிகழ்ச்சியை அன்னூர் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

    • தமிழ்நாட்டில் நீண்ட காலமாக ஓட்டி வந்த மினி பஸ் சேவை அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது.
    • தற்போது 800-க்கும் குறைவான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக தெரிகிறது.

     கோவை,

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிச்சாமி கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் நீண்ட காலமாக ஓட்டி வந்த மினி பஸ் சேவை அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது. இந்த பஸ்கள் தமிழகத்தின் அனைத்து கிராமப்புறங்களிலும் சென்று விவசாயிகள், கிராமப்புற ஏழை மக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மிகவும் உதவியாக இருந்தது.

    6000 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 800-க்கும் குறைவான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக தெரிகிறது. கோவை மாவட்டத்தில் 150 க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் இருந்த நிலையில் 20-க்கும் குறைவான பஸ்கள் மட்டுமே தற்போது இயக்கப்படுகிறது.

    கிராமப்புறங்களில் பல்வேறு பகுதிகளில் ஓடாமல் மினி பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு புதர் மண்டி கிடப்பதை கண்கூடாக பார்க்கிறோம். டீசல் விலை உயர்வு, ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் கிடைப்பது சிரமமாக இருப்பதால் பஸ்களை இயக்குவது இல்லை என்று மினி பஸ் உரிமையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தேர்தலில் வெற்றி பெற்று வந்தால் இந்த பேருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வோம் என்று கூறினார்கள். இது நாள் வரையிலும் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படாததால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

    கிராமப்புறத்தில் உள்ள விவசாய பெருமக்களுக்கு மிகவும் உதவியாக இருந்த இந்த பஸ்களை மீண்டும் இயக்குவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கோவையில் சூலூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த மினி பஸ்களை இயக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.  

    • கூட்ட நெரிசலை பயன்படுத்தி ரமணியின் கழுத்தில் இருந்த 2¾ பவுன் செயினை யாரோ திருடியது தெரியவந்தது.
    • பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பீளமேடு,

    திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் ஸ்ரீபதி நகரை சேர்ந்தவர் ரமணி(வயது56).

    இவர் சம்பவத்தன்று திருப்பூரில் இருந்து சொந்த வேலை காரணமாக கோவை பீளமேடு வந்தார். பிளமேடு பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றதும், ரமணி பஸ்சை விட்டு கீழே இறங்கினார்.

    அப்போது தனது கழுத்தில் இருந்த செயின் மாயமாகி இருந்தது.கூட்ட நெரிசலை பயன்படுத்தி ரமணியின் கழுத்தில் இருந்த 2¾ பவுன் செயினை யாரோ திருடியது தெரியவந்தது. இதுகுறித்து பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஊட்டியை சேர்ந்தவர் சாம்(19). இவர் டிப்ளமோ படித்து விட்டு, கோவை காந்திபுரத்தில் தங்கி ரெயில் நிலைய பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.இவர் தனது பயன்பாட்டிற்காக மோட்டார் சைக்கிள் வைத்திருந்தார். அதனை தான் தங்கியிருக்கும் லாட்ஜ் அருகே நிறுத்தியிருந்தார்.

    இந்த நிலையில் அந்த மோட்டார் சைக்கிள் திடீரென காணாமல் போய் விட்டது. இதுகுறித்து காட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
    • பொள்ளாச்சி கிழக்கு போலீசார் ரமேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர்.

    ெபாள்ளாச்சி,

    தென்காசியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது30). இவரும் சென்னையை சேர்ந்த குமாரி (26) என்பவரும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    திருமணத்திற்கு பிறகு ரமேஷ்குமார் தனது மனைவியுடன் பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டியில் தங்கி இருந்தார். ரமேஷ்குமார் கட்டிட வேலைக்கும், குமாரி அங்குள்ள ஒரு வீட்டில் வீட்டு ேவலையும் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் ரமேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

    சம்பவத்தன்று இரவு ரேவதி வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டிற்குள் ரமேஷ்குமார் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். அவரது உடலை பார்த்து குமாரி கதறி அழுதார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விரைந்து சென்று இறந்த ரமேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர்.

    • போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • கொலை செய்து உடல் வீச்சா? என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கிறார்கள்.

    குனியமுத்தூர்,

    கோவை சுந்தராபுரம் அருகே உள்ள கணேசபுரம் ரெயில்வே தண்டவாளம் அருகே வாலிபர் ஒருவர் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடப்பதாக சுந்தராபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் வந்தது.

    இதுபற்றி அவர்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் நேரில் சென்று பார்வையிட்டனர்.

    அப்போது தண்டவாளத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் 30 வயது மதித்தக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடந்தார். அவரது தலை அடையாளம் காண முடியாத நிலையில் சிதைந்து காணப்பட்டது. ஒரு கையும் துண்டிக்கப்பட்டு இருந்தது. அந்த நபர் கட்டம் போட்ட கருப்பு கலர் லுங்கி அணிந்திருந்தார்.

    அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரிய வில்லை. அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த நபர் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா அல்லது யாராவது கொலை செய்து இங்கு கொண்டு வந்து வீசிச் சென்றார்களா? என்று தெரியவில்லை. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான நபர் லுங்கி அணிந்திருந்ததால் அவர் உள்ளூரைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டது.

    ஆனால் உள்ளூரில் எந்தவொரு துப்பும் கிடைக்கவில்லை. இதனால் மாவட்டத்தில் வேறு யாராவது மாயமாகி உள்ளார்களா? என்பது பற்றி போலீசார் விசாரிக்கிறார்கள்.

    • கூட்டத்தில் போலீசார் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்.
    • கடந்த ஆண்டு எந்தெந்த இடத்தில் சிலை வைக்கப்பட்டதோ, அதே இடத்தில் தான் வைக்க வேண்டும். மற்ற இடங்களில் வைக்ககூடாது.

    வடவள்ளி,

    நாடு முழுவதும் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசயைாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தற்போதே விநாயர் சதுர்த்திக்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டன.

    கோவையிலும் விநாயகர் சதுர்த்தியன்று இந்து அமைப்பினர், பொது மக்கள், விநாயகர் சிலையை வைத்து வழிபடுவார்கள்.

    கோவையில் பல்வேறு இடங்களில் இந்து முன்னணியினர் மற்றும் இந்து அமைப்பினர் சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கான ஏற்பாடுகளை தற்போதே தொடங்கி விட்டனர். விநாயகர் சிலை தயாரிப்பு பணியும் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

    கோவை வடவள்ளி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு மாநகர போலீஸ் துணை கமிஷனர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் இந்து முன்னணியினர் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் இந்து அமைப்பினருக்கு போலீசார் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்.

    வடவள்ளி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு எந்தெந்த இடத்தில் சிலை வைக்கப்பட்டதோ, அதே இடத்தில் தான் வைக்க வேண்டும். மற்ற இடங்களில் வைக்ககூடாது.

    மேலும் தாங்கள் வைக்க கூடிய சிலைகளை மிகவும் பாதுகாப்புடன் பார்த்து கொள்ள வேண்டும். சிலை வைத்திருக்கும் இடத்ைத சுற்றிலும் தகரம் வைத்து அடைத்து விட வேண்டும். அங்கு எளிதில் தீப்பற்றக்கூ டிய பொருட்களை வைக்க கூடாது. அங்கு தீயணைப்பு கருவியையும் வைத்திருக்க வேண்டும்.

    இதுதவிர விநாயகர் சிலை வைத்திருக்கும் இடத்தை சுற்றிலும் கண்காணிப்பு காமிராக்களும் பொருத்த வேண்டும். 3 நாட்களுக்கு மேல் சிலைகளை வைக்க கூடாது. 3 நாட்களுக்குள் எடுத்து சென்று கரைத்து விட வேண்டும் என்பன உள்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

    • பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள செயலியில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • தகுதியில்லாத விண்ணப்பங்களை நிராகரிப்பு செய்யாமல், ஏற்றுக் கொண்டதாக பதிவு செய்கிறார்களா என்பதையும் பார்வையிட்டனர்.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு 7.41 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன.

    இவற்றை ஆன்லைன் முறையில் பரிசீலனை செய்த போது, சிலர் சமர்ப்பித்து இருந்த ஆவணங்களின் எண்கள் தவறுதலாக இருந்தது.அந்த கார்டு தாரர்களுக்கு குறுஞ்செய்தி செல்ல வில்லை.

    அந்த வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள செயலியில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி கடைக்கு ஒருவர் வீதம், 1,401 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வீடு, வீடாக சென்று அரசு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று அம்மன்குளம், பாப்பநாயக்கன்பாளையம், மட்ட சாலை பகுதிகளில் இந்த பணிகள் எப்படி நடைபெறுகிறது என்பதை கலெக்டர் கிராந்திகுமார், ஆர்.டி.ஓ.கோவிந்தன் ஆகியோர் திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் தொடர்பான பணியில் அரசியல் குறுக்கீடு இருக்கிறதா? விதிமுறைக்கு உட்பட்டு தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றனவா? தகுதியில்லாத விண்ணப்பங்களை நிராகரிப்பு செய்யாமல், ஏற்றுக் கொண்டதாக பதிவு செய்கிறார்களா என்பதையும் பார்வையிட்டனர்.

    • 1000-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு தங்களது பழைய பூணூலை மாற்றி புதிய பூணூலை போட்டுக்கொண்டனர்.
    • ஆவணி அவிட்ட தினத்தில் விரதம் இருந்து பூணூல் அணிந்து கொண்டால் குடும்பத்தில் எந்த துன்பமும் நெருங்காது என்பது ஐதீகம்.

    கோவை.

    ஆவணி மாதம் வரும் அவிட்ட நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி நாளில் ஆவணி அவிட்டம் கடைபிடிக்கப்படுகிறது.

    ஆண்டு சடங்கு உபநயனம் செய்து கொண்ட பிராமணர்கள் ஆவணி அவிட்டத்தன்று பழைய பூணூலை மாற்றி விட்டு புது பூணூலை அணிந்து கொள்வது வழக்கம்.

    கோவையில் ராஜா வீதியில் உள்ள சங்கர மடம், ராம் நகரில் உள்ள ராமர் கோவில், மற்றும் சித்தாபுதூரில் உள்ள அய்யப்பன் கோவிலில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு தங்களது பழைய பூணூலை மாற்றி புதிய பூணூலை போட்டுக்கொண்டனர்.

    விநாயகர் வழிபாட்டுடன் துவங்கிய நிகழ்ச்சியில் உபநயனம் பெற்ற பிராமணர்கள் தங்கள் பூணூல்களை மாற்றி வேத ஆகமங்களின் படி வழிபட்டனர். முன்னதாக வேத மந்திரங்கள் ஓத, கணபதி ஹோமமும் நடந்தது.

    ஆவணி அவிட்டம் என்பது ஆண்கள் மட்டுமே கடைபிடிக்கும் விரதமாகும். ஆவணி மாத பவுர்ணமி அன்று வரும் அவிட்ட நட்சத்திரத்தில் பிராமணர்கள் மற்றும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த சிலர் மட்டுமே இந்த விரத்தை கடைபிடிக்கின்றனர்.

    முன்னோர்களின் வழி பாட்டிற்கு பிறகு பூணூலை மாற்றிக் கொண்டு தங்கள் வேதங்களை படிக்க தொடங்குவார்கள். இதுவே சமஸ்கிருதத்தில் உபகர்மா என்று அழைக்கப்படுகிறது. உபகர்மா என்பதற்கு தொடக்கம் என்று அர்த்தம். இந்த உபகர்மாவே தமிழில் ஆவணி அவிட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆவணி அவிட்ட தினத்தில் விரதம் இருந்து பூணூல் அணிந்து கொண்டால் குடும்பத்தில் எந்த துன்பமும் நெருங்காது என்பது ஐதீகம்.

    • சில நாட்களாக மாணவியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படவே பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
    • போலீசார் முத்தமிழரசன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. மாணவி அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். மாணவியின் மாமா வீடு நெகமம் அருகே உள்ள ஒருகிராமத்தில் உள்ளது.

    இங்கு சிறுமி தனது தாயுடன், மாதத்தில் ஒருமுறை சென்று வருவது வழக்கம். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வழக்கம் போல சிறுமி தனது தாயுடன், தனது மாமா வீட்டிற்கு சென்றார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த முத்தமிழரசன் (வயது21) என்ற வாலிபருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது.

    அடிக்கடி 2 பேரும் சந்தித்து கொண்டதால் பழக்கம் நட்பாக மாறியது. ஒருநாள் முத்தமிழரசன் சிறுமியை காதலிப்பதாக கூறினார். மாணவியும் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.

    இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த முத்தமிழரசன் மாண வியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து விட்டார். இதே போன்று தொடர்ந்து அவர் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.

    இந்த நிலையில் சில நாட்களாக மாணவியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படவே பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவியின் தாய் அவரை அருகே தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றார்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு மாணவி 5 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் அவர் அதிர்ச்சியானார். தொடர்ந்து தனது மகளிடம் விசாரித்தார்.

    அப்போது மாணவி, தனக்கு நடந்தவற்றை தனது தாயாரிடம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் மாணவியிடம் நேரில் சென்று விசாரித்தனர். விசாரணையில் முத்தமிழரசன், மாணவியை பலாத்காரம் செய்தது உறுதியானது.

    இதையடுத்து போலீசார் முத்தமிழரசன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    • தேசிய இளைஞர் தின திருவிழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்காக மாரத்தான் போட்டி நடந்தது.
    • நேரு விளையாட்டு அரங்கில் தொடங்கிய மாரத்தான் போட்டியை கலெக்டர் கிராந்திகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கோவை,

    தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்களின் வாயிலாக எச்.ஐ.வி, எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக, தேசிய, மாநில, மாவட்ட அளவிலான தேசிய இளைஞர் தின திருவிழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்காக மாரத்தான் போட்டி நடந்தது.

    கோவையிலும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது.

    நேரு விளையாட்டு அரங்கில் தொடங்கிய மாரத்தான் போட்டியை கலெக்டர் கிராந்திகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த மாரத்தான் ஓட்டம் அவிநாசி சாலை, பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அண்ணா சிலை வழியாக 5 கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் நேரு விளையாட்டு அரங்கிற்கு வந்தடைந்தது.

    இந்த மாரத்தான் ஓட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் திருநங்கைகள் என பலரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு ஓடினர்.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாராட்டு தெரிவித்து சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கினார்.

    ×