என் மலர்
கோயம்புத்தூர்
- தாசர்களுக்கு படையிலிட்டு வழிபாடு
- கோவிந்தா கோவிந்தா என விண்ணதிர கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம்
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அரங்கநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது
.
இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசி மகத்திருத்தேர் பெருந்திருவிழா, புரட்டாசி சனிக்கிழமைகள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
மேலும், புரட்டாசி மாதம் 5 சனிக்கிழமைகளும் இக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கோவை, திருப்பூர்,ஈரோடு,நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து அரங்கனை தரிசனம் செய்தும், தாசர்களுக்கு படையலிட்டும் வழிபடுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமை என்பதால் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.
அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அரங்கநாத சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து தாசர்களுக்கு படையிலிட்டு வழிபாடு செய்தனர்.
கோவிலில் கூட்டம் அதிகமாக இருப்பதால் கோவில் நிர்வாகம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட் டுள்ளன.ஏற்பாடுகளை திருக்கோவில் செயல் அலுவலர் லோகநாதன் செய்துள்ளார்.
இதேபோல் கோைவ பாப்பநாயக்கன்பாளையம் சீனிவாச பெருமாள் கோவிலிலும் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி அதிகாலையிலேயே ஏராளமான மக்கள் கோவிலுக்கு வந்தனர்.
அவர்கள் கோவிந்தா கோவிந்தா என விண்ணதிர கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.
கோவை ராமர் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் அதிகளவிலான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.
- சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
- மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் பாக்குக்கார தெருவில் வீட்டின் முன்பு சைக்கிள் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த சைக்கிளை நோட்டமிட்ட முதியவர் ஒருவர் அதனை லாவகமாக திருடி செல்கிறார்.இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்கில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது முதியவர் சைக்கிளை மட்டுமே குறிவைத்து திருடி செல்வதை வாடிக்கையாக வைத்திருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த சிசிடிவி காட்சியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சைக்கிளை நோட்டமிட்ட முதியவர் பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தெருவில் இருந்து சைக்கிளை லாவகமாக திருடி செல்வது பதிவாகியுள்ளது. இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- திருமணம் ஆகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர்
- திருமணம் ஆகாத கள்ளக்காதலுடன் ஓட்டம்
கோவை,
ஆனைமலையை சேர்ந்த வர் 45 வயது இளம்பெண். இவர் அங்குள்ள ரெஸ்டாரண்டில் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.இவருக்கு திருமணம் ஆகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு அவருடன் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்த திருமணமாகாத வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இளம்பெண் அவரது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் வாலிபரை அங்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
சம்பவத்தன்று கணவரிடம் கோபித்துக் கொண்டு வெளியே சென்ற இளம்பெண் தனது கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் தனது மனைவியை மீட்டு தரும்படி ஆனைமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம் பெண்ணை தேடி வருகின்றனர்
- தொலைந்த செல்போனை கண்டுபிடித்து தரும்படி ரோட்டில் உருண்டு புரண்டார்
- கோவில்பாளையம் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்
கோவை,
கோவை அருகே உள்ள கோவில்பாளையத்தில் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த போலீஸ் நிலையத்தில் நேற்று மதியம் போலீசார் பணியில் இருந்தனர்.
அப்போது 25 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் போதை தலைக்கேறிய நிலையில் போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.
அவர் அங்கு பணியில் இருந்த போலீசா ரிடம் தனது செல்போனை யாரோ பறித்து சென்று விட்டதாக கூறினார்.போலீசார் நீ தற்போது குடி போதையில் இருக்கிறாய். போதை தெளிந்ததும் வா என கூறி வெளியே அனுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் போலீஸ் நிலையம் முன்பு உள்ள ரோட்டில் படுத்து தனது செல்போனை மீட்டு தரும்படி ரகலையில் ஈடுபட்டார்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரப ரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அந்த வாலிபரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
- 40 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வருவதாக குற்றச்சாட்டு
- போராட்டத்தால் அந்த பகுதியில் 4 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு
சூலூர்
சூலூர் அருகே பாப்பம்பட்டி கிராமம் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி மக்களுக்கு ஊராட்சி சார்பாக அத்திக்கடவு குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த பகுதியில் 40 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வருவதாக தெரிகிறது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
இன்று அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பாப்பம்பட்டி நால் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையிலான போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள், குடி தண்ணீருக்காக நாங்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறோம். 40 நாள்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வருகிறது. இதனால் மிகவும் சிரமமாக உள்ளது.
குடிதண்ணீருக்காக அதிக அளவில் பணத்தை செலவு செய்ய வேண்டி இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் குடிநீர் வடிகால் வாரியத்தில் இருந்து முறையான உத்தரவாதம் அளிக்கப்பட்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்றனர்.
இதனையடுத்து அங்கு வந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் 4 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந்த போராட்டத்தால் 300க்கும் அதிகமான வாகனங்கள் சாலையில் ஆங்காங்கே நின்றன.
- டாஸ்மாக் கடைகள் வைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்.
- பொதுமக்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கவுண்டம்பாளையம்,
கோவை கவுண்டம்பாளையம் அடுத்த உருமாண்டாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 2 டாஸ்மாக் கடைகள் வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என அ.தி.மு.க.வினர் முடிவு செய்தனர்.அதன்படி கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ.வும், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் உருமாண்டாம்பாளையம் பஸ் நிலையம் முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பகுதி செயலாளர் வனிதா மணி, வார்டு செயலாளர் பந்தல்வீடு பிரகாஷ், சாந்தி பூஷண் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் ஆர்.பி.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ பேசுகையில், கவுண்டம்பாளையம், உருமாண்டாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வயல்வெளிகள், தோட்ட ங்கள் நிறைந்த பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை அமை க்கக்கூடாது, அப்படி செய்தால் இதனை கண்டித்து அ.தி.மு.க சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
இதுகுறித்து தகவலறிந்த துடியலூர் போலீசார் சம்பவஇடத்துக்கு உடனடியாக வந்து எம்.எல்.ஏ. அருண்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து லைந்து சென்றனர்.
- மாவட்ட பசுமைக் குழு கூட்டத்தில் கலெக்டர் தகவல்
- அடுத்த 10 ஆண்டுகளில் வனம், மரங்களின் பரப்பளவை 23.8 சதவீதம் முதல் 33 சதவீதமாக உயர்த்த முடிவு
கோவை,
கோவை மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள 12.58 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்ய அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்தார்.
பசுமை தமிழ்நாடு இயக்கத் திட்டத்தின் மாவட்ட பசுமைக் குழு கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமை வகித்துப் பேசியதாவது: முதல்வரின் சிறப்புத் திட்டமான பசுமை தமிழ்நாடு இயக்கத்தின்கீழ் அடுத்த 10 ஆண்டுகளில் வனம், மரங்களின் பரப்பளவை 23.8 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது.
அதன்படி, வனப் பகுதிகளில் காடு வளர்ப்பு, வனப் பகுதிகளுக்கு வெளியே மரம் நடுதல், விவ சாய நிலங்களில் விவசாய பயிர்களோடு வருமான வாய்ப்புகளை அதிகரிக்க மரம் வளர்த்தல், சமூக, பொது, தனியார் பங்க ளிப்போடு வளர்ந்து வரும் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் பசுமை தமிழகம் ஆகிய பணிகள் பசுமை தமிழகம் இயக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்படும்.
அரசு, பொது இடங்களில் மரங்கள் வெட்டுவதை ஒழுங்குபடுத்தவும், பொது நிலங்கள், அலுவலகங்களில் மரம் நடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாவட்ட அளவில் பசுமைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கு வனத்துறை சார்பில் 10,42,538 மரக்கன்றுகள், மாநகராட்சி சார்பில் 50,000 மரக்கன்றுகள், மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 75,462 மரக்கன்றுகள், தன்னார்வ அமைப்பு மூலம் 30,000 மரக்கன்றுகள்,தனியார் நாற்றாங்கால்கள் மூலம் 60,000 மரக்கன்றுகள் என மொத்தம் 12,58,000 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளின் சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி கோவை மாவட்டத்தின் வனப்பரப்பை அதிகரிக்கச் செய்து பசுமையை ஏற்படுத்தும் நோக்குடன் மாவட்டத்துக்கான இலக்கை விரைவாக எய்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
கூட்டத்தில், வனத்துறை மூலம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்தல், நடவு செய்தலுக்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப் பட்டது. மேலும், பசுமை தமிழ்நாடு இயக்கத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த விளக்கக் காட்சி திரையிடப்பட்டது.
இதில், மாவட்ட வன அலுவலர் நா.ஜெயராஜ், பொள்ளாச்சி சார் ஆட்சியர் சி.பிரியங்கா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத் சிங், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பஷீர் அகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
- கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றும் நடக்கவில்லை என தமிழ்நாடு முதலமைச்சர் சொல்வது சரியில்லை.
கோவை:
கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கோவைக்கு வந்தார்.
அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நாடு வேகமாக முன்னேறுவதற்கு இந்த இட ஒதுக்கீடு முதல் படி.
இதனை இந்தியாவில் உள்ள பெண்கள் கொண்டாட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முன்னேற்றம் அடைந்து வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றும் நடக்கவில்லை என தமிழ்நாடு முதலமைச்சர் சொல்வது சரியில்லை.
உயர்கல்வி மருந்துவப்படிப்பில் ஏறக்குறைய 70 ஆயிரம் இடங்கள் உள்ளன. அதில் 4 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளது. ஜீரோ பர்சன்டைல் என்பது இந்தாண்டு காலியிடங்களை நிரப்ப ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது.
இதனை வைத்து நீட் தேவையில்லை என்பது தவறு. மருத்துவக் கல்லூரிகள், மருத்துவ படிப்புகள் அதிகமாகி இருப்பதால் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கிறது.
ஜீரோ ஜீரோ என சொல்லக்கூடாது. மருத்துவ உயர்கல்வியை சீரமைக்க மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கவுன்சிலிங் செல்லும் போது தகுதியான மருத்துவர்களுக்கு தான் வாய்ப்புகள் கிடைக்கும்.
இதனால் தனியார் மருத்துவ கல்லூரிகள் பலனடையும் என்பது சரியல்ல. அரசுக் கல்லூரிகளும் பலனடையும். தனியார் கல்லூரிகளும் பலனடையும். இதனை வைத்து அநாவசியமாக அரசியல் செய்யக்கூடாது.
சனாதனம் ஒழிப்பு என்றவர்கள் ஏன் மத, சாதி வேறுபாடுகளை பேசுகிறார்கள்? நலம் பயின்ற பள்ளிகளில் மலம் கலக்கப்படுகிறது ஏன்? இதற்கு முன்பு எப்போதாவது இப்படி நடந்ததா?.
இந்துக்கள் படிக்க மற்றவர்கள் காரணம் என சபாநாயகர் சொல்வது நியாயமா? என நீங்கள் சொல்லுங்கள். அவர் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இவர்கள் இப்படி பிரிவினையை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.
சனாதனம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் சட்டரீதியாக சந்தித்து தான் ஆக வேண்டும். அநாவசியமான சத்தம் போட்டால் சட்டரீதியாக சந்தித்து தான் ஆக வேண்டும்.
பாராளுமன்றத்தில் பாஜக எம்.பி. பேசியது தவறு தான். இதற்கு ஏற்கனவே கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரை நிகழ்த்தும் போது, அவர் அழைக்கப்படுவார்.
இன்று ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து பேசுபவர்கள், போட்டியிட்ட போது ஏன் ஆதரிக்கவில்லை?
பெண்கள், பழங்குடியினர், கீழ்நிலையில் இருப்பவர்கள் முன்னுக்கு வர அங்கீகாரம் தர வேண்டும். நீங்கள் ஒட்டு போட்டு ஜனாதிபதி வெற்றி பெறவில்லை. அவர் ஜனாதிபதியாக பிரதமர் தான் காரணம். அதற்கு நீங்கள் முதலில் பதில் சொல்லுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாளை மாலை கோவை குனியமுத்தூர், மாச்சாம்பாளையம் பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்கிறார்.
- நடைபயணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவை மாவட்ட ஒருங்கிணைந்த பா.ஜ.க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
கோவை:
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கடந்த ஜூலை மாதம் 28-ந்தேதி அண்ணாமலை தனது பாதயாத்திரையை தொடங்கினார்.
இந்த பாத யாத்திரையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். தொடர்ந்து அண்ணாமலை ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரியில் நடைபயணம் மேற்கொண்டார்.
முதல் கட்ட பயணத்தில் மொத்தம் 22 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட அவர், 41 சட்டமன்ற தொகுதிகளில் மக்களை சந்தித்தார்.
அடுத்தக்கட்டமாக கடந்த 3-ந்தேதி தனது 2-ம் கட்ட நடைபயணத்தை தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தொடங்கிய அண்ணாமலை, அங்கிருந்து தேனி, திண்டுக்கல்லிலும் பாதயாத்திரை மேற்கொண்டார்.
21-ந் தேதி திருப்பூர் மாவட்டம் காங்கயம், தாராபுரத்தில் நடைபயணம் மேற்கொண்டார். நேற்று உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் மக்களை சந்தித்தார்.
இன்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கோவை மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொள்கிறார். நடைபயணம் மேற்கொள்ள வரும் அண்ணாமலைக்கு கோவை மாவட்ட பா.ஜ.க சார்பில் ஏராளமான தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
அதனை தொடர்ந்து அவர் மாலை 3 மணிக்கு வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேட்டைக்காரன்புதூர் பகுதியில் நடைபயண பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அப்போது திறந்த வேனில் இருந்தபடி பொதுமக்கள் மத்தியில் அண்ணாமலை பேசுகிறார்.
தொடர்ந்து மாலை 5 மணியளவில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடைபயணம் மேற்கொள்கிறார். அங்கு நடைபயணத்தை முடித்து கொண்டு இரவு கோவையில் தங்குகிறார்.
நாளை மாலை கோவை குனியமுத்தூர், மாச்சாம்பாளையம் பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்கிறார். 25-ந் தேதி(திங்கட்கிழமை) கோவை கணபதி பஸ் நிலையத்தில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார்.
அங்கிருந்து தொடங்கும் நடைபயணமானது பல்வேறு வீதிகள், முக்கிய சந்திப்புகள் வழியாக சென்று இடையர்பாளையம் சந்திப்பு பகுதியில் நிறைவடைகிறது. தொடர்ந்து 26-ந் தேதி கோவை ராம்நகர் ராமர் கோவிலில் இருந்து தனது நடைபயணத்தை தொடங்குகிறார்.
அங்கிருந்து பல்வேறு பகுதிகள் வழியாக பொதுமக்களை சந்தித்தபடி செல்லும் அண்ணாமலை ராஜவீதி தேர்நிலை திடல் பகுதியில் தனது நடைபயணத்தை நிறைவு செய்கிறார். அங்கு திரண்டிருக்கும் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். இந்த நடைபயணத்தில் பா.ஜ.க முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட திரளானோர் பங்கேற்க உள்ளனர்.
நடைபயணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவை மாவட்ட ஒருங்கிணைந்த பா.ஜ.க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- 40 வருடத்துக்கு முன்பு தி.மு.க. தலைவர் கருணாநிதி, என்னை அரசியலுக்கு அழைத்தார்.
- நாங்கள் இந்தி ஒழிக என்று சொல்லவில்லை, தமிழ் வாழ்க என்று சொல்கிறோம்.
கோவை:
மக்கள் நீதி மய்யம் சார்பில் கோவை மண்டல நிர்வாகிகள் கூட்டம் கோவையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இதில் கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சனாதனம் என்ற ஒரு வார்த்தையை சொன்னதற்காக ஒரு சின்ன பிள்ளையை பாடாய் படுத்துகிறார்கள். அந்த குழந்தையின் தாத்தாவுக்கு தாத்தா சொன்ன விஷயம்தான் அது. எங்களுக்கு அந்த வார்த்தை தெரிந்ததே பெரியார் சொல்லிதான். அவரை தி.மு.க. மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது. வேறு கட்சிகளும் சொந்தம் கொண்டாட முடியாது. தமிழ்நாடே அவரை சொந்தம் கொண்டாடலாம். அதில் ஒருவன் நான்.
40 வருடத்துக்கு முன்பு தி.மு.க. தலைவர் கருணாநிதி, என்னை அரசியலுக்கு அழைத்தார். ஆனால் நான் செல்லவில்லை. அவ்வாறு செய்தது தவறு. இனிமேல் அதை செய்ய நான் தயாராக இல்லை. இவ்வளவு காலம் கடந்து அரசியலுக்கு வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
மதுரை, கோவை, சென்னை என்று பல இடங்களில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுங்கள் என்று கட்சியில் அழைக்கிறார்கள். நான் சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் நின்று வெற்றிவாய்ப்பை இழந்தேன். அது சூழ்ச்சி காரணமாக நடந்தது. அந்த சூழ்ச்சியில் நாம் இனிமேல் சிக்கிக்கொள்ளக்கூடாது.
கோவை பாராளுமன்ற தொகுதிக்கு சரியாக வேலை செய்ய 40 ஆயிரம் பேர் வேண்டும். போர்படையின் முன்வரிசையில் நிற்க பயமாக இருந்தால் அவன் தலைவனே இல்லை. நான் நிற்கிறேன். ஏற்கனவே நான் கோவையில் தோல்வியடைந்து மூக்கை உடைத்து விட்டேன். அதற்கு மருந்து போட்டுவிட்டு நான் மீண்டும் கோவையில் போட்டியிடுவேன்.
தி.மு.க. நிர்வாகிகளே என்னிடம் நீங்கள் தோற்கக்கூடாது என்று சொன்னார்கள். அந்த அளவுக்கு நமக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
தமிழ்நாடு தொழில் தலைநகரமாக மாற வேண்டிய முயற்சியை நாம் எடுக்க வேண்டும். இந்தியாவின் தலைவாசல் இமாலயம் அல்ல, கன்னியாகுமரி என்று சொல்லக்கூடிய வாய்ப்பை நம்மால் செய்து காட்ட முடியும். அதற்கு நாம் நேர்மையாக இருக்க வேண்டும்.
தேர்தலுக்காக நேரம் அதிகம் இல்லை. மத்திய அரசின் சவுகரியத்துக்காக செய்யப்படும் சூழ்ச்சிதான் இது. அதற்கு நமது அசவுகரியத்தால் நாம் பலியாகிவிடக்கூடாது.
ஒருவர் தான் மட்டுமே பிரதமர் ஆக வேண்டும் என்று நினைத்தால் அது ஜனநாயகம் அல்ல. அதை எதிர்த்துதான் இன்று 'இந்தியா' வெகுண்டு பேசிக்கொண்டு இருக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை ஏற்க முடியாது. சீனாவில் அவர்களின் மொழியை திணிப்பது இல்லை. அதற்காக நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை.
நாங்கள் இந்தி ஒழிக என்று சொல்லவில்லை, தமிழ் வாழ்க என்று சொல்கிறோம். இப்படிதான் அனைத்து விஷயத்திலும் நாங்கள் இருப்போம். எங்களுக்கு பிடித்ததை தேடுவோம். இந்தி பேசினால்தான் வேலை என்றால் அந்த வேலை எங்களுக்கு வேண்டாம்.
நமது அரசியல் வெகுண்டு எழும் அரசியல் அல்ல. பெரியார், காந்தி, அம்பேத்கர் உள்பட பல அறிஞர்கள் எனக்கு வழங்கிவிட்டு போன அரசியல். இப்போது சனாதனத்தை பேசியதற்கு வந்த கோபம் ஏன் அப்போது வரவில்லை?. அன்பு ஒன்றுதான் எனக்கு தெரிந்த மதம். அதிலும் பெரியது என்றால் அது மனிதம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை.
- சிக்னல் பெறும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்தது.
கோவை:
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ஜூலை 14-ம் தேதி பகல் 2.35 மணிக்கு எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவியது. இந்த விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் கடந்த ஆகஸ்டு 23-ம் தேதி மாலை 6.04 மணி அளவில் நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது.
இதையடுத்து விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்து, நிலவின் மேற்பரப்பில் ஆய்வுப் பணியை தொடங்கியது. நிலவில் 14 நாட்கள் முடிவடைந்து அங்கு இரவு தொடங்கியபோது ரோவர் மற்றும் லேண்டர் கருவிகள் உறக்க நிலையில் வைக்கப்பட்டன.
14 நாட்கள் நீடிக்கும் நிலவு இரவில், சுற்றுச்சூழல் சுமார் 200 டிகிரி உறைபனி தட்பவெப்பநிலையால் சூழப்பட்டு இருக்கும். இந்த கடுமையான காலநிலையில் தொழில்நுட்ப உபகரணங்கள் வேலை செய்வது சாத்தியமில்லை. ஆகவே தான் விஞ்ஞானிகள் அவற்றை உறக்க நிலைக்கு கொண்டு சென்றனர்.
இதற்கிடையே, நிலவில் நேற்று சூரிய உதயம் ஆரம்பித்தபோது லேண்டர் மற்றும் ரோவரை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை. சிக்னல் பெறும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பிரக்யானைப் பற்றி நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஏனென்றால் அது பலமுறை சோதனை செய்யப்பட்டு விட்டது. ஆனால் லேண்டரைப் பொறுத்தவரை, நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
லேண்டர் மூலமாக தான் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும். எல்லோரையும் போல் நானும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் என தெரிவித்தார்.
- 63-வது வார்டு வார்டு சபை கூட்டத்தில் தீர்மானம்
- பணிகள் குழு தலைவர் சாந்திமுருகன் தலைமையில் நடந்த கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு
கோவை.
கோவை மாநகராட்சி 63-வது வார்டில் நாகப்பன் தேவர் வீதியில் வார்டு சபை கூட்டம் கவுன்சிலர், பணிகள் குழு தலைவர் சாந்திமுருகன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து மனுக்களை அளித்தனர்.
மேலும் மக்களின் அடிப்படை பிரச்சனை களான சாலை, குடிநீர், ஆழ்குழாய் கிணறு நீர், தினசரி குப்பைகள் சேகரித்தல் உள்ளிட பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மக்களின் குறைகளை உடன டியாக மத்திய மண்டல உதவ ஆணையாளர்,மண்டல சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர்,சுகாதார மேற்பார்வையாளர்களிடம் எடுத்து கூறி உடனடியாக தீர்வு காண அறிவுறுத்தினார்.
மேலும் மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள் தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றை எடுத்துக்கொண்டு மத்திய மண்டல அலுவலகத்தில் உள்ள குறைதீர் மையத்தை அனுகினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் உரிமை தொகை வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்த வார்டு சபை கூட்டத்தில் மத்திய மண்டல உதவி ஆணையாளர் மகேஷ் கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர்கள் மு.மா.ச.முருகன்,வெ.நா.உதயகுமார்,வார்டு செயலாளர் சண்முக சுந்தரம்,விளையாட்டு மற்றும் இளைஞர்கள் நலன் அணி கோவை மாநகர் மாவட்ட துணை அமைப்பாளர் உதயகுமார், முன்னாள் வட்ட பொறுப்பாளர் திரு செந்தில் குமார், பூத் கமிட்டி நிர்வாகிகள் பழனிசாமி,வசந்தகுமார், சன் செந்தில், சித்தி விநாயகர் கோயில் அறங்காவல் தலைவர் தனபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்






