என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பொள்ளாச்சியில் இன்று அண்ணாமலை நடைபயணம்
    X

    பொள்ளாச்சியில் இன்று அண்ணாமலை நடைபயணம்

    • நாளை மாலை கோவை குனியமுத்தூர், மாச்சாம்பாளையம் பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்கிறார்.
    • நடைபயணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவை மாவட்ட ஒருங்கிணைந்த பா.ஜ.க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    கோவை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கடந்த ஜூலை மாதம் 28-ந்தேதி அண்ணாமலை தனது பாதயாத்திரையை தொடங்கினார்.

    இந்த பாத யாத்திரையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். தொடர்ந்து அண்ணாமலை ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரியில் நடைபயணம் மேற்கொண்டார்.

    முதல் கட்ட பயணத்தில் மொத்தம் 22 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட அவர், 41 சட்டமன்ற தொகுதிகளில் மக்களை சந்தித்தார்.

    அடுத்தக்கட்டமாக கடந்த 3-ந்தேதி தனது 2-ம் கட்ட நடைபயணத்தை தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தொடங்கிய அண்ணாமலை, அங்கிருந்து தேனி, திண்டுக்கல்லிலும் பாதயாத்திரை மேற்கொண்டார்.

    21-ந் தேதி திருப்பூர் மாவட்டம் காங்கயம், தாராபுரத்தில் நடைபயணம் மேற்கொண்டார். நேற்று உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் மக்களை சந்தித்தார்.

    இன்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கோவை மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொள்கிறார். நடைபயணம் மேற்கொள்ள வரும் அண்ணாமலைக்கு கோவை மாவட்ட பா.ஜ.க சார்பில் ஏராளமான தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    அதனை தொடர்ந்து அவர் மாலை 3 மணிக்கு வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேட்டைக்காரன்புதூர் பகுதியில் நடைபயண பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அப்போது திறந்த வேனில் இருந்தபடி பொதுமக்கள் மத்தியில் அண்ணாமலை பேசுகிறார்.

    தொடர்ந்து மாலை 5 மணியளவில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடைபயணம் மேற்கொள்கிறார். அங்கு நடைபயணத்தை முடித்து கொண்டு இரவு கோவையில் தங்குகிறார்.

    நாளை மாலை கோவை குனியமுத்தூர், மாச்சாம்பாளையம் பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்கிறார். 25-ந் தேதி(திங்கட்கிழமை) கோவை கணபதி பஸ் நிலையத்தில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார்.

    அங்கிருந்து தொடங்கும் நடைபயணமானது பல்வேறு வீதிகள், முக்கிய சந்திப்புகள் வழியாக சென்று இடையர்பாளையம் சந்திப்பு பகுதியில் நிறைவடைகிறது. தொடர்ந்து 26-ந் தேதி கோவை ராம்நகர் ராமர் கோவிலில் இருந்து தனது நடைபயணத்தை தொடங்குகிறார்.

    அங்கிருந்து பல்வேறு பகுதிகள் வழியாக பொதுமக்களை சந்தித்தபடி செல்லும் அண்ணாமலை ராஜவீதி தேர்நிலை திடல் பகுதியில் தனது நடைபயணத்தை நிறைவு செய்கிறார். அங்கு திரண்டிருக்கும் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். இந்த நடைபயணத்தில் பா.ஜ.க முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட திரளானோர் பங்கேற்க உள்ளனர்.

    நடைபயணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவை மாவட்ட ஒருங்கிணைந்த பா.ஜ.க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×