search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவையில் மீண்டும் போட்டியிடுவேன்: கமல்ஹாசன்
    X

    கோவையில் மீண்டும் போட்டியிடுவேன்: கமல்ஹாசன்

    • 40 வருடத்துக்கு முன்பு தி.மு.க. தலைவர் கருணாநிதி, என்னை அரசியலுக்கு அழைத்தார்.
    • நாங்கள் இந்தி ஒழிக என்று சொல்லவில்லை, தமிழ் வாழ்க என்று சொல்கிறோம்.

    கோவை:

    மக்கள் நீதி மய்யம் சார்பில் கோவை மண்டல நிர்வாகிகள் கூட்டம் கோவையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது. இதில் கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    சனாதனம் என்ற ஒரு வார்த்தையை சொன்னதற்காக ஒரு சின்ன பிள்ளையை பாடாய் படுத்துகிறார்கள். அந்த குழந்தையின் தாத்தாவுக்கு தாத்தா சொன்ன விஷயம்தான் அது. எங்களுக்கு அந்த வார்த்தை தெரிந்ததே பெரியார் சொல்லிதான். அவரை தி.மு.க. மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது. வேறு கட்சிகளும் சொந்தம் கொண்டாட முடியாது. தமிழ்நாடே அவரை சொந்தம் கொண்டாடலாம். அதில் ஒருவன் நான்.

    40 வருடத்துக்கு முன்பு தி.மு.க. தலைவர் கருணாநிதி, என்னை அரசியலுக்கு அழைத்தார். ஆனால் நான் செல்லவில்லை. அவ்வாறு செய்தது தவறு. இனிமேல் அதை செய்ய நான் தயாராக இல்லை. இவ்வளவு காலம் கடந்து அரசியலுக்கு வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

    மதுரை, கோவை, சென்னை என்று பல இடங்களில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுங்கள் என்று கட்சியில் அழைக்கிறார்கள். நான் சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் நின்று வெற்றிவாய்ப்பை இழந்தேன். அது சூழ்ச்சி காரணமாக நடந்தது. அந்த சூழ்ச்சியில் நாம் இனிமேல் சிக்கிக்கொள்ளக்கூடாது.

    கோவை பாராளுமன்ற தொகுதிக்கு சரியாக வேலை செய்ய 40 ஆயிரம் பேர் வேண்டும். போர்படையின் முன்வரிசையில் நிற்க பயமாக இருந்தால் அவன் தலைவனே இல்லை. நான் நிற்கிறேன். ஏற்கனவே நான் கோவையில் தோல்வியடைந்து மூக்கை உடைத்து விட்டேன். அதற்கு மருந்து போட்டுவிட்டு நான் மீண்டும் கோவையில் போட்டியிடுவேன்.

    தி.மு.க. நிர்வாகிகளே என்னிடம் நீங்கள் தோற்கக்கூடாது என்று சொன்னார்கள். அந்த அளவுக்கு நமக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

    தமிழ்நாடு தொழில் தலைநகரமாக மாற வேண்டிய முயற்சியை நாம் எடுக்க வேண்டும். இந்தியாவின் தலைவாசல் இமாலயம் அல்ல, கன்னியாகுமரி என்று சொல்லக்கூடிய வாய்ப்பை நம்மால் செய்து காட்ட முடியும். அதற்கு நாம் நேர்மையாக இருக்க வேண்டும்.

    தேர்தலுக்காக நேரம் அதிகம் இல்லை. மத்திய அரசின் சவுகரியத்துக்காக செய்யப்படும் சூழ்ச்சிதான் இது. அதற்கு நமது அசவுகரியத்தால் நாம் பலியாகிவிடக்கூடாது.

    ஒருவர் தான் மட்டுமே பிரதமர் ஆக வேண்டும் என்று நினைத்தால் அது ஜனநாயகம் அல்ல. அதை எதிர்த்துதான் இன்று 'இந்தியா' வெகுண்டு பேசிக்கொண்டு இருக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை ஏற்க முடியாது. சீனாவில் அவர்களின் மொழியை திணிப்பது இல்லை. அதற்காக நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை.

    நாங்கள் இந்தி ஒழிக என்று சொல்லவில்லை, தமிழ் வாழ்க என்று சொல்கிறோம். இப்படிதான் அனைத்து விஷயத்திலும் நாங்கள் இருப்போம். எங்களுக்கு பிடித்ததை தேடுவோம். இந்தி பேசினால்தான் வேலை என்றால் அந்த வேலை எங்களுக்கு வேண்டாம்.

    நமது அரசியல் வெகுண்டு எழும் அரசியல் அல்ல. பெரியார், காந்தி, அம்பேத்கர் உள்பட பல அறிஞர்கள் எனக்கு வழங்கிவிட்டு போன அரசியல். இப்போது சனாதனத்தை பேசியதற்கு வந்த கோபம் ஏன் அப்போது வரவில்லை?. அன்பு ஒன்றுதான் எனக்கு தெரிந்த மதம். அதிலும் பெரியது என்றால் அது மனிதம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×